Home > Uncategorized > காலச்சுவடு – ஜூன் 2004 (My Takeaways)

காலச்சுவடு – ஜூன் 2004 (My Takeaways)


கடவுளுக்குத் தெரியாதவர்கள் – ஆதவன் தீட்சண்யா: “அவனது ஒன்பதாவது படமிது. நான்கிற்கு உள்நாட்டிலும் அயலிலுமாகப் பல்வேறு விருதுகள். விருது வழங்குவோரின் சம்பிரதாயப் புகழுரைகளால் விவரிக்க முடியாத மேட்டிமை படிந்து படைப்பின் நோக்கம் திரிபட்டு மக்களிடமிருந்து அன்னியமாகி விடுவதாகச் சலிப்புறுவான். நடைமுறை வாழ்வில் காணக்கிடைக்கும் மறுக்க முடியாத உண்மை நிகழ்வுகளை முன்பின்னாய்க் கோர்த்துத் தொகுத்தெடுப்பதில் கையாளும் நுட்பகதியிலான அணுகுமுறை பார்வையாளனை ஏதேனுமொரு பக்கம் சாய்ந்து வாதிட நெம்பும். உள்ளதை உள்ளவாறே முன்வைத்து விரியும் காட்சிகளின் நேரடியர்த்தம் அதன் பின்புலத்தில் சொல்லப்படாத வேறொன்றிற்கான சிந்திப்பைக் கோரி நகரும்.

அவன் வெளிப்படையாகவே யாவற்றையும் சொல்வதாகவும் அதனாலேயே அவை கலைத்தன்மையற்றுச் சக்கையாய் இருப்பதாக ஒரு சாராரும் கலையுலக ஒளிவட்டங்களின் கவனிப்புக்காக மிகுந்த பூடகத்தை முன்னிறுத்துவதாய் மற்றாரும் குற்றமேற்றுவதுண்டு. உங்களது அளவுகோலால் அடுத்தவனை அளக்காதீரென்று முகத்திலடித்துச் சொல்ல நாத்துடிக்கும் எனக்கு. அவனோ பூடகமென்று புரியுமளவு அதில் வெளிப்படைத் தன்மை பொதிந்திருப்பதாயும் நேரடியாய்த் தெரிபவை ரகசியங்களற்றே கிடப்பதாய் நினைக்க வேண்டியதில்லை என்றும் குறைவான சொற்பிரயோகங்களில் சாந்தமாக மறுப்பான். ஒப்பாரியிலும் தாலாட்டிலும் ராகம் தாளம் தேடும் கோட்பாட்டு வாத்திகளைப் போலவே படைப்பின் ரகசியங்களறிந்திடும் சிரத்தையற்ற எளிமை விரும்பிகளும் எனது அனுதாபத்திற்குரியவர்களே என்பான். பால்யத்தில் நாம் கண்டும் காட்டியும் வந்த நிர்வாணத்தைத்தான் வாழ்நாள் முழுதிலுமே ரசசியமெனப் பொத்திக்கொள்வதும் அதை அறியத் துடிப்பதுமாகத் தவித்து மாய்கிறோம் என்று கூறியது எத்தனைப் பேருக்குப் புரிந்ததெனத் தெரியவில்லை.

ஒரு பெண்ணின் மனதுக்கும் உடலுக்கும் அவளே எஜமானி என்றும் அதில் எதன் பேராலும் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதையும் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதே எனது நோக்கமாயிருந்தது. உடல்தேவையின் பொருட்டோ கலக மனப்பான்மையினாலோ பழிவாங்கும் உணர்வினாலோ – எதனால் அவ்வாறு நடந்துகொண்டேன் என்பதை இதுவரையிலும் நான் ஆராய வில்லை. ஆனாலும் என் காரியம் என்னளவில் குற்றமற்றது என்று இன்றளவும் நம்புகிறேன்.”
நல்ல வாசிப்பை காட்சியாக்கும் கதை.


குவளைக் கண்ணன் – இடைப்பட்ட பொழுது:

பாட்டி வீட்டுக்குப் போனான்
ஒரு விடுமுறையில்

சலிப்படைந்த தினமொன்றில்
அந்தச் சிற்றூரில்
ஆடுகளைப் பின்தொடர்ந்து
காட்டினுள் நுழைந்தான்

கோடைப் பகலில்
பின்மாலைபோல
இருண்டிருந்த அந்தக் காட்டில்
விசித்திர இலைகளைக் கொண்ட
மரமொன்றுடன் நட்பானான்,
விடைபெறும் நாளில்
இலையொன்றைத்
தனது நினைவாகத் தந்தனுப்பியது மரம்.

