Archive

Archive for January 27, 2004

தமிழா… தமிழா

January 27, 2004 Leave a comment

விருந்தினராகச் சென்ற இடத்தில் இன்ஸ்டண்ட் காபி கொடுக்காமல் அதிசயமாக ·பில்டர் காபி கொடுப்பது போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா (ஒரே) ஒரு நாள் போட்டியில் ஜெயித்துள்ளது. அந்த ·பில்டர் காபியிலும் ஸ்டார்பக்ஸ், மாக்ஸ்வெல் என்று புளித்த கொட்டையை அரைக்காமால், நரசுஸ் காபி போட்டு எடுத்து வந்தால் எப்படி இருக்கும்? தமிழ்நாட்டின் பாலாஜி பந்துகளில் நாலு பேர் வீழ்ந்தது அவ்வளவு ஆச்சரியங்களையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.

தமிழ்நாட்டின் பிற வீரர்களைப் போல் இல்லாமல் பல ஆட்டங்கள் தொடர்ந்து ஆடவைக்கவும், ஆட்டத்தில் சரியான வாய்ப்புகள் கொடுக்கவும் இறைவனை வேண்டுவது அல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ‘தெற்குத் தேய்கிறது; வடக்கு வாழ்கிறது’ என்று எதற்கோ குரல்கொடுத்தவர்கள், கிரிக்கெட்டையும் கண்டு கொள்ளாமல் விட்டது வருத்தமே.

தமிழ்நாட்டின் ரஞ்சி அணியை ஹிந்துவின் எழுத்துக்களில் தொடர்ந்து ரசித்து வந்த பலரில் நானும் ஒருவன். வி. சிவராமகிருஷ்ணனும், அப்துல் ஜபாரும் என்னுடைய பள்ளிக் காலங்களில் தொடர்ந்து ஏமாற்றாத வீரர்கள். ஒருவர் ஆட்டத்துக்கு ஆட்டம் ஒழுங்காக ஆடினால் அணியில் என்றாவது இடம் பெறுவார் என்னும் அணி அரசியல் தெரியாத பொற்காலம் அவை.

கல்லூரியில் சேர்ந்த பிறகும் வெங்கடரமணாவையும் சரத்தையும் ஆர்வத்துடன் தொடர்ந்து ஹிந்துவில் படித்து வந்தேன். பள்ளியில் கூடப் படிக்கும் போதே மிரட்டியவர் சரத். சரத்தின் ஆட்டம் நேரில் பார்ப்பதற்கு பயமாக இருக்கும். டீமுக்கு ஆள் எடுக்க மாங்கொட்டை டாஸ் போட்ட காலங்களிலேயே, வந்து விழும் முதல் பெயர் சரத் ஆகத்தான் இருக்கும். எதிரணியில் சரத் ஆடினால், ·பீல்டீங் வெகு சுலபம். சும்மா நின்றிருந்தால் போதும். தலைக்கு மேல்தான் பந்துகள் சென்று கொண்டிருக்கும்.

கருமமே கண்ணாயினார் மாதிரி சரியான குறிக்கோள்கள், விளையாட்டில் பயிற்சியின் மூலம் விடா முயற்சி, என பாடத்திட்டத்தில் வரும் வள்ளுவரின் குறளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாய் இருப்பவன். தமிழ் நாட்டுக்காக ஆட வாய்ப்பு கிடைத்தவுடன், அடுத்து இந்தியாவுக்காக ஆடச் செல்லும் வாய்ப்பு மிக அருகில்தான் இருக்கிறது என்று தமிழ்நாடு அணியின் கிரிக்கெட் வீரர்களை அறிந்தவர்கள், இந்தியாவில் ரஞ்சிக் கோப்பையை முக்கியமாகக் கருதும் நபர்கள் அனைவரும் எண்ணியிருப்பார்கள்.

டீன் வயதின் எழுச்சி நாயகன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைத்தபோது இந்த முடிவுகள் வலுப்பெற்றன. அவருக்காவது மட்டை மட்டுமே பிடிக்கத் தெரியும். நம்ம பையனுக்கு பந்தையும் சுழல விடத் தெரியுமே என்னும் நம்பிக்கைதான் காரணம். ஒன்றோ இரண்டோ ‘ரெஸ்ட் ஆ·ப் இந்தியா’ ஆட்டங்கள் மட்டுமே ஆடி முடித்த அவரை, இன்று பின்னோக்கிப் பார்க்கையில் அபிஜித் காலே கண்ணில் படுகிறார்.

பணமுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பது போல காலே முயற்சி செய்தார். ஆனால், இந்தியாவிற்காக ஆட இன்னும் பற்பல விஷயங்கள் உள்ள பிள்ளையாக இருக்க வேண்டும். பாம்பேயில் பிறந்தால் நலம்; தேர்வாணைக் குழுவில் சித்தப்பா இருந்தால் சௌகரியம்; எம்.பி.யாக மாமா இருந்தால் வாய்ப்பு நிச்சயம்; இது எதுவும் இல்லை என்றால் லஞ்ச முதலீடு செய்யவாவதுத் தயாராக இருக்க வேண்டும்.

வி. சிவராமகிருஷ்ணன் ரஞ்சியில் ஒரு ஆட்டத்துக்கு 43 வீதம் ஆறாயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். இப்பொழுதும் ஆடிக் கொண்டிருக்கும் சரத் 55 வீதம் ஏழாயிரத்தைத் தாண்டி விட்டார். ஒரு உதாரணத்துக்கு வாயுள்ள பிள்ளை ராபின் சிங்கை எடுத்துக் கொள்வோம். அவர் ஓர் ஆட்டத்துக்கு 52 வீதம் 4127 ரஞ்சி ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

சரத்துக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை; நிரூபிக்கவும் இல்லை. வெங்கடரமணாவின் நிலை படு மோசம். மேற்கிந்தியத் தீவுகளிடம் இரண்டு மாட்ச் தோற்றுப் போய்விட்ட பிறகு கடைசி ஆட்டமான நான்காவது போட்டியில் ஒரு வாய்ப்பு கொடுக்கப் படுகிறது. எழுபது பந்துகள் மட்டுமே வீசிய பிறகு, இந்திய அணியை விட்டுக் கழற்றி விடப் படுகிறார். ஒரு நாள் போட்டியில் பத்து ஓவர்களில் 36 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட் எடுத்த மிக மோசமான ஆட்டத்திற்காக நீக்கப் படுகிறார். இதுதான் ‘one-match wonder’.

தமிழ்நாட்டில் அதிக அளவில் விக்கெட் வீழ்த்தியவர்களில் சுனில் சுப்ரமணியம் மூன்றாவது நிலையில் உள்ளார். (வெங்கட்ராகவனும், விவி குமாரும் முதலிரண்டில் உள்ளார்கள்). நியுசிலாந்துக்கு எதிரான தன்னுடைய அரங்கேற்ற ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ¤க்கு மூன்று விக்கெட் வீதம் ஆறு விக்கெட் வீழ்த்தி ‘சிறந்த பந்து வீச்சாளர்’ பரிசையும் பெறுகிறார். அதன் பிறகு பத்தாண்டுகளுக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்காமல், தமிழ் நாட்டிற்காக மட்டுமே மிளிர்கிறார்.

தமிழ்நாட்டுக்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை இல்லை என்பது சோகத்தில் ஆறுதல். காட்டாக ரிஸ்வான் சம்ஷத் என்று என்னுடைய பள்ளிக் கால கவனத்தைக் கவர்ந்த உத்தர பிரதேசக்காரரை பார்ப்போம். 47 ரன்கள் வீதம் 6000 ரஞ்சி ஓட்டங்கள். ஓரளவு பந்தும் வீசக் கூடியவர். சரியான mentor-களோ, ஆதரவாளர்களோ இல்லாததுதான் இவர்களின் பிரசினை.

ராபின் சிங்குக்குக் கிடைக்கும் இந்திய இடங்கள் ஏன் வெங்கட ரமணாவுக்கும், ரிஸ்வான் சம்ஷத்துகளுக்கும் கிட்டுவதில்லை?

