Archive

Archive for June 8, 2004

சென்னையில் ஒரு வெயில் காலம் – 4

June 8, 2004 3 comments

நன்றி: சமாச்சார் தமிழ்

எம்.பி.3 பாடல்கள் இப்பொழுது ரொம்பவும் சல்லிசாகிவிட்டது. முப்பது ரூபாய்க்கு தெருவோரத்தில் கூவிக் கூவி சிடி விற்கிறார்கள். கொஞ்சம் பேரம் பேசினால், மூன்று வாங்கினால், ஒன்று இனாம் என்று டீல் கூட போடலாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அறுபது அமெரிக்க டாலர்களுக்கு, இன்றுவரை வெளிவந்த எல்லாப் திரைப்பாடல்களையும் வாங்கி விட முடியும். ரிச்சி ஸ்ட்ரீட்டில் எல்லாவிதமான சினிமாப் பாடல்களும் கிடைக்கிறது.

ஆனாலும், லேண்ட்மார்க்கில் கூட்டம் நெட்டித் தள்ளுவது ஆரோக்கியமான விஷயம். எல்லோரும் கூடை நிறைய சிடி பொறுக்குகிறார்கள். ஒரு காலத்தில் முன்னூறு ரூபாய்க்கு விற்ற இசைத்தட்டுகள், இப்பொழுது நூறு ரூபாய்க்கும் குறைவாகவே கிடைப்பது ஆரோக்கியமான விஷயம். எம்.பி.3க்கள் எளிதில் கிடைத்தாலும், மக்கள் (சிலராவது) ஒரிஜினல்களை வாங்குவது வரவேற்கப்படவேண்டும். ஆனால், இணையமெங்கும் புதிய படங்களான ஆய்த எழுத்து முதல் எப்போழுதோ ரசித்த கீதாஞ்சலி வரை திரைப்பாடல்கள் எளிதில் கிடைக்கிறது. இவற்றைத் தவிர்க்க, குறைந்தபட்சம், வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காகவாவது புதிய பாடல்கள் உடனக்குடன் கிடைக்க வேண்டும்.

அமெரிக்காவை கலக்கும் itunes.com, real.com போல தமிழ்த் திரையுலகமும் செயலாற்ற வேண்டும். காஸெட் வெளியீட்டு விழாவின் போதே, உலகமெங்கும் உள்ள தமிழர்கள், பாடலை வலையிறக்க வசதி செய்து தர வேண்டும். பாடல்களை உடனடியாகக் கேட்கும் ஆர்வத்தில் நேயர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு, இணையம் மூலமாக, காஸெட்டோ, சிடியோ, தவணை அட்டையை உபயோகப்படுத்தி, ஆறு வாரம் கழித்து வரவழைத்து, பொறுமையாகக் கேட்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களுக்குத் தேவை instant gratification.

தயாரிப்பளர்களுக்கும் உலகமெங்கும் உள்ள தமிழர்களை ‘நேருக்கு நேர்’ சென்றடைவதற்கு இது வழிவகுக்கும். ஹமாரா சிடி, சாரேகமா போன்ற புகழ்பெற்ற இணையத்தளங்கள் மூலம் இது எளிதில் நடைமுறைப்படுத்தலாம். தன்னுடைய முதல் வருடத்தில் ஐட்யூன்ஸ் எழுபது மில்லியன் பாடல்களை விற்றிருக்கிறது. அவ்வளவு பெரிய சந்தை தமிழ்ப்பாடல்களுக்கு இல்லாவிட்டாலும், என்னைப் போன்ற பலரும் அதிகாரபூர்வமான தளங்கள் மூலம் காசு கொடுத்து வாங்கிக்கொள்வார்கள் என்றே தோன்றுகிறது.

மணிரத்னத்தின் ஆய்த எழுத்து, ‘அமோரஸ் பெரோஸ்’ (Amores perros) என்னும் படத்தின் தாக்கங்கள் நிறைந்தது என்று எப்பொழுதோ ஹிந்துவில் படித்தேன். இணையத்திலும், இந்த வதந்தி பலமாக உலாவ, நெட்ஃபிளிக்ஸ் மூலம் படத்தை வ¦டு தேடி வர வைத்தேன். ஒரு விமர்சனம் கூட படிக்காமல், சன் டிவி திரை விமர்சனத்தில் ஒரு காட்சி கூட பார்க்காமல், முந்தின வாரமே முந்திரிக்கொட்டையாக படம் பார்த்த நியு ஜெர்ஸி/சென்னை நண்பர்களின் அறிமுகம் இல்லாமல், நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையின் விலாவாரியான அலசல் இல்லாமல், எங்காவது எட்டிப் பார்த்த sneak preview ஒன்று கூட இல்லாமல், எந்தவிதமான தீர்மானமும் இல்லாமல் பார்த்த படம். ஆனால், இந்தப் படத்தை எப்படி தமிழ்ப்படுத்த முடியும் என்னும் கேள்வி படம் பார்த்தவுடன் விஞ்சி நிற்கிறது.

ஒரு விபத்து நிகழ்கிறது. அது எவ்வாறு மூன்று மனிதர்களையும், அவர்கள் சார்ந்தவர்களையும் பாதிக்கிறது என்பதை கொஞ்சமாய் நீட்டி முழக்கி, மூன்று பாடல்களையும் வைத்துக்கொண்டு சொல்லியிருக்கிறார்கள். ஆய்த எழுத்திலும் மூன்று பேர் நடுநாயகமாக வீற்றிருக்கிறார்கள் என்பதைத் தவிர பெரிய ஒற்றுமை ஒன்றும் இருந்துவிடாது. நான் பார்த்த முதல் மெக்ஸிகன் படம் இது. தமிழ்ப் படங்களில் அடிக்கடி வரும் சண்டைக் காட்சிகள் போல், ஒருவருக்கொருவர், காதலரை ஏமாற்றி கள்ளக்காதல் செய்கிறார்கள். ஆனால், பாலச்சந்தர் படம் பார்த்த dejavu கொடுக்காமல், நம்பும்படி, மிரளும்படி காட்டியிருந்தார்கள். மேஜிகல் ரியலிசமும் இன்ன பிறவும் புழங்கும் மொழியில் இருப்பதாலோ என்னவோ, நிறைய குறிய¦டுகள் கொடுத்திருந்தார்கள். தங்களுடைய உரிமையாளருக்கு ஏற்ற குணாதிசயங்களைக் கொண்ட மூன்று விதமான நாய்களும் அவற்றின் விசுவாசமும்; கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்பதை பிரதிபலிக்கும் மூன்று கதை நாயகர்கள் என்று வெளிப்படையாக உடைத்து காட்டமால், மனதில் உறைய வைத்தது திரைக்கதை.

எது எப்படியோ… ஸ்பானிய மொழித் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஏரியல் விருதை வென்ற ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்க முடிந்தது.

சென்னையின் தமிழ் புத்தக நேயர்கள் அனைவரும் வலம் வரும் தலம் நியு புக்லேண்ட்ஸ். ஹிக்கின்பாதம்ஸில் மனமுவந்து கொடுத்த பத்து சதவிகிதத் தள்ளுபடி மாதிரி இங்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், ஹிக்கின்பாதம்ஸில் சிக்காத, எனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைத்தது. அங்கிருக்கும் வரை குடித்து முடிக்க, முடிக்க ந¦ர்மோர் வந்துகொண்டே இருந்தது. கேட்கும் தலைப்புகளில் புத்தகங்களை எடுத்து வந்து கொடுப்பதும், கேட்காவிட்டால், நிம்மதியாக படித்துப் பார்க்கவும், பராக்கு பார்த்து, புரட்டி, உள்ளடக்கம் அலசி முடிவுக்கு வாங்க என்று விட்டுவிட்டு சென்றதும் சௌகரியமாக இருந்தது. மாலையில் சென்றால் இஞ்சி டீ கிடத்திருக்கும் என்றார் நண்பர். மாலை வரை இருந்திருந்தால் இன்னொரு நூறு டாலர் விட்டிருப்பேன் என்பதால், சீக்கிரமே அங்கிருந்து கிளம்பியதும் நல்ல முடிவுதான்.

Categories: Uncategorized

No Judgments… Only Bull!

June 8, 2004 3 comments

இணையக் குழுக்களில் கலக்குபவர்களுக்கு பத்து கட்டளைகள்

1. குழுவை வழிநடத்துபவர் டெஸ்ட் மெஸேஜ் எழுதினால் கூட அவசியம் ஒரு வார்த்தையாவது சிறப்பாக இருந்தது என்று பதில் எழுதவும்.

2. குறை கூறி எழுதுவதாக இருந்தால் பகிரங்கமாக எழுதவும். நிறையோ, நன்றியோ (விதி #1 விலக்கு) சொல்வதாக இருந்தால் தனிமடல் அனுப்பவும்.

3. ‘யாருமே எழுத மாட்டேன் என்கிறீர்களே’ என்று அடிக்கடி விசனப்படவும்.

4. இந்தக் குழுவில் பேசுவதை வேறொரு இடத்திலும், அங்கு நடக்கும் விவாதத்தை மற்றொரு குழுவிலும், இரண்டுக்கும் சம்பந்தமில்லாத பிறிதொரு மடற்குழுவிலும் பதிலாகவோ, forwardஆகவோ கொடுக்கவும்.

5. புதிதாக வலைப்பதிவோ, இணைய சஞ்சிகையோ, மடலாடற்குழுவோ, மூன்று கிலோபைட் வலைபக்கமோ அமைத்தால், அனைத்துக் குழுமங்களுக்கும் அறிவிப்பு செய்யவும்.

6. யாராவது #1 விதியை மீறினால், ‘இந்தப் பிரச்னை இங்கு விவாதிக்க ஏற்றதல்ல’ என்றோ, ‘உங்களுக்குப் பண்போடு எழுதவரவில்லை’ என்றோ கண்ணியமாக பதில் போடவும்.

7. குழுவில் நீண்ட காலம் வசிக்கும் இன்னொருத்தர் மூலம் அனுகூலமான இண்ட்ரோ மடல் ஒன்று அனுப்ப செய்யவும்.

8. ‘எனக்குத் தமிழ் தட்டச்சே வர மாட்டேங்குது’, ‘நான் உங்களை அண்ணி என்று கூப்பிடலாமா’ போன்ற பிரயோகங்கள் உங்கள் அறிமுக மடலில் வைத்துக் கொள்ளவும்.

9. நல்லசிவம், தா. சங்கரன் என்று முகமூடி போட்டால் கேவிஆரின் கட்டளைகளைப் பின்பற்றவும்.

10. கோபித்துக் கொண்டோ, கோபமில்லாமலோ தனிக்குழு நடத்தப் போனால், வரும் ஆரம்ப ‘வாழ்த்து; மடல்களுக்கு எல்லாம் ‘தங்கள் காவியம் அற்புதம்’, ‘உங்கள் படைப்பு இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்’ என்று திக்குமுக்காட வைக்கவும். (மறந்தும் ‘கவிதை’ அல்லது ‘கதை’ நன்றாக இருந்தது என்று தவறாக எழுதி, கட்டுரையாளரை புண்படுத்த வேண்டாம்).

Categories: Uncategorized