Home > Uncategorized > வக்கீல் இல்லாமல் விடுதலை

வக்கீல் இல்லாமல் விடுதலை


அமெரிக்கா சுதந்திர நாடு என்பது பல சமயம் தொடுக்கப்படும் வழக்குகளாலும், சில சமயம் நீதிபதிகளின் விநோத தீர்ப்பாலும் எனக்குத் தெரியவரும். புகை பிடித்ததால் புற்றுநோய் வந்ததற்காக, பல கோடி டாலர் நஷ்ட ஈடு கோருவதும், குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் கொலை செய்ததாக ஒரு வழக்கிலும்; செய்யாததாக இன்னொரு வழக்கிலும் தீர்ப்பாவதும், ‘நான் ஒரு பைத்தியம்’ என்று சான்றிதழ் வாங்கி சாதாரண மனிதனாவதும், இன்னும் எனக்குப் புதிர்கள்தான்.

ஈராக் சிறையில் கொடுமைகள் இழைத்ததாக நடக்கும் லிண்டன் ஜான்சன் வழக்கும், கோபி ப்ரையண்ட் வன்புணர்ந்ததாக நடக்கும் அத்துமீறல் வழக்கும் தற்போது ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. முதலாம் வழக்கில் குற்றவாளி தரப்பில் சதாம் ஹூஸேனைத் தவிர, கிட்டத்தட்ட அனைவரையும் சாட்சிக்கூண்டுக்கு அழைத்திருக்கிறார்கள். டிக் செனியும் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்டும் சாட்சி சொல்வதைப் பார்ப்பதற்கு ‘என்ன தவம் செய்ய வேண்டுமோ!’

கோபி ப்ரையண்ட் வழக்கில் அவரை குற்றம் நிரூபிக்கப்படும் வரை ‘குற்றஞ்சாட்டப்பட்டவர்’ என்று கூட அழைக்கக் கூடாது என்று நீதிபதியின் உத்தரவை வரவைக்கும் சாமர்த்திய வக்கீல்கள் ஆஜராகிறார்கள். அடுத்த கூடைப்பந்து சீஸனின்போது நிரபராதியாக ஆடுவது நிச்சயம் என்று தோன்றுகிறது. ஆனால், கூடவே பீமப் பெரியண்ணன் ஷக்கீல் ஓநீல், தரும வாயிற்காப்போன் கேரி பேட்டன், சகாதேவ வஸ்தாத் ரிக் ஃபாக்ஸ், எல்லாவற்றுக்கும் மேலாக துரோணாச்சாரியார் ஃபில் ஜாக்ஸன் என பாண்டவர்கள் பலரையும் இழந்து நிராயுதபாணியாக ஆடப்போகிறார். கண்ணனாக கார்ல் மலோன் தொடருவது ப்ரையண்ட்டுக்கு ‘லாபமா, நஷ்டமா’ என்பதை அறியேன்.

ஆரம்பித்த விஷயத்துக்கே வருவோம். எவ்வளவு பெரிய வக்கீல் வாதாடினாலும் ‘ஃப்யூ குட் மென்‘ போன்ற மேஜிக் எல்லாமல் நடக்காமல் லிண்டன் ஜான்ஸன் பலிகடா ஆகப் போவதும், ஒஜே சிம்ப்ஸன் போன்ற பெரிய குற்றங்களுக்கே விடுதலையான அமெரிக்காவில், கோபி ப்ரையண்ட் வழக்கு பிசுபிசுக்கப் போவதாகவும் தோன்றுகிறது. சொல்ல வந்தது அது இல்லை. இரண்டு வாரம் முன்பு எச்சரிக்கை கொடுத்தார்கள். முந்தாநாள் விடுவித்தே விட்டார்கள். பெர்மிட் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த குற்றங்களுக்காகவும், போதை மருந்து வழக்கிலும் கைது செய்யப்பட்ட மூவரை, நீதிமன்றம் விடுவித்து இருக்கிறது.