இந்த வருட ரஞ்சி நிலைமையைப் பார்த்தால் தனி மனித அக்கிரமிப்புகள் நன்று விளங்கும். பூனை, நாயும், கிளியும் கூட பெற்ற பிள்ளை போல மடியினிலே இருப்பது போல் ஏழு பாயிண்ட் மட்டுமே எடுத்த பெங்காலில் இருந்து கங்குலி. க்ரூப்பில் இரண்டு முறை தோற்று கடைசி நிலையில் இருக்கும் பரோடாவில் இருந்து கூட பலர் இருக்கிறார்கள். ஆனால் மும்பை போல் மூன்று வெற்றிகளை பெற்று க்ரூப்பின் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டு அணிக்கு என்ன பயன். நமக்கு வளர்த்து விடத் தெரியவில்லை.

நடக்கும் விஷயங்களைச் சொல்லிக் குற்றப் பார்வையில் அடிபடாமல், அணியில் இருப்பதற்கான சமரசங்களையும் சரியான விகிதாசரங்களில் செய்து கொண்டு, அவ்வப்போது வெற்றியும் ஈட்டித் தந்து, தன்னுடைய வாழ்க்கையையும்சிதைத்துக் கொள்ளாத அனைத்து ரஞ்சி வீரர்களுக்கும் எனது பாராட்டுகள்.

நன்றி: தமிழோவியம்

Categories: Uncategorized

ஒரு படக்கதை – கிறுக்கல்கள் : ரா பார்த்திபன்

January 27, 2004 Leave a comment

தமிழகத்தை சேர்ந்த பலரும் புத்தககங்கள்… மன்னிக்க…. இலக்கியங்களையும், ஆரோக்கியமான விஷயங்களையும் படிப்பதில்லை என்பது சிலர் சொல்லும் குற்றசாட்டு. இன்றைய தமிழ் சினிமா செல்லும் திரை ரசிகர்கள்தான் இவர்களின் முக்கிய இலக்கு. புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வாஸ்துவும் சமையல் புத்தகங்களும் வாங்குபவர்களை நோக்கியும் இலக்கியவாதிகள் பலர் இவ்வாறு சொல்லி வருகின்றனர்.

இவர்களில் சிலராவது ‘கிறுக்கல்கள்’ போன்று ஒரு புத்தகத்தையாவது வெளியிட வேண்டும். பார்த்திபன் என்னும் பெயருக்காக பல பிரதிகள் விற்றாலும், புரட்டிப் பார்ப்பதற்கு அனைவருக்கும் ஆர்வத்தைக் கொடுக்கும் புத்தகம். தமிழ் தெரிந்தும் அதிகம் வாசிக்காத கல்லூரி நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். இருக்கும் ஒரு சில தமிழ் புத்தகங்களை பராக்குப் பார்த்து வந்தவர், மேற்கண்டதைக் கண்டவுடன் நின்றார். ‘என்னப்பா இது? ஷேப்பே வித்தியாசமா இருக்கு’ என்று எடுத்தார்.

என்னுடைய வீட்டில் இருந்து இதுவரை விசி++, சி#, ஜாவா என்று தொழிற்நுட்பப் புத்தகங்களையே கடன் வாங்கிச் சென்றவர், கடனாகக் கேட்ட முதல் புத்தகம் ‘கிறுக்கல்கள்’. நல்ல வடிவமைப்புக் கொண்டிருந்தால், உள்ளிருக்கும் விஷய செறிவுகளைப் பின்னுக்குத் தள்ளிக் கொள்ளலாம் என்பதற்கு நல்ல உதாரணம். தமிழை உலக மயமாக்கப் போகிறோம், செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்பவர்களுக்கும் இது போன்ற வெளியீடுகள் வரப் பிரசாதம்.

ரயிலில் ஒரு நாள் புரட்டிக் கொண்டிருக்கையில், பக்கத்து இருக்கை அமெரிக்கர் கூடத் திரும்பி பார்த்து, படம் பார்த்து விட்டுத் தருவதாகக் கேட்கிறார். அவருக்கு பலான புத்தகமோ என்னும் சபலமோ என்றறியேன். ஆனால், முழுவதும் ஒரு சுற்று திருப்பி விட்டுக் கொடுக்கும்போது ‘அற்புதமான ஆக்கம்’ என்று நன்றி சொல்லி வியந்தார். இது பார்த்திபனுக்கு எகத்தாளமா அல்லது பாராட்டு முத்திரையா என்று எனக்குத் தெரியாது.

