Archive

Archive for May 14, 2004

வலைபாயுதே…

May 14, 2004 Leave a comment

1. மரத்தடியில் லலிதா (ராம்) மட்டும் எழுதிக் கொண்டிருந்த கர்னாடக இசை விமர்சன உலகுக்கு ஒரு புதிய வலைப்பதிவாளர் வந்திருக்கிறார். மேண்டலின் சீனிவாஸ் குறித்த பதிவோடு ஆரம்பித்திருக்கிறார் ஜெய்கணேஷ். அவரை மாதிரியே இவரும் ரொம்ப பயமுறுத்தாமல் எளிய தமிழில் இனிய கர்னாடக கச்சேரிகளை அறிமுகம் செய்வார் போலத் தெரிகிறது. யூனிகோடுக்கு மாறிடுங்களேன் சார்!?

2. நக்கல் நாகராஜன் ‘மே மாத சிறப்பு கேள்வி’யாக மே பதினெட்டின் தாத்பரியத்தை விசாரித்திருந்தார். வழக்கம் போல் ‘மணநாள்’, பத்தாவது பிட் அடித்த நாள், முதல் முதலாக மலபார் பீடி குடித்த நாள், சதாம் வீழ்ந்த நாள் என்று ஏதாவது சொல்வார் என்று நினைத்தால், வேறொன்றை சொல்கிறார். ‘சரியா/தவறா’ என்று சொல்லுங்க! நான் விடைக்காக வாலியை துணைக்கழைத்துக் கொண்டேன்.

3. திருப்பதி படித்ததில் பிடித்தவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்:

எல்லோரும் நல்லவர்கள் தான்,
சந்தர்பம் கிடைக்காமல் இருக்கும் வரை

Categories: Uncategorized

முதல்முறையாக ஒரு இத்தாலியப் பெண் பிரதம மந்திரியாகிறார்

May 14, 2004 Leave a comment

ஆளுங்கட்சிக்கு எதிரான அலை என்கிறார்கள். சோனியா வெளிநாட்டவர் என்பதெல்லாம் செல்லாது என்கிறார்கள். ‘ஜனகனமன… ஜனங்களை நினை’ என்கிறார்கள். பணக்காரர்கள் பணம் மட்டுமே கொடுப்பார்கள்; நடுத்தர மக்கள் வாய்கிழிய விமர்சிக்க மட்டுமே செய்வார்கள்; ஏழைகள் மட்டுமே வாக்களித்து, ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள் என்கிறார்கள். மக்கள் நலனுக்காக பாடுபடவேண்டும், மன்மோகன் சிங் பிரதமராக வேண்டும், என்று எல்லாம் நிறைய ஆசைப் பட்டியல் தொடர்கிறது.

சோனியா காந்தி பிரதம மந்திரியாகப் போகிறார். வாஜ்பேயைப் போல அவரும் கூட்டணி ஆட்சியமைக்கிறார். அவரைப் போலவே மந்திரிசபையை பாலன்ஸ் செய்வது, யாதவ்களை திருப்திபடுத்துவது, அயோத்தியா பிரசினையில் மௌனம் சாதிப்பது, இஃப்தார் விருந்துக்கு செல்வது, பாகிஸ்தான் பார்டரை தொட்டு வருவது, என்று இன்றியமையாத கடமைகளை செவ்வனே செய்வார்.

அவர்தான் பிரதம மந்திரி என்பது இன்னும் முடிவாகவில்லை. இருந்தாலும், காங்கிரஸ் கட்சியில் அவரை எதிர்க்கும் திராணி ஒருவருக்கும் இல்லை. இந்தியாவில் அரசியல் கட்சிகளும் குடும்பங்களும் ஒரே விதமான மனப்பான்மை கொண்டவை. குடும்பங்களில், பெரியவர்களை மறுத்துப் பேசினால், பெற்றோர்களுக்கு மரியாதை தருவதில்லை; தாந்தோன்றி என்று விமர்சிக்கப் படுவார். கட்சித்தலைவரை எதிர்த்துப் பேசினால், துரோகி என்று முத்திரை குத்தப்படுவார். கட்சியை விட்டே நீக்கப்படுவார். சோனியா இல்லாவிட்டால், அந்த இடத்தில் ராகுல் அமர்வார் என்பதாலும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.

இத்தாலிய குடிமகள் உரிமையைத் துறந்ததனால், பிஜேபி ஆரம்பித்த இரட்டைப் பிரஜா உரிமை போன்றவற்றை என்ன செய்யப் போகிறார் என்று சொல்லவேண்டும். பொருளாதார தாராளமயமாக்கலை எப்படி கட்டுப்படுத்தப் போகிறார், எங்கு என்பதையும் இப்போதே தெளிவாக திட்டம் போட்டு, கம்யூனிஸ்ட்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பாடதிட்டங்களை, ஐஐடி/ஐஐஎம் கட்டண விவகாரம், கல்வித்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் என்ன என்பதையும் வெளியிட வேண்டும். எம்.எம். ஜோஷி செய்தது போல் திரைமறைவில் அரங்கேற்றாமல், விவாதத்துக்குப் பிறகு அவசியம் புதிய கொள்கைகளைக் கொண்டுவர வேண்டும். லல்லூ போன்றவர்கள் எதிர்த்தாலும், பெண்களுக்கு மக்களவையில் ரிசர்வேஷன் தரவேண்டும். பாகிஸ்தானுடனான நல்லுறவுக் கொள்கையில் மாற்றங்கள் இருந்தால் சொல்ல வேண்டும்.

இவை போன்ற நாட்டின் பாதையை திருத்தக்கூடிய அயோத்தியா முதல் விவசாய நலத்திட்டங்கள் வரை ஒரு ப்ளூ-பிரிண்ட் போட்டு ஒப்புதல் வாங்கிக் கொண்டு கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்!

ஒரு வெளிநாட்டினர் நாட்டின் மிகப் பொறுப்பான பதவியில் அமர்வதை ஒரு என்.ஆர்.ஐ.யாகப் பொறுக்க முடியவில்லை. ஆனால், என்னுடைய குழந்தையே அமெரிக்கவாசியாக இருந்துவிட்டு, பின்பு என்றாவது ஒரு நாள் இந்தியராக மாறி, தேர்தலில் போட்டியிட்டால் ஆதரிக்க மாட்டேனா? தலைமையில் மட்டும் மாற்றம் வந்தாலும், அதிகாரிகளும் ஆணையர்களும் ஆங்காங்கே மாற்றப்பட்டாலும், அவர்களின் செயல்பாடுகளில் பெரிய மாறுதல் எதுவும் வந்துவிடப் போவதில்லைதானே?

Categories: Uncategorized

சன் டிவி: ஏ.ஆர்.ரெஹ்மான் நேர்காணல்

May 14, 2004 Leave a comment

திண்ணையில் சன் டிவியில் நடந்த கலைஞர் கலந்துரையாடல் விரிவாக அலசப்பட்டிருக்கிறது. ஒரு ஆதரவு கருத்து, ஒரு மாற்று கருத்து, ஒரு கிண்டல் கருத்து என்று எல்லாவற்றையும் தொட்டிருக்கிறார்கள். எனக்கு தமிழ்ப் புத்தாண்டு அன்று கொடுக்கப்பட்ட ஏ.ஆர்.ரெஹ்மானின் செவ்வியை குறித்து எழுத ஆவலாக இருக்கிறது. ஒரு நல்ல நேர்முகத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை அர்ச்சனாவின் மூலமாக அறிந்து கொண்டேன். ஒரு நேர்மையான பேட்டியை அளிப்பது எவ்வாறு என்பதை இசைப்புயல் சொன்னார்.

பேட்டி எடுப்பவரை குறித்த அறிவு, அவரைப் பேச விடுவதற்காக எடுத்துக் கொண்ட மௌனங்கள், opne-ended கேள்விகள், பேட்டியாளர் ரொம்ப எடுத்துக் கொடுக்காமல் எதிராளியை ஆடவிட்டு, கண்களில் ஆர்வம் காட்டுவது என்று அழகாகத் தொகுத்தார். என்னுடைய வாழ்த்துக்கள்.

சாதாரணமாக ரெஹ்மான் கொஞ்சம் மூடி டைப்; ரொம்ப கலகலப்பாக பேச மாட்டார் என்று எல்லாம் குற்றம் சாட்டுவார்கள். அன்று மனம் திறந்துதான் உரையாடினார். இதற்கு முன் அவரை நேரில் சந்தித்து அளவளாவியதையும் சொல்ல வேண்டும். லண்டனில் விமானத்தின் உள்ளே செல்வதற்காகக் காத்திருக்கும்போதுதான் அவரை கவனித்தேன். ரொம்ப குள்ளமாக, தலைமுடி கூந்தலாக விரிய, கையில் ஒரு சிறிய பெட்டியுடன், கண்ணாடி போட்ட ஆஜானுபாகுவான ஒருவர் ஏ.ஆர். ரெஹ்மான் போல் இருப்பதை பார்த்தேன். குழந்தைகளோடு விமானம் ஏறுபவர்களுக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமையால், என்னை சீக்கிரமே ஏறிக் கொள்ள அழைக்க அவரை அவர்தானா என்று உறுதிபடுத்திக் கொள்ளும் வாய்ப்பை இழந்து சென்னை செல்லும் என் விமானத்திற்குள் சென்று விட்டேன்.

சென்னையில் இறங்கி பெட்டிகளின் வருகைக்காகக் காத்திருக்கும்போது மீண்டும் அதே முகம். கையெழுத்து வாங்குவதற்காக ஒரு பேப்பர், பேனா (விற்றால் நல்ல காசு வருங்க!) எடுத்துக் கொண்டு “நீங்க பார்ப்பதற்கு ரெஹ்மான் மாதிரியே இருக்கீங்க” என்று அழகான பெண்ணிடம் வழியும் ஆண் போல் அறிமுகம் செய்வித்துக் கொண்டேன். ரொம்ப எளிமையாக என்னைப் பற்றி விசாரித்து, நான் எதற்காக வந்திருக்கிறேன், என்ன வேலை பார்க்கிறேன் என்று நான் சாதாரணமாக ஒரு இந்தியரைப் பார்த்தவுடன் கேட்கும் எல்லாக் கேள்விகளையும் கேட்டு ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார்.

“சார் உங்களை ரொம்பத் தொல்லைபடுத்த விரும்பவில்லை; அப்புறம் பார்ப்போமா”?

“அது எல்லாம் ஒண்ணும் இல்லீங்க. எனக்கு என்ன கஷ்டம்? லக்கேஜ் எடுக்க மானேஜர் இருக்கார். எனக்கு ஒரு வேலையும் இல்ல. உங்களுக்காவது அந்த டென்ஷன்” என்று இயல்பான சிரிப்போடு தான் லண்டனில் வந்த வேலையை குறித்தும் பகிர்ந்து கொண்டார். நான் பிய்த்துக் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது என்று கூட செல்லமாய் அலுத்துக் கொள்ளலாம்.

சன் டிவி நேர்காணலில் அவர் ஹஜ் பயணம் சென்று வந்ததை உணர்ச்சிகரமாகப் பகிர்ந்து கொண்டார். மலேசியாவில் இருக்கும்போது திடீரென்று ஒரு குரல் மெக்காவுக்கு வருமாறு அழைக்கிறது. முதல் முறை அங்கு செல்பவர்கள் முடிதுறக்க வேண்டும். எனவேதான் புதிய குள்ள முடி உருவம். பலர், இந்த மாதிரி ஆழ்குரல் தன்னை ஐயப்பன் அழைத்ததாகவும், பாபா பேசியதாவும், வைஷ்ணோ தேவி கூப்பிடுவதாகவும் சொல்கிறார்கள். என்றாவது, என்னை யாராவது அழைக்க வேண்டும்.

