Archive

Archive for March 11, 2004

குண்டராய் பார்த்து குறைக்காவிட்டால்…

March 11, 2004 Leave a comment

பரியின் இன்றைய பதிவில் அவசியமான சில கேள்விகளை எழுப்புகிறார்.


என் கேள்வியெல்லாம், இதையெல்லாம் சட்டம் போட்டுதான் தடுக்க வேண்டுமா? எதைத் திண்ணலாம் எவ்வளவு திண்ணலாம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத மூடர்களாகிவிட்டார்களா மக்கள்?

இந்த சட்டம் “276-139” என்னும் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுவிட்டது. செனட்டில் இருக்கும் நூறு பேரும் தலையாட்ட வேண்டும்; கடைசியாக பெருந்தலைவர் ஜி.டபிள்யூவின் கையெழுத்தும் பாக்கி. வெகு விரைவில் சட்டமாகி விடும். மெட்டொனால்டும், பிட்ஸா ஹட்டும் போண்டியாகக் கூடாது என்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். தவறான உணவு வகைகளை மொக்குவது; அனுபவித்து ருசித்த இடத்தையே குற்றஞ்சொல்லி, வழக்கு தொடுத்து உணவின் சுவைதான் என்னை சாப்பிட வைத்தது என்று விதண்டாவாதம் செய்பவர்களைத் தடுக்க ஒரு சட்டம்.

இதற்கும் நேற்று ஜாமா எனப்படும் மருத்துவர்களின் சஞ்சிகை வெளியிட்ட ஆய்வு முடிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆய்வறிக்கை என்ன சொல்கிறது?

* தவிர்த்துவிடக் கூடிய காரணங்களால் ஏற்படும் மரணங்களில் ‘உணவு கட்டுப்பாடின்மை’க்கு இரண்டாம் இடம்.
* 2000-ஆவது ஆண்டில் 400,000 பேர்கள் இவ்வாறு இறந்திருக்கிறார்கள்.
* புகை பிடிப்பது 435,000த்தைக் கொன்று இன்னும் முதலிடத்தில் இருக்கிறது.
* இதே மாதிரி போனால் உணவு பழக்கவழக்கங்களினால் இறப்பவர்களுக்கு 2005-இல் முதலிடம் கிடைத்துவிடும்.
* அடுத்த வருடமே 500,000-ஐ எட்டும்.
* அமெரிக்காவில் 64 விழுக்காடு மக்கள் சராசரியாக இருக்க வேண்டிய எடையை விட அதிகம் உள்ளார்கள்.
* (நாங்கள்) 75 பில்லியன் அமெரிக்க டாலர்களை வைத்தியத்திற்கு செலவு செய்தோம்.
* சர்க்கரை வியாதி போன்றவற்றையும் சேர்த்துக் கொண்டால் $117 பில்லியன்.

மக்களுக்கு விழுப்புணர்வும் உடற்பயிற்சியை செய்ய ஊக்கததுயும் தருவதற்காக அரசாங்கமும் “ஆரோக்கியமான வாழ்க்கை” போன்ற பல முயற்சிகளை செய்து வருகிறது. சவுத்வெஸ்ட் விமான சேவை சில மாதங்களுக்கு முன் குண்டாக இருப்பவர்கள் இரு பயணிகளின் டிக்கெட்டுக்கான காசை செலுத்தவேண்டும் என்னும் புது நியமனத்தை வழிவகுத்தது. அரசும் நிறுவனங்களும் அறிவுறுத்தி என்ன பயன்?

என்னவோ.. நடக்குது.. மர்மமா இருக்குது.. ஒன்னுமே புரியலை உலகத்துலே.. (இட்லி வடை, பெயரிலி வரிசையில் மற்றுமொறுவர்; சாப விமோசனம் மாதிரி சுவையாக இருக்கிறது. புதுமை விரும்பும் பித்தன் மாதிரி பாதியிலேயே நிறுத்தாத வரைக்கும் சரி!?

Categories: Uncategorized

உள்ளொன்று வைத்து?!

