Home > Uncategorized > பொற்கை பாண்டியர்

பொற்கை பாண்டியர்


எனக்கு பாட்டி சொன்ன கதைகளில் பொற்கை பாண்டியர் என்று ஒருவரை சொல்வார்கள். இவரை குறித்து பத்தாவது வரை படித்த ஸ்டேட் போர்ட் சரித்திரப் புத்தகங்களில் எதுவும் காணோம். இயற்பெயர் என்ன, எந்தக் காலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

தமிழகத்து மந்திரிகள் தேர்தல் முடிந்து பதவி ஏற்றவுடன், தடாலடியாக இரயில்வே ஸ்டேஷன், பேருந்துப் பயணம், தாசில்தார் ஆபீஸ், ஆர்.டி.ஓ., என்று வருகை புரிந்து மக்களை நெருங்கி வேலை செய்வதை கண்காணிப்பார்கள். இந்தப் பாண்டியர் இன்னும் கொஞ்சம் கை சுத்தமானவர். தான் அரசனாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட இரவில் இருந்து, மாறுவேடத்தில், இரவுக்காவல் புரிகிறார். சென்னையில் முன்பெல்லாம் நள்ளிரவில் ‘பாரா… பாரா’ என்று கத்திக் கொண்டு லத்தியை தட்டிக் கொண்டே, திருடர்களை அமைதியாக கன்னம்போடச் சொல்லிச் செல்லும், ஏட்டுக்கள் போல் இல்லாமல், கோ-ஆப்டெக்ஸ் கருப்புப் போர்வை போர்த்திக் கொண்டு, பூனை போல் ஓசையெழுப்பாமல் நகர்வலம் சென்று குடிமக்களை காக்கிறார்.

பின்னிரவில் அப்படி ஒரு நாள் செல்லும்போது, புதிதாய் மணமுடித்தத் தம்பதியரின் வீட்டில் அழுகை சத்தம் கேட்கிறது. மாமியார் கொடுமையா, கணவனிடம் திருப்தியின்மையா என்று ஆர்வம் எழ, அடுத்த ஜென்மத்தில் பல்லியாய் பிறப்பதற்காக ஒட்டு கேட்கிறார். பொருள் ஈட்டுவதற்காக கணவன், ஒரு மாதம் வெளியூர் செல்வதாகவும், அதுவரை மனைவியை தனிமையில் விட்டுச் செல்வதாகவும் பேசிக் கொள்வதை கேட்க நேரிடுகிறது. இந்தக் காலம் போல ‘ஜெயலஷ்மி’ ஆக்காமல், ஒழுங்காக கவனித்துக் கொண்ட காலம் என்று சொல்லப்பட்ட காலம் ஆகையால், அந்த வீட்டுக்கு ‘ழ’ பிரிவு அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று ஓலை குறித்து கிளம்பிப் போகிறார் பாண்டியன்.

இரவுவலம் வரும் பாண்டியனின் செவிகளில் ஒரு வாரத்திலேயே அந்த வீட்டில் இருந்து சந்தோஷச் சிணுங்கல் கேட்கிறது. சவுதி மாதிரி எங்கேயோ விமானத்தில் செல்லாமல், நடராஜாவாக சென்றவன், அதற்குள் திரும்பியிருக்க மாட்டான். நம்மைப் போலவே, வழிப்பறிக்காரனும் குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாததைத் தெரிந்து கொண்டு, பேதையை அட்டாக் செய்ய வந்திருக்கிறான் என்று முடிவெடுக்கிறார் பாண்டியர். வழக்கம் போல், என்ன பேசுகிறார்கள், என்று நிதானமாக செவியை தீட்டாமல், அவசரமாக கதவைத் தட்டி விடுகிறார். ‘யாரது’ என்னும் தீர்க்கமான ஒலி, கணவனின் குரலைக் காட்டிவிடுகிறது. ‘என்னே தவறு செய்தோம்’ என்று ஆட்சி போன மந்திரியாக மாரடைப்பில் ஆஸ்பத்திரிக்குப் போகாமல், கணவனின் ‘கள்ளக்காதலன் கதவைத் தட்டுகிறானோ’ சந்தேகத்தைத் தீர்க்க, தெருவில் இருக்கும் எல்லார் கதவையும் ‘Knock Knock: Who’s there?’ என்று தட்டிவிட்டு அந்தப்புரம் சென்று தூங்கியும் விடுகிறார்.

அடுத்த நாள் அரசவையில் பெருங்கூட்டம். சாதாரணமாக ஓரிரு பரிசில் புலவர்களும், வண்ணானும், பால் பாக்கெட் போடுபவனும் மட்டுமே வந்து செல்லும் சபையில், பொது மக்கள் பெருமளவில் கூடியிருக்கிறார்கள். ‘புதிய முகமூடி யார்’ என்று பலரும் பலவிதமாக ஐ.பி. முகவரி கிடைக்காத புனைப்பதிவாளரை வினவுவது போல் மந்திரியோரை கேட்கிறார்கள். எந்த நேரம் எந்த மந்திரி எந்த பதவியில் இருப்பார் என்பதை அறிந்த ஜூ.வி. கழுகுத்தனமாய் ‘அவனை நான் இங்கு கொண்டு வந்து நிறுத்தினால் என்ன தண்டனை தருவீர்கள்’ என்று வினவுகிறார் ராஜா. ‘முதலில் யார் என்று தெரியட்டும்; அதன் பிறகு தண்டனை தருவதை யோசிக்கலாம்’ என்கிறார் மந்திரிப் பெருமக்கள். தண்டனையைத் தெரியப்படுத்தும்படி வலியுறுத்துகிறார் பாண்டியர்.

‘பலரின் தூக்கத்தை கெடுத்துத் தட்டிய கையை வெட்ட வேண்டியதுதான்’ என்கின்றனர் மந்திரி. துருப்பிடிக்காத வாளை உறையில் இருந்து எடுத்து, ‘Delete All’ தட்டி நீக்குவது போல், கையை வெட்டிக் கொள்கிறார் பாண்டியர். அதன் பிறகு பொன்னாலான பொய்க்கையை வைத்துக்கொண்டு, தொடர்ந்து கதவுகளை பல்லாண்டு காலம் தட்டி, ராஜ்ய் பரிபாலனம் செய்ததாக செவிவழிச் செய்தி சொல்கிறது.

எனது கேள்விகள் (சிந்தனைகள்):

1. இதி நிஜக் கதையா? இதற்கு உரிய ஆதாரப் பாடல்/கல்வெட்டு இருக்கிறதா? நான் கேட்ட கதை எவ்வளவு தூரம் உண்மை?

2. ராஜா இடதுகை பழக்கம் உள்ளவரா? வலதுகையா? எந்தக் கையை வெட்டிக் கொண்டார்?

3. முதலில் கணவன் வெளியூர் செல்வதை காதில் போட்டுக் கொண்ட அன்றே, அவர்களின் கதவைத் தட்டி, தான் வீட்டை கண்காணிக்க ஸ்பெஷல் ஃபோர்சஸை நிறுத்துவதாக சொல்லாதது ஏன்?

4. கணவனின் குரலைக் கேட்டதும் ஓடி ஒளிந்தது ஏன்? அங்கேயே நின்று, ‘நான் அரசன். ரோந்து சுற்றுகிறேன்’ என்று விளக்கம் கொடுத்திருக்கலாமே? (அப்படியும் கள்ளக்காதலனோ என்று புருஷன் நினைத்தால், எதற்கு எடுத்தாலும் சந்தேகிக்கும் பிராணியாகத்தானே இருப்பான்.)

5. தான் செய்த தர்மசங்கடமான காரியத்துக்கு, ராஜா கையை வெட்டிக் கொண்டு அனுதாப அலையை வீசச் செய்தது சரியா? அதற்குப்பின் பொன்னாலான கையை செய்து மாட்டி அழகு பார்த்துக் கொண்டதும் சரியா?

-பாஸ்டன் பாலாஜி

Categories: Uncategorized
 1. September 10, 2004 at 11:31 am

  ராஜா என்பார் மந்திரி என்பார்
  ராஜ்ஜியம் இல்லை ஆள – ஒரு
  ராணியும் இல்லை வாழ

  ஒரு உறவுமில்லை – அதில்
  பிரிவுமில்லை
  அந்தரத்தில் ஊஞ்சல்
  ஆடுகிறேன் நாளும்

  கல்லுக்குள் ஈரமில்லை
  நெஞ்சுக்கும் இரக்கமில்லை
  ஆசைக்கு வெட்கம் இல்லை
  அனுபவிக்க யோகமில்லை

  பைத்தியம் தீர வைத்தியம் இல்லை

  புவனா மட்டுமா, எல்லாமே ஒரு கேள்விக்குறியாத்தான் இருக்கு 🙂

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: