Archive

Archive for July 1, 2004

விருப்பப் பட்டியல் – திண்ணை.காம்

July 1, 2004 4 comments

திண்ணை:

 1. யூனிகோட் எழுத்துரு கொண்டிருக்க வேண்டும்.
 2. மரத்தடி.காம் போல் எழுத்தாளர் பட்டியலிட்டு, ஒருவரின் அனைத்து படைப்புகளையும் எளிதில் படிக்கும் வசதி வேண்டும்.
 3. ஒவ்வொரு வெள்ளியன்றும், அந்த வாரம் வெளிவந்த புதிய பகுதிகளின் பட்டியலை, என்னைப் போல் விரும்புவோருக்கு, மின்மடல் மூலம் அறிவிக்க வேண்டும்.
 4. திண்ணை.காமில் வெளிவரும் பகுதிகளில் சிலவற்றையாவது, மாதாந்தரியாக பதிப்பித்து, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் விற்க வேண்டும்.
 5. கடிதங்களுக்கு தலைப்பு (subject) கொடுக்க வேண்டும்.
 6. மத்தளராயர் எழுதும் வாரபலன், ஜெயமோகன் எழுதும் புத்தக வாசிப்புகள் போன்றவற்றில், தலைப்புகளை பெரிதாகப் போட்டு, உபதலைப்புகளுக்கு ஒரு போடவேண்டும்.
 7. திண்ணை களஞ்சியம் well-organizedஆக, எளிதில் தேடி கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

Categories: Uncategorized

இணையப் பொறுக்கன்

July 1, 2004 Leave a comment
 1. எழுத்து விளையாட்டு: சே… 142-தான் கிடைத்தது! 😦 😦 அவ்வளவு மெதுவாகவா தட்டுகிறேன்!
 2. நவீன மொழி இயக்கம்: தமிழுக்கு இடம் இல்லை; ஹிந்தி கூட பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது.

 3. இசை விமர்சகர்களின் வார்ப்பு: சுப்புடுக்களைத் திருப்திபடுத்தும்படி இசையமைத்தல் எப்படி?
 4. வலைப்பதிவுகளில் வலம் வரும் புத்தகங்கள்: புத்தகப் பட்டியல்கள் தவிர சுவாரசியமான வேறு சில விஷயங்களும் இருக்கிறது. கூகிளில் எந்த வார்த்தைகள் அதிகம் ‘ஹிட்’ கொடுக்கிறது என்று அலசலாம்.
  நான் பார்த்தது:
  # ஜெ.ஜெ (88)
  # கலைஞர் (86)

 5. எந்த புத்தகம் படிக்கலாம்? இன்பமா, துன்பமா? நகைச்சுவையா, நோ நானசென்ஸா? எதிர்பாராத திருப்பங்கள் வேண்டுமா? வன்முறை இருக்கட்டுமா? என்ற கேள்விகளுக்கு பதில் சொன்னால், படிப்பதற்குப் பரிந்துரைகள் கிடைக்கும்.
 6. மேலும் மேலும் நுண்ணிய தேடல்: ப்ரெஞ்ச் நிறுவனம், ஆப்பிரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக மனிதர்களிடம் செய்யப்படும் சோதனைகளைக, முப்பத்தேழு வயது ஜப்பானிய விவசாயி கண்டுபிடித்த வழக்கை, அமெரிக்க ஜூரிகள் கண்துடைப்பாக விசாரிக்கும் கதை வேண்டுமா? இங்கே சென்றுத் தேடிப் பார்க்கவும். இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்த புத்தகங்கள் வேண்டும் என்று நான் தேடிப் பார்த்ததில் ‘Line of Control – Tom Clancy’s Op-Center 8’ முதலிடத்தைப் பிடித்தார்.
 7. உங்க ஊரில் என்ன படிக்கிறார்கள்? அமெரிக்காவின் அனைத்து நூலகங்களிலும், பெரிய புத்தகக் கடைகளிலும், ஒவ்வொரு மாதமும் படிக்கவேண்டிய புத்தகம் ‘இவை’ என்று பட்டியல் போட்டு கொடுப்பார்கள். அனைவரும் ஒரே சமயத்தில் ‘விஷ்ணுபுரம்’ படித்து சென்று, இன்று போல் ஒரு பௌர்ணமி இரவில் விவாதிப்பதற்கு சௌகரியமாக இருக்கும்!?
 8. வானிலை ஆய்வு மையம்: ஒரு புயலின் பாதை.

நன்றி: நியு யார்க் டைம்ஸ்

Categories: Uncategorized

நீ வருவாய் என (பாடல் வரிகள்)

July 1, 2004 Leave a comment

அந்தரங்க நீர்க்குளத்தே
பூத்திருந்த தாமரைகள்
அந்தியிலே மொட்டாகி
சிந்தையிலே கோலமிட்டதோ
காதலிலே நீர்வேட்டை
காற்றினிலே மாளிகைகள்
வானகத்து வீதியினிலே
வலம்போகும் கற்பனைகள்
நான் அவரை பார்த்துவிட்டேன்
அத்தனையும் கனவுகளே

நீ வருவாய் என
நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என
நான் அறியேன்

கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை
வாராயோ….

அடி தேவி
உன்தன் தோளில்
ஒரு பூவானால் இன்று

இறவெங்கே உறவெங்கே
உன்னைக் காண்பேனே என்றும்

அமுத நதியினில் தினமும் என்னை நனையவிட்டு
இதழை மறைத்துக் கொண்ட இளமை அழகுசிட்டு

தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு வாராயோ?

ஒரு மேடை
ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே

குழல்மேகம்
தரும் ராகம்
அது நாடாதோ என்னை

சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மடியினில் புதிய கவிதையை சொல்ல வாராயோ?

பாடல் கேட்க: தினம் ஒரு பாடல்

Categories: Uncategorized

A Beautiful Mind

July 1, 2004 2 comments

மயிலாப்பூரில் நடந்து செல்லும்போது நான் என்ன மனநிலையில் இருக்கிறேனோ அதற்கு ஏற்ற சூழ்நிலை எனக்கு கிடைக்கும். கோவில் சென்று நாளாகிவிட்டதே என்று யோசித்தால், சுலோகங்களை முணுமுணுத்துக் கொண்டே செல்பவரை பார்க்கலாம். கோவில் சென்று கும்பிட்டால்தான் சாமி அருள்வாரா; என் வேலையை செய்யும்போதே அவனை நினைக்கலாம் என்று எண்ணச்செய்யும். ஒரு நாள் போட்டியின் மதிய இடைவேளை வெய்யிலில் சாமான் வாங்க கடைக்கு ஓடிச் செல்லும் வழியில், அவசர கிரிக்கெட் மாட்சுக்கு டீம் போடுபவர்களைப் பார்க்கலாம். ‘வெண்ணிலாஸ்’ அங்காடி வாசலில் என் நேர்மினமையை நிதானப்படுத்தும் விதத்தில் அமைதியாக நான் கொண்டு சென்ற நல்லி சில்க்ஸ் துணிப்பைக்கு டோ க்கன் தருபவர் செயல்படுவார். தம்பதியராக வீட்டிலிருந்து கல்யாணத்துக்குக் கிளம்பியவர்களில், கணவன் பத்தடி முன்னேறி வேகமாக நடந்து செல்ல, ஓட்டமும் நடையுமாக மனைவி, அவரை வேகவேகமாக தொலைத்துவிடாமல் கூடவே செல்வது, திருமண வாழ்க்கையில் கொஞ்சம் அச்சத்தையும், கூடவே ஒத்துசெல்லும் மனோபாவத்தையும் சிந்திக்கவைக்கும். என் கூட ஹிந்தி படிக்கும், டி.எஸ்.வி கோவில் தெரு திரும்பியபின் வரும் எட்டாவது வீட்டில் இருக்கும் பத்மா தென்பட்டால் கிடைக்கும் சிரிப்பு, அன்றைக்கு எல்லாமே நல்லவிதமாய் நடக்கப்போவதாக அறிவிக்கும். குடிக்காமலேயே, இந்தியக்கொடியின் ஆரஞ்சுக் கண்களுடன் இருக்கும் பயமுறுத்தும் பால்காரன், எருமை மாட்டைத் தொழுவத்தில் குளிப்பாட்டுதல்; செருப்பில்லாமல் நாய் கூட வெளியில் செல்லமுடியாத அக்னி நட்சத்திர மதியத்தில் கையில் பழைய வேட்டி போட்டு மூடிய தாம்பாளத்தில் சாத்துமுறை
பிரசாதம் ஏந்தி வெறுங்காலில் மெல்ல நடந்துவரும் ஸ்ரீனிவாசர் கோவில் அர்ச்சகர், வேறு எந்தத் தெருவிலோ செங்கல் இறக்கப் போகும் லாரி, தன் ப்ளாட்ஃபாரத்தில் ஏறி இடித்து விடலாமோ என்ற அச்சத்தில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் குடும்பத்தலைவர் என்று எல்லாருமே என்னையும் பார்த்திருப்பார்கள்.

நெடிசலான தேகத்துடன் விறுவிறுவென அவர் நடந்துபோய்க் கொண்டிருப்பார். அவர் ஏதாவதொரு கடையில் நின்று எதையாவது வாங்குவதையோ; பத்து மணிக்கு வந்திருக்க வேண்டிய பல்லவனுக்காக பதினொன்றரை வரை திட்டிக்கொண்டே காத்திருக்கும் பயணியாகவோ; தெருமுக்கில் தட்டுப்படும் திரைச்சீலை இடப்படாத விநாயகருக்காகவோ, கருமாரிக்காகவோ, காலணியைக் கழற்றி அதன் நுனியில் அரை நொடி நின்றுகொண்டு கன்னத்தில் போட்டுக் கொள்வதையோ; தெருவின் நடுவே களம் அமைத்து சுவற்று ஸ்டம்புக்குக் குறிவைத்து பந்துவீசும் சிறுவன் எறிந்து முடிவதற்காகக் காத்திருந்தோ நான் பார்த்ததேயில்லை. என்னைப் போலவே அவரும் தனக்குள் எப்போதும் எதையோ சிந்தித்துக் கொண்டேயிருப்பார். அதை சத்தமாக முணுமுணுக்கவும் செய்வதுதான் அவரை நகைப்புக்குள்ளாக்கியிருந்தது. கூடவே, அவர் மனைவியும், அதே வேகத்தில் விடுவிடுவென்று, அவரைவிட கொஞ்சம் சத்தமாகப் பேசிச்செல்வது பலகாலம் வரை பைத்தியங்களைக் கண்டு அஞ்சும் சிறுவர்கள் லிஸ்டில் என்னையும் வைத்திருந்தது. கணவன் பேசுவதை மனைவியும், மனைவி பேச்சை கணவனும் காதில் போட்டுக் கொள்ளாமல், தொடர்ந்து தன்பாட்டுக்கு இன்னொருவரிடம் பேசிக்கொண்டேதான் இருந்தார்கள்.

கொஞ்ச நாள் கழித்து தரமணியில் பயிற்சி எடுக்க செல்லும் வாய்ப்பில் அவர்களைப் பற்றிய புதிய கோணம் கிடைத்தது. அங்கிருக்கும் வி.எச்.எஸ்.க்கு வரும் மனநலம் குன்றியவர்கள், பஸ்ஸில் இருந்து இறங்குவதைப் பார்க்கும்போது, எனக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான வாழ்க்கையை எண்ணி, பெற்றோருக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்லவைக்கும்.

இவர்களை இன்னும் ஒழுங்காகப் புரிந்துகொள்ள ‘எ பியுடிஃபுல் மைண்ட்’ உதவுகிறது. நிஜ வாழ்வில் நடக்கும் காதல் கதையில் கொஞ்சம் த்ரில்லர் தொட்டுக்கொண்டு விவரிக்கிறார்கள். சாதிக்க விரும்பும் நாஷ், எவ்வாறு மனைவியைக் கண்டுபிடிக்கிறார், ஸ்கிஸோஃப்ரேனியாவுடன் எவ்வாறு போராடுகிறார், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை எவ்வாறு வெல்கிறார் என்பதை படம்பிடித்துள்ளார்கள். ஓவர்-ஆக்ட் கொடுக்காத ரஸ்ஸல் க்ரோ மற்றும் சிறந்த துணை-நடிகை விருது பெற்ற ஜெனிஃபர் கானலி. இருவருக்கும் பக்கபலமாக அனைவருமே வாழ்க்கை வரலாற்றை சுவைபடுத்தியுள்ளார்கள்.

ஏற்கனவே படத்தை பார்த்திருந்தாலும் டிவிடியில் இன்னொருமுறை பார்க்கலாம். இரண்டு குறுந்தகடுகள். எக்ஸ்ட்ராக்கள் நிரம்பிய #2வில் வழக்கம்போல் படத்தில் இடம்பெறாத காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. அவை ஏன் நீக்கப்பட்டன என்பதை இயக்குநர் ஆர்வத்துடன் விவரிப்பது, சிறந்த நாவல் மற்றும் திரைப்படங்களில் செய்யவ்ண்டிய self-editing-ஐ வலியுறுத்துகிறது.

அது தவிர இன்னும் இரண்டு பகுதிகள் தவறவே விடக்கூடாதவை:

1. மேக்கப் நுட்பங்கள்: வயதான ‘இந்தியன்’ தோற்றத்திற்காக எட்டு மணி நேரம் எடுத்துக்கொள்ளும் முகமூடிகளுக்கு (facial mask) பதிலாக சிலிகானில் முகத்தில் சில பகுதிகளை மட்டும் ஒட்டிக்கொள்ளும் புதிய தொழில்நுட்பம். இதன் மூலம், எச்சில் முழுங்கும்போது தொண்டைக்குழியில் ஏற்படும் நுண்ணியங்கள், முகம் திருப்பும்போது ஏற்படும் இயற்கையான அசைவுகள், பேசும்போது ஏற்படும் முகபாவ சுருக்கங்கள் என எல்லாமே தெளிவாக வெளிப்படுகிறது.

2. ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்: பத்து பேரை வைத்துக்கொண்டு நோபல் பரிசு பெறும் விழாவில் லட்சக்கணக்கானோரை உண்டாக்கியது நம்ம ஊரில் ஷங்கர் செய்த மாயாஜாலம்தான். ஆனால், புறாக்கள் பறந்துபோகாமல், அவற்றை வளையவரும் கற்பனைச் சிறுமி; பச்சிளங்குழந்தையை தண்ணித்தொட்டிக்குள் போட்டுவிட்டு தன்னுடைய உலகுக்கு சஞ்சரித்துப் போகும் காட்சி; ரஸ்ஸல் க்ரோவிடம் அதிக கால்ஷீட் கேட்காமல் பனி பெய்யும் நாளில் எடுக்கப்பட்ட படபிடிப்பை, இலையுதிர் காலமாக மாற்றிய வித்தை என படத்தில் எங்கே கம்ப்யூட்டர் பூந்து விளையாடுகிறது என்பதை அவர்கள் சொன்னால்தான் அறிந்து கொள்ளலாம்.

நிஜ நாஷுடன் சந்திப்பு, இசையமைப்பளருடன் பேட்டி, கதாசிரியர் Akiva Goldsman திரைக்கதை உருவாக்கிய கதை ஆகியவையும் பரவசபடுத்தும்.

மீண்டும் பார்க்கவேண்டிய உண்மைக்கதை.

Categories: Uncategorized