Archive

Archive for June 10, 2004

ஆர். வெங்கடேஷ்

June 10, 2004 Leave a comment

ரா.கா.கி.: கவிதையில் எனக்குக் குரு ஞானக்கூத்தன். பல செய்திகளை அவரிடமிருந்துதான் நான் அறிந்துகொண்டேன். அறிந்துகொண்டிருக்கிறேன். வண்ணநிலவன் கவிதைகளில் முக்கியமாக என்னைக் கவர்ந்தது, நேரடித்தன்மை. கூடவே ஒரு கமெண்ட். கவிதையைச் சட்டென உயர்த்தி, ஞாபகமண்டலத்தில் இருத்தி வைப்பது கமெண்ட்தான். பல கவிதைகளில் இந்தக் கமெண்ட் வண்ணநிலவனிடத்தில் பயங்கர உயிர்ப்புடன் இருக்கிறது.

என் டெஸ்க்டாப்
கொஞ்ச நாள் சே குவேரா
அழகு தொப்பியும்
குறுந்தாடியும்
கொள்ளை கொண்ட நாள்கள் அவை.
அப்புறம் மாவோ
கிறுகிறுக்க வைத்தவை
அழுக்குக் காக்கியும்
கூர்மைக் கண்ணும்
கீழை மார்க்சியமும்.
சிறிது நாள் மார்க்குவெஸ்
சில நாள்கள் குந்தர் க்ராஸ்
அப்புறம் சட்டென
ஒரு நாள் பாரதி,
வீரக்கொம்பூன்றி
செல்லச் செல்லம்மாளோடு.
அன்னையும் அரவிந்தரும்
அலங்கரித்தது
பின்னொரு நாள்.
சில நாள் சாமி
சில நாள் கோவில்
சில நாள் குடும்பம்
அலங்கரித்த எவரும்
அதிக நாள் நீடித்ததில்லை
எப்போதும்போல்
சுகமாய் இருக்கிறது
சுத்தமாய் இருக்கும்
டெஸ்க்டாப்.

எஸ்.பொவுடன் மூன்றரை மணி நேரம் 1

Thanks to eelam Arts & literature Yahoo Groupசமீபத்தில் கனடாவில் இருந்து வெளிவரும் காலம் என்ற இதழ் ஏ.ஜே.கனகரட்னா சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறது. ஏ.ஜே.வோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் எஸ்.பொவும் ஒருவர். ஏ.ஜே. லேக் ஹவுஸ் நிறுவனத்தினரின் Daily News பத்திரிகையில் வேலை பார்த்து வந்த நேரம். முதலில் துணை ஆசிரியராக அங்கே பணிக்குச் சேர்ந்தார். பின்னர், அவரது வேலைத் திறத்தினைக் கண்டு, நிர்வாகம் அவரை Special Features Editor ஆக பதவியளித்ததாம். ஒரு சமயத்தில்
அதன் முதலாளி (இவர் இன்றைய ரணில் விக்ரமசிங்கேவின் தகப்பனார்) கல்வித்துறை சம்பந்தமாக ஒரு தகவலைத் தெரிவித்து, அதன் மேல் விவரங்களைத் திரட்டிக் கட்டுரை எழுதச் சொன்னாராம். ஏ.ஜே.வும் அத்தகவலை ஒட்டி தன் வழியில் விவரங்களைத் தேடிப் போயிருக்கிறார். ஆனால், அரசாங்கத் தகவல்கள் முற்றிலும் வேறாக நல்லவிதமாக இருந்திருக்கிறது.

பின்னொருநாள் கட்டுரை பற்றி சேர்மன் கேட்க, மிக தைரியமாக, நேர்மையாக, “நீங்கள் குறிப்பிட்டபடி தவறுகள் ஏதும் கல்வித்துறையில் நடைபெறவில்லை. அதனை என் வழியில் நான் உறுதிசெய்துவிட்டேன். அதனால் நான் அந்தக் கட்டுரையை எழுதுவில்லை” என்றாராம்.

மறுநாள் அலுவலகம் போனால், அவரை பாராளுமன்ற நிருபராக பணி மாற்றம் செய்யப்பட்டிருந்தாராம்.

இரண்டொரு நாள்கள் அங்கேயும் போய்விட்டு, பின் சேர்மனுக்கு ஒரு கடிதம் அளித்தாராம். அதில், என்னை துணை ஆசிரியராகப் பணிக்கு அமர்த்தினீர்கள். பின்னர் என்னை features editorஆகவும் உயர்த்தினீர்கள். இப்போது என்னை நிருபராக மாற்றியுள்ளீர்கள். இது சரியெனப் படவில்லை. என்னை மீண்டும் துணை ஆசிரியராகவே மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதியிருந்தாராம்.

சேர்மன் கூப்பிட்டனுப்பினார். பேச்சினூடே, சேர்மன், “நாங்கள் சில கொள்கைகளை வைத்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பணம் செலவு செய்து பத்திரிகை நடத்துகிறோம். இதில் எங்கள் விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதே முக்கியம். நீங்கள் கொஞ்சம் வளைந்துபோக வேண்டும். அப்படிச் செய்வதென்றால், துணை ஆசிரியராகத் தொடர்வது சாத்தியம். இயலாது என்றால், பாராளுமன்ற நிருபராக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றாராம்.

சற்றும் மனந்தளராத, ஏ.ஜே. கொஞ்சம் பொறுமை காத்துவிட்டு
“மூன்றாவது வழி ஒன்று இருக்கிறது ஐயா”
“என்ன அது”
“நான் என் ராஜினாமாவைக் கொடுத்துவிடுகிறேன். அது ஒரு சாத்தியம் தானே”

முப்பத்தைந்தாவது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்

Categories: Uncategorized