March 11, 2004 Leave a comment


என்னடா பொம்மை போடறவன் புஷ் படத்தைப் போட்டிருக்கானே என்று தூற்ற வேண்டாம். உங்களுக்கு உண்மைய விளம்பவே இந்தப் படம். CTRL+A (CTRL பொத்தானை அமுத்திக் கொண்டே ‘a’ அல்லது Edit மெனுவில் இருந்து Select All) தட்டவும்! உண்மை விளங்கும்… புஷ்ஷின் உண்மையான முகம் விளங்கிச்சா??

நன்றி: படப்புதிர் பக்கங்கள்

Categories: Uncategorized

வலைப்பூக்கள் நுகர்தல்

March 11, 2004 Leave a comment

1. ஆட்டோகிரா·ப் விமர்சனத்தை அனுபவித்து எழுதியிருக்கிறார் மீனாக்ஸ். மூன்று, நான்கு பதிவுகளை எப்படி மேய்க்கிறார், தமிழை விட ஆங்கிலப் பதிவின் மேல் அதிகப் பரிவு ஏன் என்பதை இன்னொரு நாள் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், படத்தின் குறைகளை, விகடன் போல் இவரும் கண்டுகொள்ளவில்லை. நாலு கேமிராமான் எல்லாம் சாமானியனாகிய என் கண்களுக்குப் புலப்படவில்லை. எங்கோ படித்து, ‘ஆஹா… நான்கு விதமான பதிவு கிடைக்கிறதே’ என்று எல்லாம் படத்தை மறுமுறை பார்த்தபிறகும் பாராட்ட முடியவில்லை.

சேரன் என்னும் கதாசிரியர் நிறைய இடங்களில் சறுக்கியிருந்தார். நல்ல பல தமிழ்ப் படங்களில் இருந்து சுவாரசியமான பிண்ணனிகள் கடன் வாங்கப் பட்டதை விட்டு விடுகிறேன். (கடன் வாங்கியே ஓட்டும் ப்ளா·கில், அவர் ‘இதய’த்தைத் தழுவினார், ‘கிளிஞ்சல்கள்’ சாயல், ‘புது வசந்த’த்தின் தாக்கம் என்று சொன்னால், என்னுடைய காரின் டயரை நானே ப்ங்க்ச்சர் செய்தது போலாகிவிடும்). ஆனால், சேரனிடம் கேடக விரும்பும் ஒரு கேள்வி:

‘ஏன் சார்… உங்களைக் காதலிக்க வில்லையென்றால் அவர்கள் நன்றாக இருக்க மாட்டார்களா?’

பள்ளிக் காதலி சௌகரியமாக இருக்கிறாள். ‘பெப்ஸி உங்கள் சாய்ஸில்’ பலர் சொல்வது போல் இல்லத்தரசி. மூன்று குழந்தைகளுக்குத் தாய். (மாமியார் கூட வீட்டில் மிஸ்ஸிங்). பாந்தமான கணவன். பசி, பட்டினி, ஏழ்மையில் ஒன்றும் இல்லை. ஆனாலும், கதாநாயகன் அவளைப் பல வருடங்கள் கழித்து முதன்முறையாக சந்தித்தவுடன் கேட்கிறான், ‘ஏன் இப்படி கஷ்டப்படறே?’

மலையாளக் காதலி பணக்கார சமஸ்தானத்தில் வாக்கப்படுகிறாள். கணவனை வெட்டு குத்தில் இழந்து விடுவதாகக் காண்பிக்கப்படுகிறது. விதவையும் சோக உருவாக தம்பூராவை மீட்டிக் கொண்டு வெறுமனே காலம் தள்ளுவதாக சொல்லப்படுகிறது.

முறுவலரசி ஸ்னேஹாவை கிட்டத்தட்ட கன்னிகாஸ்திரியாகவே ஆக்கிவிட்டார்.

‘ஏன் சார்… உங்களைக் காதலிக்க வில்லையென்றால் அவர்கள் சந்தோஷமாக இருக்க மாட்டார்களா?’