இந்திய இசையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் தூதுவனாக அசைப்படுகிறார். ஒரு கணிப்பொறியாளன் அடுத்த பதவிக்கு செல்வதை எப்போதுமே நினைத்திருப்பான். குறைந்தபட்சம் அடுத்த டெக்னாலஜி என்ன வருகிறது என்று கழுகுப் பார்வை பார்த்துக் கொண்டேயிருப்பான். அதேபோல் அவரும் தமிழில் சாதித்தாகி விட்டது. ஹங்கேரி, லண்டன் என்று சிம்பொனி கட்டியாயிற்று. பாம்பே ட்ரீம்ஸ் போன்ற தியேட்டரில் கால் பதித்தாயிற்று. அடுத்து என்ன செய்யலாம், எவ்வாறு அடுத்த படிக்கு செல்லலாம் என்று விருப்பப்படுகிறார். அனேகமாக வெளிநாட்டிலேயேத் தங்கிவிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அங்கேயே செட்டில் ஆனாலும், இந்திய இசையை மறக்க மாட்டார் என்பது உறுதி.

வெளிநாடு சென்று தனியே இருப்பதால் மனம் தனிமையால் வெதும்புவதாகவும் ஒத்துக் கொண்டார். ஒரு சிம்பொனி கொடுக்க மூன்று நான்கு மாதம் ஆகின்றது. அமெரிக்கர்கள், லண்டன் ஆர்க்கெஸ்ட்ரா, டட்ச், ஹங்கேரி என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் நோட்ஸ் கொடுக்க வேண்டும். அவர்கள் மேலை நாட்டு (western classical) இசையைப் பயில்பவர்கள். அவர்களுக்கு ‘தகிடத்தகிடத்தகிட’ என்று கொடுத்தால் மிரண்டு விடுவார்கள். கஷ்டப்பட்டு அவர்களின் ‘தகி டகி தகி டகி’ போன்ற இடைவெளி விடும் பழக்கத்தைத் தடுத்து நம்ம ஊர் இசைப்படி கொண்டு வருவார். பிறகு, மீண்டும் இன்னொரு பாடலுக்கு அவர்கள் பாணியில் வாசிக்க சொல்வதற்குள் தாவு தீர்ந்து விடும் என்பதை அலட்டல் இல்லாமல், விவரித்தார்.

நியு படத்தில் சூர்யாவுடன் வேலை செய்ததை விவரித்தார். சூர்யா ஒரு hyperactive பேர்வழி. பாடல் தளத்திற்கு தன்னுடைய சொந்த இசையோடவே வந்து விடுகிறார். எப்பொழுதும் செய்வத விட இன்னும் நன்றாக இசை வருவதற்காக மிகவும் ஆர்வத்துடன் செயல்படுகிறார். தன்னுடைய படத்தின் ஒவ்வொரு நுணுக்கத்திலும் அதீத அக்கறை காட்டுகிறார் என சம்பவங்களைக் கொண்டு அடுக்கினார்.

தனக்கு மிகவும் பிடித்த பாடலாக ‘வந்தே மாதரம்’ சொன்னார். எல்லா படைப்பாளியையும் போல் இசையமைத்த பிறகு நகததைக் கடித்துக் கொண்டு ரசிகர்களின் முடிவுக்காக காத்திருந்திருக்கிறார். இசையமைக்கும் போது அவர் மிகவும் ரசித்ததாகவும், ஆனால், பின்பு ஒலிநாடாவில் கேட்கும்போது பயம் வந்திருக்கிறது. மோசமான இணைய க்னெக்ஷனில் வைரஸ் புகுந்து லொள்ளு செய்வது போல், ராம் கோபால் வர்மாவும் ‘என்னடா, ரொம்ப கத்தி விட்டாய்’ என்று வேல் பாய்ச்சியிருக்கிறார். இப்போது அந்தப் பாடல் எவ்வளவு புகழ் பெற்றது என்பது நாம் அறிந்ததே. ஆதலினால், அனைவரும் இப்பொழுதே தங்கள் உதறல்களை ஒதுக்கிவிட்டு உளறல்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

நிகழ்ச்சி முடிவில் ஆய்த எழுத்தின் ‘ஜனகனமன’வை வாசித்து காட்டினார். கண்ணை மூடிக் கொண்டு அனுபவித்துப் பாடினார். என்னவாக இருந்தாலும் ஆயிரம் ஆர்க்கெஸ்ட்ராவுடன், வாய்ஸ் வித்தைகள் செய்து வரும் டிஜிட்டல் சவுண்ட் ட்ராக் போல் வரவில்லை. எனினும், இப்படி சாதாரணமாகப் பாடுவதை, எப்படி அவ்வளவு வித்தியாசமான பாடலாக மாற்றியிருக்கிறார் என்று ஆச்சரியப்படுவதை நிறுத்தவும் முடியவில்லை.

தமிழில் தற்போது இவருக்குப் படமே இல்லையாம். ஜக்குபாய் மட்டும்தான் இப்போது என்று விஷயமறியா வட்டாரங்கள் சொல்கிறது. ரஜினி படத்துக்கு ரெஹ்மான் தேவையில்லை. ஏன் சார், ‘அன்னியனு’க்கு இசையமைக்கவில்லை என்று அர்ச்சனா கேட்கவில்லை; ரெஹ்மானும் பதிலளிக்கவில்லை.

நன்றி: தமிழோவியம்.காம்

Categories: Uncategorized

மவுஸ் போன போக்கில்

May 14, 2004 Leave a comment

–rejectioncollection.com–: குமுதம் விகடனுக்குக் கதை, கவிதை அனுப்பி அவர்கள் வருந்தியிருந்தால், நமது வருத்தத்தை இங்கு வந்து பகிர்ந்து கொள்ளலாம். சில சமயம் ஆறு மாசம், ஒரு வருஷம் வரை காத்திருந்து பிறகு ‘மன்னிக்கவும்’ என்று ஒரு கடித்தத்துடன் வீட்டுக்கு வந்து முகத்தில் அடிக்கும் என் போன்ற எழுத்தாளர்களுக்கான வலைத்தளம் இது. எப்படி நிராகரிப்பை ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்வது, எவ்வாறு துயரத்தில் இருந்து மீள்வது, தனது எழுத்தை எப்படி பட்டைதீட்டிக் கொள்வது என்பதற்கு ஊக்கமும் டிப்ஸுக்ளும் நிறைந்த தளம்.

அதுதான் இப்பொழுது வலைப்பதிவும் மின்னிதழ்களும் இருக்கிறதே என்கிறீர்களா? அதுவும் சரிதான்.


The Bicycle Forest: அமெரிக்கர்கள் (பொதுவாக வளர்ந்த நாடுகளில் வசிப்பவர்களுக்கு) விநோதமாக எதையாவது செய்து கொண்டிருப்பதற்கு ஆசையாக இருக்கும். க்ளென்னும் ப்ரெண்ட்டும் சோபாவைத் தூக்கி சைக்கிளில் வைத்துக் கொண்டு நகர்வலம் வருகிறார்கள். ஹாய்யாக சோபாவில் சாய்ந்த மாதிரியும் இருக்கும்; சைக்கிளும் ஓட்டிய மாதிரியும் இருக்கும். வழியில் நிறுத்திய போலீஸ், அன்று பெய்த மழை, இணையம் மூலம் சந்தித்த புதிய நட்புகள் என்று கனடாவை சோபா-சைக்கிள் மூலம் வலம் வந்ததை புத்தகமாக எழுதி வருகிறார்கள்.

Insects on the Web: வீட்டில் ஏதாவது புழு பூச்சி தென்பட்டால் உடனடியாக கிடைக்கும் வஸ்துவை வைத்து அடித்து விடுவேன். அது என்ன ஜந்து, எவ்வளவு ஆபத்தானது, எவ்வாறு அதை அழகு பார்த்திருக்கலாம், எதனால் என் வீட்டுக்குள் வந்தது, எப்படி பராமரிக்க வேண்டும் என்று சொல்லுகிறது இந்த இணையத் தளம். பட்டாம்பூச்சி முதல் பூரான் வரை சுவையான தகவல்களுடன் அறிவியல் சமாசாரங்களையும் தெளிவாக கொடுக்கிறார்கள். நம்ம கலாசாரமும் அவர்களின் வாழ்வுமுறைக்கும் உள்ள ஒற்றுமைகளை சொல்வதுதான் எங்கள் குறிக்கோள் என்று சொல்கிறார்கள்.

Urban Legends Reference Pages: (Ford’s SportKa): இந்த விளம்பரம் அமலாவுக்கும் மனேகா காந்திக்கும் ரத்த கொதிப்பை வரவழைக்கும். ‘நான் பொல்லாதவன்’ என்று பாடுபவர்களுக்கான காரின் விளம்பரம். பூனை ஒன்றின் தலையைக் கொய்தும், எச்சம் போட வரும் புறாவை விரட்டுவதாகவும் இரு விளம்பரங்கள். காருண்யவாதிகளின் ஆட்சேபத்திற்கு இணங்க, பூனை விளம்பரத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால், ஜெயலலிதா ‘பணப்புழக்கம் இல்லை’ என்று கிளப்பிவிட்டது போல், இணையத்திலும் இளைஞர்களிடமும் பரவலாக புகழடைந்திருக்கிறது இந்த ‘ஸ்போர்ட்ஸ்கா'(ர்).

Pocket Calculator’s Vintage Boombox and Ghetto Blaster Museum: டூ – இன் – ஒண் என்று நாம் அழைக்கும் டேப் ரிகார்டர்களை அமெரிக்கர்கள் பூம்-பாக்ஸ் என்பார்கள். இன்றும் ட்ரெயினில் செல்லும்போது ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சிலர் இவற்றை கை கொள்ளாமல் வைத்துக் கொண்டு ராப் இசையை ரசிப்பதை கேட்கலாம். (ரொம்ப முறைத்துப் பார்த்தால், அவ்ரை ஏளனப்படுத்துவதாக நினைத்து பின் விளைவுக்கு ஆளாகலாம்!)

நேற்று, இன்று, நாளை என்று எல்லாவகையான ஒலிப்பதிவான்களின் பட்டியல், எப்படி ரிப்பேர் செய்வது போன்ற செய்முறை விளக்கம், என்று மினி அருங்காட்சியகம் அமைத்திருக்கிறார்கள்.

The English-to-American Dictionary: இந்தியாவிலும் லண்டனிலும் சாதாரணமாக பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு. அமெரிக்க வழக்குச் சொல்லை அறிமுகப்படுத்தும் இணையத்தளம். அமெரிக்கா வந்த புதிதில் நண்பர்கள் எதை எப்படி கேட்க வேண்டும், எந்த சொல் ஆகாது, என்றெல்லாம் வகுப்பு எடுப்பார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

The Top 10 Weirdest Things in Space: Weird and strange things in theuniverse: அதிகம் அறியப்படாத பிரபஞ்ச லீலைகளின் தலைபத்து பட்டியல். 2001இல் கணிக்கப்பட்டிருந்தாலும், இன்றும் எனக்குப் புதிராக இருக்கும் விஷயங்களுக்கு குழப்பமில்லாத முன்னுரை கொடுக்கிறார்கள். கருங்குழி முதல் ஹைப்பர்-நோவா வரை வானியலில் உள்ள முக்கிய கூறுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. வேற்று கிரக வாசி எங்கே இருக்கிறார்?

Smilies in outer space: நிலவைப் பெண் என்றார்கள். குளிர்ச்சிக்குக் குறியீடு என்றார்கள். வளர்பிறை, தேய்பிறை பார்த்து நல்ல நாள் குறித்தார்கள். இருபத்தியேழு நட்சத்திரங்களையும் மணமுடித்தார்கள். நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கை கால் பதிக்க வைத்தார்கள். யாரோ வந்து ஸ்மைலி பொம்மையும் போட்டிருக்கிறார்கள். யார், எப்போது, எதற்காக இந்த புன்சிரிப்பை, எந்த யா?த அரட்டையில் போட்டார்கள் என்று சொல்லவில்லை!

Date a piano (it’s not what you think): பியானோவை கணக்கு பண்ணலாம் வாருங்கள் 🙂

நன்றி: தமிழோவியம்

Categories: Uncategorized