Archive

Archive for April 19, 2004

சென்னையில் ஒரு வெயில் காலம்

April 19, 2004 Leave a comment

பெங்களூரில் இரண்டு வருடம், டெல்லியில் ஒரு வருடம், கல்கத்தாவில் இரண்டு மாதம், ராஜஸ்தானில் நான்கு வருடம், என்று இந்தியாவை க்ளோசப்பில் பார்த்தாலும் சென்னையோடு இருக்கும் love-hate தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டேன். வழக்கமாக ஒரு நாள் மட்டுமே சென்னையில் தங்கி பாஸ்டன் திரும்பிவிடும் எனக்கு இந்த முறை நீண்ட விடுமுறை. பத்து நாட்கள் இருந்தாலும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா என திகட்டாத இருப்பு.

போன முறை ஏ.ஆர்.ரெஹ்மானையும் அதற்கு முந்திய முறை ரஞ்சிதாவுடனும் விமானத்தில் சிறிய சந்திப்புகள் கிடைத்தது. இந்த முறை மனைவி+குழந்தை. ‘ஆண்ட்டி என்ன கேட்டா’ என்று ஏர் ஹோஸ்டஸ் ஆங்கிலத்தில் கேட்டதை மொழி பெயர்த்தும், ‘அங்கிள் என்ன சொல்றா’ என்று பைலட் ஜெர்மனில் பேசுவதை விளக்கியும், மஞ்ச பொத்தானை அமுக்காதே என்று சொல்லியும் அமுக்கியதால் வந்து கோபத்துடன் ‘என்ன வேணும்’ என்று வினவிய விமான-விருந்தோம்பியிடம் மன்னிப்பு கேட்டும், மேகங்களையும் பாலைவனங்களையும் வேடிக்கை காட்டியும் விமானப் பயணம் சென்றது.

எனது celebrity meeting disorder syndrome-ஐ த்ரிஷா தீர்த்துவைத்தார். பார்க் ஷெராடன் வாசலில் பேசாத செல்·போனை ரொம்ப நேரம் காதில் வைத்துக் கொண்டு சோகமாகக் காத்திருந்தார். ரொம்ப நேரம் காத்திருந்தும்
பேசுவதாகவும் தெரியவில்லை; செல்பேசியைக் காதை விட்டும் எடுக்கவில்லை என்பதால் பொறுமையிழந்து நகர்ந்தேன்.

சென்னையில் ட்ரா·பிக் நன்றாக நகர்கிறது. பாஸ்டனையோ வேறு வளர்ந்த அமெரிக்க நகரங்களின் downtown-களுடன் ஒப்பிட்டால், ஆனந்தக் கண்ணீரே வருகிறது. பாரிமுனையாகட்டும், திரையரங்குகள் நிறைந்த அண்ணா சாலையாகட்டும், கடைகள் மட்டுமே உள்ள தியாகராய நகர் முதல் ஸ்டெர்லிங் ரோட் வரை எல்லா இடங்களிலும் வெகு எளிதாக ஆட்டோவும், காரும், டூ-வீலர்களும் ஓட்டப்படுகின்றன.

அமெரிக்கர்களுக்குக் கலாசார அதிர்ச்சி ஏற்படும் என்று முன்பு சொல்வார்கள். இப்பொழுது அந்த மாதிரி ஏதும் நிகழாது என உறுதியாக சொல்லலாம். பெண்கள் சுதந்திரமாக க்விகீஸ் காபி கடை வாசல்களிலும், மாண்டியத் ரோட் சந்திப்புகளிலும், இன்ன பிற upscale hangout-இன் திறந்தப் பிரதேசங்களில் ஊதித் தள்ளுகிறார்கள். லை·ப்ஸ்டைல், க்ளோபஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப் என எல்லாப் பிரதேசங்களிலும் ஸ்லீவ்லெஸ் மினி டாப்களும், மைக்ரோ ஸ்கர்ட்களும் பாய் ·ப்ரெண்ட்களால் வாங்கித்தரப்படுகின்றன.

பைக்களில் முன்பு குழந்தையை இடுக்கிக் கொண்டு சேலையைப் பிடித்துக் கொண்ட மனைவியை பின்புறம் அமர்த்திய பேண்ட்-ஷர்ட் கனவான்களைப் பார்ப்பேன். அவர்களுடன், டை கட்டிய வாலிபர்கள் கொஞ்ச நாள் முன்பு பார்த்தேன். இப்பொழுது இவர்களுடன் காதில் கடுக்கண் அணிந்த, கறுப்பு பனியன் அணிந்த, அரை நிஜார் அணிந்த வாலிபர்களையும் அவர்களை இறுகப் பற்றிய இறுக்கமான ஆடைகளை அணிந்த வாலிபிகளையும் புதிதாக சேர்த்துக் கொள்ளலாம்.

ஐயங்கார் கல்யாணங்களில் இன்னும் ‘சாத்தமுது வேணுமா’ என விசாரிப்புகளுடன் (காதல் செய்தாலும்) விரிவான கல்யாணங்கள் நடைபெறுவது; கோவில்களில் எக்கச்சக்க கூட்டத்தினால், திடகாத்திரமாக இருந்து தள்ளுமுள்ளு தெரியாவிட்டால் பிரதோஷக் காலங்களில் கபாலி கோவில் உள்ளே கால் வைக்க முடியாமல் இருப்பது; லேண்ட்மார்க் அருகே ‘பார்க்’ என்று நண்பருடன் பேசிக் கொண்டு செல்லும்போது உரிமையோடு மக்கள் ‘பார்க் ஹோட்டல்
இங்கே இல்லையே… வழி தவறிட்டீங்களா?’ என நட்போடு வழி காட்ட முயல்வது; என்று பலவிதத்தில் சென்னையின் flavor intact-ஆக இருக்கிறது.

நிறைய ஆர்ட் காலரிகள்; அவற்றில் விதவிதமான கண்காட்சிகள். ரசனைக்கேற்றவாறு பயிலரங்குகள், கருத்தரங்குகள், திருவிழாக்கள், பொருட்காட்சிகள் என்று ரசிக்கத்தக்க சுவாரசியமான இடம்.

Categories: Uncategorized

உணர்வுத் தளத்தில் விரியும் உன்னதப் படைப்பு – வையவன்

April 19, 2004 Leave a comment

அமுதசுரபி – சிஃபி: உணர்வுத் தளத்தின் முழு வெளிப்பாடு மட்டுமே கலையாகி விடுவதில்லை. வெளியீட்டு நயம், சிந்தனை, சொந்தக் கால் தடங்களின் வழியே கடந்து செல்லும் புலனுணர்வுகள், இப்படிக் கனிந்த பக்குவத்தை எட்டினால்தான் கலைஞன் தான் அனுபவித்துப் பதிவு செய்யும் ஆனந்தம் கிட்டும்.

வரைந்த படம் வேறு; அனுபவிக்கும் பிரத்யட்சம் வேறு. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நுட்பமான இடை வெளியை இல்லாமல் ஆக்குவதே கலையின் வெற்றி. பாரதிபாலன் இந்தக் தொகுதியில் அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கிறார். அவரது கிராமம், ஒளி, ஒý சுவை, அசைவு கணங்கள் என்ற மிகைப்படுத்தப்படாத ஸ்பஷ்டமான பதிவுகளோடு இந்தத் தொகுதியில் வெளிப்படுகிறது.

வண்ணத்துப் பூச்சியைக் கொன்றவர்கள் – பாரதிபாலன்,
பக்கங்கள் : 219, விலை : ரூ 80/- வெளியீடு: சந்தியா பதிப்பகம்

Categories: Uncategorized

உலகமெலாம் தமிழோசை – திருப்பூர் கிருஷ்ணன்

April 19, 2004 Leave a comment

அமுதசுரபி – சிஃபி:”ஒருமுறை என் சகோதரியுடன் பேருந்தில் கேரளப் பயணம் மேற்கொண்டேன். அவளுக்காக வழியில் இறங்கிப் பூ வாங்கினேன். அதற்குள் பேருந்து புறப்பட எத்தனித்தது. அவசர அவசரமாகப் பூவுடன் பேருந்தில் ஏறினேன். “பூவா!’ என்று உரத்த குரýல் கூவினார் நடத்துநர். “ஆமாம்!’ என்றேன் நானும் பதிலுக்கு உரத்த குரýல்! என் சகோதரியின் முகமெல்லாம் முறுவல். என்ன செய்ய? “பூவா’ என்றால் “போகலாம்!’ என்று அர்த்தம் என்பதும் நடத்துநர் ஓட்டுநரிடம் போகலாம் என்பதைத்தான் உரத்த குரýல் தெரிவித்திருக்கிறார் என்பதும் அப்போது எனக்குத் தெரியவில்லை!

இந்தி மக்கள், மிக ஆதரவான வர்கள். நாம் சுமாரான இந்தியில் பேசினால் கூட, அன்போடு சிரித்தவாறே பதில் சொல்வார்கள். ஆங்கிலத்தில் பேசினால் அவர்களிட மிருந்து பதில் கிடைப்பது சிரமம். ஆங்கிலம் பெரும் பாலானவர் களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல; தெரிந்த சிலரும் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

ஆங்கிலம் தெரியாவிட்டாலும் கூடத் தெரிந்ததாகக் காட்டிக்கொண்டு அதில் பெருமையும் அடைபவர்கள் தமிழர்கள் மட்டுமே. இந்தியர்கள் இருவர் எங்கு சந்தித்தாலும் தாய்மொழியில் பேசிக்கொண்டால் அவர்கள் மலையாளிகள் என்றும் தப்புத் தப்பான ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் தமிழர்கள் என்றும் சொல்வதுண்டு.

தாய்மொழியைத் தவிரக் கூடுதலாக ஓரிரு மொழிகள் தெரிந்துகொள்வது எல்லோருக்கும் நல்லது. குறிப்பாக எழுத்தாளர்களுக்கு மிக மிக நல்லது. எழுத்தாளர்கள் ராஜம்கிருஷ்ணனைப் போல அதிகப் பயணங்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும். அப்போதுதான் மனம் விசாலமடையும். தமிழ் மட்டுமே தெரிந்து தமிழகத்தில் மட்டுமே உழன்று கொண்டி ருக்கும் எழுத்தாளர்களால் குறுகிய கண்ணோட்டங்களிýருந்து மீள இயலாது. அடிமனத் திலேயே குறுகிய கண்ணோட் டங்கள் தவறு என்று அவர்கள் உணராதவரை வெறும் அறிவுபூர்வ விவாதங்களால் அவர்களை மாற்றவும் இயலாது. அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்கள், ஜாதி, மதம் போன்ற குறுகிய பார்வைகளை விட்டுவிட்டு மேலான தளத்தில் மனிதனை மனிதனாகப் பார்த்து எழுதப் பல காரணங்கள் உண்டு. அவர்கள் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதும் அதற்கான முக்கியமான காரணமாய் இருக்கக்கூடும். நாட்டின் பல பாகங்களையும் உலகின் பல பாகங்களையும் போய்ப் பார்த்து வருகிற போது மனம் சுலபமாய் விசாலமடைகிறது. “யாதும் ஊரே!’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த் தைகளை உண்மையாகவே அனுபவித்து உணர்ந்தால்தான் “யாவரும் கேளிர்!’ என்ற அடுத்த வார்த்தைகளின் ஆழம் புரியும்.”

Categories: Uncategorized

சிந்தனையைக் கவர்பவர்கள்

April 19, 2004 Leave a comment

மக்களை அதிகம் தாக்கம் செய்யும் புகழ் பெற்ற நூறு பேர்களை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அல் க்வெய்தாவின் அல்-ஸர்காவிக்கும் ஒஸாமாவுக்கும் பக்கத்தில் வாஜ்பேயும், புஷ்ஷ¤ம் இருக்கிறார்கள். ரப்பர் ஸ்டாம்புகளான கோ·பி அன்னானை ‘வளரும் நாடுகளின் வாய்’ என்றும் கொண்டலீசா ரைஸை ‘அடுத்த உள்துறை அல்லது பாதுகாப்பு மந்திரி’ என்றும் வருணித்துள்ளார்கள்.

ஆஸ்கார் கொடுக்கப்படும் பிரிவுகள் அனைத்திலும் வென்ற இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன், ஹாரி பாட்டர் மூலம் சிறிய வயதிலேயே மக்களை ஆக்கிரமிக்கும் ரௌலிங் பாட்டி, அமெரிக்காவின் ‘வணக்கம் தமிழகத்தை’ நடத்தும் கேடி கௌரிக், கூட நம்ம ஐஷ்வர்யா ராயுக்கும் இடம் உண்டு.

நிஜமாகவே மக்கள் மனதை மாற்றும் சக்தி கொண்ட பில் கேட்ஸ், போப், வ்ளாடிமிர் பூடின், நியுஸை கொடுக்கும் ரூபர்ட் முர்டாக், சர்ச்சைகளைக் கிளப்பும் அல்-ஜஸீரா, குப்பை கூளத்தைக் கூட கூவி விற்க செய்த ஈ-பே நாயகி மெக் விட்மான், அகியோர் கூட விப்ரோவின் ஆசிம் ப்ரேம்ஜி இருக்கிறார்.

பிரான்ஸ் சைக்கிள் போட்டியை வென்று கொண்டே இருக்கும் ஆர்ம்ஸ்ட்ராங், பாஸ்டன் பாட்ரியாட்ஸின் கோச் பெலிசிக், ஜீசசின் அதிகாரபூர்வ இயக்குநர் மெல் கிப்ஸன், புத்தகம் முதல் எல்லாவற்றிலும் ரசனையை மேம்படுத்தும் கனிவுள்ள ஓப்ரா, கல்யாணம் நிச்சயித்த பிறகு கோப்பையே வெல்லாவிட்டாலும் டைகர் வுட்ஸ், கலி·போர்னியாவின் ம.கோ.ரா. ஆர்னால்ட், அமெரிக்காவின் நிரந்தர காதல் மன்னன் கிளிண்டன், வருங்கால ஜனாதிபதி ஹில்லாரி, கூட நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, டேவிட் பெக்கம் என்று பட்டியல் நீளுகிறது.

இவர்களில் பில் கேட்ஸ், ஓப்ரா, போப், மண்டேலா ஆகியோர் ஏற்கனவே டைம் பத்திரிகையின் ‘வருட நாயகர்’ பட்டம் சூட்டப்பட்டவர்கள். ஆராய்ச்சியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் பட்டியலில் (டொவால்ட்ஸ் தவிர) என்னால் ஒருவரைக் கூட டக்கென்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாததுதான் மிகப் பெரிய வருத்தம்!

ரால்·ப் நாடெர் போல வேற எந்த முக்கியமானவரை விட்டுவிட்டார்கள் என்று ஒரு பட்டியல் போடலாம்.

முழு விவரங்களுக்கு

Categories: Uncategorized