Archive

Archive for April 25, 2004

பாஸ்டனில் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’

April 25, 2004 Leave a comment

‘குடும்பம் ஒரு கதம்பத்தின்’ தழுவல் என்று தெரிந்தாலும் மீண்டும் ஒருமுறை நாடகத்தைப் பார்க்க சென்றேன். லிபர்டியில் அந்தப் படத்தை நான் பார்த்தபோது பத்து வயதுதான் இருந்திருக்கும். டைட்டில் பாடல் மட்டும் நிறைய கேட்டு நினைவில் இருந்தது. படத்தின் காட்சிகளோ வசனங்களோப் பெரிதாக நினைவில் இல்லை. ஆனால், நாடகம் வளர வளர deja vuதான் மிஞ்சியது.

மூன்று குடும்பங்கள். வேலைக்கு செல்லும் கண்ணன், உமா தம்பதியினருக்கு போர்டிங் ஸ்கூலில் படிக்கும் மகன். ப்ரோக்கர் பரமசிவத்துக்கு குடும்பத் தலைவியாக பார்வதி. கமலா காமேஷ் (லட்சுமி)க்கு கையாலாகாத விசு கணவன். மது, மைதிலி என்று இரு குழந்தைகள்.

பைத்தியாகாரனுக்கு வைத்தியம், காலில் பேண்டேஜ் போட்டதும் கால் கட்டு என நிறைய விசு வரிகள். ஏற்கனவே பலரால் அறியப்பட்ட வசனங்களையும், ஓரள்வு வெற்றிகரமாக ஓடிய படத்தின் நடிகர்களின் தாக்கத்தில் இருந்து வித்தியாசப்படுத்துவது கடினமே. ஆனால், ஸ்டேஜ் ·ப்ரெண்ட்ஸ் யுஎஸ்ஏ குழுவினர் விசுவின் குழப்பியடிக்கும் tongue-twisterகளையும் பன்ச்களையும் சூப்பராக அரங்கேற்றினார்கள்.

பிராமாணாள் வீட்டு காரியங்களுக்கு சமைக்கப் போகும் ஏழை லட்சுமியின் மடிசாரின் மடியில் செல்·போன் ஒட்டிக் கொண்டிருந்தது காலத்தின் கட்டாயம். ஆனால், அமெரிக்காவில் நாடகம் போடும்போதும் அதே அழதப் பரசான வேலைக்குப் போகும் மனைவியா, போகாத ஆணாதிக்க சமூகமா, பொறுப்பற்ற இளைய தலைமுறை, பத்து நாட்கள் வீட்டில் அடுப்பெரியாதது போன்ற விஷயங்களை எடுத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமல்ல.

அமெரிக்கத் தமிழர்களை மிகவும் பாதிக்கும் பிரச்சினைகளாக பல இருக்கும் – இந்தியா திரும்ப செல்வது, சொந்தமாகத் தொழில் தொடங்குவது, நட்புகளை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சந்திப்பது, பெற்றோர்களை இரு வருடத்துக்கு ஒரு முறையெடுத்து மாமியார்-மாமனார் என்று சுழற்சி முறையில் இன்பச் சுற்றுலா கொண்டு வருவது என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். இன்னும் போன தலைமுறை சமாசாரங்களை ரீ-மிக்ஸ் கூட செய்யாமல் பழைய குடுவையில் பழைய கள்ளைத் தந்திருகிறார்கள்.

தற்கால இருப்பிலும் நகைச்சுவை சம்பந்தங்களுக்குப் பஞ்சமேயில்லை. சந்தேகமாயிருந்தால் காசியின் வலைப்பதிவுகள் போல் மேய்ந்தால் அமெரிக்காவில் கார் வாங்கும் போதும், ஓட்டும் போதும் நடப்பவை, பிரிட்டிஷ் ஆங்கிலமும் சரியாகத் தெரியாமல், அமெரிக்க ஆங்கிலமும் புரியாமல் செய்யும் திண்டாட்டங்கள், அலுவலகத்தில் அடிக்கும் கூத்துகள், சமையல் செய்து கையை சுடும் அனுபவங்கள் வைத்து காமெடித் தோரணமே கட்டலாம். அனேகமாகப் பலரும் அவற்றை நேரடியாக ஒன்றிப் போய் ரசிக்கவும் முடியும்.

பரமசிவமாக நடித்தவரும் விசுவாக நடித்தவரும் மிகச் சிறப்பாக செய்தார்கள். அனேகமாக அனைவரின் இயல்பான நடிப்பினால் மட்டுமே இரண்டு மணி நேரமும் உட்கார முடிந்தது. உமாவாக நடித்தவர் கொஞ்சம் (அந்தக்கால)
சிவாஜி நிறைய பார்ப்பார் போல. கொஞ்சம் ஓவர்-ஆக்டிங். இளைய பெண்ணாக முக்கியமான ரோல் கொண்ட மைதிலி cat-walk செய்ய ஏதுவானவர். அவரை தாவணியில் உலாவ விட்டும், அமெரிக்கன் accentஓடு உணர்ச்சிவசப்பட்டதும் கொஞ்சம் சீரியஸான சீனில் நகைச்சுவையைத் தேவையில்லாமல் கொண்டு வந்தது. உமா கண்ணனின் ஜோடிப் பொருத்தம் இன்னொரு சைட் காமெடியாகப் பட்டது.

மூன்று வீடுகளைத் தனித்தனியாய் காட்டினாலும், மைதிலி சில முறை தவறாக பரமசிவம் வீட்டிற்குள் சென்றதையும், பரமசிவத்தின் பாத்திரங்களை லட்சுமி அவர்கள் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு சென்றதும் எளிதாக தவிர்த்திருக்கலாம். அமெரிக்காவில் தமிழ் நடிகர்களுக்காப் பஞ்சம்? சின்ன சின்ன ரோல்களே ஆனாலும், ஒரிருவரே நான்கு ஐந்து வேடங்களில் வந்தார். காரெக்டரைஸேஷன் என்பதை குறித்துப் பெரிதாகக் கவலைப்படாவிட்டாலும் புதியவர்களை அறிமுகப்படுத்தவும், ஸ்டேஜ் அமைப்பிற்கும் ஒரு வேடத்திற்கு ஒருவரே என்னும் கொள்கை நல்லது.

நாடகத்தில் மிகவும் ரசித்தது இசை. இரண்டாவதாக அரங்க அமைப்பு. இடைவெளிகளில் பொறுக்கியெடுத்த context-sensitive பாடல்கள்; நாடகம் நடக்கும்போது அடக்கி வாசித்த பிண்ணனி என்று கலக்கினார். ‘கண்மணியே காதல் என்பது’, ‘கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமா’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, என்று சிறப்பான தேர்ந்தெடுப்பு + திறமை. அரங்க அமைப்பும் அதற்கு வைத்திருந்த சின்ன சின்ன விஷயங்களும் மிகவும் பாராட்டத்தக்கது. தினமணி, பத்து ரூபாய் நோட்டு, காந்தி படம் என்று பார்த்து பார்த்து செய்திருந்தார்கள்.

என்னதான் சிறப்பான நடிகர்களைக் கொண்டிருந்தாலும் அச்சில் வார்த்தெடுத்த வசனங்கள், 26 ரூபாய் வாடகை, தமிழோவியத்தில் சொன்னது போல் ‘தே..யாத்தனம் செய்யலைப்பா’ போன்ற யதார்த்தமற்ற காட்சிகள் வைத்ததனால் நாடகம் எடுபடவில்லை. ஏன் இன்னும் நியு ஜெர்ஸி (அல்லது அமெரிக்கத்) தமிழ் சங்கம் இப்படி விசு, சோ, க்ரேஸி நாடகங்களை உல்டா செய்கிறார்கள்? தமிழோவியம் இந்த நாடகத்திற்காக பரிசு போட்டி வைத்திருந்ததில் இன்னும் பலரை ஆர்வமாகக் கலந்து கொள்ள செய்திருக்கலாம். அல்லது அதற்கு வந்த படைப்புகளில் இருந்து ஒன்றிரண்டை கலந்து ஒரு சூழ்நிலைக்கு ஏற்ற, எங்கள் சுவைக்குத் தக்க, பார்க்காத படத்தையும் கேட்காத வசனங்களையும் வைத்து நாடகம் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Categories: Uncategorized