மலையாளத்தில் மட்டுமே சம்சரிக்கும் லத்திகா, காதல் கைகூடாதபின் திருமணத்திற்குப் பிறகு தமிழில் கதைப்பது, சரஸ்வதியாக/மீராவாகத் தெளிவாக உருவகப்படுத்திய பின்பும் காணபவர்களுக்குப் புரியாதோ என்று வெளிப்படையாகக் காட்சியமைப்பது என்று ஓரிரண்டு கடுப்புகளை கண்டுக்காமல் படத்தோடு நிச்சயம் லயிக்கலாம்.

2. கருணாஸ் மட்டுமே அறிந்த தமிழ் சினிமா பார்க்கும் நல்லுலகில், கருணா குழப்பத்தை உண்டு செய்திருக்கிறார். கிழட்டு நாடோடி மூலம் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டாலும் அவருடைய சிங்கள செய்திகள் சேகரிப்பு இப்பொழுது நல்ல பயனைத் தருகிறது. சொந்தக் கருத்துக்களை இன்னும் கொஞ்சம் விரிவாகவும் (?!) பத்தி பிரித்தும் வெளியிட்டால் என்னுடைய குழம்பிய குட்டைத் தெளியும்.

நன்றி: Aging Wanderer’s Raging Rambles

“இந்தியா எப்போதோ கருணாவினைக் கொண்டு பிளக்கத் திட்டமிட்டுவிட்டது என்பது ஒருவரின் புத்திக்கூமையைப் பகிடி பண்ணுவதுபோல. தன்னைக் கொல்ல ஆட்கள் அனுப்பியிருக்கின்றார்கள், பிரபாகரன் போரைத் தொடங்க இருந்தார் என்ற இருகூற்றுகளும் கருணா சொன்னதிலிருந்து மிகவும் (அவரவர் தேவைக்காகத்) திரிக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன (ரோய்ட்டர் இந்தியாவுக்குத் தலைமையகத்தினைக் கொண்டுவந்ததின் கெடுதல் இப்போதுதான் தெரிகின்றது).

பிரபாகரனா, கருணாவா என்பது எனது ஈடுபாடில்லை. இருவரிலும் பிழையும் இருக்கின்றது; இருவரும் ஈழத்தமிழர் நலனுக்கு அவசியமாகவே இருந்திருக்கின்றனர். நேற்றைக்குவரை கேர்ணல் கருணாவாக இருந்தவர் இன்றைக்குத் துரோகி கருணாவாக வன்னித்தமிழ்ப்புலிகள் சார்ந்த செய்தித்தாபனங்களிலே சொல்லப்படுவதும் உருக்காட்டப்படுவதும் நேற்றைக்கு வரை பயங்கரவாதி கருணாவாக இருந்தவர் இன்று பிரபாகரனின் கொடுங்கோன்மையை வெளிச்சொல்லும் பாதிக்கப்பட்ட கிழக்குத்தமிழர்களின் விடுதலைவீரராக இலங்கை இந்தியச்செய்தித்தாபனங்களினாலே உருவகிக்கப்படுவதும் ஈழத்தமிழன் என்றளவிலே எனக்கு ஈடுபாடானதில்லை. ”

3. தமிழ்-வலைப்பூப் பிதாமகர் மாலனின் ‘எது வலைப்பூ’ என்னும் கடிதம் பலருடைய பதிலையும் விவாதத்தையும் தந்திருக்கிறது. என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று யோசிக்கலாமா என்று யோசித்தபொழுது ஷார்ப்ரீடர் மூலம் பரியின் பதிவை பார்த்த பிறகு, ‘கலங்காமல் (இது செம்புலப் பெயநீர் கலங்கல்…) சொல்லியிருக்கிறார்’ என்று தோன்றியது.

Categories: Uncategorized

பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்?

March 11, 2004 Leave a comment

அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான்; ஒன்று ஆளுங்கட்சி; மற்றொன்று எதிர் கட்சி. ஒரு வளர்ந்த மேற்கத்திய நாட்டுக்கு அடையாளமாக இரண்டு கட்சிகள்தான் வேண்டுமென்பது ப.சிதம்பரம் போன்ற படித்த ஜனநாயகவாதிகளின் கருத்து. குடியரசு (Republican party) மற்றும் ஜனநாயகக் கட்சி
(Democratic party) இரண்டுக்கும் மாற்றாக பசுமை கட்சி (Green Party), மறுமலர்ச்சி கட்சி (Reform Party) போன்ற அமெரிக்க துக்கடாக்கள் முயன்று வருகிறார்கள். நான்கு வருடம் முன்பு நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆல் கோரும் ஜார்ஜ் புஷ்ஷும், ஜெயாவின் ‘சஹானா’வும் சன் டிவியின் ‘அண்ணாமலை’யும் போல மோதிக் கொள்ள, நடுவில் ஸ்டார் விஜய்யின் ‘சலன’மாய் நுழைகிறார் ரால்·ப் நாடெர்.

தமிழ்நாட்டில் பெயர் குழப்பம் செய்வார்கள். திமுக சார்பாக மைலாப்பூரில் ‘ராமஜெயம்’ என்பவர் தேர்தலில் நின்றால், அதே பெயர் கொண்டுள்ள இருவர் சுயேச்சையாக போட்டியிடுவார்கள். திமுக-வை சேர்ந்த இன்னும் சிலர் போட்டி வேட்பாளராக எதிர்கட்சியின் சார்பில் களமிறக்கப் படுவார்கள். அவரின் சாதி, இனம், மொழி இன்ன பிற பாகுபாடை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக நிக்கவைக்கப் படுவார்கள். திமுகவும் இதே மாதிரி வேலையை, தன்னுடைய எதிர்கட்சி வேட்பாளருக்கு பதில் மரியாதை செய்யும்.

அமெரிக்காவின் ரால்·ப் நாடரும் கிட்டத்தட்ட இதே போன்ற உதவியை புஷ்ஷ¤க்கு மீண்டும் செய்வார் போலத் தெரிகிறது. போன தடவை ப்ளோரிடா மற்றும் நியு ஹாம்ப்ஷரில் விந்தியாவின் மெல்லிய ஆடை நெய்த இழை போன்ற ஓட்டு வித்தியாசத்தில், ஆல் கோர் தோற்கக் காரணமானவர் நாடெர். ஆனால், புளித்துப் போன இரு கட்சிகளுக்கு நல்ல மாற்றாகவும் விளங்குபவர். சிகரெட் விற்பவர்களும், காப்பீடு நிறுவனங்களும், மருந்து தயாரிப்பவர்களும், கார் கம்பெனிகளும் பணத்தைக் கொட்டி வளர்க்கும் இரு கட்சிகளுக்கு நடுவே, தேர்தல் நிதி கையூட்டு வாங்காமல் போட்டியிட முயற்சிப்பவர்.

“‘The Buying of the President 2004′” என்னும் புத்தகம் இங்கே சூடாக விற்று கொண்டிருக்கிறது. திண்ணையில் நரேந்திரனின் அறிமுகத்தில் எழுதுவது போல் சராசரி மனிதனின் தேர்தல் நிதியைக் கொண்டு போட்டியிட நிற்கும் எவருக்குமே தேர்தலில் ஜெயிப்பதற்கு வாய்ப்பேயில்லை என்று புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது.

அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் அனைத்துமே இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பணத்தை வாரி வழங்குகிறது. தங்களுக்குத் தேவையான சட்டதிட்டங்களை நிறைவேற்ற இது வழிவகுக்கும். கொடுக்கும் விகிதாசாரங்களில்தான் வேறுபாடு. இந்த டிவி சீரியல் மந்தை கூட்டத்தில் தனித்து நிற்பவர் நாடர். நாடெருக்கு வோட்டுப் போடக் கூடாது என்று ஜனநாயகக் கட்சியில் ஒவ்வொருவரும் அறைகூவுகிறார்கள். அவருக்கு ஈகோ, தான் என்னும் அகங்காரம், புகழ் போதை என்று விதவிதமாக வசவுகள் வருகிறது.

ஆனால், 2000-த்தில் கோர் தோற்பதற்கு நாடெர் மட்டும்தான் காரணம் என்பது மிகத் தவறான வாதம். அமெரிக்காவின் நாற்பத்தி மூன்று மாகாணங்களில் போட்டியிட்ட நாடெருக்குக் கிடைத்த மொத்த வோட்டு என்னவோ மூன்று மில்லியன்தான். ·ப்ளோரிடாவில் புஷ் 537 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடெருக்கு 97.488 வாக்குகள் கிடைத்திருந்தது. நியு ஹாம்ப்ஷைரில் 7,211 வாக்கு அதிகமாகப் பெற்று புஷ் ஜெயித்தார். நாடெருக்கு 22,198 வோட்டு கிடைத்தது. இவை ஆல் கோர் எதிர்ப்பு வாக்குகள்; சுற்றுபுறச் சூழலை வாகன தயாரிப்பளர்களுக்காக விட்டு கொடுத்தது, இணையம் கண்டுபிடித்தது என்று கோரின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் அளித்த ஓட்டு. கிறித்துவத்தின் பிரதிநிதியாக இங்கு பாட் புக்காநன் (Pat Buchanan) பெற்ற ஓட்டுகள் அனைத்தும் புஷ்ஷையே சேர்ந்திருக்க வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் ஐந்து மாநிலங்களில் புக்கானன்+புஷ் ஜோடி, கோர்+நாடெர் பெற்ற வோட்டுக்களை விட அதிகமாகவேப் பெற்றிருக்கும்.

ஒரு சராசரி உழைப்பாளியை விட அந்த நிறுவனங்களின் தலைவர் ஐந்நூறு மடங்கு அதிகமாக சம்பளம் கிடைக்க வைத்துக் கொள்கிறார். இவரை தட்டிக் கேட்க ஒருவர் தேவை. ஈராக் போரை ஆதரித்தாரா இல்லையா என்று புரியாமல் கெர்ரி முழம் நீளத்துக்கு பதில் கொடுக்கிறார். இ(ரு)வரையும் எதிர்கொள்ள திராணியுள்ள ஒருவர் தேவை. ‘ஸ்பெஷல்’ ஆர்வ குழுக்களைத் துரத்துவதாக வாய்கிழித்துக் கொண்டே அவர்களில் சிலரிடம் இருந்து தேர்தல் நிதி பெறுபவர்களை சுட்டி காட்ட ஒருவர் தேவை. அவர் ஜெயிப்பது வேறு விஷயம். ஆனால், அந்த சக்தி அவசியம் மக்களிடம் மாறுதலை உந்தவேண்டும்.

சிறந்த வேட்பாளர் ஜனாதிபதியாக வேண்டும். நமக்கு கோக் பிடித்திருக்கிறதா? சாப்பிடுவோம். மாருதியை விட ஹூண்டாய் கொடுக்கிற காசுக்கு பயனுள்ளதாகத் தோன்றுகிறதா? வாங்கிக் கொள்வோம். வீட்டு ஊறுகாயை விட ‘ருச்சி’யும், அம்மாவால் மசாலா செய்ய முடியாததால் ‘ஆவிட்டா’ மசாலாவுக்கும் தாவுகிறோம். எது சரியெனப் படுகிறதோ, எது சௌகரியமோ, எவை முக்கியமோ, எது நன்றாக உழைக்கிறதோ, அதைத் தேர்வு செய்கிறோம். சிறந்த வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் படுவார்.

