Archive

Archive for August, 2004

ட்ரீம்ஸ்

August 31, 2004 Leave a comment

தனுஷ், ‘குறும்பு’ தியா

இசை: பரத்வாஜ்

இயக்குநர்: கஸ்தூரி ராஜா

1. அலை அலையாய்1/4 – டிப்பு, மாலதி
மனதில் அலை எல்லாம் எழுப்பிப் படுத்தாமல் பேசாமல் போய்விடுகிறது. ரகஸியா மாதிரி யாராவது ஆட்டம் போட்டு, ‘சூப்பர்டா’ மாதிரி எவராவது காரைக்குடியில் இருந்து பிரச்சினை எழுப்பும் வரை என்னுடைய மீள் கேட்பு கிடைக்காது.

2. அப்பா அம்மா3/4 – நிதிஷ் கோபாலன், ரஞ்சித், மாலதி
காலேஜ் மக்களை வார்ப்புருக்குள் அடைக்கும், “வாலி” படத்தில் வரும் கற்பனை ஜோதிகா குட்டிக்கதை + “உதயம்” படத்தில் வரும் ‘ஜகட ஜகட’ டைப் என்சாய் செய்யச் சொல்லும் பாடல். படம் தெலுங்கிலும் டப்பிங் ஆகிறதா?

3. ஹே பெண்ணே1.5/4 – உன்னிகிருஷ்ணன்
காதல் கொண்டதால் — பிடிக்காமல் போன & உணர ஆரம்பித்த லிஸ்ட். ‘எனக்கு இந்தப் பாடல் பிடிக்கவில்லை’ என்னும் வரி மட்டும் கவிஞர் எழுத மறந்துவிட்டார்.

4. பையனுக்கு மீசை வந்தா2.5/4 – நிதிஷ் கோபாலன்
காதல் பிறப்பிற்கு போஸ்ட் மார்ட்டம் ஆராய்ச்சி சொல்லும் வரிகள். ‘ஞாபகம் வருதே’விற்கு சிறப்பான antithesis.

5. உயிரே என் உயிரே2.75/4 – ஹரீஷ் ராகவேந்திரா
காதல் தோல்வி ரணப் புலம்பல்கள். வழக்கமான தாலாட்டாக இல்லாமல் ஆங்காங்கே வரும் ‘பிட்’கள். ஹரீஷ்க்கு பொருத்தமான பாடல்.

6. உன்னை உன்னை நினைக்கிறேன்1.75/4 – கேம்லி, ஹரீஷ் ராகவேந்திரா
நடுநடுவே ஆங்கிலத்திலே இல்லாமல், தமிழிலே துக்கடாக்கள் அசரீரி போல் பயமுறுத்தினாலும், வசீகரமான பாடல்.

நன்றி: RAAGA – Dreams – Tamil Movie Songs

Categories: Uncategorized

தேவை: புதிய பயிற்சியாளர்கள்

August 30, 2004 Leave a comment

கிரிக்கெட்டில் நாம் பல இறுதிப்போட்டிகளுக்குத் தேர்வாகிறோ. அதற்கு முக்கிய காரணமாக விளங்குபவர் நியுசிலாந்தை சேர்ந்த ரைட். இந்தியர்களுக்கு பயிற்சியளிக்க வெளிநாட்டு புத்தகங்கள், பார்த்து களிக்க அமெரிக்காவின் காமெடிகள் இருக்கிறது. அதே போல், அடுத்த ஒலிம்பிக்ஸில் இந்தியா பதக்கம் வெல்வதற்காக அயல்நாட்டு கோச்களை நியமித்தால்….

 • டென்னிஸ் இரட்டையர் – ‘ஆதர்ச தம்பதி’ ஆண்ட்ரி அகஸ்ஸி + ஸ்டெஃபி க்ராஃப்
 • டென்னிஸ் ஆடவர் – ‘கவன ஈர்ப்பு’ மரையா ஷரபோவா
 • மகளிர் தொடர் ஓட்டம் – ‘அம்மா… மகள்…’ பண்டாரநாயகே குடும்பம்
 • ஆடவர் தொடர் ஓட்டம் – ‘அப்பா… மகன்… தம்பி’ புஷ் குடும்பம்
 • ஆடவர் ஓட்டம் – ‘நாடு விட்டு நாடு ஓடும்’ ஓஸாமா பின் லேடன்
 • மகளிர் ஓட்டம் – ‘கணவன்களை ஓட்டும்’ எலிஸெபெத் டெய்லர்
 • உயரம் தாண்டுதல் – ‘எண்ணெய் விலைஏற்றும்’ பாறைநெய் நிறுவனங்கள்
 • ஆடவர் வட்டு எறிதல் – ‘துணை ஜனாதிபதி’ டிக் சேனி
 • நீளம் தாண்டுதல் – ‘துணை ஜனாதிபதி வேட்பாளர்’ ஜான் எட்வர்ட்ஸ்
 • மகளிர் வட்டு எறிதல் – ‘கணக்கிடாமல் மனதின் வேகத்திற்கு பேசும்’ தெரஸா கெர்ரி
 • கத்திச்சண்டை – ‘ஒலிம்பிக்ஸில் ஃபென்ஸிங் கவனிப்பைப் பெறும்’ ரால்ஃப் நாடெர்
 • நீச்சல் – ‘எல்லாவிதமான நீச்சலுக்கும்’ டென்னிஸ் குசினிச்
 • ஒத்திசைந்த நீச்சல் – ‘அறிக்கைகளை வழிமொழியும்’ புஷ் + டோனி ப்ளேர்
 • நீர்குதிப்பு – ‘பல்டிகளை நன்கு சொல்லித்தரும்’ ஃப்ரான்ஸின் ஜாக் சிராக்
 • குண்டு எறிதல் – ‘திறமையாக தூக்கி வீசும்’ ஸ்விஃப்ட் படகுக்குழாம்
 • நீர் போலோகெர்ரி ஆதரவு போர்வீரர்கள்
 • தாளஜதி உடற்பயிற்சி – ‘எல்லாவிதமான பிரசினைக்கும் இரு கருத்து சொல்லும்’ கெர்ரி
 • உடற்பயிற்சி – அறுபது தாண்டினாலும் இந்தியனா ஜோன்ஸ்
 • துப்பாக்கிச் சுடுதல் – ‘டெர்மினேட்டர்’ ஆர்னால்ட் ஷ்வார்ஜெனகர்
 • ட்ரையத்லான் – ‘நடிகர் + இயக்குநர் + தயாரிப்பாளர்’ மெல் கிப்ஸன்
 • ஹாக்கி – ‘விவரணப்பட கோல் கொண்ட’ மைக்கேல் மூர்
 • டேக்வாண்டோ – ‘எப்பொழுது, எப்படி அடிப்பார்களோ’ செச்ன்யா விடுதலை விரும்பிகள்
 • குதிரையேற்றம் – ‘ஈராக்கை சமாளிக்கும்’ அமெரிக்கப்டை
 • வில்வித்தை – ‘எய்தவனை நோவதா… அம்பை தண்டிப்பதா’ அல் கொய்தா
 • டேபிள் டென்னிஸ் -‘இல்லினாயில் போட்டியிடும்’ பாரக் ஒபாமாவும் ஆலன் கீஸ்-உம்
 • பளு தூக்குதல் – ‘உலகத்தையே சமாளிக்கும்’ ஐ.நா. சபை
 • கூடைப்பந்து – ‘வோட்டு செல்லுமா செல்லாதா’ அமெரிக்க வாக்காளர்கள்
 • Categories: Uncategorized

  சாந்துப்பொட்டு… சந்தனப்பொட்டு…

  August 30, 2004 Leave a comment

  முதன்முதலா…

  • இஸ்ரேல் (தங்கம்)
  • தாய்வான் (தங்கம்)
  • டொமினிகன் ரிபப்ளிக் (தங்கம்)
  • சிலி (தங்கம்)
  • ஜியார்ஜியா (தங்கம்)
  • அமீரகம் (தங்கம்)
  • பராகுவே
  • எரிடிரியா

  ஒரு வெள்ளி மட்டும் வென்ற நாடுகள்

  • ஹாங்காங்
  • இந்தியா
  • பராகுவே

  வெண்கல(ங்கள்) நாடுகள்

  • நைஜீரியா (2)
  • வெனிசுவேலா (2)
  • கொலம்பியா
  • எரிடிரியா
  • மங்கோலியா
  • சிரியா
  • டிரினிடாட் & டோபாகோ

  உனக்கும் கீழே உள்ளவர் கோடி

  • பாகிஸ்தான்
  • பங்களாதேஷ்
  • பிலிப்பைன்ஸ்
  • வியட்நாம்
 • மொத்தம் பங்கு பெற்றவர்கள்: 202
 • ஒரு பதக்கமாவது வென்றவர்கள்: 75
 • கடந்த சிட்னி ஒலிம்பிக்ஸில் ஒரு பதக்கமாவது வென்றவர்கள்: 80

  ஆதாரம்: Medals
  நன்றி: espn

 • Categories: Uncategorized

  ஆவணி அவிட்டம்

  August 27, 2004 3 comments

  இதுவும் சிறுகதை எழுதும் பயிற்சி முயற்சிதான். தங்களின் கருத்துகளுக்கு, முன்கூட்டிய நன்றிகள்.


  உபநயனம் செய்வித்த அன்றே சந்தியாவந்தனம் செய்யாமல் விட்டவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்… என்னைத் தவிர.

  பதின்மூன்று வயதான எனக்கான உபநயனமும், என்னுடைய அக்காவின் திருமணமும் ஒரே நாளில் நடந்தேறியது. முகூர்த்தத்திற்கு நாழியாகிறதே என்னும் பரபரப்பில் என்னுடைய பெற்றோர் இருந்தார்கள். சித்தப்பாக்களுக்கோ மாப்பிள்ளை ரூமில் மின்விசிறி வேகமாய் ஓடவில்லை என்பதில் டென்ஷன் எகிறிக்கொண்டிருந்தது. மாடியேறிக் குளிக்க முடியாது என்போரை திருப்பி விடுவதில் மாமாக்களும் பிஸி. வாத்தியாருக்கோ காசி யாத்திரைக்கு சென்றவரை தடுத்தாட்கொள்வதும், என்னுடைய காதில் ரகசியமாக பிரம்மோபதேசம் செய்வதும் க்ளாஷ் ஆகக் கூடாதே என்னும் பயம். எனக்கோ, பூணூல் தரித்தவுடந்தான் டிபன் கிடைக்கும் என்பதால், செல்லப்பாவின் நெய்மணக்கும் கேசரியும், உப்புமாவும் காலியாகிப் போயிருக்கக் கூடாதே என்னும் கவலை.

  கல்யாண வீடு களேபரத்தில், அன்று மாலை ஆரம்பிக்கவேண்டிய சந்தியாவந்தனத்தை சந்தோஷமாக மறந்தே போனோம். நலங்கில் ரொம்ப உரிமையெடுத்துக் கொண்டு தன் பையன் அப்பளாத்தை தலையில் ஒழுங்காக உடைக்கவில்லை என்ற மாமியார் கோபத்தை நைச்சியமாகப் பேசி சமாதானப் படுத்துவதில் சிலர் அக்கறை காட்டிக் கொண்டிருந்தார்கள். கொடுத்த அட்வான்சுக்கு ‘அதைப் பிடி… என்னை இப்படி படம் எடு’ என்று படுத்தியதில், மாலை ரிசப்ஷனுக்கு வீடியோகாரன் டேக்கா கொடுத்திருந்தான். எப்பொழுதும் என்னைப் பார்த்தவுடன் ‘நான் யார் என்று தெரிகிறதா?’ என்று படுத்தும் ஒன்றுவிட்ட மாமா ஒருவர், என்னை ஒதுக்குப்புறமாக அழைத்துக்கொண்டு போய், ‘எது எப்படி ஆனாலும், எந்த ராஜா, எந்த பட்டினம் போனாலும், காலையிலும் மாலையிலும் பதினாறு தடவையாவது காய்த்ரி ஜெபிச்சுடு’ என்று சொன்ன சீரியஸில், காய்த்ரி ஜபத்துக்கு நிறையவே பயம் கலந்த ரெஸ்பெக்ட் கிடைத்தது.

  அந்த வயதிலும் சரி… இப்பொழுதும் சரி… கண்ணை மூடி உட்கார்ந்து கொண்டு, மனதை அலைபாயாமல், ஜெபிக்க ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் கண் அசந்திருப்பேன். ஸ்கூலில் ஒரு தடவை ‘ஆழ்நிலை தியானம்’ என்னும் சர்வ மத வகுப்பு ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். நிறைய சுவாரசியமான அறிவுரைகள். கொஞ்சம் மனத்திற்கான விளையாட்டுகள். மேலாண்மை தத்துவங்கள். வயலின் வகுப்பு. நிறைய குட்டிக்கதைகள் என்று போரடிக்காமல் இருந்தது எங்களுடைய மிகப் பெரிய ஆச்சரியம். அந்த நாளின் கடைசி பகுதியாக டிரம்ப் கார்ட் மாதிரியான தியானம் செய்முறையை விளக்கிவிட்டு, அனைவரையும் பத்து நிமிடம் கண்மூடி, தியானம் பயில சொன்னார்கள்.

  எப்பொழுது நிகழ்ந்தது என்று தெரியாது. ஆரம்பத்தில் பக்கத்துவீட்டு ஸ்ரீநிதியும், மொட்டைமாடி டேங்கை க்ளீன் செய்யவேண்டிய முறைவாசலும், பிள்ளையாருக்குப் போட வேண்டிய நூற்றியெட்டுத் தோப்புக்கரணக் கடனும், பெஞ்சில் பெயர் பொறித்திருப்பதால் ஃபைனைத் தீட்டுவார்களோ கவலையும், பள்ளியில் நடக்கும் அடுத்த சினிமா ஷூட்டிங்கும் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ மாதிரி பெரிய நட்சத்திரங்களை வைத்திருக்கவேண்டும் வேண்டுதலும், ‘மாறுகோ… மாறுகோ’வுக்கு ஆடலமைத்த பிரபுதேவா என்னை படபிடிப்புக்குக் கூட்டிச் செல்ல வேண்டுமே என்பதுமே ஓடிக் கொண்டிருந்தது. எப்படி அமைதியாகிப் போனேன் என்று தெரியாது. இழுத்து இழுத்து விட்ட மூச்சாக இருக்க வேண்டும். அல்லது கண்ணை மூடிக் கொண்டே, இறுக மூடாமல் அரைப் பார்வை பார்த்ததாக இருக்கலாம். சத்தமில்லாமல், வாய்க்குள், நாக்கை அசையாமல் உச்சரித்த ‘ஓம்’ செய்திருக்கலாம். தூங்கியேப் போனேன்.

  நீண்ட வெள்ளை அங்கியுடன், குண்டு கறுப்பு கண்ணாடியுடன், என்னை மெல்லத் தொட்டவர்தான் மீண்டும் நிலைக்குக் கொண்டு வந்தார். சக மாணவர்களின் சிரிப்பை அடக்குவதற்காக சொன்னாரா என்று தெரியாது. ‘உண்மையான தியானத்தின் முதல் படி, தூக்கம்தான். தூங்க ஆரம்பிப்பதுதான், பாசாங்கற்ற தியான முயற்சியின் ஆரம்ப நிலை’ என்றபோது முதன்முதலாக எழுதிய கதைக்குக் கிடைத்த பின்னூட்டம் போல் சந்தோஷமாக இருந்தது. நண்பர்கள் விடவில்லை. ‘ராவெல்லாம் முழிச்சிருந்து என்ன பண்றே’ என்று கேள்விகள் கேட்டு என்னை நிறைய ஸ்ரீநிதி கதைகளை சொல்ல வைத்தார்கள். அவற்றில் சில பாக்யராஜ் செய்தவை. சில அக்கா படித்த மில்ஸ் அண்ட் பூனில் வருபவை. சில மதனகாமராஜன் கதைகளில் சொன்னவை. சில யு-ஏ முத்திரை வழங்கக் கூடிய உண்மை கற்பனைகள்.

  ஆனாலும், அப்பொழுதும் சந்தியாவந்தனம் தொடர்ந்ததில்லை. பூணூல் கிடைக்கும்வரை, நமக்கும் தோளில் மூன்று கயிறு இருக்காதா… திருமணம் ஆனபின் ஆறு ஆகாதா… குழந்தை பிறந்தால் அல்டிமேட் பெரிய பதவியாக மூன்று மூன்றாக — ஒன்பது கிடைக்காதா என்னும் அவா. கிடைத்தவுடன், அதனால் என்ன பயன், எதற்காக அணிந்திருக்கிறேன், செய்யவேண்டியதை ரிலிஜியஸான கடமையுணர்வோடு செய்கிறேனா என்றால்… இல்லை.

  சின்ன வயதுகளில் பள்ளிக்கூடம் இருக்கும். ஒன்பது மணிக்கு சைரன் ஊதி அழைக்கும் பள்ளிக்கு, சாதாரணமாக எட்டு மணிக்கு எழுந்தால் போதுமானது. ஆவணி அவிட்டம் இருக்கும் நாள் மட்டும், ஏழுமணிக்கே எழுப்புவார்கள். அரை டிராயரை மட்டுமே போட்டுக்கொண்ட கால்களுக்கு, வேஷ்டி கிடைக்கும். வேஷ்டி கட்டி, தோளில் தூண்டு போட்டுக் கொண்டு நடப்பதே பெருமிதமாக இருக்கும். இதும் ஏற்கனவே சொன்ன ‘கிடைக்காத ஒன்று’ வகையறாவில் சேரும். காலில் தடுக்கி தடுக்கி சரசரக்கும் சத்தம் போடுவது பிடிக்கும். பட்டு சரிகையோடு நீலமும் சிவப்புமாக இருக்கும் மயிற்கண் வேட்டியினால், இல்லாத மினுக்கும், பிரீமியர் மில்ஸ் விளம்பரத்தில் சொல்லிக் கொடுக்கும் கௌரவமும் கிடைத்திருப்பதாக தோன்றும்.

  ஆவணி அவிட்டத்திற்காக செய்யப்படும் சமையல் மிகவும் முக்கியமானது. சாதம் போட்ட பால் பாயஸம், வடை என்பது நிச்சயம் இருக்கும். அனேகமாக, கொலஸ்ட்ராலுக்காக டோஃபு போட்டு செய்யாமல் சுத்த தேங்காயில் குளித்த அவியல், அம்மாவின் கையை அரக்காக்கியிருக்கும் பீட்ரூட் கறி, கடலைபருப்பு கூட்டோ என்று சந்தேகிக்கவைக்கும் கோஸ் கூட்டு, சாலடில் தற்போது மண்டை மண்டையாகக் காணப்படும் வெள்ளரிக்காயின் பிஞ்சு பச்சடி, தெளிவான குளத்தின் பாசி நிறைந்த தண்ணீரில் டக்கென்று கண்ணில் சிக்கும் மீன்களைப் போல் தக்காளிகளைத் தாங்கி நிற்கும் பொன்னிற ரசம், வெண்டக்காயை வறுத்துப் போட்ட மோர்க்குழம்பு, பலருக்கு அலர்ஜி கொடுத்தாலும் எனக்காக சேனை மசியல், கிண்ணம் நிறைய பருப்பு, அமெரிக்காவின் நீர்நிலைகளில் போடப்படும் சில்லறைகளைப் போன்ற முள்ளங்கித் தான்கள் நிறைந்த அரைத்துவிட்ட சாம்பார், உருளை ரோஸ்ட் என்று மெனு தயாராகிக் கொண்டிருக்கும்.

  நாங்கள் செல்லும் சங்கர மடம் மிகவும் அழுக்காக இருக்கும். பழைய பூணூலை தூக்கியெறிந்துவிட்டு புதியதை மாட்டிக்கொள்ள கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகும். இவ்வளவு நேரமும் குத்திட்டு மட்டுமே உட்கார்ந்து கொள்வது உடம்புக்கு நல்ல எக்ஸர்சைஸ். கீழே அப்படியே உட்கார்ந்தால், பட்டு வேட்டி பாழாகிப் போகும். டேபிள், சேரில் உட்கார்ந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொள்ள இனிமேல்தான் வேதங்களை அர்த்தப்படுத்தவேண்டும். கால் வைக்கும் இடமெங்கும், முந்தின பேட்ச் செய்த ப்ரோஷனங்கள் ஓடிக் கொண்டிருக்கும். கூரை இல்லாத ஏழ்மையான பள்ளிக்கூடத்தில், நான்காம் வகுப்புக்கான கணக்குப் பாடமும், மூன்றாம் க்ளாஸ் தமிழ் வகுப்பும், பக்கத்து பக்கத்து மரத்தடியில் இடித்துக்கொள்வதை ஒத்து இங்கும் ஆறரை மணியின் யஞ்ஞோபவீதனத்தாரணமும், எங்களின் பிராயசித்தமும், கூட்டலும், திருக்குறளுமாக மாறி மாறி குழப்பும்.

  நான் செய்த பாவங்களைக் கழுவி விடுவதற்காக பிராயசித்தம் செய்யப்படுவதாக வாத்தியார் சொல்வார். வெள்ளீஸ்வரர் கோவிலில் உறங்கிக் கொண்டிருந்த பூனையைக் கோணிப் பையில் போட்டு, வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வந்து, அது பால்குடிக்காக ஏங்கித் தவித்தது முதல் பாவம். போன வருடத்தில் பெரிதாக எதுவும் பாவங்கள் இழைக்கவில்லை. அம்பையராக இருந்தபோது தண்டபாணி மிரட்டி வைத்திருந்ததால், அவன் க்ளீன் போல்ட் ஆனவுடன், அவுட் கொடுக்காதது பாவமாகத் தோன்றவில்லை. அவசர அவசரமாக மதிய உணவை முடித்துவிட்டு நான்கு தெரு தள்ளிச்சென்று, ரேகாவின் வீட்டில் ஆரம்பித்து அவள் படிக்கும் பெண்கள் பள்ளியின் வாசல் வரை நிழல் தொடருவதும் தவறில்லை. ஷூ காலோடு விநாயகரை கும்பிட்டபோதே, அவரிடம் மன்னிபு கேட்டுவிட்டேன். படு சின்சியராக படித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீநிதியின் மேல் கல்லெறிவது கூட விளையாட்டாகத்தான் செய்கிறேன். அப்படியே, அவை தப்புதான் என்றாலும், அடுத்த ஆவணி அவிட்டத்தில் பிராயசித்தார்த்தம் செய்தால், பாவங்களைக் கழுவி விடலாம்.

  நான் பாவமே செய்யாமல் பிராயசித்தம் செய்தது என்னுடைய கல்லூரி காலத்தில்தான். வட இந்தியாவில் இருந்ததால் ரக்ஷாபந்தனுக்குத்தான், அதிக முக்கியத்துவம் இருக்கும். ராக்கியை முன்னிட்டு ஒரு வாரம் முன்பில் இருந்தே, தபால்கள் வண்ணமயமாக வந்து கொண்டிருக்கும். ஆவணி அவிட்டமும் ரக்ஷாபந்தனும் ஒரே நாளன்றுதான் என்றாலும், தபால் நிலையத்தின் கைங்கரியத்தினாலோ, தங்கைகளின் சோம்பலினாலோ, கோடை காலம் முடியும் வரை அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். கடிதத்தைப் பிரித்து, கர்மசிரத்தையாக அவர்கள் அனுப்பியதை கையில் கட்டிக் கொள்வார்கள். பதிலாக, தமக்கைகள் மணியார்டர்களை எதிர்பார்த்து காத்திருக்கலாம். பொங்கலுக்கு அடுத்தநாள் கணுப்பொடி வைப்பதுதான் எனது நீண்ட ஆயுளுக்கும், நலனுக்குமாக தமிழர்களின் பழக்கம். அதனால், எங்கள் வீட்டில் ஆவணி ஆவிட்டத்திற்கும், தங்கைகளுக்கும் அதிக சம்பந்தமில்லை.

  கல்லூரியில் இருந்த நான்கு வருடங்களில் முதல் வருடம் என்னை ரேகிங் செய்தவர்களைத் தண்டித்ததால் பாவம் இழைத்திருப்பேன். இரண்டாம் வருடம் மெஸ் தேர்தலில் நின்றவனை ஜெயிக்க வைப்பதற்காக தில்லுமுல்லு செய்திருக்கலாம். மூன்றாம் வருடம் உன்மத்தருள் உத்தமராக இருந்த காலம். அந்த வருடம்தான் புதிதாக சேர்ந்திருந்த தமிழ்ப் பேராசிரியர், டில்லியில் இருந்து வாத்தியாரை வருவித்திருந்தார். அவரை மாணவர்களுடன் பகிர்ந்தும் கொண்டார். டெல்லி வாத்தியாருக்கு தமிழர்களைப் பார்த்த குஷியில் சம்ஸ்கிருத ஸ்லோகங்களுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டே ஆவணி அவிட்டத்தை நடத்தினார். முன்று நூல்களை அணிந்து கொள்வதன் மூலம் சிம்பாலிக்காக கடவுளுடன் இணைகிறோம் என்னும் போது மிகவும் ஆர்வமாகத்தான் இருக்கும். தாயத்தைக் கட்டிக் கொண்டால், வீரமும், பலமும், மரியாதையும் கிடைப்பது போல் பூணூல் மாட்டிக் கொள்வதாலும் சந்தியாவந்தனம் செய்வதாலும் நீண்ட நாள் வாழலாம் என்னும் மந்திரங்களை உணர்த்தினார்.

  அமெரிக்கா வந்தபிறகு பூணூலினால் தொல்லைகள்தான் ஜாஸ்தியாகிப் போனது. மூன்று மாதமே இருக்கும் சம்மருக்காக கடற்கரையில் சட்டையைக் கழற்றினால், வெற்று மார்பை அலங்கரித்தது. ஜிம் சென்று முப்பது நிமிடம் ஓடிக் களைத்தபிறகு, குளிக்க சென்றாலும், புருவங்களை உயர்த்த வைத்தது. துடிக்கிற ஆட்டத்தைப் பார்க்க, நைட் க்ளப் செல்லும் சமயங்களில், இருபது டாலருக்கு, மூன்று நிமிட ஆட்டக்காரியையும் உறுத்தவைக்கிறது.

  இப்பொழுதெல்லாம் என்னுடைய பூணூல் பீச் அலைகளில் தொலைவதில்லை. வீட்டின் சாவியைப் போல், பெட்ரூமில் இருக்கும் தினசரி காலெண்டரின் ஆணியில் மாட்டப்பட்டிருக்கிறது.

  Categories: Uncategorized

  சிஃபி.காம்

  August 26, 2004 Leave a comment

  நன்றி: பெண்ணே நீ / அமுதசுரபி / மஞ்சரி / கலைமகள் – tamil.sify.com


  நந்திக்கலம்பகம் (கலைமகள்) :
  பலவகைப் பாக்களால், அகப்பொருள் புறப்பொருளுடன், தெய்வங்களையோ, அல்லது மக்களுள் சிறந்தவர்களையோ புகழ்ந்து பாடும் நூலாக அமைவது “”கலம்பகம்” என அழைக்கப்படுகிறது. கலம்பக இலக்கணப்படி (பன்னிரு பாட்டியல் கூறும்) அரசர் மீது பாடப் பெறும் கலம்பகம் 100 பாடல்களைக் கொண்டு அமைதல் வேண்டுமென்பது நியதி. ஆனால் நந்திக்கலம்பகத்தில் 44 பாடல்கள் அதிகமாக உள்ளதால், இவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக இருத்தல் வேண்டுமெனச் சிலர் கூறிவருகின்றனர்.

  பலவகைப் பாக்களுடன் அந்தாதி அமைப்பில் காணப்பட வேண்டு மென்பது ஒரு விதி. மேலும், கலம்பகத்தின் செய்யுள் தொகைப்படி, ஈசனுக்கு 100, முனிவருக்கு 95, அரசருக்கு 90, அமைச்சருக்கு 70, வணிகருக்கு 50, வேளாளர்க்கு 30, எனும் அளவில் கலம்பகம் அமைதல் வேண்டுமென்பது ஒரு முக்கிய அம்சமாகும். மேலும் கலம்பகம் என்னும் சொல்லைப் பிரித்து, கலம் என்றால் 12, பகம் என்றால் அதில் பாதி 6, ஆக இரண்டும் சேர்ந்து 18 உறுப்பு (பிரிவு)களுடன் கூடியதே கலம்பகம் ஆகும் எனச் சிலர் கூறுகின்றனர். நந்திக்கலம்பகம் ஆசிரியப்பா, கலிப்பா, வெண்பா, மருட்பா, விருத்தம் முதலியவற்றுடன், அந்தாதி வடிவில் காணப்படுகிறது. மேலும், இதில் இதர வகையான வஞ்சிப்பா, தாழிசை, துறை, மடக்கும் இடம் பெற்றுள்ளன.

  பன்னிரு பாட்டியல்படி, இதன் உறுப்புகள், புயவகுப்பு, தவம், வண்டு, அம்மானை, வாண், மதங்கு, மேகம், கைக்கிளை, சித்து, ஊசல், களி, மடக்கு, ஊர், மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார், தூது, குறம், பிச்சியார், கொற்றியார் முதலியனவாகும். நந்திக்கலம்பகத்தைத் தொடர்ந்து, பின்னர் பல கலம்பகங்கள் தோன்றின. ஆளுடைப் பிள்ளையார் திருக்கலம்பகம், திருவரங்கக்கலம்பகம், திருவாமாத்தூர் கலம்பகம், தில்லைக் கலம்பகம், மதுரைக் கலம்பகம், கச்சிக் கலம்பகம், அழகர் கலம்பகம் போன்றவை அவற்றுள் சில.


  நூல் அறிமுகம் – விநோதினி (பெண்ணே நீ) :

  சிதையும் கூடுகள்: ரேவதி வர்மா
  இந்நூலின் அணிந்துரையில் பட்டிசு. செங்குட்டுவன், இத்தொகுப்பை “ரத்தத்தில் தோய்ந்த வரலாறு’ என்று குறிப்பிடுகிறார். அத்தனை சிறுகதைகளையும் படித்துப் பார்த்தால் அது உண்மை என்று புலப்படும். காலகாலமாய் ஒடுக்கப்பட்டு வந்த ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த குரலாகவே இக்கதைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.

  கிருஷாங்கினி கதைகள்
  1982லிருந்து 2003 வரை, கணையாழி, தீபம், சுந்தரசுகன், புதிய பார்வை, அரும்பு, விருட்சம், தாய், சுபமங்களா, ஞானரதம் எனப் பல்வேறு பத்திரிகைகளில் வெளியான மற்றும் பிரசுரமாகாத முப்பத்தியோரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. பின் அட்டையில் எழுத்தாளர் லா.ச.ராமமிருதமும், வெங்கட் சாமிநாதனும் இக்கதைகளைப் பற்றி சுருக்கமாகக் கூறியிருக்கிறார்கள்.


  கற்றதனால் ஆய பயன் : மாலன் (அமுதசுரபி) :

  தொழில்துறை வல்லரசுகளாகத் திகழும் உலக நாடுகளில் 10 ஆவது இடத்தில் இருக்கும் நாடு. அறிவியல் துறையில் பயிற்றுவிக்கப்பட்ட மனித ஆற்றலைக் கொண்ட நாடுகளில் மூன்றாம் இடம் இந்தியாவிற்கு. உலகிலுள்ள எந்த நாட்டையும் விடப் பெரியதொரு நடுத்தர வர்க்கத்தைக் கொண்ட நாடு. உலகிலுள்ள மிகப் பெரிய கணினி நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் இந்தியர்கள் மிக உயர்ந்த பொறுப்புகளை வகிக்கிறார்லிகள். எழுத்தாற்றலுக்காக அளிக்கப்படும் சர்வதேச விருதுகளை-நோபல், புக்கர், புலிட்சர் உள்பட- வென்றவர்கள் பட்டியலை இந்திய எழுத்தாளர்கள் அலங்கரிக்கிறார்கள். சர்க்கரை, நிலக்கடலை, தேயிலை, கனிவகைகள் இவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியாதான். அரிசி, கோதுமை, பால், காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாம் இடம்.


  கவிக்குயில்கள்: “”இதத்தான் கவுத கவுதங்கறியா?” – சூரியசந்திரன் (பெண்ணே நீ) :

  தமிழ்க்கவிதை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு புதுவீச்சோடு புறப்பட்டிருக்கிறார்கள், சில இளம் பெண் கவிஞர்கள். அவர்களை இந்தப் பகுதியின் மூலமாக முறையாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.


  சிறு பத்திரிகைக்காரர்கள் என்ன பைத்தியக்காரர்களா? – ரவிசுப்ரமணியன் (அமுதசுரபி) :

  தமிழில் “எழுத்து’ – செல்லப்பாவையும், “சந்திரோதயம்’, “சூறாவளி’, “இலக்கியவட்டம்’, “ஞானரதம்’ போன்ற இதழ்கள் க.நா.சு.வையும் “தேனீ’ – எம்.வி. வெங்கட்ராமையும், “முன்றில்’ – மா. அரங்கநாதனையும், “கசடதபற’- ஞானக் கூத்தனை, சா.கந்தசாமியை, க்ரியா ராமகிருஷ்ணனை, ஐராவதத்தை, என்.எம். பதி போன்றோரையும். “ழ’ -ஆர். ராஜகோபாலனையும் அதிகம் இயங்கவைத்து, அதிகம் எழுதவைத்து, அதன் மூலம் தமிழின் நவீன் கலை இலக்கியத் துறைகளுக்கு வளம் சேர்த்தது.


  சென்னை வந்த சதீஷ் ஆலேகர் – வெங்கட் சாமிநாதன் (அமுதசுரபி) :

  மற்றவர் மனத்திலிருப்பதை அறிய வேண்டும் என்று வரம் வாங்கி, பின் அதன் விளைவு தெரியத் தொடங்கியதும், இந்த வரத்தின் பலனோடு வாழ முடியாது என்று தெரிகிறது. “”வேண்டாம் அந்த வரம்” என்று அலறத் தோன்றுகிறது. நம் தலைமைகள் பற்றி, அவர்கள் பிரச்சாரத்தை நம்பி வாழ்வதே நிம்மதி தரும். இப்படி அவதிப்படும் ஓரு ஜீவனை மையமாக வைத்து மராத்தி நாடகாசிரியர் சதீஷ் ஆலெகர், 1974 இல் “”மகா நிர்வாண் ” என்று ஒரு நாடகம் எழுதி, அது, 30 ஆண்டுக்காலமாக சதீஷ் ஆலேகருக்கு, சினிமா ஸ்டார் அந்தஸ்த்தைக் கொடுத்து (அவரே சொன்னது), தனக்கும் பெரும் புகழை ஈட்டிக் கொண்டுள்ளது. மறைந்த நண்பர் கே.வி.ராமசாமி, அதைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். தமிழினி இம் மொழி பெயர்ப்பை வெளியிட்டிருக்கிறது.


  ஹிந்தியில் சிலேடைக் கவிதைகள் – ரா. வீழிநாதன் (மஞ்சரி) :

  முதலில் மகாகவி துளசிதாசரது சிலேடைக் கவி ஒன்றைக் கேளுங்கள். சான்றோர்களின் வாழ்க்கை இருக்கிறதே, அது பருத்தியின் வாழ்வைப் போன்றது.

  சாதுசரித சுன சரித கயாஸ÷ டூ
  நிரஸ விஸத குணமய பல ஜாஸ÷ டூ
  ஜோ ஸஹி துக பரசித்ர துரானா டூ
  வந்தனீய ஜேஹி ஜக ஜஸ பானா டூ டூ

  ராமராஜ்யத்தின் பெருமையை வருணிக்குமிடத்து கேசவதாஸ் என்னும் கவி சிலேடை அணியைப் பயன்படுத்தி மகாகவி கம்பரை நமக்கு எப்படி நினைவூட்டுகிறார், பாருங்கள்:

  பூஷண் என்னும் கவி ஸ்ரீ ராமரையும் சிவாஜியையும் சிலேடை அணிமூலம் ஒன்றாக்கிக் காட்டுகிறார். விளக்கையும் துஷ்டப் பிள்ளையையும் தமது சிலேடை மூலம் ஒன்றாக்கி விடுகிறார் ரஹீம் என்னும் கவி.

  Categories: Uncategorized

  ஊடகப்போக்கன்

  August 25, 2004 Leave a comment

  1. Handwriting Theory for Questioned Documents: வழக்குகளில் ஒருவரின் கையெழுத்தை சரிபார்க்கும் விதங்களும் முறைகளும்.

  2. அவாமி லீக் கூட்டதில் மூன்றாவது தாக்குதல்: பங்களாதேஷில் ஏன் குண்டு வெடிக்கிறது என்பது குறித்த பிபிசியின் அலசல்.

  3. அதிஆபத்தான பத்து வேலைகள்: மரம் வெட்டுவது மரவெட்டிகளுக்கும், இயற்கைக்கும் மிகவும் ஆபத்தானது. (யாஹுவைக் கேளுங்கள்)

  4. பங்குச்சந்தையில் இறங்கு/ஏறு முகங்கள்: கரடி, காளை என்று எப்படி பெயர் வந்தது என்று சொல்கிறார்கள். (யாஹுவைக் கேளுங்கள்)

  5. அடுத்த அமெரிக்க நாயகரில் யார் மிகவும் பணக்காரர்: ஜான் கெர்ரி மற்றும் ஜார்ஜ் புஷ்ஷின் சொத்துக் கணக்குகள். (யாஹுவைக் கேளுங்கள்)

  6. ஒலிம்பிக்ஸும் இந்தியாவும்: ‘பூனை நாயும் கிளிகள் கூட மனிதர் மடியிலே, பெற்ற பிள்ளை போல…’ என்னும் பாடல் போல எத்தியோப்பியா, ஜமாய்கா வெல்லும் ஒலிம்பிக்ஸில், ஏன் இந்தியா வெல்வதில்லை என்று அலசுகிறார். கிரிக்கெட் ஒரு காரணம். (கடைசி பென்ச்)

  7. நம்பத்தகுந்த வட்டாரங்கள் யார்: ஹேஷ்யத்தின் அடிப்படையில் அல்லாமல், ஆதாரபூர்வமாக லஞ்சம் வாங்கியது முதல், அடுத்த நியமனம் வரை ஊடகங்களுக்கு லீக் செய்வோரை, உலகெல்லாம் அறியுமாறு வெளியில் சொல்ல, நீதிமன்றங்கள் இடித்துரைக்கிறது. ஆதாரம் தந்தவரை காட்டிக் கொடுக்காவிட்டால் ஜெயில். (பாஸ்டன் ஃபீனிக்ஸ்)

  8. கெர்ரி? புஷ்?: என்ன நடந்தால் யார் ஜெயிப்பார்கள் என்று பிஸினஸ்வீக் அலசுகிறது.

  9. NECESSARY DREAMS – Ambition in Women’s Changing Lives, By Anna Fel: பெண்கள் தங்களை தாங்களே அடக்கி வாசித்துத் தாழ்த்திக் கொள்கிறார்கள் என்று எழுதப்பட்ட புத்தகத்தின் விமர்சனம். (பிஸினஸ் வீக்)

  10. தாராளகுணம் கொண்ட ஊடகங்கள்: நடுநிலை என்பது அமெரிக்க தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும், ரேடியோவிலும் இல்லாமல் போனதை ஆராய்ச்சியின் அடிப்படையில் சொல்லும் கட்டுரை. (பிஸினஸ் வீக்)

  11. சர்ச் மறுப்பு: ஓவ்வாமை காரணமாக கோதுமை பிஸ்கட் சாப்பிடாததால் ஞானஸ்நானம் மறுக்கப்பட்டிருக்கிறது. (சி.என்.என்)

  12. பளாக் டீ சொஸைட்டி: சுதந்திர கட்சி மாநாட்டின் விமர்சகர்களை — அடக்கும் சமூகத்தை, கண்டிப்பதற்காக உருவாகி, மாநாட்டை எதிர்த்தபிறகு, முடிந்துபோன இயக்கத்தின் நிகழ்வுகள். (பாஸ்டன் ஃபீனிக்ஸ்)

  13. ஐந்து மாத தண்டனை: ஒலிம்பிக்ஸில் பாதுகாப்பை அத்துமீறி நீச்சல்குளத்தில் குதித்ததற்காக வழங்கப்பட்டது. இதே மாதிரி இவரே, ஐரோப்பா கால்பந்து இறுதியாட்டம், அமெரிக்க சூப்பர்பௌல், கோல்ஃப் யு.எஸ் ஓபன் ஆகியவற்றிலும் மைதானத்தில் குதித்திருக்கிறார். (சி.என்.என்)

  14. இஸ்ரேலி வீரரோடு போட்டி கிடையாது: ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமான பகையினால் ஜூடோ போட்டியில் கலந்துகொள்ள, எடை அதிகமானதாக சொல்லி சால்ஜாப்பு சொன்னார். (ஜெருசலம் போஸ்ட்)

  Categories: Uncategorized

  விருப்பப் பட்டியல் – ‘தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்’

  August 24, 2004 Leave a comment

  1. 24 மணி நேரத்தோடு மட்டுமல்லாமல், ஒரு ரேடியோ பொத்தான் கொடுத்து கடந்த நாள், இரண்டு நாட்கள், என்று வேறு சில நேரக் கணக்குகளும் கொடுத்தால், வாரயிறுதி, விடுமுறை முடிந்து வருபவர்களுக்கு வசதியாக இருக்கலாம்.

  2. வலைப்பதிவின் தலைப்பை வேறு கலரிலோ, தடி எழுத்தின் மூலமோ வேறுபடுத்தி காட்டலாம். இவ்வாறு செய்யப்பட்டால், ‘லிருந்து’ தவிர்க்கலாம்.

  3. வலைப்பதிவாளியின் பெயரை, சிறிய எழுத்துருவில் கொடுக்கலாம். (தற்போது சுட்டியின் மேல் அம்புக்குறியைக் கொண்டுவந்தால், வரும் பெட்டியிலேயே கூட கொடுக்கலாம்?)

  4. வாசகருக்கான ‘குறிப்புகள்’ அவசியம்தான் என்றாலும், நான் (மற்றும் பலர்) அடிக்கடி வலையரங்கம் வருவது ‘புதிதாய் எழுதப்பட்டவை’ எது என்று அறிந்து கொள்ளத்தான். அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குமாறு (description இல்லாமல்) பட்டியலைத் தரலாம்.

  5. Table format-இல் வாசிக்கும் வசதியை (மீண்டும் ரேடியோ பொத்தான்!) வாசகருக்கு வழங்கலாம். Column-களாக , ஆசிரியர், தலைப்பு, ஆரம்பச் சுருக்கம், பதிப்பித்த நேரம்/நாள் ஆகியவற்றை கொடுக்கலாம்.

  6. ‘Older posts >>’ போன்ற தலைப்பில் முந்தைய இடுகைகளை பார்க்கும் வசதியைக் கொடுக்கலாம்.

  7. ‘All excerpts (c) original authors’ என்று எங்காவது பின்குறிப்பாக சேர்த்து விடுங்கள். பிற்காலத்தில் பிரச்சினை ஆகிப் போகலாம் 🙂

  8. எவராவது தங்கள வலைப்பதிவுகள், இந்த ‘தமிழ் வலைப்பதிவுகள் அரங்க’த்தில் இடம்பெறக் கூடாது என்று விரும்பினால், அதற்கான ‘வ.கே.கே’ உதவியையும் கொடுத்துவிடலாம்?

  9. பத்து நிமிடம் அவகாசம் கிடைக்கும்போது, கண்களை வேகமாக ஓட்டிச்சென்று படிப்பதற்கு ஏதுவாக, அனைத்து வலைப்பதிவாளிகளிடம் இருந்தும் ஒரு 32 x 32 அடையாளப் படம் கேட்கலாம். இந்த சின்னத்தை (icon) அவர்களின் இடுகைக்கு அருகில் கொடுக்கலாம்.

  10. அட்டவணையை தலைப்பு (topic) வாரியாக பார்க்கும் வசதி கொடுக்கலாம்.

  Categories: Uncategorized

  பத்துப் பாட்டு

  August 23, 2004 9 comments

  அந்தக்கால பாடல்களின் சரணங்களில் இருந்து ஒரு/சில வரிகள் மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன். படத்தின் பெயரின், பாடலையும் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். அனைத்துப் பாடல்களும் சிவாஜி நடித்ததில் டி.எம்.எஸ் & சுசீலா பாடிய டூயட்கள்.

  1. சரணம் 1: பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம்
  சரணம் 2: கவிஞர் சொன்னது கொஞ்சம்… இனிமேல் காணப்போவது மஞ்சம்

  2. கரும்போ
  கனியோ
  கவிதை சுவையோ
  விருந்து கொடுத்தான்
  விழுந்தாள் மடியில்

  3. சரணம் 1: மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா!
  சரணம் 2: பால் வண்ணம், பழத்தட்டு, பூக்கிண்ணம் மணப்பெண்ணின் தாய் தந்த சீராகக் காண்போமா?

  4. அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே

  5. டி.எம்.எஸ்.: ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சமுள்ள மான் இனமோ
  சுசீலா: நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றி போய் விடுமோ

  6. என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதைய்யா…
  …காற்றான அவள் வாழ்வு திரும்பாதைய்யா

  7. காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன
  கண்பட்டு கலந்துகொண்ட வேகம் என்ன

  8. முற்றாத இரவொன்றில் நான் வாட
  முடியாத கதை ஒன்று நீ பேச

  9. தாயாரின் சீதனமும்
  தம்பிமார் பெரும்பொருளும்
  மாமியார் வீடு வந்தால் போதுமா?
  மானாதி மானங்களைக் காக்குமா?

  10. அன்னை என்னும் கடல் தந்தது
  தந்தை என்னும் நிழல் கொண்டது…
  …நன்றி என்னும் குணம் கொண்டது
  நன்மை செய்யும் மனம் கொண்டது

  Categories: Uncategorized

  இணையப்பொறுக்கன்

  August 20, 2004 2 comments

  1. இலவசமாக இந்தியாவைக் கூப்பிட: அமெரிக்காவில் இருந்து ரிலையன்ஸ் மூலமாக ஆக. 31 வரை இந்தியாவைக் கொஞ்ச நேரம் அழைத்துப் பேசலாம்; முற்றிலும் இலவசம் என்று சொல்கிறார்கள். (சுட்டிக் காட்டியவர்: கோபி)

  2. A முதல் Z வரை: இருபத்தியாறே வழிகளில் விண்வெளியை அறிமுகப்படுத்தும் பிபிசியின் இணையத்தளம். (அ முதல் ஆய்த எழுத்து வரை என்று தமிழ்ப் பதிவர்கள் யாராவது எழுதலாம்.)

  3. விளையாட்டு நேரம்: ஒலிம்பிக்ஸில்தான் கலந்துகொள்ள முடியவில்லை. கணினியிலாவது விளையாடுவோமே. சிறுவர்களுக்கும் ஏற்றவை.

  4. இணைய அரும்பொருளகம்: மிட்டாய் பொட்டலங்களுக்கு நினைவாலயம் எழுப்பியிருக்கிறார். காலையில் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு, அவர்களை சமாதானப்படுத்த ஃகாடிவா-வோ, லிண்ட்ஸோ வாங்கிச் சென்று கொடுத்து, பழம்விட்டபிறகு, ஏப்பமும் விட்டு, அந்த சாக்லேட் மடிக்கப்பட்ட லாவகத்தை வியந்து பாராட்டி, சேமித்து குப்பை சேர்க்கவும் முடியாமல், தூரவும் போடாமல், நினைவுச் சின்னமாய் வைத்திருப்பேன். இவர் ‘இணையக் கோயிலே’ எழுப்பி விட்டார். பேஜர், கைக்கணி, காசோலை என்று வளர்ந்தவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்களிலும் மிட்டாய் மூடிகள்.

  5. ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன்: டைம் பத்திரிகையினால் ‘நூற்றாண்டு நாயகன்’ என சொல்லப்பட்டவர். அவரின் எழுத்துக்கள், அறிவியல் ஆக்கங்கள், புகைப்படங்கள் என one-stop இடமாக இருந்தாலும், சில சுட்டிகள் வேலை செய்யவில்லை.

  6. ஜிமெயில்: அவுட்லுக்க்கில், யாஹுவில் மடல் வந்தால், ஓரத்தில் ஒரு நினைவூட்டி வருவது போல் கூகிள் மெயிலையும் சொல்ல வைக்கும் நிரலி ரெடி.

  7. சிட்டி-அட்டை விளம்பரங்கள்: நல்ல விளம்பரங்களைப் பார்ப்பது நிகழ்ச்சிகளை விட சுவாரசியமானது. அமெரிக்காவில் அடையாளத் திருட்டு மிகவும் புகழ்பெற்றது. ‘போத்தீஸ்.காம்’ சென்று புடைவை செலக்ட் செய்து மனைவிக்கு வாங்கி அனுப்பியவுடன் (முன்னர் சொன்னேனே, அதே போல், இது கொஞ்சம் 70 எம்எம் சண்டை), தொலைபேசி சிணுங்கியது. ‘நீ இருப்பது அமெரிக்காவில்; இந்தியாவில் உன் கடன்-அட்டையை எவளோ உபயோகித்திருக்கிறாள்’ என்று அறிவுறுத்த, நான் அவர்களுக்கு குடும்ப நிலையை விளக்கினேன். அடையாள (மற்றும்) அட்டை திருட்டினால், மென்மையான ஆண் எப்படி முரட்டு ஆண் அகிப் போனாள் என்பதை விளக்கும் விளம்பரங்கள்.

  8. சிகப்பு ரோஜாக்கள் : அந்தப் படத்துக்கும், இந்தப் புகைப்படங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று அறிந்து கொள்ள சென்று பாருங்கள். (கவலை வேண்டாம்: அனில் கபூர் அண்ணி அல்ல 😉

  9. நெத்தியடி: நோவா ஸ்காடியாவை எட்டிப் பார்த்திருந்தாலும் இந்த வேனை Macromedia Flash MX சோதனைத் தளத்தின் தயவால்தான் கண்டுகொண்டேன். ‘உங்களுக்குக் குழாய் ரிப்பேரா? சரி செய்ய எங்களை அழையுங்கள்’ என்பதை நன்றாக சொல்லியிருக்கிறார்.

  10. Aerogel : வானத்து தூசிகளையும், எரி நட்சத்திரங்களின் எச்சங்களையும் பிடித்து வைக்க உதவும் ஏரோஜெல் சிறுகுறிப்பு கொடுக்கிறது நாஸா. மணலை விடை மெல்லிய உருவைக் கொண்டு, தோட்டாவை விட ஆறு மடங்கு வேகத்தில் (velocity?) வரும் பொருட்களை, சேதமில்லாமல், பலவீனப்படுத்தி, அடக்கி வைப்பதை விளக்குவது எனக்குப் புரியாவிட்டாலும், புகைப்படங்கள் — வாயைப் பிளந்து பிரமிக்க வைக்கிறது.

  Categories: Uncategorized

  ‘ஜோர்’ ஆன அமெரிக்கத் தேர்தல்

  August 20, 2004 1 comment

  சத்யராஜின் நக்கல் எனக்கு மிகவும் பிடிக்கும். நகைச்சுவைப் படங்களில் கமலை பார்ப்பதும், ஸ்டைல் செய்வதில் ரஜினியும். கையை ஆட்டுவதில் சிம்புவும், இடுப்பை ஒடிப்பதில் சிம்ரனும், வில்லத்தனத்தில் பிரகாஷ்ராஜும் அலுத்துப் போகலாம். ஆனால், மணிவண்ணன், விவேக் போன்றோர் அலுப்பதே இல்லை என்பது என்னுடைய கற்பனை.

  மிக சமீபத்தில்தான் இலக்கவிழி தட்டுக்கு (டிவிடி-தான் சார்) ‘ஜோர்’ வந்து சேர தமிழ் சினிமா மனநிலையில் புகுந்துகொண்டு ‘ஜோரை’ ரசித்தேன். அப்பொழுது தோன்றிய உலகளாவிய தத்துவங்கள் சில:

  * கல்லூரி தேர்தலில் சிபி நிற்கிறார். அவருக்கு வாக்குப் போடுவதற்கு சொல்லும் காரணம்: “எதிராளி சரியில்லை. அதிகாரவர்க்கத்தில் இருப்பவரின் மகன். அவர் உங்களுக்காக நல்லது செய்யப் போவதில்லை. எனவே, உங்கள் பொன்னான ஓட்டை…” – அமெரிக்காவில் கெர்ரி கூட தன் பிரச்சாரத்தை இப்படித்தான் துவக்கினார்.

  * சத்யராஜ் வீட்டிலேயே வலம்வரும் பானுப்ரியாவை சேர்த்துக் கொண்டிருக்கும் இயக்குநரை — தெற்கத்திக்காரர்களின் வோட்டுக்காக எட்வர்ட்ஸை இணைத்துக் கொண்ட கெர்ரி நினைவுறுத்தினார்.

  * சிபியைப் பிரதானப்படுத்துவதற்காக அடக்கி வாசிக்கும், ஆனால் அனைத்தையும் வழிநடத்தும் சத்யராஜ் — பெரியவர் டிக் சேனியின் பார்வையில் செயல்படும் புஷ்ஷுக்கு இணையாக சொல்லலாம்.

  * தந்தை பாலாசிங் போலவே இங்கு அப்பா புஷ் சொல்லைத் தட்டாமல் மகன் புஷ் நடக்கிறார்.

  * சம்பந்தமில்லாமல் வந்துபோகும் வடிவேலுவைப் போலவே பென் அஃப்லெக் (Gigli ஞாபகமிருக்கிறதா) காமெடியாக எதையாவது உதிர்த்துக் கொண்டிருக்கிறார்.

  * எதிர்ப்புகளை மீறி வில்லனின் மகள் சிபியை விரும்புவது போல், செனியின் மகள் — மேரி செனி, லெஸ்பியனாக வலம்வருகிறார்.

  * பள்ளிக்கூடத்தின் மேல் பொய்வழக்கு போட்டது போல், ஈராக் மீது போர்தொடுப்பு.

  * புத்திசாலித்தனமான அணுகுமுறை எதுவும் இல்லாமல் காலங்காலமாக சொல்லப்பட்டுவரும் வித்தைகளை வைத்தே சிபி ஜெயிப்பதாக சொல்லப்படுவதால், கெர்ரியும் எந்தவித ஜிகினா திட்டங்களும் பரிந்துரைக்காமல், எளிமையான தாக்குதல்களிலேயே சென்றுவிடலாம் என்று அறிவுறுத்துகிறார்.

  * வில்லன் தந்தையைக் கொல்லும் மகனின் முடிவைப் போல், அமெரிக்கத் தேர்தலில் தங்களின் கொள்கைகளினால் புஷ்-செனி தோற்பார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் முடிவு.

  இவ்வளவு சப்-டெக்ஸ்ட், மெட்டாஃபோர், அமெரிக்க அரசியலின் அலசல்கள், யார் எப்போது எந்த அரசியல்வாதி என்று அறிய முடியா கதாபாத்திர சித்தரிப்புகள் அடங்கிய படத்தை, நான் பார்த்ததேயில்லை!

  -பாஸ்டன் பாலாஜி

  Categories: Uncategorized