விடுமுறை கழிந்து பள்ளி சென்றான்
புதிய
மொழியாசிரியை
அந்த மரத்தின் பூவையும்
உடற்பயிற்சி ஆசிரியர்
மரத்தின் பட்டைகளையும்
நினைவூட்டினார்கள்

தனது ஜியோமிதிப் பெட்டியில்
காட்டை எடுத்துக்கொண்டு
சிற்றோடை போல
ஓடிக்கொண்டிருக்கும் அவன்
வரிகளுக்கு இடையில்
மறைந்திருக்கும் வன்மிருகங்களைப்
பார்க்கவில்லை இன்னும்


நீரோட்டம் – கண்ணன்: “நான் சந்திக்கும் பலர் எதற்காக இவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. பல சமயம் பொய் வெளிப்படும்போதே பொய் எனத் தெரிவித்தபடி வருகிறது. அல்லது இரண்டொரு நாட்களில் பொய் என ஊர்ஜிதமாகிறது. மீண்டுமொரு முறை பேச நேரும் போது முன்னர் கூறிய பொய்கள் மறைந்து புதிய பொய்கள் வெளிப்படுகின்றன. இவர்கள் எல்லோரையும் மோசமானவர்கள் எனக் கருத முடியவில்லை. பலர் நல்லவர்கள். நண்பர்கள். இந்தப் பொய்களுக்கு அற்பத்தனத்தைவிடப் பெரிய காரணம் எதையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. நான் பொய் சொல்லாதவன் அல்லதான். சத்திய சீலன்களைத் தேடி உறவுகொள்பவனும் அல்ல. இருப்பினும் அன்றாடம் பல சில்லறைப் பொய்களைச் சந்திக்க வேண்டியிருப்பது, வழக்கமான தமிழ் சினிமாவைப் பார்ப்பதுபோல, அவமானமாக இருக்கிறது. நம் அறிவை, புரிதலை, உள்ளுணர்வை இப்பொய்கள் தொடர்ந்து அவமதிக்கின்றன. இக்காலகட்டத்தில் “பொய்யானாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்’ என்ற பழமொழி என் மனத்தில் புதிய பொருள் கொண்டு ஒளிரத் தொடங்கியுள்ளது.”


பேராசிரியர் தொ. பரமசிவன்: “சங்க இலக்கியப் பாடல் தொகுப்புகளின் பெருமைகளில் ஒன்று அவை சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும் படைக்கப்பட்டவை என்பதாகும். கூல வணிகன் (தானிய வணிகன்), வண்ணக்கன் (பொன்னின் மாற்று அறிந்து சொல்பவன்), அறுவை வணிகன் (துணி வாணிகன்), கணக்காயன் (ஆசிரியன்), காமாக் காணி (சோதிடம் வல்லவன்), குயத்தி, குறமகள் என்று அனைத்துத் தரப்பினரும் “செய்யுள்’ செய்யும் போது, அரசதிகாரம் பெற்ற கிழார்களும் அரசன் மனைவியரும் அரசர்களும் ஏன் பாடியிருக்கக்கூடாது?”


பெருமாள்முருகன்: “குறையை “மக்கள் மன்றத்தில்’ வைப்பதன் மூலமாக இரு நன்மைகள் ஏற்படும். அவை:

  • க. நூலைப் பயன்படுத்தும் வாசகர்கள் இக்குறைகளை மனத்தில் கொண்டு அவற்றைக் களைந்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனெனில் எல்லா வாசகர்களும் இக்குறைகளைக் கண்டுபிடிப்பவராகச் செயல்பட முடியாது.
  • உ. பல்கலைக்கழகம் இனி வெளியிடும் நூல்களில் கூடுதல் கவனம் செலுத்தலாம். தகவல் தொடர்புச் சாதனங்களில் ஒரு செய்தி வெளியிடப்படும்போது கிடைக்கும் கவனம், தனி நபர் கடித வெளிப்பாடுகளில் கிடைக்காது என்பது இன்றைய கால விதி.”
  • Categories: Uncategorized
    1. No comments yet.
    1. No trackbacks yet.

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out /  Change )

    Connecting to %s

    %d bloggers like this: