Archive

Archive for August 20, 2004

இணையப்பொறுக்கன்

August 20, 2004 2 comments

1. இலவசமாக இந்தியாவைக் கூப்பிட: அமெரிக்காவில் இருந்து ரிலையன்ஸ் மூலமாக ஆக. 31 வரை இந்தியாவைக் கொஞ்ச நேரம் அழைத்துப் பேசலாம்; முற்றிலும் இலவசம் என்று சொல்கிறார்கள். (சுட்டிக் காட்டியவர்: கோபி)

2. A முதல் Z வரை: இருபத்தியாறே வழிகளில் விண்வெளியை அறிமுகப்படுத்தும் பிபிசியின் இணையத்தளம். (அ முதல் ஆய்த எழுத்து வரை என்று தமிழ்ப் பதிவர்கள் யாராவது எழுதலாம்.)

3. விளையாட்டு நேரம்: ஒலிம்பிக்ஸில்தான் கலந்துகொள்ள முடியவில்லை. கணினியிலாவது விளையாடுவோமே. சிறுவர்களுக்கும் ஏற்றவை.

4. இணைய அரும்பொருளகம்: மிட்டாய் பொட்டலங்களுக்கு நினைவாலயம் எழுப்பியிருக்கிறார். காலையில் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு, அவர்களை சமாதானப்படுத்த ஃகாடிவா-வோ, லிண்ட்ஸோ வாங்கிச் சென்று கொடுத்து, பழம்விட்டபிறகு, ஏப்பமும் விட்டு, அந்த சாக்லேட் மடிக்கப்பட்ட லாவகத்தை வியந்து பாராட்டி, சேமித்து குப்பை சேர்க்கவும் முடியாமல், தூரவும் போடாமல், நினைவுச் சின்னமாய் வைத்திருப்பேன். இவர் ‘இணையக் கோயிலே’ எழுப்பி விட்டார். பேஜர், கைக்கணி, காசோலை என்று வளர்ந்தவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்களிலும் மிட்டாய் மூடிகள்.

5. ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன்: டைம் பத்திரிகையினால் ‘நூற்றாண்டு நாயகன்’ என சொல்லப்பட்டவர். அவரின் எழுத்துக்கள், அறிவியல் ஆக்கங்கள், புகைப்படங்கள் என one-stop இடமாக இருந்தாலும், சில சுட்டிகள் வேலை செய்யவில்லை.

6. ஜிமெயில்: அவுட்லுக்க்கில், யாஹுவில் மடல் வந்தால், ஓரத்தில் ஒரு நினைவூட்டி வருவது போல் கூகிள் மெயிலையும் சொல்ல வைக்கும் நிரலி ரெடி.

7. சிட்டி-அட்டை விளம்பரங்கள்: நல்ல விளம்பரங்களைப் பார்ப்பது நிகழ்ச்சிகளை விட சுவாரசியமானது. அமெரிக்காவில் அடையாளத் திருட்டு மிகவும் புகழ்பெற்றது. ‘போத்தீஸ்.காம்’ சென்று புடைவை செலக்ட் செய்து மனைவிக்கு வாங்கி அனுப்பியவுடன் (முன்னர் சொன்னேனே, அதே போல், இது கொஞ்சம் 70 எம்எம் சண்டை), தொலைபேசி சிணுங்கியது. ‘நீ இருப்பது அமெரிக்காவில்; இந்தியாவில் உன் கடன்-அட்டையை எவளோ உபயோகித்திருக்கிறாள்’ என்று அறிவுறுத்த, நான் அவர்களுக்கு குடும்ப நிலையை விளக்கினேன். அடையாள (மற்றும்) அட்டை திருட்டினால், மென்மையான ஆண் எப்படி முரட்டு ஆண் அகிப் போனாள் என்பதை விளக்கும் விளம்பரங்கள்.

8. சிகப்பு ரோஜாக்கள் : அந்தப் படத்துக்கும், இந்தப் புகைப்படங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று அறிந்து கொள்ள சென்று பாருங்கள். (கவலை வேண்டாம்: அனில் கபூர் அண்ணி அல்ல 😉

9. நெத்தியடி: நோவா ஸ்காடியாவை எட்டிப் பார்த்திருந்தாலும் இந்த வேனை Macromedia Flash MX சோதனைத் தளத்தின் தயவால்தான் கண்டுகொண்டேன். ‘உங்களுக்குக் குழாய் ரிப்பேரா? சரி செய்ய எங்களை அழையுங்கள்’ என்பதை நன்றாக சொல்லியிருக்கிறார்.

