Home > Uncategorized > புவியிலோரிடம் – ச.திருமலை

புவியிலோரிடம் – ச.திருமலை


நான் போன வாரம்தான் படித்து முடித்தேன். என்னுடைய விமர்சனம் அடுத்த வாரத்திற்குள் கொடுக்க முயல்வேன்.


நேற்று இரவு கையில் எடுத்த ஒரு நாவல், கீழே வைக்க விடாமல் ஒரே மூச்சில் படிக்க வைத்தது பா.ரா எழுதிய புவியிலோரிடம். இது நாவல் என்று சொன்னால் சற்று மிகையே, கண்முன்னே வாழும் ஒரு குடும்பத்தின் நிஜமான ஒரு வாழ்க்கைக் குறிப்பு. படித்து முடித்த பின், கதையின் பாரம் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அழுத்தின. மிகவும் சிக்கலான ஒரு கருவை, அழகான ஒரு குடும்பத்தின் மீது ஏற்றி அளித்திருக்கிறார் பா.ரா.

ஒன்பது குழந்தைகள் உள்ள ஒரு ஏழை பிராமணக் குடும்பம்.. கொடிது, கொடிது, வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை, வறுமையின் பாரம் ஒருவரைக் கூட பள்ளிப் படிப்பு முடிக்க விடவில்லை. தலைமுறை, தலைமுறையாக வறுமையிலும், அதன் காரணமாக கல்வியின்மையிலும் வாடும் ஒரு குடும்பம். குடும்பத் தலைவருக்கோ ஒரு பையனையாவது கல்லுரிக்கு அனுப்பி விட வேண்டும் என்று ஒரு வெறி, லட்சியம், குடும்பத்தின் கடைசிப் பையன் மட்டும், தட்டுத் தடுமாறி பார்டர் மார்க்கில் பாஸ் செய்ய, கல்லூரிக்கு அனுப்பப்படாத பாடு படுகிறார்கள். குடும்பமே முயற்சிக்கிறது. பாழாய்ப் போன சாதி குறுக்கே நிற்கிறது. பொய் சர்ட்டிபி·கேட் வாங்கி, கல்லூரியில் சேருகிறான், குற்ற உணர்வு மெள்ள, மெள்ளக் கவிய, மனப் பாரம் தாங்காமல் ஊரை, குடும்பத்தை விட்டே ஓடுகிறான். தான் என்ன பாவம் செய்தேன், பரம்பரை, பரம்பரையாக, வறுமையையும், கல்வியறிவும் இல்லாமல், சமையல் வேலையே கதியான தன் குடும்பம் எந்த விதத்தில் முன்னேறிய வகுப்பு? ஏன் இந்த அரசாங்கமும், சமுதாயமும், தங்களுக்கு எதிராக இருக்கிறது? கேள்விகள் விரக்தியாக மாற, சமுதாயத்தின் மேல் வெறுப்பு சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியாக மாற, அரசும், சமுதாயமும், நீதிமன்றமும், ஒன்று சேர்ந்து துரத்துகின்றன, அரசாங்கமே நேரடியாக பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குகிறது. இவர்களுக்கு ஒட்டுப் பலம் இல்லை எனும் ஒரு காரணத்துக்காகவே தலைகீழ் தீண்டாமை அரசாங்கத்தாலேயே, நீதி மன்றத்தின் முத்திரையுடன் அமுல் படுத்தப் படுகிறது. அநீதியின் வெப்பம் தாங்காமல் நாட்டை விட்டே, ஜாதியின் அடிப்படையில் தகுதி நிர்ணயிக்கப்படாத இடத்தைத் தேடி வெளியேறுகிறான்.

கதையில் பா.ரா பல முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். பிராமணர்களிலும், ஏழைகள் உண்டு, மக்குகள் உண்டு, ஆண்டாடுகால அடிமைகள் உண்டு, இந்தியாவின் வேறு எந்த வகுப்பைச் சேர்ந்த எழைகள் போல, இங்கும் அவலங்கள் உண்டு, அவமானங்கள் உண்டு, வறுமை என்று வந்தபின் இதில் உயர்சாதி என்ன, மேல் சாதி என்ன? கதையில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் நான் அன்றாடம், வாழ்வில் கண்ட பாத்திரங்கள் என்பதாலும், இதை கதையல்ல நிஜம் என்பதை அனுபவபூர்வமாக அறிந்தவன் என்பதாலும் புவியிலோரிடம் என்னிடம் மிகுந்த ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. கதையில் வரும் வாசுவின் வேதனைகளை, அர்த்தமுள்ள கேள்விகளை, என்னால் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்ள முடிந்தது, பல தருணஙளில் என் எண்ணங்களைப் பதிவு செய்திருப்பதாகவே நினைக்க வைத்தது, உணர்வுபூர்வமாக ஒன்ற வைத்தது. கதையின் நாயகனை துரத்தும் கேள்விகளை புரிந்து கொள்ள முடிகிறது. தாத்தா நீதிபதி, அப்பா கலெக்ட்டர், இருந்தாலும் பையன் மட்டும் இன்னும் பின் தங்கிய வகுப்பு, ஆனால் கொள்ளுத்தாத்தாவும், தாத்தாவும் சமையல்காரர்கள், அப்பாவும் சமையல்காரர், படிப்பறிவில்லாத சமையல்காரப் பரம்பரையின் வாரிசு மட்டும் முன்னேறிய வகுப்பு, இதுதான் இந்த இந்தியாவின் சமூக (அ)நீதி, அவன் எழுப்பும் கேள்விகளுக்கு இன்றும், இனி என்றும் ஆள்வோரும் அரசியல்வாதிகளும், நீதிமன்றங்களும் பதில் அளிக்கப் போவதில்லை. முன்னேறிய வகுப்பினர் எவ்வளவுதான் வறுமையில் வாடினாலும், அவர்களில் சிலர் பரம்பரை, பரம்பரையாக அடிமைகளாக வாழ்ந்திருந்தாலும், வறுமையின்காரணமாக கல்வியறிவற்றவர்களாகவே வளர்ந்திருந்தாலும், அவர்களுக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப் படக்கூடாது என்பதே மண்டல் வழக்கை விசாரித்த நீதிபதிகளின் தீர்ப்பு, அதே நீதிபதிகளின் பிள்ளைகளும், பேரன்களும் அமெரிக்கவில் படித்த போதிலும் மிகவும் பின் தங்கியவர்களாக கருதப்பட்டதுதான், நீதியின் அவலம். முன்னோர் செய்த பாவமென, ஆற்றாமையிலும், கழிவிரக்கத்திலும் இவர்கள் கழிக்க வேண்டியதுதான், அப்படித்தான் இவர்கள் பழிவாங்கப் பட வேண்டும் என்பதுதான் இன்றைய அரசியவாதிகளின் கீழ்த்தரமான சட்டங்களாக இருக்கின்றன என்பதை நாவல் உணர்த்துகிறது.

கதையில் பின்வரும் இடங்கள் பிரச்சினையின் யதார்த்தத்தை மிக அருமையாக படம் பிடிக்கிறது.

 • “பிராமணன் எச்சி இலை பொறுக்கித்தான் சாப்பிடணும்னு வேணா இப்போதைக்குச் சொல்லாமல் இருக்கலாம், ஜனநாயகத்திலே அவாளுக்குப் பிராமின்ஸ் ஓட்டும் வேண்டியிருக்கே”
 • “தன் குடும்பத்தில் யாருக்குமே ஏன் கல்வியில் நாட்டமற்றுப் போய் விட்டது என்று யோசிக்க ஆரம்பித்தான். பேய் மாதிரி துரத்தும் வறுமை தவிர வேறு காரணம் இருக்க முடியாது”
 • “வாழ்க்கைக்கு உதவாத எந்தவொரு அடையாளமும் இப்படி ஒரு அங்கீகார மறுப்பைப் பெற்றே தீரவேண்டும்”
 • “பின்னால் திமிர் பிடிச்சு அலைஞ்சான், அடுத்த ஜாதிக்காரனை மதிக்காமல் நடந்தான், இப்ப படறான் அவஸ்தை”
 • “தி.க காரா பூணூலை அறுத்தக் கையோடு, அத்தனைப் பிராmணனும் இனிமேல் பேக்வர்ட் காஸ்ட்டுன்னு சொல்லி சட்ட பூர்வமா அங்கிகாரம் வாங்கித் தந்துட்டான்னா, நான் கூட ஜீயரை விட்டுட்டு பெரியாருக்குக் கொடி பிடிக்க ஆரம்பிச்சுடுவேன்.”
 • “பின் தங்கிய பிராமணனை எல்லாம் பேக்வேர்ட் கேஸ்ட்லே சேர்க்கட்டுமே சார், காசு பணத்திலே, படிப்பிலே, சமூக அந்தஸ்த்திலே பின் தங்கியிருக்கிற வர்கள் எஃப்·சி கம்யூனிட்டியிலும் உண்டே”
 • “எந்தக் கம்ய்ய்னிட்டியா இருந்தாலும் ஸ்கூல் ·பைனல் வரைக்கும் ·ப்ரீ எஜுகேஷன், அதன் பின் ஓப்பன் காம்படிஷன்”
 • “ஏழைகளில் ஜாதி கிடையாது, எல்லோரும் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டிருக்கிறார்கள், பழக்க தோஷத்தில் நாங்கள் தோளில் மாட்டியிருக்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம்.”
 • “உயர்ஜாதி மனோபாவம் என்பதை அவரவர் பணமும், விளை நிலங்களும்தான் தீர்மானிக்கின்றன, சோற்றுக்கு லாட்டரி அடிக்கும் எந்தப் பிராமணனும், பிச்சைக் காரனுக்குத் தண்ணீர் குடுத்த குவளையைத் தூக்கிப் போடுவதில்லை” (இதே கருவில் இந்த வாரத்துத் திண்ணையில் ஜோதிர்லதா கிரிஜாவின் சிறுகதை ஒன்று வந்துள்ளது)
 • “என் ஆர் ஐயாக வந்து வியாபாரம் செய்தால் எ·ப்சி என்று பார்க்க மாட்டார்கள் அல்லவா”

