Archive

Archive for April 23, 2004

பாஸ்டனில் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’

April 23, 2004 Leave a comment

ecdf.jpgதமிழோவியம்: ஸ்டேஜ் ப்ரெண்ட்ஸ் குழுவினரின் 11 வது படைப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற நாடகம் நியு இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் மூலம் பாஸ்டனிலும் அரங்கேறுகிறது.

விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் எனும் திரைப்படத்தின் மூலக்கதையை அருமையாக நாடகமாக்கியிருந்தார் டைரக்டர் ரமணி. 3-D எபெக்டில் செட் அமைத்து அட்டகாசம் செய்திருந்தார்கள். நாடகத்திற்கு பெரிய துணை சிம்பொனி ரமணி மற்றும் கார்திக்கின் இசை. சரியான இடத்தில் சொல்லத்தான் நினைக்கிறேன் பாடலை இசைத்து ஒரு சின்ன சஸ்பென்ஸ் கொடுத்தார்.

Categories: Uncategorized

ஜெயகாந்தனாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

April 23, 2004 Leave a comment

ஜெயமோகன்: ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் – 1
ஜெயகாந்தன் படைப்புகள் உரத்த குரல் கொண்டவை, வாதாடக் கூடியவை, பிரச்சார நெடி அடிப்பவை , நேரடியாக அப்பட்டமாக தன் உள்ளுறைகளை விரித்துப்போடும் தன்மை கொண்டவை ,ஆகவே கலைத்தன்மை குன்றியவை என்பது நம் சூழலில் பொதுவாக உள்ள கருத்து. இக்கருத்தை உருவாக்கியவர் க.நா.சுப்ரமணியம். மிக வலுவாக பரப்பியவர் சுந்தர ராமசாமி. இருவருமே ஜெயகாந்தனை விரிவான ஆய்வுக்கு உள்ளாக்கவில்லை என்று யோசிக்கும்போது துணுக்குறல் ஏற்படுகிறது.

[அக்கினிப்பிரவேசம்] அவள் அதன் பிறகும் ஒரு சூயிங் கம்மை மென்றபடி இருக்கிறாள். அவன் அவளுக்கு தந்தது அது. அந்த சூயீங் கம்மை அவள் அந்த உடலுறவுக்கு பிறகு தான் வாயில் போட்டிருக்கவேண்டும் ! களங்கமின்மை என்பது மேல்மனதின் ஒரு பாவனைதானா? ஆழ்மனதில் அவள் அவ்வனுபவத்தைத்தான் ‘ அசை ‘ போடுகிறாளா? அம்மாவின் பதற்றமும் அழுகையும் நிகழும்போது சூயிங் கம் மென்று கொண்டிருக்கும் அவளுக்குள் வேறு ஒரு பெண் புன்னகை செய்துகொண்டாளா? ‘அம்மன் சிலையாக’ தன்னை ஆக்கிய அனைத்துக்கும் எதிரான புன்னைகை?

ஜெயகாந்தனை அவர் கடைப்பிடித்த முற்போக்கு அழகியலை மதிப்பிட முற்போக்கு அழகியலில் சாதனை படைத்த யஷ்பால் [ இந்தி ] பிமல் மித்ரா [வங்கம்] நிரஞ்சனா[ கன்னடம்] தகழி சிவசங்கரப்பிள்ளை [மலையாளம்] ஆகியோரையே ஒப்பீடுகளாகக் கொள்ளவேண்டும். ஜெயகாந்தன் மார்க்ஸியத்தை கோட்பாட்டளவில் ஏற்றுக்கொண்ட முற்போக்குப் படைப்பாளி. நம் சூழலில் பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், விந்தன் முதலியோரை மார்க்ஸியத்தை ஏற்காத முற்போக்கினர் எனலாம். இவர்களிடமிருந்து அழகியலைப்பெற்றுக் கொண்டு விலகி கோட்பாட்டளவில் மார்க்ஸியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன்.

கௌரிப்பாட்டி [யுக சந்தி] போன்ற சுயசிந்தனையை முன்வைத்து சமூகத்தை ஒட்டுமொத்தமாக எதிர்த்து நிற்கும் ‘முதுகெலும்புள்ள ‘ கதாபாத்திரங்களைத்தான் அவர் அதிகம் படைத்துள்ளார். மனிதன் அவன் வாழும் சமூகத்தின் துளி, அவனது சிந்தனை அக்காலகட்ட சிந்தனைகளின் ஒரு விளைவு என அவரது கதைகள் சொல்வது இல்லை. தகழி சிவசங்கரப்பிள்ளை , பி.கேசவதேவ், பிமல் மித்ரா ஆகியோரின் ஆக்கங்களில் வருகிற ‘உறுதியான முதுகெலும்புள்ள பாட்டாளி ‘ இந்திய சமூகத்தை மிக மிகக் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் . அக்கதாபாத்திரங்களை திரையில் வலிமையக நடித்துக் காட்டிய சத்யன் [மூலதனம், நீங்கள் என்னை கம்யூனிஸ்டு ஆக்கினீர்கள், அனுபவங்கள் தவறுகள், அடிமை போன்ற திரைப்படங்கள் வழியாக] கேரள மனதில் ஓர் ஆழ்படிமமாகவே உறைந்துவிட்டார். தமிழில் பாட்டாளி என்பதற்கு பதிலாக ரட்சகன் என்ற படிமம் திரையில் உருவாக்கப்பட்டது.

நவீனத்துவ இலக்கியம் அதன் இருத்தலிய அடிப்படையில் மனிதனை காமமும் வன்முறையுமாக குறைத்துவிட்ட போது இலட்சியவாதம் ஒருவகை அதிகப்பிரசங்கமாக , வெற்றுக் கனவாக , அசட்டுத்தனமாக கருதப்பட்டது. ஜெயகாந்தன் மட்டுமல்ல இலட்சியவாத கதாபாத்திரங்களைப் படைத்த ப. சிங்காரம் [ புயலிலே ஒரு தோணி] எம் .எஸ். கல்யாணசுந்தரம் [ முப்பது வருடங்கள்] போன்ற படைப்பாளிகள் கூட இங்கு புறக்கணிப்புக்குத்தான் ஆளாகியிருக்கிறார்கள்.

முற்போக்கு அழகியலில் இருவகையான போக்குகள் உண்டு. அவற்றை யதார்த்தவாதம், இயல்புவாதம் என்று தோராயமாக வகைப்படுத்தலாம். யதார்த்தவாதம் என்பது எழுத்தாளந்தான் கண்ட யதார்த்தத்தின் சித்திரத்தை அளிக்கமுயல்வது . புறவுலகத்தின் தகவல்களுக்கு சமானமாகவே எழுத்தாளனின் சுயமும் அங்கே இடம் பெறுகிறது. ஜெயகாந்தன் யதார்த்தவாத எழுத்தாளர் என்றால் ஆர் ஷண்முக சுந்தரம், பூமணி பெருமாள் முருகன் கண்மணி குணசேகரன் போன்றவர்கள் இயல்புவாத எழுத்தாளர்கள். பூமணியின் படைப்புகளில் உள்ள அமைதியை நாம் ஜெயகாந்தனின் கதைகளில் எதிர்பார்க்கமுடியாது. ஜெயகாந்தன் படைப்புகளில் அவரது ஆளுமையே முதன்மையாக வெளிப்படுகிரது, அவரது பார்வையே மையமாக உள்ளது. அப்படி இருக்கக் கூடாது என்று அவரது எழுத்துக்கு நிபந்தனை போட விமரிசகனுக்கு உரிமை ஏதும் இல்லை. ஜெயகாந்தன் முற்போக்கு அழகியலில் செயல்பட்டவர். அவரை நவீனத்துவ அழகியல் கொள்கைகளினால் அளவிடும் அசட்டுத்தனத்தை முதலில் செய்தவர் நகுலன். சுந்தர ராமசாமி அவ்விமரிசனத்தை மிகவும் தீவிரப்படுத்தினாலும் எழுதவில்லை. நேர்ப்பேச்சில் தொடர்ந்து பல வருடங்கள் அதை வெளிப்படுத்தினார்.

ஜெயகாந்தனின் மரபுத்தொடர்பு இரு தளங்களில். ஒன்று நமது சித்தர் மரபுடனான அவரது ஈடுபாடு. இரண்டு நம் மரபின் லௌகீகமான அறம் குறித்த அவரது புரிதலில். என் பார்வையில் அவரது மிகச்சிறந்த இலக்கிய ஆக்கமான ‘விழுதுகள் ‘ இந்த ஈடுபாட்டின் விளைவே. முற்போக்கு என்பது ஒரு முடிவற்ற முன்னகர்வு என்றும் நேற்றைய முற்போக்குச்சக்திகளுடன் இன்றைய முற்போக்குசக்திகள் ஆன்மீகமான ஒரு தொடர்பைக் கொண்டுள்ளன என்பதற்கும் சிறந்த உதாரணமாக அமையும் படைப்பு அது. மௌனி, தி.ஜானகிராமன், லா.ச.ரா ஆகியோரின் ஆன்மீகம் பற்றிய மன உருவகங்கள் லௌகீகத்துக்குள் நின்று அடையப்பெற்றவை, முதிர்ந்த லௌகீக நிலையாக ஆன்மீகத்தைக் காண்பவை. நகுலன் நீல பத்மநாபன் ஆகியோரின் படைப்புகளில் ஆன்மீகம் வெற்று பக்தியாக வடிவம் கொள்கிறது . கி.ராஜநாராயணன், சுந்தராமசாமி, ஜி.நாகராஜன் ஆகியோரிடம் ஆன்மீகத் தேடல் என்ற அம்சமே இல்லை. அவர்கள் உலகின் தத்தளிப்புகள் மீது ஓங்கூர் சாமியின் உக்கிரச் சிரிப்பு அலையடிக்கிறது.

ஜெயகாந்தனை இக்கட்டுரையில் முதலில் வகுத்தது அவர் மீறும் இடங்களை அடையாளம் காண்பதற்காகவே.
நன்றி: முழு கட்டுரைக்காக – திண்ணை & நினைவூட்டியதற்காக – பிகேஎஸ்

Categories: Uncategorized

படித்ததில் பதிந்தது

April 23, 2004 Leave a comment

பிரபல எழுத்தாளர் ராஜ ஸ்ரீகாந்தன் காலமானார்: மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபாடு கொண்ட ஸ்ரீகாந்தன், எழுத்தாளர் அழகு சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளைத் தமிழாக்கம் செய்து ‘நீதிபதியின் மகன்” என்ற தலைப்பில் புத்தகமாக்கினார். அதற்காக அவருக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. சிறுகதையாசிரியராக ஆற்றிய பணிகளுக்காக, அவருடைய சிறுகதைத் தொகுதியான ‘காலச்சாளரம்” என்ற நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசும் கிடைத்தது. இதுவரை, நான்கு நூல்களை வெளியிட்டுள்ள ராஜ ஸ்ரீகாந்தன், ‘சூரன் கதை” (வதிரிப் பெரியர் சூரன் பற்றியது) என்ற நூலை வெளியிடவிருந்தார். மூன்று நாவல்களை அச்சுக்கும் கொடுத்திருந்தார்.
நன்றி: ஈழ இலக்கியம்


வல்லிக்கண்ணன் – வண்ணநிலவன்: உரையாடல்கள் என்பவை பலவகைப்பட்டன. சிலருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, பேச்சுக்குப் பேச்சு தங்களுடைய அபிப்பிராயத்தை சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் எதிரே இருப்பவருடைய அபிப்பிராயம் எவ்வளவுதான் வித்தியாசப்பட்டாலும் அதை வெளியே சொல்லாமல் மௌனமாக இருப்பார்கள். சிலர் நாசூக்காகத் தாங்கள் நினைப்பதைச் சொல்லிவிட்டுச் சும்மா இருப்பார்கள். சிலருடன் பேசும்போதே, உரையாடல் என்பது முறுக்கேறி விவாதமாகி, இனி நேரில் பார்த்துப் பேச முடியாதபடி, பகையாகவே முற்றி விடும்.
வ.க. எதையும் ஆணித்தரமாக, முகத்திலடிக்கிற மாதிரி பேசவே மாட்டார்கள். அவர்களது கட்டுரைகள் கூட இப்படித்தான் இருக்கும். கட்சி கட்டி நிற்கிற உத்தேசமே வ.க.வுக்கு கிடையாது. எதையும் ஸ்தாபிக்க வேண்டும், தன் வாதத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணமே வ.க.வுக்குக் கிடையாது.

வ.க.வின் கட்டுரைகள் மேம்போக்கானவை, ஆழமில்லாதவை என்று கூறப்படுவதற்குக் காரணம், வ.க.விடம் வாதம் செய்கிற போக்கு அறவே இல்லாமல் போனதுதான். பெரும்பாலும் எல்லாவற்றையும் ரசிக்கிற மனோபாவம் வல்லிக்கண்ணனுடையது. தன்னைப் பற்றிய தகவல்களைக் கூட ஒரு மூன்றாவது மனிதன் சொல்வதைப் போலத்தான் வ.க. சொல்வார்கள். ஒரு விட்டேற்றியான மனம். அதேசமயம் பிறருடைய கஷ்டங்களைக் கண்டு உருகிவிடும் மனம் வ.க.வுடையது.
நன்றி: சமாச்சார் தமிழ்


ஒரு நல்ல விமர்சனம் என்பது எப்படி இருக்கவேண்டும் – மனுஷ்ய புத்திரன்: நல்ல விமர்சனம், மோசமான விமர்சனம் என்று எதுவுமில்லை. எல்லா விமர்சனங்களும் சார்பானவை. நோக்கங்களுள்ளவை. படைப்பைப்போலவே விமர்சனத்திற்கும் எல்லைகள் இல்லை. என்னைப் பொறுத்தவரை நல்ல விமர்சனம் என்னைப் பாராட்டி எழுதப்படுபவை.
நன்றி: மரத்தடி


பழம்பெரும் மரபினோரே!
வருக, வருக! எனக்கும் ஹரிக்கும் இதைவிடப் பேருவகை இருக்கமுடியாது. மரபின் வளத்தில் ஆழவேரூன்றிப் புதுமை விழுதுகளை விடவேண்டியவர் நாம்.

பழமை பழமை என்று
பாவனை பேசலல்லால்
பழமை இருந்த நிலை – கிளியே
பாமரர் ஏதறிவார்?

என்றான் பாரதி. உணர்ச்சி வசப்பட்டு (காரணமறியாமல்) என் பாரம்பரியம்தான் உயர்ந்தது என்று உரக்கக் கூவுவதோ, அல்லது முற்றிலும் வீண் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டுப் ‘புதுமை படைக்கிறேன்’ என்று கிளம்புவதோ இரண்டும் அறிவீனம். மரபை அறிவோம் – விருப்பு வெறுப்பின்றி. அதன்பின் அவரவர் விருப்பம். இது ஒரு திறந்த மன்றம். பரிமாறல் மிக அவசியம். அவரவர் புரிதலை அவரவர் சொல்லுங்கள். மொத்தத்தில் எல்லோரும் வளம்பெறுவோம். அவரவர் ஐயங்களைப் பொதுவில் இடுவோம். ஆளுக்கு ஒரு கைகொடுத்தால் எந்தத் தேரையும் நகர்த்தலாம்.

மரபிலக்கியம் ஒரு தங்கச்சுரங்கம். ஆனால் அவ்வளவே உழைப்புத் தேவை. பயனோ அளவற்றது!

வாருங்கள், சேருங்கள், வளம் பெறுங்கள், வளப்படுத்துங்கள்.
அன்புடன்
மதுரபாரதி
ஹரிகிருஷ்ணன்
Yahoo! Groups : marabilakkiyam

Categories: Uncategorized