10. Aerogel : வானத்து தூசிகளையும், எரி நட்சத்திரங்களின் எச்சங்களையும் பிடித்து வைக்க உதவும் ஏரோஜெல் சிறுகுறிப்பு கொடுக்கிறது நாஸா. மணலை விடை மெல்லிய உருவைக் கொண்டு, தோட்டாவை விட ஆறு மடங்கு வேகத்தில் (velocity?) வரும் பொருட்களை, சேதமில்லாமல், பலவீனப்படுத்தி, அடக்கி வைப்பதை விளக்குவது எனக்குப் புரியாவிட்டாலும், புகைப்படங்கள் — வாயைப் பிளந்து பிரமிக்க வைக்கிறது.

Categories: Uncategorized

‘ஜோர்’ ஆன அமெரிக்கத் தேர்தல்

August 20, 2004 1 comment

சத்யராஜின் நக்கல் எனக்கு மிகவும் பிடிக்கும். நகைச்சுவைப் படங்களில் கமலை பார்ப்பதும், ஸ்டைல் செய்வதில் ரஜினியும். கையை ஆட்டுவதில் சிம்புவும், இடுப்பை ஒடிப்பதில் சிம்ரனும், வில்லத்தனத்தில் பிரகாஷ்ராஜும் அலுத்துப் போகலாம். ஆனால், மணிவண்ணன், விவேக் போன்றோர் அலுப்பதே இல்லை என்பது என்னுடைய கற்பனை.

மிக சமீபத்தில்தான் இலக்கவிழி தட்டுக்கு (டிவிடி-தான் சார்) ‘ஜோர்’ வந்து சேர தமிழ் சினிமா மனநிலையில் புகுந்துகொண்டு ‘ஜோரை’ ரசித்தேன். அப்பொழுது தோன்றிய உலகளாவிய தத்துவங்கள் சில:

* கல்லூரி தேர்தலில் சிபி நிற்கிறார். அவருக்கு வாக்குப் போடுவதற்கு சொல்லும் காரணம்: “எதிராளி சரியில்லை. அதிகாரவர்க்கத்தில் இருப்பவரின் மகன். அவர் உங்களுக்காக நல்லது செய்யப் போவதில்லை. எனவே, உங்கள் பொன்னான ஓட்டை…” – அமெரிக்காவில் கெர்ரி கூட தன் பிரச்சாரத்தை இப்படித்தான் துவக்கினார்.

* சத்யராஜ் வீட்டிலேயே வலம்வரும் பானுப்ரியாவை சேர்த்துக் கொண்டிருக்கும் இயக்குநரை — தெற்கத்திக்காரர்களின் வோட்டுக்காக எட்வர்ட்ஸை இணைத்துக் கொண்ட கெர்ரி நினைவுறுத்தினார்.

* சிபியைப் பிரதானப்படுத்துவதற்காக அடக்கி வாசிக்கும், ஆனால் அனைத்தையும் வழிநடத்தும் சத்யராஜ் — பெரியவர் டிக் சேனியின் பார்வையில் செயல்படும் புஷ்ஷுக்கு இணையாக சொல்லலாம்.

* தந்தை பாலாசிங் போலவே இங்கு அப்பா புஷ் சொல்லைத் தட்டாமல் மகன் புஷ் நடக்கிறார்.

* சம்பந்தமில்லாமல் வந்துபோகும் வடிவேலுவைப் போலவே பென் அஃப்லெக் (Gigli ஞாபகமிருக்கிறதா) காமெடியாக எதையாவது உதிர்த்துக் கொண்டிருக்கிறார்.

* எதிர்ப்புகளை மீறி வில்லனின் மகள் சிபியை விரும்புவது போல், செனியின் மகள் — மேரி செனி, லெஸ்பியனாக வலம்வருகிறார்.

* பள்ளிக்கூடத்தின் மேல் பொய்வழக்கு போட்டது போல், ஈராக் மீது போர்தொடுப்பு.

* புத்திசாலித்தனமான அணுகுமுறை எதுவும் இல்லாமல் காலங்காலமாக சொல்லப்பட்டுவரும் வித்தைகளை வைத்தே சிபி ஜெயிப்பதாக சொல்லப்படுவதால், கெர்ரியும் எந்தவித ஜிகினா திட்டங்களும் பரிந்துரைக்காமல், எளிமையான தாக்குதல்களிலேயே சென்றுவிடலாம் என்று அறிவுறுத்துகிறார்.

* வில்லன் தந்தையைக் கொல்லும் மகனின் முடிவைப் போல், அமெரிக்கத் தேர்தலில் தங்களின் கொள்கைகளினால் புஷ்-செனி தோற்பார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் முடிவு.

இவ்வளவு சப்-டெக்ஸ்ட், மெட்டாஃபோர், அமெரிக்க அரசியலின் அலசல்கள், யார் எப்போது எந்த அரசியல்வாதி என்று அறிய முடியா கதாபாத்திர சித்தரிப்புகள் அடங்கிய படத்தை, நான் பார்த்ததேயில்லை!

-பாஸ்டன் பாலாஜி

Categories: Uncategorized