Archive

Archive for May 6, 2004

மன்னிப்பு மட்டும் கேட்டால் போதுமா?

ஈராக் போரில் மாட்டிக் கொண்ட கைதிகள் படும் பாடு அமெரிக்க ஊடகங்களில் பெரும்பாடுபடுகிறது. சதாமைத் தவிர மற்ற அனைத்து ஈராக்கிய வீரர்களுமே எவ்வாறாவது கொடுமைபடுத்தப் பட்டிருப்பார்கள் என்பதைப் புகைப்படங்கள் மூலம் காண்கிறோம்.

தமிழ் சினிமா அதிகம் பார்க்கும் தமிழன் என்னும் முறையில் இந்தப் படங்கள் எனக்கு பெரிய பாதிப்பையோ, அதிர்ச்சியையோ, வருத்தத்தையோ தரவில்லை. ‘காதலன்’ படத்தில் கவர்னர் மகளைக் காதலித்ததற்காக துன்புறுத்தல், ‘குருதிப்புனலில்’ கோட்பாடுக்காக எதையும் செய்யத் துணிந்த புரட்சிக்கார நாசரும், நாசரிடமிருந்து உண்மைகளை வெளிக் கொணருவதற்காக போலீஸ¤ம் மாற்றி மாற்றி அரங்கேற்றும் காட்சிகள், என ஒரு சிலதை சொல்லலாம். எனினும், நம்மில் அனேகர் தமிழக/இந்திய சிறைகளில் நடக்கும் அட்டூழியங்களையும், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களால் செய்யப்படும் அக்கிரமங்களையும், செல்வாக்கு உள்ளவர்கள் பயன்படுத்தும் அடக்குமுறையையும் நிஜ வாழ்விலும் கண்டிருப்போம்.

சித்திரவதை செய்தால்தான் ஈராக்கின் அடுத்த கட்ட சதி நடவடிக்கைகள் தெரியும் என்னும் நிலை ஏற்பட்டிருக்கலாம். அமெரிக்காவின் படைவீரர்களுக்கு ஆபத்து என்னும்போது இவர்களை அடித்து துவைப்பது பெரிய விஷயமாகத் தோன்றியிருக்காது. மேலும், அவர்களில் சிலர், 9/11-இல் சொந்தபந்தங்களை இழந்தவர்களாக இருந்திருக்கலாம். நண்பர்களை இழந்த ஆற்றாமையினால், இவ்வாறு மனிதத்தனமையை மறக்கத் தள்ளப்பட்டிருக்கலாம். சக வீரர்களின் கால், கை உறுப்புகளை இழந்ததினாலும், ஒரு வருடத்துக்கு மேல் சுற்றங்களை மறந்து போரில் ஈடுபட்டிருப்பதாலும் அரக்ககுணம் குடி வந்திருக்கலாம். சதாமிடமும் ஒஸாமிடவும் செய்ய நினைத்ததை, அவர்களிடம் காட்ட முடியாத கோபத்தை, வடிகாலாக போர்க்கைதிகளிடம் கொட்டிருக்கலாம்.

ஆனாலும், அவர்களில் மிகச் சிலரே இது போன்ற காரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். கூட இருந்து கண்டித்தவர்கள், வெகுண்டு போய், இந்த நடவடிக்கையை அம்பலபடுத்தியுள்ளார்கள்.

இது போன்ற துன்புறுத்தல்களுக்காக புஷ் இப்போது மன்னிப்பு கோரி விட்டார். சண்டைக்குப் போவார்; அதில் ஆயிரக்கணக்கானோரை கொலை செய்வார்; எண்ணெய்க் கிணறுகளையும் காண்ட்ராக்ட்களையும் வைத்து சுயலாபம் அடைவார்; தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டு செய்வதறியாது விழிப்பார்.

சிறையில் நடந்த சில சில்லறை விஷயங்களுக்காக ‘சாரி’ கேட்டு விட்டார். மற்ற சம்பவங்களுக்கு?

சித்திரவதைப் புகைப்படங்கள் / வாஷிங்டன் போஸ்ட் செய்தி

Categories: Uncategorized

அன்னையர் தினம் எமக்குத் தேவையா? – தோழியர் வலைப்பதிவு

நளாயினி தாமரைச்செல்வன்: “தாய்மையின் வாழ்வு அலங்கோலமாகி சீழ் ஒழுகி நாறுகிறது. எமக்கெதற்கு அன்னையர் தினம்? தங்கமுலாம் பூசி தாய்மையை போற்றித் துதிக்கிறோம் என மினுக்க நினைக்கிறோம். வேண்டாம் எமக்கு அன்னையர் தினம். ஒரு பெண் திருமணத்திற்கு முன் தாய்மை அடைந்து விட்டால் அவளை தள்ளி வைக்கிறோம். நெல்மணிகளை தொண்டைக்குள் செருகி சிசுக்கொலை. அச்சிசுவை கொலை செய்யத்தூண்டியது எது?

இது ஆணாதிக்க உலகம் அப்படித்தான் செய்யும். எங்கே தாய்மைக்கு மதிப்பளிக்கிறீர்கள்? அன்னை தாய்மை எல்லாம் வெறும் ஏட்டளவில் தான். ”
தமிழர் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. கைதட்டுவதோடு நிற்காமல், ஏதாவது செய்யத் தோன்றுகிறது. பார்ப்போம்.

சந்திரலேகா: “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாததால் தாயைப் படைத்தார் என்று ஒரு யூதப் பழமொழி கூறுகிறது. கடவுள் எவ்வாறு வேறுபாடின்றி உயிர்களை இடைவிடாது என்றும் ஒரே மாதிரி நேசிக்கிறாரோ அப்படியே தாயும் தனது பிள்ளைகளை என்றும் ஒரே மாதிரி நேசிக்கிறாள். இருவரின் அன்பிலும் ஏற்றத் தாழ்வுகளும் இல்லை, பிரதி பலனை எதிர்பார்க்கும் தன்னலமும் இல்லை.

எமது தமிழ்ப் பண்பாட்டில் தாய்க்குரிய மதிப்பைக் கொடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் தேவையற்றது. மற்றைய பல பண்பாட்டினர் போலன்றி எமது பண்பாட்டில் தாய்மாரின் பங்களிப்பு அளவற்றது. தமது இன்பங்களை முற்றாகப் புறக்கணித்து பிள்ளைகளின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் அவர்களின் தியாகம் ஈடு இணையற்றது. ”

தமிழ் இந்துக்களின் வழக்கம், சரித்திர தகவல்கள், தாய் குறித்த கவிதைகள், தற்போதைய நடைமுறை என்று பல விஷயங்களையும் கோர்வையாகத் தந்திருக்கிறார். பயனுள்ள பதிவு. சிந்தனையைத் தூண்டும் கட்டுரை.

Categories: Uncategorized

கில்லி – படத்தின் மெஸேஜ் என்ன?

1. கோக் நிறைந்த பாட்டிலை எவ்வளவு வேகமாக வீசினாலும் காட்ச் பிடிக்கலாம்; கோக் காலியான பாட்டிலை பிடிக்க எத்தனித்தால் மணடை உடைய வாய்ப்புண்டு.

2. யாராவது கொம்பு சீவி விட்டாலும், சாந்தமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்; அவர்கள் உங்களை ஏத்தி விடுவது, அவர்களின் நன்மைக்காகவே.

3. தமிழகத்தில் மதுரையில் இருந்து சென்னை வரும் சாலைகளில் போக்குவரத்து அதிகம் கிடையாது; வேகமே விவேகம்.

4. மனதுக்கு விருப்பமானவள் பார்த்தால் மட்டுமே, விளையாட்டுப் போட்டிகளில் ஜெயிக்க முடியும்; அப்பா, அம்மா, தங்கச்சி, ரசிகன், நண்பர்கள் ஆகியோரை விடக் காதலியோ அல்லது நண்பனின் காதலியோ (இது ‘பர்தேஸ்’ பார்த்ததால் ஏற்கனவே பதிந்து போன மெஸேஜ்) பார்வையாளராக இருந்தாலே கபடியில் ஜெயிக்க முடியும்.

5. வெளிநாடு டூர் செல்லும்போது, சவுரவ் கங்குலி, டெண்டுல்கர் தவிர புது மாப்பிள்ளை சேவாக் போன்றோரும் தங்கள் மனைவியையோ, காதலியையோ அவசியம் அழைத்துச் சென்றால், பலன் நிச்சயம்.

6. Caller-ID இல்லாத செல்பேசிகளை வைத்துக் கொண்டு நண்பர்களோடுப் பேசவேண்டும்; காதலியை காப்பாற்றத் தோழர்கள் உதவும்போது இது வில்லன்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.

7. பெண்களுக்குப் பாதுகாப்பான அமெரிக்க வாழ்க்கையை விட, திறந்த வெளியில், குளிரடிக்கும் இரவில், போர்வை கூட இல்லாமல், கலங்கரை விளக்கத்தில் நாடோடியாக இருப்பதே பிடிக்கிறது.

8. போலீஸ் க்வார்ட்டசில் கூட ரவுடிகள் அதிகம்; காவலர்கள் நிறைந்த குடியிருப்பில் கூட இரவில் தனியாக பொதுத் தொலைபேசி பயன்படுத்த முடியாது.

9. கபடி ஆடுபவர்கள் அனேகமாக வேலை இல்லாத வெட்டிப்பசங்க.

10. மந்திரியாக இருந்தால் மகனுக்கு உதவ முடியாது.

Categories: Uncategorized