நாடெரின் தேர்தல் அறிக்கை ஆசைகள் நிறையக் கொண்டது. ஒரு மணி நேரத்துக்கு எட்டு டாலர் மட்டுமே கிடைக்கும் தொழிலாளர்களின் கூலியை பத்து டாலராக்குவது; அலாஸ்காவில் ஆயில் எடுத்து சுற்றுப்புற சூழலைக் கெடுத்த நிறுவனங்களிடம் நஷ்ட ஈடு கறப்பது; குழந்தைகளுக்கு சென்சார்
செய்யப்படாத ‘வயசுப் பசங்க’
வட்டுகளும் விருமாண்டி போன்ற வன்முறைப் படங்களும் எட்டமல் தடுப்பது; என்று நடுத்தர வர்க்கத்தின் வயிற்றில் பாயசம் இடும் எண்ணங்கள்.

ஐரோப்பாவில் இத்தாலி போன்ற பல நாடுகளில் இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள், இந்தியாவில் உள்ளது போல் தேர்தல் களத்தில் மக்களை ஈர்க்கிறது. அமெரிக்காவில் மட்டும் இரண்டு கட்சிகளே ஆதிக்கம் செய்யவேண்டும் என்று ஊடகங்கள் வலியுறுத்துகின்றன. சில நாடுகளில் உள்ளது போல் ‘ரெண்டாவது சாய்ஸ்’ வேட்பாளர் யார் என்று டிக் போடுவது, பல பேரை போட்டியிட செய்து அதிக வாக்கு பெறும் இருவருக்கு மட்டும் ‘·பைனல்ஸ்’ நடத்துவது என்று புதிய தேர்தல்முறைகளை அறிமுகபடுத்தாமல், ஜனநாயகத்தில் பங்குபெற விரும்பும் ஒருவரை தடுப்பது நியாயம் அல்ல.

தமிழகத்தில் த.மா.கா. சீரிய கொள்கைகளை கொண்டிருக்கலாம். ஆனால், தனிவழி சென்றதால், மீண்டும் அதிமுக கோலோச்ச வழிவகுத்தது. அது போலவே தேர்தல் சீர்திருத்தங்கள் எதுவும் செய்யாவிட்டலும், நாடெர் வாக்காளர்களை திசை திருப்பினாலும், மீண்டும் ஜார்ஜ் புஷ் நான்கு வருடங்கள் வெள்ளை மாளிகையில் தொடர்வது கஷ்டமான விஷயம்தான்.

நாடெரின் நிலையை நினைத்தால் என்.டி.ஆரும் பானுப்ரியாவும் நடித்த தூர்தர்ஷன் தொடர் நினைவுக்கு வருகிறது. கடுமையான தவத்தில் இருக்கிறார் விஸ்வாமித்திரர். நாரதரின் மூலம் தன்னுடைய தலைமைக்கு ஆபத்து வருவதை இந்திரன் அறிகிறான். ஊர்வசி, ரம்பா, திலோத்தமை எல்லோரும் கவர்ச்சி நடனம் ஆடியும் அசைய மாட்டேன் என்கிறார் என்.டி.ஆர். மன்மதனின் துணையோடு மேனகை தவத்தை கலைத்து, விஸ்வாமித்திரரோடு வாழ ஆரம்பிக்கிறாள். ஆனந்தமாக சிற்றின்பத்தில் ஆண்டுகள் செல்கிறது. சகுந்தலையும் பிறக்கிறாள். தன் வலிமையை மீண்டும் பெருக்கிக்கொள்ள முனிவர் தவத்துக்கு செல்ல நினைக்கிறார். வானுலகுக்கு மானிடரை கூட்டிச் செல்ல முடியாததால் மேனகை, குழந்தையை மண்ணுலகத்திலேயே தவிக்கவிட்டு சென்று விடுகிறாள்.

புஷ் என்னும் இந்திரன் மேனகை என்னும் நாடெர் மூலம் போன தேர்தலை வென்றார். சகுந்தலை போல் பொருளாதார, இத்யாதி பிரச்சினைகள் அனாதையாய் இருக்கிறது. கன்வ முனிவராக ஜான் கெர்ரி குழந்தையை தத்தெடுப்பாரா?

நன்றி: தமிழோவியம்

Categories: Uncategorized