இவர்களுக்காக வழக்கில் ஆஜராவதற்கு, அரசாங்கமே செலவை ஏற்கும். அவர்களுக்குப் பணவசதி இருந்தால், விருப்பப்பட்டால், கோபி ப்ரையண்ட் போல கோடிகள் செலவழித்து, புகழ்பெற்ற வக்கீல்களை அமர்த்திக் கொள்ளலாம். அப்படி சொந்த வக்கீலுக்கு செலவு செய்ய முடியாத நிலையில், நீதிமன்றமே வக்கீல்களை நியமிக்கும்.

பென்ச் நீதிமன்றங்களில் ஒரு மணி நேரத்துக்கு வாய் கிழிய கத்துவதற்கு முப்பது டாலர்கள் தரப்படுகிறது. இதுவே உயர்நீதிமன்றங்களில் வாதாடுவதற்கு 39 டாலராக இருக்கிறது. கொலை கேஸில் ஆஜரானால் 54 கொடுக்கிறார்கள். சில காலம் முன்புதான் இவர்களுக்கு பணவீக்கம் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு ஏழரை டாலர் அதிகம் கொடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது. இன்னும் அதிகம் கிடைக்கும் ஆசையில் இருக்கும் வக்கீல்களுக்கு இந்த ஏழரை டாலர், பிச்சைக்காசாக பட்டது. அதில் இருந்து, அரசு பரிந்துரைக்கும் வழக்குகளை எடுத்து நடத்துவதை தவிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

வக்கீல்கள் இல்லாததனால், காலவரையில்லாமல் ஜெயிலில் வைத்திருக்க ‘பொடா’ போன்ற சட்டம் அரசுக்குக் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றமும் இந்த மாதிரி வக்கீல் இல்லாமல் சிறையில் இருப்பவர்களை ஏழு நாட்களுக்குள் மேல் வைத்திருக்க அனுமதி கிடையாது என்று தீர்ப்பளித்து விட்டது. இதை விடப் பெரிய கவலை: நாற்பத்தைந்து நாள்களுக்குள் இலவச வக்கீல் அமர்த்தப்படா விட்டால், அவர்கள் மேல் சாற்றப்பட்ட குற்றம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.

வியாழன் (ஆக.11) அன்று மேலும் பதினான்கு பேர் இவ்வாறு சுதந்திரமாகப் போகிறார்கள். அவர்களின் முக்கிய வேண்டுதல், இன்னும் ஒரு மண்டலத்துக்கு, வக்கீல்கள் போர்க்கொடி தூக்கியிருக்க வேண்டும்; அதற்கு முன் ஊக்கபோனஸ் எதுவும் கிடைத்து சமாதானமாகக் கூடாது என்பதாகத்தான் இருக்கும். (ஆனால், 45 நாட்கள் தாண்டிய பல கேஸ்களில், எதையும் இதுவரை நீதிமன்றம் தள்ளுபடி செய்யாதது ஆறுதலான விஷயம்).

தமிழகத்தில் கூட வக்கீல்கள் நிறைய ஆர்ப்பாட்டமும், நீதிமன்ற புறக்கணிப்பும் செய்து வருகிறார்கள். அரசு வக்கீல், சிவில்/கிரிமினல், டிஃபென்ஸ் என்று எல்லாம் பாகுபாடு பார்த்து புறக்கணிப்பதாகத் தெரியவில்லை. இதனால், ஜாமீன் வாங்கப் பணம் இல்லாமல் இருக்கும் சிறைவாசிகளின் கதி என்ன? ஏழு நாளுக்குள் வழக்கு எடுத்துக் கொள்ளப்படாவிட்டால், வெளியில் வரமுடியுமா? இல்லை… மதுரை, திருச்சி என்று சமாதானம் ஆகும்வரை கம்பியெண்ணுவதுதான் கதியா?

-பாஸ்டன் பாலாஜி

Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: