Archive

Archive for May 11, 2004

இந்த நாள்… அன்றைய ஈ-க்ரூப்பில்….

May 11, 2004 2 comments

I. ரா.கா.கி – 532: மாலை நேரம் ஓரு மரணம்

அதோள் பெஹ்ரா மொக்லு என்ற துருக்கி கவிஞனின் ஆங்கிலக்கவிதையின் தமிழாக்கம். அதற்காக தலையில் குஞ்சம் வைத்த தொப்பியெல்லாம் போட்டுக்கொண்டு படிக்கப்படாது.

ஓர் அந்திமாலைப் பொழுதில்
என் மரணம் அரங்கேறும்

நகரமெங்கும் கடும்பனி விழும்
என் இதயம் பாதைகளை மூடும்
இறவு இறங்கி வருவதை
நான் விரல்களால் காண்பேன்

ஓர் அந்திமாலைப் பொழுதில்
என் மரணம் அரங்கேறும்

குழந்தைகள் சினிமா
பார்க்கப் போவர்
பூக்களில் முகம் புதைத்து
நான் அழுவேன்
எங்கோ தூரமாக ஒரு ரெயில்
கடந்து போகும்

ஓர் அந்திமாலைப் பொழுதில்
என் மரணம் அரங்கேறும்

விலகி விலகிப் போகவேண்டும்
என்ற மோகத்தோடு
ஒரு மாலைநேரம்
நான் ஒரு நகரத்தில் நுழைவேன்
பாதாம் மரங்களுக்கிடையே
நான் நடப்பேன்
கடலையே வெறித்துப்பார்த்தபடி
நிற்பேன்
நான் ஒரு நாடகம் காண்பேன்

ஓர் அந்திமாலைப் பொழுதில்
என் மரணம் அரங்கேறும்

எங்கோ தூரமாக ஒரு மேகம்
சிறகடித்துக் கொண்டே போகும்
இருண்ட ஒரு பால்யகால மேகம்
அதீத யதார்த்தங்களின்
ஓர் ஓவியன்
உலகம், கிளிப்பாட்டு, அலறல்
அனைத்தும் மாறிப்போகும்
கடல், புல் மெத்தைகளின்
நிறங்கள் இரண்டறக் கலக்கும்

என் கனவுகளிலிருந்து
கொப்பளித்து வரும்
வார்த்தைகளைக்
கோர்த்து கவிதை செய்து
உனக்காக நான்
கொண்டு வருவேன்

உலகம்
என் உறுப்புகளால்
துண்டு துண்டாகப் பிளவுபடும்
ஒன்றில்
ஒரு ஞாயிற்றுக் கிழமையின்
விடிகாலை
மற்றறொன்றில்
ஒரு வானம்
இன்னொன்றில்
ஒரு மஞ்சள் இலை
வேறொன்றில்
ஒரு மனிதன்
எல்லாம் மறுபடியும்
ஆரம்பமாகும்

தமிழாக்கம் கவிஞர் ஜாபர் சாதிக் துணை ஆசிரியர் ‘நம்பிக்கை’ – மலேசியா கவிஞர் கேரளத்துக்காரர் தமிழை விருப்பபாடமாக வேலூரில் படித்தவர்.

சாபு, துபாய்


II. ரா.கா.கி – 536: குஷ்வந்த்சிங்-கின் ஒரு கட்டுரையில் வாசித்தது

வங்காளதேசக் கவிஞர் திரு. ஷம்சுல் ஹக், தில்லி சார்க் எழுத்தாளர் மாநாட்டில் பேசும்போது மொழிபெயர்ப்புக் கவிதைகளைப்பற்றி இப்படிக் குறிப்பிட்டாராம், ‘கவிதையை மொழிபெயர்ப்பில் வாசிப்பது என்பது, ஒரு பெண்ணின் உதட்டில் முத்தமிடுவதற்குப் பதிலாக அவள் புகைப்படத்தில் முத்தமிடுவதைப்போன்றது’.

சொக்கன், பெங்களூர்.


III. சந்தவசந்தம் – 4258: திறமை

உன்னி டத்தில் ஓர்திறமை
ஒளிந்து கொண்டி ருக்கிறது
என்ன வென்றே தேடிப்பார்
எவரை யேனும் கேட்டுப்பார்
இன்ன தென்று தேர்ந்தவுடன்
எடுத்து வழங்கு, செயலாற்று
நன்மை பெறட்டும் இவ்வுலகம்
நண்பா, இஃதுன் கடனாகும்

புதைந்தி ருக்கும் உன்திறமை
புனித மான ஒன்றாகும்
அதனால் நன்மை உன்னைவிட
அகிலம் அடையும், நீயதனைச்
சிதைத்து விட்டால் உலகுக்குச்
சேரும் நன்மை கிட்டாது
அதனை உன்னை நம்பித்தான்
அளித்த தியற்கை, தூங்காதே!

மூலை முடங்கிக் கிடப்பவனை
மூதே விக்கும் பிடிக்காது.
காலம் மாய்க்கும் சோம்பேறி
கையில் வெற்றி கிடைக்காது
வேலை உன்றன் படிக்கட்டில்
வீற்றிருக்க நீ ஏனோ
நாலு புறமும் தேடுகிறாய்?
ஞாயம் கேட்டு வாடுகிறாய்?

இலந்தை


IV. சந்தவசந்தம் – 4265: யாப்பு

திறமையுடன் வானில் திரியத் துடிக்கும்
பறவைக்குத் தன்சிறகேன் பாரம்? — செறிவுடனே
தொய்விலா ஓசையுடன் சொல்லுலகின் மேல்பறக்கச்
செய்யுளுக்கு யாப்பே சிறகு. (1)

பறவைகள் வேறுபடும் பாய்ச்சலில்; கோல
இறகுகள் வண்ணம் இறைக்கும் — சிறப்புடனே
ஒய்யாரம் தந்துபல ஓசை உணர்த்திடச்
செய்யுளுக்கு யாப்பே சிறகு. (2)

பசுபதி


V. மரத்தடி – 2404: நான்கு கேள்விகள்

1. ஒரு ஒட்டகத்தை எப்படி ஃபிரிட்ஜுக்குள் வைப்பது?
2. ஒரு ஒட்டகத்தை வைப்பதற்கே திணரும்போது ஒரு யானையை எப்படி ஃபிரிட்ஜுக்குள் வைப்பது?
3. காட்டின் ராஜா சிங்கம் ஒரு அவசர மீட்டிங்குக்கு அழைக்கிறது. எல்லா மிருகங்களும் -பறப்பன, ஊர்வன என வித்தியாசம் இல்லாமல் எல்லா மிருகங்களும்-கலந்து கொள்கின்றன. ஒன்றே ஒன்று மட்டும் கலந்து கொள்ளவில்லை. அது எது?
4. நான்கு சன்னியாசிகள் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லும்போது வழியில்
ஒரு ஆறு குறிக்கிடுகிறது. அதை அவர்கள் கடக்க வேண்டும். அது மனிதர்களை உண்ணும் முதலைகள் நிறைந்த குளம். அவர்கள் எப்படிக் கடப்பார்கள்?

பதில் சொல்லுங்கள் நண்பர்களே. ஒரே ஒரு க்ளூ. ரொம்ப லாஜிக் பார்க்காம யோசிங்க. ஒண்ணுக்கொண்ணு தொடர்புள்ள கேள்வியோ இல்லையோ ஆனா ஒண்ணுக்கொண்ணு தொடர்புள்ள பதில்கள் இருக்கும்.

இந்த கேள்விகளூக்கான பதிலைக் கேட்டுட்டு நா ரொம்ப சிரிச்சேன்.

பிரசன்னா


VI. மரத்தடி – 2408: தமிழ் வினா

1. கொம்மாளம் – ‘கும்மாளம்’ என்று நாம் இப்போது உபயோகித்துக்கொண்டிருக்கும் வார்த்தை ‘கொம்மாளம்’ என்று பல இடங்களில் உபயோகித்துள்ளார்.
———————————————
கொம்மாளம் என்பது பேச்சு வழக்கு. கும்மாளம் என்பதே வழங்கிவரும் முறை. குதித்தல், விளையாடுதல் என்றெல்லாம் பொருள் வரும். ‘கும்மலித்தல்’ என்றும் சொல்வதுண்டு. ‘குருகினம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி’ என்பது தேவாரம். விளையாடுதல்; களித்தல் என்று பொருள்.
———————————————

2. மதிள் – இதுவரை கோட்டைச் சுற்றுச் சுவரை ‘மதில்’ என்றும் ‘மதிற்சுவர்’ என்றும் படித்திருக்கிறேன். ‘மதில் மேல் பூனை’ என்றும் சொல்லி வருகிறோம். ஆனால் ஒரு இடத்தில் அல்ல, பல இடங்களில் ‘கோட்டை மதிள் சுவர்’ என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
———————————————
மதிள் என்பது அச்சுப் பிழையாக இருக்கலாம். கல்கி நல்ல தமிழறிஞர். பிழைபட எழுதியிருக்கமாட்டார். பிழை திருத்துபவர்கள் (ஜெயகாந்தன் பாணியில் சொன்னால் ‘பிழை பொறுக்கிகள்’ ) :P. துணுக்கு எழுத்தாளர்களை, ‘தகவல் பொறுக்கிகள்’ என்று சொல்வார் அவர். நையாண்டிதான்.) சரியாக வேலை செய்யவில்லை என்பதுதான் இதன் பொருள். :)) மதில், மதிற்சுவர் என்பவையே சரி. மதிள் என்று எங்கேயும், யாரும் பயன்படுத்தியதில்லை.
———————————————

3. ‘சுளுந்து’ – இந்த வார்த்தையை கேள்விப்பட்டதாக நினைவில்லை. தீப்பந்தம் அல்லது தீவட்டி போன்ற பதத்தில் இவ்வார்த்தையை உபயோகித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அல்லது ஏதாவது விளக்கு போன்ற அமைப்பா என்று தெரியவில்லை.
———————————————
ஒரு கழியின் நுனியில் துணி முதலியவற்றைச் சுற்றி, கொளுத்தி, ஏந்தி வந்தால் அது தீப்பந்தம், தீவட்டி (தீவர்த்தி அன்று) என்று சொல்லப்படும். சுள்ளி, காய்ந்த இலைகள் முதலியவற்றால் ஆன தீப்பந்தம் சுளுந்து எனப்படும். சொக்கப்பனை கொளுத்தும் போது, ஆண்பனையின் பூக்களை அடக்கியிருக்கும் தண்டு போன்ற பகுதியைக் கயிற்றில் கட்டி, கொளுத்திச் சுழற்றுவார்கள். இதைச் சுளுந்து சுழற்றுதல் என்று சொல்வார்கள்.

ஹரி கிருஷ்ணன்


VII. அகத்தியர் – 9374: சொல்லின் செல்வன்

சொல்லின் செல்வன் என்னும் தொடரைப் பன்முறை கேட்டிருப்போம். அது அனுமனுக்கு இராமன் அளித்த விருது.

கிட்கிந்தாக் காண்டத்தில் அனுமன் சுக்கிரீவனுக்கு (அம் கழுத்தன்) உதவி தேடி இராமவிலக்குவரிடம் தூது சென்றபோது அவன் திறனைக் கண்டு வியந்து இராமன் இலக்குவனிடம் அழகாகப் பாடினான்:
[பாடல் எண் தெரியவில்லை; நினைவில் இருந்து எழுதுவது]

இல்லாத, உலகத் தெங்கும் இங்(கு)இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னுங் காட்சி
சொல்லாலே தோன்றிற் றன்றே, யார்கொல்இச் சொல்லின் செல்வன்?
வில்ஆர்தோள் இளைய வீர! விரிஞ்சனோ? விடைவல் லானோ?

இல்லாத = இல்லாதன = -அன் எனும் இடைச்சொல் பயிலாத பழைய வினைமுற்று வழக்கு
எ-டு :அவை வந்த = அவை வந்தன; அவை உள = அவை
உள்ளன என்பவை போல்.
கூர் = பெருகு
ஆர் = பொருந்து;
விரிஞ்சன் = பிரமன்;
விடை = காளை

” [கல்லாமல் விட்டுவிட்டான், அதைக் கற்றால் [இவன் புகழ் மேலும் பெருகும் என்று [சுட்டிக் காட்டும் அளவு] இவன் கல்லாமல் எஞ்சவிட்ட கலையும் பருகாது எஞ்சிய வேதக் கடலும் உள்ளன என்று இந்த உலகித்தில் எங்குமே இல்லாதன என்னும் முடிவு இவன் சொற்களிலேயே தோன்றிற்று, யார் இந்தச் சொல்லின் செல்வன்? வில் பொருந்திய இளைய வீரனே [இலக்குவனே]! இவன் வேதமுதல்வனான பிரமனோ? அன்றி விடையூரும் சிவனேயோ? [யார் தானோ?]”

இதை மனனம் செய்து மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லிச் சுவைத்தும் ஆரவில்லை. “யார்கொல் இச்சொல்லின் செல்வன்” என்னும் தொடரில் யார்கொல் என்னும் இடத்தில் அந்தக் கொல் என்னும் சொல்லில் மட்டுமே உள்ள வியப்புத் தொனி விவரிக்க முடியாதது. கம்பன் மூச்சு விடுவது நமக்கு எவ்வளவு இயல்போ அதுபோல் நினைத்தை அப்படியே அலுங்காமல் மிக உயர்ந்த ஆனால் எளிய சொற்களில் யாப்பில் வடிக்கும் திறனுள்ளவன் என்னும் விந்தை போகாமல் வளர்கிறது. அவன் திறன் ஒரே நேரத்தில் நம்மையும் பாடத் தூண்டுவதும் அவன் பாடியபின் நானும் பாடுவேன் என்று தன் பொல்லாச் சிறகை விரிப்பதா என்று பணியத் தோற்றுவதும் மிக அனுபவிக்கும் உணர்வு.

பெ.சந்திரசேகரன்


VIII.அகத்தியர் – 9381:
பழமொழிகள் கதைகள்

” சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி”
*********************************************
ஒரு ஊர்ல ஒருமடம், அதுல் ஒரு ஆண்டி. அவன் ஒரு சங்கோடும் சேகண்டியோடும் படுத்திருந்தான். யாசகம் மோசம். பசி வேறு.

அப்போது இரு திருடர்கள் அந்தப்பக்கம் வந்தார்கள். அவர்களுக்குத் தொழில் சரியில்லை. அவர்களிடம் ஆண்டி பேச்சு கொடுத்தான். அவர்களுடைய ஆள் ஒருவன் வராத்தால் ஆண்டியைக் களவுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அவர்கள் தடுத்தும் கேளாமல் சங்கையும் தன்னோடு எடுத்துக் கொண்டான்.

ஓர் ஆட்டுக் கிடைக்கு போனார்கள். நல்ல வேளை நாய்கள் இல்லை. காவல்காரர்கள் நின்றுக் கொண்டே தூங்கிக் கொண்டிருந்தார்கள். திருடர்கள் ஆளுக்கொரு ஆட்டைத் தூக்கினார்கள். ஆண்டியும் ஒரு கொழுத்த ஆட்டைத் தூக்கினான். ஆடு சத்தம் போட்டது. திருடர்கள் அவனிடம் ” சங்கைப் பிடி ” என்று எச்சரித்தனர்.

ஆண்டி ஆட்டின் சங்கைப் பிடிப்பதற்குப் பதிலாக தன்னிடமிருந்த சங்கை எடுத்து ஊதிவிட்டான். அவ்வளவுதான். காவல்காரர்கள் விழித்துக் கொண்டார்கள். திருடர்களைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டார்கள்.

” சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி ” என்று திருடர்கள் வருத்தப்பட்டாகள்

சிங்கை கிருஷ்ணன்


Categories: Uncategorized

பாம்பே ட்ரீம்ஸ் – டோனி பரிந்துரை

May 11, 2004 Leave a comment

ரீடிஃப்.காம்: அமெரிக்கத் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் போல், உலகளாவிய நடன/இசை-தியேட்டருக்கு டோனி விருதுகள் வழங்கப் படுகிறது. இன்று காலை டோனிப் பரிந்துரை பட்டியலில் நம்ம இசைப்புயல் பெயர் இருக்கிறதா என்று ஆர்வத்துடன் பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. ஏனோ, ரெஹ்மான் எந்த விருதுக்கான பந்தயத்திலும் இல்லை. ‘மெய்ன் ஹூன் னா’ பட இயக்குனர் பரா கான் இருந்தார். டோனி விருதுகளின் ஐம்பத்தெட்டு ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக ஒரு இந்தியர். (இவங்க இன்னும் ஆர்.எஸ்.மனோஹர் நிகழ்ச்சிகளைப் பார்த்தது இல்லை போல… அதனால்தான் 🙂

பாம்பே ட்ரீம்ஸ் முன்று விருதுகளுக்கான ஓட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது:
சிறந்த ஆடை வடிவமைப்பு – மார்க் தாம்ஸன்
சிறந்த நடன அமைப்பு – அந்தோணி வன் லாஸ்ட் & பரா கான்
சிறந்த இசைக்கோர்வை (Orchestrations) – பால் போகேவ்

அடுத்து வரும் ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ போன்றவற்றில் நிச்சயம் ஏ.ஆர்.ஆர். வந்துவிடுவார்.

முழுப்பட்டியல்

Categories: Uncategorized