Archive

Archive for May 24, 2004

கவர்ந்த உபயோகங்கள்

May 24, 2004 Leave a comment
 • பயிற்சிநிலை பொறுக்கி
 • பரிபூரண பொறுக்கி
 • மீனாட்சி என்றால் தாமிர தேகம்
 • கோவிலுக்கு சென்று நன்றி அறிவிப்பு கூட்டங்கள்
 • சாகசம் கலந்த வருமானம்
 • மானசீக குரு; மரியாதைக்குரிய நண்பன்
 • ஓயாத ஞாபக படையெடுப்புகள்
 • பிசாசெனக் கவிந்து நின்ற தனிமை
 • கலை நேர்த்தியுடன் செய்கிற அயோக்கிய கவிஞன்
 • முகத்தில் அறையும் விஷச் சொற்கள்
 • ஆத்மசுத்தியுடன் கெட்ட காரியங்கள்
 • பால்பாயிண்ட் பேனா சைஸில் எழுதப்பட்ட திருக்குறள்

தூணிலும் இருப்பான் – பா. ராகவன்
சபரி / ரு. 55

Categories: Uncategorized

தமிழோவியம் – விமர்சனம்

May 24, 2004 Leave a comment

1. பேரழகன்: ‘படத்தை தாராளமாகப் பார்க்கலாம்’ என்று சொன்னதால் பார்க்காவிட்டாலும், மற்றுமொரு இரட்டை வேட மலையாள ரீமேக் படம். விவேக் காமெடி ஊனமுற்றவர்களைப் புண்படுத்தாத மாதிரிதான் இருந்தது. என்னுடைய கல்லூரி காலத்து நண்பர்கள் சேரும்போது ஜாலியாக கலாய்த்துக் கொண்டு, ஒருத்தர் காலை இன்னொருவர் வாரிவிட்டுக் கொண்டு அரட்டை அடிப்போம். அது போலத்தான், (விவேக்) குழந்தை-சின்னா (சூர்யா) நட்பும் காட்டப்பட்டிருந்தது. (தேவையில்லாத டிஸ்க்ளெய்மர்: இப்பொழுதுள்ள இணைய நட்பை குறித்து இதனால் எதுவும் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை 🙂

‘பேரழகன்’ நிஜத்தை பிரதிபலிப்பதாகவும் இல்லை. மலையாள மறுபதிப்பாக இருப்பதால், தேவையில்லாத செண்டிமெண்ட் சோகக் காட்சிகளும் அதிகம். மிகவும் ரசித்த வசனகவிதையையும் காட்சியாக்கத்தில் எவ்வளவு இயலுமோ, அவ்வளவு சொதப்பியிருந்தார்கள். ‘அம்புலி மாமா’ பாடல் ஆண்களுக்குப் பிடிக்கலாம்; அவர்களின் typical கற்பனைகளின் வடிகாலாக பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ஏவிஎம் மார்க்கெட்டிங்குக்காக மட்டுமே படம் ஓடுகிறது.

2. பருந்துப் பார்வை: சென்ற ஆண்டு ‘இணையக்குழுக்களின் ஆண்டு’ என்றால், இந்த ஆண்டை வலைப்பூக்களின் ஆண்டாக நிச்சயம் சொல்லலாம். ஏன் சார்… மதுரபாரதி சாருக்கு மட்டும் அவருடைய பெயரின் மேல் சுட்டினால் வலைப்பதிவுக்கு செல்லுமாறு வசதி செய்து தரவில்லை 🙂

3. பதில்கள்: PingBack குறித்து கேள்விப்பட்டவுடன், ஒரு கேள்வியாக்கி அனுப்பி வைத்திருந்தேன். பதிலளித்த வலைப்பையனுக்கு நன்றி. தமிழ் வலைப்பூக்களில் இது எவ்வளவு தூரம் முக்கியம், அதன் தேவை என்ன, எப்படி செயல்படுத்த முடியும் என்பதை நீங்கதான் சொல்ல வேண்டும்!

4. கதை: ‘சுய சாசனம்‘ என்று ஒரு கதை ஆரம்பித்து இருக்கிறேன். படிச்சுட்டு உங்கள் பொன்னான பின்னூட்டங்களைத் தர வேண்டுகிறேன். கடவுள் மட்டும்தான் பதில் எழுதுவதில்லை என்பது பொன்மொழி. வாசகர்களாகிய நீங்களாவது அவ்வப்போது கருத்துக்களை சொல்ல வேண்டும்! (அட்வான்ஸ் நன்றிகள் 🙂

5. சமையல்: தலைப்பை மாற்றலாம்; நான் ரொம்பவும் சுவைக்கும் பகுதி. இவற்றையெல்லாம் யூனிகோடில் போட்டால், பின்னொரு நாளில் தேடுவதற்கு வசதியாக இருக்குமே. இந்த வாரமும் பயனுள்ள வட இந்திய உணவு முறையை எளிமையாக அறிமுகம் செய்ததற்கு நன்றி.

6. தராசு: ‘பின்குறிப்பு’ நல்லாத்தான் இருக்கு. ஆனால், சம்பந்தா சம்பந்தமில்லாமல் ‘பிகு’ போடறாங்க. தராசு எழுதிய பிரதமர் விஷயத்துக்கும், ஜெயலலிதா வாபஸ் வாங்கியதற்கும் எப்படி எங்கே லிங்க் இருக்கிறது என்பது அடியேனுக்கு எட்டவில்லை! தனியாக இன்னொரு சுட்டி கொடுத்தோ, அல்லது இரண்டு தராசு ஆகவோ எழுதியிருக்க வேண்டும்.

7. ரமா சங்கரன்: தமிழோவியத்தில் தவறவிடக்கூடாத பகுதி.

8. முத்தொள்ளாயிரம்: கொஞ்சம் அரைத்த மாவையே அரைப்பது போன்ற பாடல்களைக் கூட சுவைபட வழங்குவது ஒரு கலை. நன்றாக செய்து வருகிறார் சொக்கன். ஒவ்வொரு வாரமும் தலைப்பிலேயே, பாடலுக்கு ஒரு மினி அறிமுகம் செய்யலாம். காட்டாக இந்த வாரத்துக்கு: சேர அரசுக்கு மக்கள் அதிருப்தி! என்று தினமலர் போல் போட்டால், என் போன்ற டீ கடை பெஞ்ச் ஆசாமிகள் கூட முதலில் படிப்பார்கள் 😉

9. மேட்ச் ஃபிக்ஸிங்: அபிஜித் கலே லஞ்ச வழக்கின் முடிவு இந்த வாரம் வெளியாகுமாமே? போன வாரம் கிரிக்கெட் உலகில் நடந்தவற்றை பத்ரி எழுதுவது போல் எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்க என்.பி.ஏ செய்திகளை இதே போல் யாராவது (தமிழில்) தொகுத்துத் தர வேண்டும்.

10. முத்துராமன்: ஊக்குவித்தல் என்று நான் ஒரு வார்த்தையில் சொல்வதற்குப் பின் இவ்வளவு அர்த்தங்களா!? ஹ்ம்ம்… எதற்கு நீங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக அலசியுள்ளார்.

11. வானவில்: சிறிய வயதில் இந்தக் கதையை கேட்டிருந்தால் எடக்கு முடக்கான கேள்விகள் எதுவும் கேட்டிருக்க மாட்டேனாக இருந்திருக்கும். இப்பொழுது நிறையத் தோன்றுகிறது! ஏன் சன்னியாசம் பெற்றுக் கொள்ள வேண்டும்? (எனக்கு இன்னும் மனம் பக்குவம் அடையவில்லை போல!) எதற்காக வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது? (அப்புறம் கொழுப்பு, கொலஸ்ட்ரால், ட்ரைக்ளிசரைட் என்று அவதிப்படக் கூடாது அல்லவா?) — சிறுவர்கள் படிப்பதற்கான சிறப்பான பகுதி.

12. காந்தீய விழுமியங்கள்: வாரம்தோறும் தமிழோவியத்தில் தவறவிடக்கூடாத இன்னொரு பகுதி. (இந்தியாவில் குற்றங்களுக்கு தரப்படும் தண்டணைகள் அதிகம் என்றே காந்திஜி நினைக்கிறார்.)

13. தன்னிலை விளக்கம்: தராசு Ext. அல்லது தராசு Express!

காணாமல் போனவை: சினிமாப் பாடல்களை சுவைபட வழங்கிய சந்திரவதனா, அமர்க்களமாக ஆரம்பித்த ஹரி கிருஷ்ணனின் ‘வேர்கள்’, அவ்வப்போது வரும் ‘வெங்கட்’, சில வாரம் முன்புதான் தொடங்கிய ‘கார்த்திக் ராமாஸ்’…

Categories: Uncategorized

மத்திய அமைச்சரவை

May 24, 2004 1 comment

பத்ரி அதிர்ச்சியான ஆச்சரியங்கள் என்று மந்திரி சபை பட்டியலையும் அதை குறித்தத் தன்னுடைய கருத்தையும் பதிந்துள்ளார். தொடர்ந்து எழுந்த சில எண்ணக் கேள்வி குழப்பங்கள்:

1. கமல்நாத்: கல்கத்தாவின் செயிண்ட். சேவியர்ஸ் கல்லூரியில் இருந்து வணிகவியலில் பட்டம் பெற்றவர். ஹவாலா டைரி குறிப்பில் இடம் பெற்றவர். 1991ல் சுற்று சூழல் துறை அமைச்சராக இருந்தவர். அப்பொழுது உலகளாவிய அளவில் மாசுக் கட்டுப்பாடு நிர்ணயங்களையும், அபராதங்களையும் வகுத்தவர். தொடர்ந்து நெசவுத்துறையை கவனித்தபோது முன்னெப்போதும் இல்லாத அளவு பஞ்சு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சாதனை படைத்தார்.

2. தமிழகம்: இதுவரை மத்திய அமைச்சரவையில் எப்போதுமே இல்லாத அளவில் 12 பேர் அமைச்சர் பதவி பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சிகரமானது. வருமாண்டுகளில் தமிழகம் செழிக்க இது உதவும். மத்திய – மாநில அரசுகளிடையே உறவுகள் பலப்பட்டால் பலன் அதிகமாக இருக்கும்.

3. வாரிசு ராஜ்ஜியம்: தயாநிதி மாறனும் அன்புமணியும் அமைச்சரவையில் இருக்கிறார்கள். முன் அனுபவம் அதிகம் இல்லையெனினும் இருவருமே நிறைய படித்தவர்கள். எம்.பி.பி.எஸ் டாக்டருக்கு சுகாதாரத்துறையும், ஹார்வார்ட் மேலாண்மை படித்தவருக்கு தகவல் தொடர்புத்துறையும் தந்திருக்கிறார்கள். தயாநிதி மந்திரியாவார் என்று தெரிந்துதான் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அன்புமணி அமைச்சராவதும், சோனியா பிரதம மந்திரியாக வாய்ப்புள்ளது மாதிரி ஓரளவு அனுமானிக்கப்பட்டதுதான். விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் திறமைக்கு மதிப்பு கொடுப்பது போல், இவர்களுக்கும் வாய்ப்பளித்து, பொறுத்திருந்து மதிப்பிட வேண்டும்.

4. பாமகவின் மூர்த்தி: ரெயில்வேயில் அதிரடியாக நல்ல காரியங்களை செய்து வந்தவர்தான். ஆனால், இவர் மீண்டும் இடம்பெறாததற்கு (வாரிசு அரசியல் தவிர) சில காரணங்களைக் குறிப்பிடலாம். அதிகாரிகளிடம் இவர் அதிருப்தி சேகரித்ததாக வந்த ஜூ.வி. செய்திகள். இந்தத் தேதிக்குள் அதை முடிப்பேன் என்பது மக்களிடம் செல்வாக்கை உயர்த்தலாம். ஆனால், அதை செய்து முடிக்க அதிகாரிகளின் சனி/ஞாயிறு இழப்புகள், அரசுக்கு ஆகும் ஓவர்டைம் பட்ஜெட் மீறல்கள் போன்றவை வெளியில் தெரியாது.

5. Conflict of interest: அமெரிக்காவின் துணை ஜனாதிபதியுடன் வேட்டைக்குப் போகும் உற்ற ஜட்ஜ் நண்பர், அவருடைய வழக்கை விசாரிக்கிறார். இங்கு நட்பை விட நீதித்துறையின் மேல் உள்ள மதிப்பு முக்கியம். அவ்வாறே, (சன் டிவி) உறவை விட (தகவல் தொடர்புத்துறை) அமைச்சகம் மனசாட்சிப்படி முக்கியத்துவம் பெறும் என்று நம்பலாம். அவ்வாறே இல்லாவிட்டாலும், மந்திரிசபையில் பங்கு வகிக்கும் திமுக, அனைத்து முடிவுகளிலும் தன்னுடைய கருத்தை வலியுறுத்தி மாற்றியமைக்க முயலும்; இப்பொழுது, காங், திருடனின் கையிலேயே சாவியைக் கொடுத்து விட்டதால், தயாநிதி மாறனுக்குக் கூடுதல் பொறுப்பும், ஊடகங்களின் உன்னிப்பான ஆராய்தலும் கிடைக்கும்.

தகவல் ஆதாரம்: ரீடிஃப், என்.டிடி.வி, The Hindu : The Union Council of Ministers

பிகு: ரிடிஃப் போன்ற தளங்களுக்கு அரசாங்க அறிக்கை போல் ஏதாவது கிடைத்து, அதை அப்படியே வெளியிட்டிருக்கலாம்; சாதனைப் பட்டியலில் எவ்வளவு தூரம் உண்மை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

Categories: Uncategorized