Archive

Archive for January 21, 2004

தமிழுக்கு வந்த சோதனை

January 21, 2004 Leave a comment

எனக்கு preen என்னும் ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை; மெரியம் வெப்ஸ்டரைத் தேடுகிறேன். ‘செவ்வி’ என்றால் தெரியவில்லை; க்ரியாவை நாடுகிறேன். வெங்கட்டின் வலைப்பதிவை பார்த்து மகிழ்ந்த ‘ஆர்வலர்’ ஒருவர் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் கேள்வி கேட்கிறார். புரியவில்லை என்று சொல்பவர்களைக் கிண்டலடிப்பது வருந்தத்தக்கது. (மற்றவர்களைக் கிண்டல் அடிப்பதும் சில சமயம் மனமத ராசாவை விரும்பிக் கேட்கும் ஐந்து வயதுக் குழந்தையைப் பார்த்து முகம் சுளிக்கும் ‘பெப்ஸி’ உமா expression-ஐ வரவைக்கலாம்.)

Volunteer என்றால் தொண்டூழியர், விழையோர், விழைச்சேவையாளர் என்றும் பல சொற்கள் உள்ளன். ஆர்வலர் என்றால் interested persons என்று சொல்லலாம். ஆர்வலனுக்கு layman என்னும் அர்த்தமும் இருப்பதாக அகரமுதலிகள் சொல்லுகிறது. புரிந்து கொள்ள முயற்சி செய்பவர்களுக்கு பின்னூட்டத்திலாவது அர்த்தம் மட்டும் கொடுக்கலாமே; விகடன் வாசகர் என்னும் கேலி வேண்டாமே.

குமுதம் படிப்பவனாய் இருப்பதில் தவறு இருப்பதாகவும் தெரியவில்லை. ஒருவருக்கு ஞானபூமி பிடிக்கும். வளர்ந்து விட்டாலும் கோகுலம் படிக்கும் ஆசாமி நான். காலச்சுவடும் பார்ப்பேன். மாலைமதி ரசிக்காது. அதற்காக, மாலைமதி வாசகர்களை கவருகிற எழுத்து, எப்படி குப்பையாகும்?

எளிமையாய் எழுதுவது ரொம்பக் கடினம். புரியாமல் எழுதுவது ரொம்ப சுலபம்.

Categories: Uncategorized

பொய் மாளிகை

January 21, 2004 Leave a comment

அசோகமித்திரன்: “குறையன்றுமில்லை என்ற பாடல் எழுதினவரல்லவா? இன்று வண்டிக் குறைகள் எல்லார் மீதும் யார்தான் சொல்லாமல் இருக்கிறார்கள்?”

Categories: Uncategorized

மாலன் – இந்தியா: உலகிலேயே இளமையான தேசம்

January 21, 2004 Leave a comment

SAMACHAR Tamil — The Bookmark for the Global Indian: “வாழ்க்கையைப் பொறுத்தவரை இளைஞர்களது அணுகுமுறை பிரமிக்கத்தக்கது. விரும்புவது, கிடைப்பது அதாவது desirable, available என்று எல்லாவற்றிலும் இரண்டு நிலைகள் வைத்திருக்கிறார்கள். படிப்பு, வேலை, சம்பளம், வ¦டு, கணவன் அல்லது மனைவி இவை எல்லாவற்றிலும் இந்த இரண்டு நிலைகள் உண்டு. விரும்புவது கிடைக்கவில்லை என்றால் கிடைப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். விரும்பியது கிடைக்கவில்லை என்றால் மனமுடைந்து போவதில்லை. ஏக்கம் கொள்வதில்லை. அடுத்தது என்ன, what next? என்று மேலே மேலே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். சென்ற தலைமுறைக்கு நாற்பது வயதுக்கு மேல் அனுபவத்தின் காரணமாக ஏற்பட்ட முதிர்ச்சியை இந்தத் தலைமுறையிடம் இருபத்தி ஐந்து வயதில் பார்க்க முடிகிறது.

இந்த மனோபாவத்தையும், நம்பிக்கைகளையும், அணுகுமுறைகளையும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தலாம். அல்லது எதிர்மறையாகவும் திருப்பிவிடலாம். இறைநம்பிக்கையைப் பயன்படுத்தி ஒழுக்கத்தை வளர்க்கலாம் அல்லது மதவாதத்தை வலுப்படுத்தலாம். தொழில்நுட்பத்தின் ம¦துள்ள நம்பிக்கையைக் கொண்டு கற்பனையை வளப்படுத்தி புதிய புதிய பொருட்களை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தலாம். அல்லது மனிதர்களை இயந்திரமாக செய்துவிடலாம். கிடைப்பதை ஏற்பது என்ற அணுகுமுறையைக் கொண்டு உணர்ச்சிவசப்படாத ஒரு சமூக ஒழுங்கைக் கொண்டு வரலாம். அல்லது கனவுகள் அற்ற வறட்டு சமுதாயத்தை ஏற்படுத்தலாம்.”

Categories: Uncategorized

புதிய மொந்தையில் பழைய சரக்கு

January 21, 2004 Leave a comment

இன்றையப் பதிவுகள் அனைத்துமே ‘தமிழோவியத்தில்’ மவுஸ் போன போக்கில் என்று வெளிவந்தவை. என்னுடைய சௌகரியத்துக்காக இங்கு சேமித்து வைக்கிறேன்.

நன்றி: தமிழோவியம்

Categories: Uncategorized

மெல்லினம்

January 21, 2004 Leave a comment

(பா ராகவன் ‘கல்கி’யில் எழுதிய தொடர்கதை ‘மெல்லின’த்திற்கு ஒரு வாசகனின் எண்ணங்கள்).

“ஒரு பன்னிரண்டு வயதுக் குழந்தையின் சிந்திக்கும் திறன் எம்மட்டில் இருக்கும் என்று சுலபத்தில் யூகித்து விட முடியாது போலிருக்கிறது. பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். பழகிக் கொண்டேதான் இருக்கிறோம்” என்று ஆரம்பிக்கும் கடைசி அத்தியாயம்தான் கதையின் அடிநாதம். பன்னிரெண்டு வயதில், என்ன மனநிலையில் இருந்தேன் என்பதை அன்றும் இன்றும் அறியாத எனக்கு, சிறுவர்களின் உலகத்தில் உள்நுழைந்து அலசி ஆராய்ந்து செல்கிறது ‘மெல்லினம்’.

நான் ஏழாவது படிக்கும் போது ஒரு விஷயம் தெரிந்த நண்பன் எல்.பி.டபிள்யூ என்றால் என்ன என்று தெரியுமா என்று பேச்சுவாக்கில் கேட்கிறான். நானும் கர்ம் சிரத்தையாக பந்து ஸ்டம்பை தகர்த்து விடும் என்று அம்பையர் தீர்மானித்து கொடுக்கும் அவுட்தானே என்று விளக்கினேன். ‘லவ் பி·போர் வெட்டிங்’ என்று கிசுகிசுத்து அவன் பறந்து விட்டான். மனதிற்குள் ஒரு இனம் புரியாத திருட்டுதனம். இன்று மாதிரியே ஏதாவது புதியதாக அறிந்து கொண்டால், அது பயனுள்ளதாக இருக்கிறதோ, இல்லையோ, தகவல்களைத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவல்.

அடுத்த நாள் புலம்பிக் கொண்டிருக்கும் சரித்திர ஆசிரியரின் பிண்ணனியில் எனது புதிய ஞானத்தை பென்ச் சகாக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கிளுகிளுவென்று சிரித்தவர்கள் வேறு முக்கிய விஷயங்களுக்குத் தாவி விட்டோம். பள்ளியில் எங்கும் எனக்கு நல்ல பெயர். “கெட்டிக்காரன். புத்திசாலி. கற்பூர புத்தி. சாது. நல்லவன். அன்பானவன். சமத்து.” என்று ‘மெல்லினம்’ ஜக்கு போல் அமைதியானவன்.

எங்கிருந்துத் தோன்றியதோ தெரியவில்லை. டிவி செய்திகளுக்கு முன் நேரம் காட்டும்போது வருகின்ற, ஐந்து விநாடித் துண்டு விளம்பரம் போல் நான் சொன்ன தம்மாத்துண்டு மேட்டரை வைத்துக் கொண்டு மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். என்னுடைய கட்டி காத்த நல்ல பேர், எக்ஸ்ட்ரா மார்க் வாங்கிக் கொள்ளும் சாம்ர்த்தியம் எல்லாம் கப்பலேறிப் போகும் அபாயம். பேந்தப் பேந்த விழித்து, அசடு வழிந்து, சோக மயமாகி, வாழ்க்கையே வெறுத்து, நண்பர்களுடன் பேசாமல், ·பேவரிட் ஆசிரியர்களின் பாடத்தை கவனிக்காமல் பயந்து பயந்தே வாழ்க்கை சென்றது.

டீச்சர்களிடம் பாவ மன்னிப்பாக தர்ம சங்கடத்தில் ஆழ்வதற்கு பதில் ‘வாயைத் திறக்கவே செய்யாமல் தன் மனத்திலிருப்பதை ஒரு பொட்டலமாகக் கட்டி எடுத்து அவர்கள் மனத்துக்குள் வைத்துவிட முடியுமானால் மிகவும் நன்றாக இருக்கும். முடிந்த நேரத்தில் அவர்கள் பிரித்து எடுத்துப் புரிந்து கொள்ளட்டும்’ என்று மெல்லின நாயகனைப் போல் நினைத்தேன்.

‘மெல்லின’த்தின் கதாநாயகன் மிஸ்டர் ஜகன்னாதனும் இவ்வாறு பல உணர்ச்சிகளுக்கு ஆளாகி வீட்டை விட்டே ஓடி விடுகிறான். உப்புப் பெறாத விஷயம் என்று வாழ்க்கையில் நான் இப்பொழுது எண்ணும் ஒரு சம்பவத்துக்கு, அந்த நாளில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன் என்று சிந்திக்கும் போது வேறொன்று விளங்குகிறது. இன்று அலுவலகம் இன்ன பிற வாழ்க்கையில் முக்கியம் என்று கருதுபவை, நாளை அர்த்தமிழந்து விடுகிறது. ‘இருப்பியல் சங்கடங்கள். வெளியே பேசிவிட முடியாத, மிகவும் அந்தரங்கமான நெருடல்களைத் தரக் கூடியவை அவை’ என்கிறது ‘மெல்லினம்’.

“வியப்பு தீராதவரை மட்டுமே ரசிக்கக் கூடிய அவனது மந்திர வித்தைகள்” என்னும் போது வாழ்வியலின் சூட்சுமம் விளங்குகிறது. எல்லாருக்கும் எல்லாமும் செய்யக் கூடியவை ஆகிவிட்டால் ஆச்சரியங்கள் போய்விடும்.

அரசாங்க ஊழியருக்கு ‘துடைக்கும் விதமகவே தூசிகள் இருந்தாலும் அவையும் இருக்கப் பணிக்கப் பட்டவை’, மாலை தினசரிக்கு ‘ரேஸ் டிப்ஸையும் ஷேர் உலகையும் வரி விளம்பரங்களையும் நம்பி இயங்குவது’, பழைய டைரிகளை மீண்டும் படிப்பதை ‘தன்னைத் தனக்கு மறு அறிமுகம் செய்து கொள்வது’, பதற்றம் இல்லாததற்கு ‘ஒரு டாகுமெண்டரி படத்தின் வருணனையாளர் தொனியில்’ என்று உவமிப்பது மனதின் ஆழங்களில் உட்காரும்.

குழந்தை வளர்ப்பு, அவர்களின் நியாயமான ஆனால் நம்மால் பதில் சொல்ல முடியாத கேள்விகள் என்று அலசி நம்மை நிறையக் கேள்வி கேட்டுக் கொள்ள வைக்கிறார். பெரியவர்களுக்காகவும் ‘அனைவரும் நிறைய சம்பாதிப்பதற்காக, மத்த எல்லா படிப்பையும் நிறுத்திட்டு, இஞ்சினீயரிங் படிப்பை மட்டுமே ஏன் கவமெண்ட் வெச்சிக்கக் கூடாது?’ என்று சிறியவர்களை விட்டு கேள்வி கேட்க வைக்கிறார். தாத்தா பாட்டிகளைத் தெரியாமல் வளரும் பேரன் பேத்திகள், பெற்றோர் இல்லாத தனிமையான வீட்டிற்கு வரும் குழந்தைகள் என இந்தக் கால டபுள் இன்கம் குடும்பங்களையும் காட்டுகிறார்.

‘மாமியாரும் மருமகளும் பேசிக் கொள்ள மேலதிக விஷயங்கள் இல்லாத தருணங்களில் ஸ்லோகங்கள் கைகொடுக்கும்’, ‘குழந்தைகளின் பெயரில் பெரியவர்கள் அனுபவிக்கவும் சில சங்கதிகள் இருக்கின்றன’ போன்ற வரிகளால் அன்றாட வாழ்வு தெரிகிறது.

மனக் குரங்காக விக்கி என்னும் காரெக்டர் திடீரென்று முளைத்து கால் கை வைத்துக் கொண்டு ஜகனை தடுத்தாட் கொள்வதைப் பார்க்கலாம். சின்ன மூளையின் பெரிய கற்பனையாக, அப்பாவின் இளமைக் காதலை ‘ghosts of the past’ என்பது போல் ஆவி, இரத்த காட்டேறி என்று மாற்றி சொல்லும் குழந்தைகளின் கதைகளை அசை போடலாம். டைரிகளில் எழுதுபவை கற்பனையா என்பதை அறிய, ஊரு விட்டு ஊரு வந்து ஊர்ஜிதபடுத்தும் பனிரெண்டுகளின் தைரியத்தை வியக்கலாம். சிறார்களின் கனவுகளாக சொல்பவை, நமக்கு இன்றும் தோன்றி பயமுறுத்தலாம். வதந்திகளின் வள்ர்ச்சி பற்றியும் ஆராயலாம்.

‘உள்ளம் எப்போதும் மாற்றங்களையும் வளர்ச்சிகளையுமே எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறது’, ‘உலகின் ஒவ்வொரு அசைவையும் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் தன் வாழ்வின் அங்கதமாக நோக்கும் பக்குவம் மிகப் பெரிது’ என்று கதையின் ஓட்டத்தோடு சொல்லும்போது நமது பெட்டகத்தின் குறிப்பிடத்தக்க வரிகளில் ஒன்றை சேர்த்துக் கொள்கிறோம்.

வட அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் ஒரே நாடு போன்ற பொருட் குற்றங்களைப் புத்தகமாக வெளியிடும்போது திருத்திக் கொள்ளலாம். எனக்கு இப்போது அடிக்கடி தோன்றும் ‘உதவக் கூடியதெனப் பாடதிட்டங்களில் மேலதிகம் ஏதுமிருப்பதில்லை’, ‘தமிழும் வரலாறும் புவியியலும் வாழ்க்கைக்கு உதவுமா?’ போன்ற வினாக்களுக்கு பதிலை யோசியுங்கள். (அலகில்லா விளையாட்டில் பல இடங்களில் இந்தக் கேள்விகளுக்கு இன்னும் விலாவாரியாக அலசல் கொடுக்கிறார்).

“தர்டீன் என்பது அன்லக்கி நம்பர் மேற்கு உலகத்தில்.
“தர்டீன் என்பது லக்கி நம்பர் எந்தன் விஷயத்தில்!”
என்று வைரமுத்துவின் பாடல் வரிகள் மாதிரி முக்கியமான வயதின் நிகழ்வுகளை காட் ப்ராமிஸ், குட் கேர்ள், டூ விடுவது, என்று குழந்தையாகவே மாறி பெரியவர்களுக்காக எழுதப்பட்ட சுவையான நாவல். படித்து முடித்தவுடன் ஒரு விஷயத்தை மறப்பதா தீர்ப்பதா என்ற தெளிவு ஏற்படும்.

போன வருடக் கல்கிகளைத் தேடிக் கண்டுபிடித்துப் படிக்கலாம். அல்லது தமிழ் மின்புத்தகமாகும் (தமிழ்ப்புத்தாண்டு) வரை காத்திருங்கள்.

அடுத்த பக்கத்துக்குப் போகுமுன் கதையில் இருந்து…

‘எத்தனை முயற்சி செய்தாலும் தன் மனம் வேறெதிலும் ஈடுபட மறுப்பதை ஜக்கு மிகவும் உணர்ந்திருந்தான். கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் மாதிரி தான் ஆகிவிட்டோமா என்று அவனுக்கே அச்சமாக இருந்தது. எதை பார்த்தாலும் அதே ஞாபகம். எதை கேட்டாலும் அதே நினைவு. எதிலும் அதே சிந்தனை.’ (இணையத்தின் பிடியில் மாட்டிக் கொண்டு இவ்வாறு விழித்து இருக்கிறேன். நீங்கள்?)

Categories: Uncategorized

‘அமெரிக்க கோயில் உலா’

January 21, 2004 Leave a comment

இந்தியக் கோவில்களுக்கும் அமெரிக்காவின் கோவில்களுக்கும் ஆறு வித்தியாசத்துக்கு மேலேயே இருக்கும்.

சென்னையில் பெரிய மனிதர் வந்தால் மட்டுமே முழு சதத்தையும் அடிக்கும் நாமாவளி, அமெரிக்காவில் ஒவ்வொரு சாமானியருக்கும் கர்ம சிரத்தையாக அர்ச்சனை நடக்கும். அர்ச்சகரின் ஈடுபாடைக் கண்டு தட்டில் போடப்படும் வெள்ளிகளும் கோவில் உண்டியலையே அடையும்.

சிவா-விஷ்ணு கோவில் என்று தியாகராய நகரில் மட்டுமே பார்த்ததாக நினைவு. அமெரிக்காவில் இரண்டு பேரும் ஒருங்கே இல்லாத இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கோவில் திருவிழா என்றாலே அடிதடி, பெருங்கூட்டம் என்பது எல்லாம் இல்லை. சாதாரண வாரயிறுதிகளை விட புத்தாண்டு, பொங்கல் போன்றவற்றில் கொஞ்சம் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், அப்பொழுதும் தள்ளுமுள்ளு, காலணி காணாமல் போகுதல் என்ற அசௌகரியங்கள் கிடையாது.

திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழு மலை ஏறுவது, ஐயப்பனை பார்க்க விரதமிருந்து சபரி மலைக்கு செறுப்பில்லாமல் ஏறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பிட்ஸ்பர்க் மலை மேல் இருப்பது மாதிரி தென்பட்டாலும், கோவில் வாசலில் வண்டியை நிறுத்தி, லி·ப்டில் மேல் சென்று, (கால் முடியாவிட்டால்) சேரில் உட்கார்ந்து கொண்டு சாமி தரிசனம் செய்யலாம்.

அதே லி·ப்டை பிடித்து கீழே இறங்கி வந்தால் அவசரப் பசிகளுக்கு அப்பிடைசர்களாக இரண்டு இட்லி சாப்பிட்டுக் கொண்டே, என்ன தமிழ் படம் வந்திருக்கிறது, யார் நடன அரங்கேற்றம் செய்கிறார்கள், ஒய்.ஜி எப்பொழுது டிராமா போடுகிறார் போன்றவற்றை ‘அறிவிப்பு பலகை’யில் அறியலாம். நீண்ட காலம் கழித்து சந்திக்கும் நண்பர்கள், தெரிந்த முகங்கள், புதிய அறிமுகங்கள் என அனைவரிடமும் வேலை தேடுவதை அல்லது கஷ்டப்பட்டு வேலை செய்வதை அங்கலாய்த்துக் கொண்டே அரட்டை அடிக்கலாம்.

கோவில் பாலிடிக்ஸ், அர்ச்சகர் அரசியல் எல்லாம் பெரிய விஷயம். ஆந்திராகாருக்களுக்கு தனிக் கோவில், தமிழர்களின் கோவில், வட இந்திய பாணி, குஜராத்திய அமைப்பு என்று இங்கு சிறுபான்மையினராக இருந்தும் சிதறுண்டு வருகிறார்கள்.

சைட் அடிக்க கோவில் செல்வது, பரிட்சையில் பாஸ் பண்ண நூறு சுத்துவது, பிரதோஷத்திற்காக அட்டெண்டன்ஸ் கொடுப்பது என்று வருகிறவர்கள் கம்மிதான். நைட் க்ளப் சென்று எதிர் பாலாரைக் கவ்வுவது எளிது. வாரயிறுதியில் பிரதோஷம் வந்தால் மட்டுமே கோவில் வரமுடியும் போன்ற நிர்ப்பந்தங்களில் அமெரிக்க இந்தியர்கள் உள்ளார்கள்.

சென்னையில் கோவில் பக்கமே தலை காட்டாத என்னுடைய நண்பர்கள், அமெரிக்கா வந்த பிறகு வாரம் தவறாமல் ஆஜர். குழந்தைகளுக்கு இந்திய முகங்களை காட்டவும், கலாசாரங்களை சொல்லவும் கோவில் உதவுகிறது. சிறுவர்களுக்கு தாய் மொழி வகுப்பு, பெரியவர்களுக்கு வேத வகுப்பு, விளக்கங்கள் என்று தங்களைத் தங்களுக்கே அறிமுகப் படுத்திக் கொள்ளவும் பயனுள்ளதாக விளங்குகிறது.

என்னுடைய அலுவலகத்தில் கூட இருக்கும் இந்திய முஸ்லீம்களும், வெள்ளிக்கிழமை தொழுகைகளை தவற விடுவதில்லை. இந்தியாவில் அவர்கள் போன்ற சிலருடன் வேலை பார்த்தபோது கூட அவர்கள் சென்றதை நான் கவனித்தது இல்லை. ஆனால் அமெரிக்காவில் ஒரு மணி நேரம் தள்ளி உள்ள மசூதிக்கு வண்டி ஓட்டிச் சென்று, வணங்கிவிட்டு, தொடரும் மதிய உணவையும் முடித்து விட்டு வருவதைக் கடமையாக செய்கிறார்கள்.

தனது கலாசாரத்தை விட்டு விலகி இருக்கும் போதுதான், அதன் மேல் பற்றுதல் அதிகரிக்கிறது. குற்ற உணர்ச்சி கொஞ்சம் சேர்த்து ஆட்டுவிக்கும் போது, தனது கடமையை செய்து முடித்து விட்டதாக உலக்குக்கு அறிவிக்க கோவில்கள் தேவையாய உள்ளன.

தாத்தா, பாட்டி அருகில் இல்லையா… வாரா வாரம் தொலை பேசு. தாய்மொழியில் பேசவில்லையா… எழுதப் படிக்க மட்டும் கற்றுக் கொடு. ஏற்றி விட்ட இந்தியாவை விட்டு விட்டோமா… கோவிலுக்கு செல்.

Categories: Uncategorized

உங்க ஓட்டு எதற்கு?

January 21, 2004 Leave a comment

நண்பர்களுக்குள் யார் இந்த வருட சூப்பர் பௌல் ஜெயிப்பார்கள், ஆஸ்கர் யாருக்குப் போகும், என்று பந்தயம் கட்டுவோம்.

சில தேர்வு கேள்விகள். (என்னுடய பந்தயக் குதிரைகள் ‘ஈ’யில் உள்ளன).

1. அமெரிக்காவிடம் அடுத்து அடி வாங்கப் போகும் நாடு

அ) வட கொரியா
ஆ) ஈரான்
இ) சிரியா
ஈ) பாகிஸ்தான்

2. மக்களவை தேர்தலில்

அ) காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மைக்கும்
ஆ) பிஜேபி தக்கவைத்துக் கொள்ளும்
இ) ப.சிதம்பரம் முதல்வர் ஆவார்
ஈ) பால் தாக்கரே அமைச்சரவைக்கு இடது சாரிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவார்கள்

3. ஆட்சிபீடத்தில் இருந்து முதல் கல்தா

அ) முஷார·ப் (முஸ்லீம் தீவிரவாதிகள்)
ஆ) ஜார்ஜ் புஷ் (பொருளாதார சரிவு)
இ) ரஷ்யாவின் ப்யூடின் (வாக்காளர்கள் விழித்துக் கொண்டதனால்)
ஈ) க்யுபாவின் காஸ்ட்ரோ

4. பிய்த்துக் கொண்டு ஓடும் படம்

அ) கோவில்
ஆ) விருமாண்டி
இ) ஓடிப் போலாமா
ஈ) கில்லி
உ) அருள்

5. தேர்தலுக்கு முன் பிஜேபி கொடுக்கும் ஒட்டு வசியம்

அ) ஜெயித்தால் அத்வானியே பிரதம மந்திரி
ஆ) பாகிஸ்தான் மேல் முழு தாக்குதல்
இ) ப்ரியங்கா வெளிநாட்டவருக்குப் பிறந்தவர்
ஈ) அயோத்தியாவில் கோவில் கட்டுவோம்

6. ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் தங்க பதக்க எண்ணிக்கை

அ) 0
ஆ) 1
இ) >10
ஈ) 3

7. அதிமுக தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்

அ) 25
ஆ) 30
இ) 35
ஈ) 40

8. மும்பை பங்குச் சந்தை

அ) 10,000-த்தை எட்டும்
ஆ) மீண்டும் ‘ஹர்ஷத் மேதா’ தகிடுதத்தங்களால் 3000
இ) 6000
ஈ) 20,000

9. ஒரு அமெரிக்க டாலருக்கு

அ) 45 ரூபாய்
ஆ) 60 ரூபாய்
இ) 1 ரூபாய்
ஈ) 40 ரூபாய்

10. அறிவியல் முன்னேற்றத்தின் புதிய கண்டுபிடிப்பாக

அ) புத்தியை தேக்குவதன் மூலம் வயாதாகுவதை நிறுத்தி வைத்தல்
ஆ) மனித மூளையில் இணைய இணைப்பு
இ) எயிட்சுக்கு மருந்து
ஈ) பியர் வடிவில் அனைத்து பாலாருக்கும் ஒரே வயாகரா

கொசுறு: செஷன்ஸ் கோர்ட், உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம், ரிட் மனு, அப்பீல் என்று எல்லாவற்றிலும் இருந்து சுதந்திரம் அடைவார்:

அ) செரினா
ஆ) நக்கீரன் கோபால்
இ) ஜெயலலிதா
ஈ) சசிகலா

Categories: Uncategorized

நத்தார் தினத்து எண்ணங்கள்

January 21, 2004 Leave a comment

நான் கத்தோலிக்கப் பள்ளியில் படித்தாலும் நத்தார் தினத்தின் (கிறிஸ்துமஸ்) அருமை பெருமைகளை அறியாமலேயே வளர்ந்தேன்.

எங்கள் தெருவில் எதிர்த்த வீட்டில் மட்டுமே டேப் ரிகார்டர் உண்டு. அல்லது அவர்கள் மட்டுமே ‘விநாயக சதுர்த்தி’ திருவிழா ஸ்பீக்கராக ‘நேயர் விருப்பத்தை’ 144-வது வட்டாரத்துக்கே அலற விடுவார்கள். சூலமங்கலம் சகோதரிகளின் சஷ்டி கவங்களையும், ‘ராஜா… ராஜாதி ராஜா’க்களையும் அதிக அளவில் கேட்டது அங்கேதான். டிசம்பர் 25 அன்று எங்களுக்கும் கேக் கொடுப்பர்கள்.

சாண்டா வந்து பரிசுகள் தந்தாரா என்று சொல்லவில்லை. இந்தியாவில் தேர்தல் வருவது போல் அடிக்கடி நான் கொடுக்கும் சென்னை வருகையில், கேட்க வேண்டும் என்று நினைத்து, மறக்கும் நிகழ்வுகளுள் ஒன்று. அவர்கள் வீட்டில் நட்சத்திரமும் தொங்க விடுவார்கள். மந்தவெளி தெருவின் மாட மாளிகைகள் பலவற்றிலும் வித விதமாக சிவப்பிலும், இன்ன பிற வண்ணங்களிலும் மரத்தில் பல்ப் நட்சத்திரங்கள் எரியும். புத்தாண்டு வரை இருக்கும். நட்சத்திரம் வைக்கும் வீடுகளில் மட்டுமே யேசு அருள்பாலிப்பார் என்பது வருத்தத்தை கொடுத்தது. நாமும் வைக்கலாமா என்று கேட்டால் சிவன் கோபித்துக் கொள்வாரோ, மார்கழி வெண்பொங்கல்கள் கிடைக்காதோ, அரையிறுதி பரிட்சையில் ·பெயிலாயிடுவேனோ, பள்ளியில் எல்.பி.டபிள்யூ. என்பதற்கு லவ் பி·போர் வெட்டிங் என்று சக மாணவனுக்கு சொன்னது டீச்சர் காதில் எட்டி, என்னை (செல்லப்பிராணி) பெட்-லிஸ்ட்டில் இருந்து கழற்றி விட்டு விடுவாரோ என்று பயந்து ஒதுங்கியே நடப்பேன்.

இன்றோ வீட்டின் அடுப்பு வழியாகவோ, டிவியிலிருந்தோ, சாண்டா வருகிறார். விளக்கேற்றிய கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் என் மகளுக்கும், மனைவிக்கும், (எனக்கும் கூடத்தான்) பரிசுப் பொருட்கள் வைத்து செல்கிறார். தோட்டத்துப் பச்சை பசேல் மரத்தின் வாசனை வீட்டை நல்ல நாற்றமடிக்க வைக்கிறது. ஒரு நாள் வரும் சாண்டாவிற்காக வருடம் முழுக்க சொன்னபடி கேட்கும் குழந்தைக்காகவாவது அனைவரும் கிறிஸ்துமசை விமரிசையாகக் கொண்டாடுதல் அவசியம்.

அண்டை அயலாரையும், நண்பர்களையும் கண்டாலேயே பயந்து எங்கள் பின் ஒளிந்து கொள்ளும் என் மூன்று வயதுப் பெண், பெருங்கடைகளில் இருக்கும் ஒட்டு தாடி சாண்டாவிடம் வாஞ்சையுடன் மடியில் உட்கார்ந்து கொள்கிறாள். பிள்ளை பிடிப்பவர்களும், கடத்துபவர்களும் இனி சாண்டா க்ளாஸாக வேடம் கட்டிக் கொண்டால் போதும். ஒரு கத்தல், பிடிவாதம் இல்லாமல் குழலூதும் பைப்பராக சிறார்கள் சென்று விடுவார்கள்.

அமெரிக்காவில் பணம் நன்றாகப் புழங்கிக் கொண்டிருந்த காலங்களில் ‘நன்றியறிவித்தல் தினம்’ முடிந்ததில் இருந்தே அலங்காரங்கள் பிரமாண்டமாக இருக்கும். மயிலாப்பூரின் மாட வீதிகள், மல்லேஸ்வரத்தின் க்ராஸ் ஸ்ட்ரீட்டுகள், டெல்லியின் ரிங் ரோடுகள் என அமெரிக்கர்களின் ஒவ்வொரு முக்கிய தெருக்களும் அமர்க்களப்படும். கல்யாணத்தன்று மண்டபத்தின் வெளியில் இருக்கும் விளக்குச் சரம் போல், ஒவ்வொரு வீட்டிலும் எல்.ஈ.டி.க்களே ஆக்கிரமித்திருக்கும். கையாட்டும் சாண்டா, மான் வண்டி சாண்டா, கார் போனால் குதிக்கும் சாண்டா, பொம்மை பனி சித்திரங்கள், என்று பல வண்ணங்களில் மின்சார கட்டணத்தை சிரப்புஞ்சி தண்ணீராக செலவழிப்பார்கள்.

இன்றைய மந்த நிலையிலும், அனேக இலையுதிர்ந்த மரங்கள் சரவிளக்குகள் தாங்கியிருக்கின்றன. வீட்டு வாசலில் மாட்டுத் தொழுவத்தில் யேசு பிறந்த காட்சியமைப்பு நினைவு கூறப் படுகிறது. பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நாமும், நம் வீட்டை ஒளி வெள்ளத்தில் மிதக்க விட வேண்டும் என்று ஆசைப்பட வைக்கிறது. கிறிஸ்து பிறந்த சமயத்தில் பனி பெய்தால், நாம் இருக்கும் இடங்களில் பனி கொட்டினால், விழா பூரணமாய் ஏற்றுக் கொள்ளப் பட்டதாய் கருதுகிறார்கள். நல்ல வேளையாக இந்த கிறிஸ்துமசுக்கு, யேசு பாஸ்டனில் அருள்பாலிக்கவில்லை. கொஞ்சமாய் மழை மட்டுமே கொடுத்தார். ஸ்விஸ் மக்கள்தான் அதிக அளவு புண்ணியம் செய்தவர்கள். அவர்கள் நாட்டில்தான் அதிக தடவை நத்தார் தினத்தன்று பனி பெய்ததாக சொல்கிறார்கள். அமெரிக்காவில் யூடாவின் உப்பு ஏரி நகரத்தில் (சால்ட் லேக் சிடியின் தூய தமிழ்) இருக்கும் நண்பன் திட்டிக் கொண்டுதான் இருந்தான். மூன்றடி பனி வந்ததற்காக ‘சந்தோஷப் படேண்டா’ என்று நான் கேட்டேன். சுத்தம் செய்பவர்களும் கொண்டாட போய் விட்டதால் தெருவெங்கும் பனி அப்படியே இருந்து விட்டது. அடுத்த நாள் காலை அலுவலகம் செல்ல வேண்டிய அவசர நிலை. ஸ்கீ மொபைல் இருந்தால் ஒழுங்காக போயிருப்பேன் என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

தீபாவளியாகட்டும், கிறிஸ்துமசு ஆகட்டும், எனக்கு காலை பேப்பர் தேவை; பனி நீக்கப்பட்ட சாலைகள் தேவை; பொதுப் போக்குவரத்து தேவை; தாறுமாறாக ஓட்டுபவர்களை பிடித்து உள்ளே தள்ள சாலையோர காவல் படை தேவை; அவசரமாக ரொட்டி வாங்க ஒரு பெட்டிக் கடை தேவை. டிவியில் பத்து சேனலகளின் செய்தி வாசிப்புகள் தேவை. அவர்களுக்கும் பைன் மரங்களின் புத்தம் புதிய வாசனையை உள்ளடக்கிய வீட்டில், ஒரு கையில் பேப்பரோடும், ஒரு கண்ணில் சி.என்.என்.னின் தலைப்புச் செய்திகளோடு, மற்றொரு கையில் காபியோடும், இன்னொரு கண்ணில் உறவினர்களின் பரிசுப் பொருட்கள் அங்கலாய்ப்புகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே, சன்னல் வழியாக பனி பொழிவதை ரசிக்க ஆசை இருக்காதா?

வைகுண்ட ஏகாதசி அன்று எங்கள் மரத்தின் அலங்காரங்களை நீக்கி, கிறிஸ்துமஸ் அலங்கரிப்புகளை அடுத்த வருஷத்துக்காக அட்டை பெட்டியில் அடைத்து வைக்கிறோம். பார்த்தசாரதிக்காக பட்டினியும் உண்டுதான். இந்திய சமூக உணர்விற்காக மஹாலஷ்மி கோவிலும் செல்வோம்.

Categories: Uncategorized