கறுப்புப் புள்ளியையும் பாரதியின் அவுட்லைன்னையும் வைத்து மேட்டர் எழுதுவது; ‘ஹே ராம்’ படம் குறித்த பதிவுகள், சினிமாவுக்கு வந்த கதை, ‘அடுத்த வினாடி’ ரூமி மாதிரி சுய முன்னேற்றக் கட்டுரைகள்; நிறைய காதல் புலம்பல்கள், நிறுத்தல் குறிகளை வைத்து வார்த்தை அடுக்குகள் எனக் கண்ணைப் பறிக்கும் இணையத்தளம் போல் உள்ளது இந்தப் புத்தகம். அனைத்துக்கும் சுவையான பார்த்திபனின் பின்னூட்டங்கள், குறிப்புகள் என சுய அலசலாக வருகிறது மேலும் மெருகு சேர்க்கிறது.

பார்க்க வேண்டிய புத்தகம்.

புத்தகத்தில் இருந்து

“கிறுக்கலைக் கூட கவிதையென்று சொல்லிக் கொள்ளும் ஆசை… அதைப் புத்தகமாகப் பதிவு செய்து கொள்ளும் ஆசை… விமர்சகர்கள் கூட, ‘போனாப் போகுது’ என்று பாராட்டி விட மாட்டார்களா என்ற ஆசை…

இப்படிப்பட்ட அல்ப ஆசைகள் அறிவிப்பது என்னவென்றால், நம்மை இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பது புவியீர்ப்பு அல்ல…

ஆசை…ஆசை…ஆசை…ஆசை…!”

நன்றி: தமிழோவியம்

Categories: Uncategorized

ஆஸ்கர் ஆட்டம் ஆரம்பம்

January 27, 2004 Leave a comment

Normal Charlize Theron

இங்கிலீஷ் படங்கள் பார்ப்பதில் ஒரு பயன் இருக்கிறது. ‘ஜேஜே’
வருகிறதா, ‘செரண்டிபிட்டி’யை எப்படி பெயர்த்திருக்கிறார் என்று
அலசலாம். கமல் ஒரிஜினலாய் ஒரு சீன் வைத்தால் கூட ஹேமந்த்
சொல்வது போல் ‘சைலன்ஸ் ஆ·ப் தி லாம்ப்ஸ்’, ‘ரோஷோமோன்’,
‘டெட் மான் வாக்கிங்’, ‘லை·ப் ஆ·ப் டேவிட் கேல்’ என்று பல
படங்களின் தழுவல்தான் என்று பழி போட முடிகிறது.

‘லார்ட் ஆ·ப் தி ரிங்’ படத்தின் மேல் ஆஸ்கருக்கு என்ன பிரேமையோ!
முதல் படமே போர் என்று நினைக்க வைக்குமளவு சண்டைக் காட்சிகள்.
மரத்தடியின் மூலம் கையேடு கிடைத்தால் இரண்டையும், இப்ப
அனைவரும் சிலாகிக்கும் மூன்றாவதையும் பார்க்கும் தைரியம் வரலாம்.

‘Lost in Translation’ இயக்குநர் கலைக்குடும்பத்தை சேர்ந்தவர். அப்பாவின்
பெயரை வைத்து திரையுலகில் காலை வைத்துத் தட்டு தடுமாறி நம்ம
சூர்யா போல் இப்பொழுதுதான் தனித்துவம் எட்டி பார்த்துள்ளது. (‘காட்·பாதர்’
எடுத்த அப்பா, நம்ம சிவாஜி மாதிரி திரையுலக பிதாமகன்; கஸின் நிகலஸ்
கேஜ்)


Monster Charlize Theron

‘மான்ஸ்டர்’ படம் பார்த்து விட வேண்டிய ஒன்று. தன் அழகைக் குறைத்துக்
கொண்டு படு சிரத்தையாக உண்மைக் கதையை வாழ்ந்திருப்பதாக
சொல்கிறார்கள்.

தமிழ்ப்படங்களோ, (ஒரு படம் கூடவா ஆஸ்காரின் மதிப்பீடுகளுக்கு இணையாக
இல்லை?) இந்தியப் படங்களோ இல்லாதது ஆச்சரியமாக இல்லை. ஆனால்,
சுவையான ‘பெண்ட் இட் லைக் பெக்கம்’ தவறவிட்டது எப்படி?

‘மேட்ரிக்ஸ்’ படத்தை எந்த பட்டியலிலும் நியமிக்காததும் டாம் க்ரூய்ஸ¤க்கு
சிறந்த நடிகருக்கான பரிந்துரை தராததும் சோகம்தான்.
சில சிந்தனையைத் தூண்டும் வசனங்களுக்காகவாவது மேட்ரிக்ஸ¤க்கு
அங்கீகரிப்பு கொடுத்திருக்கலாம்.

அதிகாரபூர்வமான இணையத்தளம்
மரத்தடி விவாதங்கள்

Categories: Uncategorized

பிடிக்காத பாடல்கள்

January 27, 2004 Leave a comment

1. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல – தூர்தர்ஷனில் சின்ன வயதில் அடிக்கடி
போட்டு படுத்துவார்கள். சோகம் கர்னாடகக் காவிரி போல் வழிந்தோடும்.
பாடல் வரிகள் எல்லாம் கவனிக்காமல், காட்சியமைப்பும் பிடிக்காமல்,
கண்ணை மூடி, பல்லைக் கடித்து, அடுத்த பாட்டுக்காக காத்திருக்கும்
காலங்கள் நரகம்.

2. ஆயிரம் தாமரை மொட்டுக்களே – இது விவிதபாரதியில் அடிக்கடி ஒலித்ததால்
அலுத்துப் போனது என நினைக்கிறேன். பாடலைப் பார்த்த பிறகு
வெறுப்பின் உச்சகட்டத்துக்கே சென்று விட்டேன். என் வயசுப் பயல்
கார்த்திக் செய்யும் அட்டகாசம் எங்கள் அனைவரின் வயிற்றெரிச்சலையும்
கொட்டிக் கொண்டது.

3. பசுமை நிறைந்த நினைவுகளே – பெருசுகளின் சிலாகிப்பு.
‘முஸ்தபா..முஸ்த·பா’ வந்ததோ, நான் பிழைத்தேன்.

4. பொன் மகள் வந்தாள் – ஏற்கனவே செயற்கைத்தனம் நிறைந்த காட்சியமைப்பு;
மறுபடி அதே பாட்டை உல்டா செய்ய என்னத்தைக் கண்டார்களோ?

5. அப்பனே…அப்பனே.. பிள்ளையாரப்பனே –
படத்தில் ரஜினி இருக்க,
பார்ப்பதற்கு ரசிகர்கள் நாங்கள் இருக்க,
யானையின் தயவு எதற்கு?

6. நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் –
அந்தக் கால கமலை விற்பதற்கு, மிருகங்கள் தேவைதான் என்றாலும்
மற்றுமொரு அறுவை பாடல்.

7. சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் –
சாகப் போறவன் ரொம்ப சிரிக்கிறான்.
சீக்கிரம் முடிங்கப்பா பாட்டை.

8. என்னவளே… அடி என்னவளே – ‘காதலன்’ வந்த சமயம், பரிட்சையில் கேட்கக்கூடிய
முக்கிய பகுதி போல் அடிக்கடி கேட்டு/பார்த்ததாலோ என்னவோ, பிறகு
மொத்தமாக வெறுத்து விட்டது.

9. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் – தலைவரை ஏமாற்றும் சரோஜா தேவியுடன்
கனவுலக டூயட் பாடுகிறாரே என்ற வருத்தம் இருந்தாலும், பாட்டு முழுக்க
சாரட் வண்டிதானே?

10. செண்பகமே… செண்பகமே – நாலு பேர், நாலு தடவை பாடறதுக்கு, அப்படி என்ன
இருக்குங்க இந்த பாட்டில்?

அடிக்க வருவதற்கு முன் நிறுத்திக் கொள்கிறேன்.

Categories: Uncategorized