  கதையின் கரு சர்ச்சைக்குரியது. துணிந்து நாவலாக கொண்டு வந்துள்ள ராகவனது துணிவையும், கதைக்காக அவர் எடுத்துக் கொண்டுள்ள ஆராய்ச்சியும், உழைப்பும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. இட ஒதுக்கீட்டின் முரண்பாடுகள், அநீதிகள் என்ற கருவை ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும், பாத்திரப் படைப்பிலும், கதை மாந்தர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கிலும், கதை நடக்கும் களத்தினை விவரிக்கும் முறையிலும், வெகு நேர்த்தியான, கச்சிதமான நாவலைக் காண்கிறேன். சோகமான கதையோட்டத்திலும், பாராவின் மெல்லிய நகைச்சுவை உணர்வு ஆங்காங்கே புன்னகை பூக்க வைக்கிறது. பையனுக்குப் பெண்பார்க்கப் போகும் இடமும், ஜீயரை தரிசிக்கப் போகும் இடமும் குறிப்பிடத் தக்கவை. முன் தீர்மானம் எதுவுமில்லாமல், சமுதாயத்தில், முக்கியமாக கிராமங்களில் உள்ள பிராமணர்களின் அவல நிலையை அறிந்தவர்கள் இந்தக் கதையில் பா ரா சொல்லியிருக்கும் உண்மையின் வெப்பத்தை நிச்சயம் புரிந்து கொள்வார்கள். சமுதாயத்தால் பழிவாங்கப் பட்டவர்களில் தாழ்த்தப் பட்டவர்கள் மட்டும் இல்லை, அதை விட கீழான நிலையில் பல பிராமணக் குடும்பங்களும் உள்ளன எனும் இந்தக் கதையின் கருவிற்கு பலரும் கடுமையான எதிர்வினையை வைக்கலாம், ஆனால் அவைகள் யாவும் ஊண்மையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத விதண்டாவாதங்களாக மட்டுமே இருக்க முடியும். பிரச்சினைக்கு ஆசிரியர் கூறும் தீர்வுகள் ஓட்டுப் பொறுக்கி அரசியவாதிகளாலும், நீதி பிறழும் மன்றங்களாலும் என்றுமே இந்த இந்தியாவில் ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லை. காலத்தின் ஓட்டத்தில், சமூக அநீதியெனும் தேர்ச் சக்கரத்தில், சம்பந்தப் படாத அப்பாவிகளும் நசுக்கிக் கொல்லப் படுகிறார்கள், அவர்களுக்கு நீதியோ, விடிவோ என்றும் ஏற்படப் போவதில்லை, விதியின் கொடுமை என, செய்யாத பாவத்திற்க்காக புழுவினும் கீழாய் நசுங்கி அழிய வேண்டும் அல்லது இந்த நாட்டில் தங்களுக்கு இடமில்லை என்பதை உணர்ந்து வெளியேற வேண்டும் எனும் இரண்டே வழிகளை நாவலில் மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இட ஒதுக்கீட்டுத்தீர்வில் உள்ள அநீதிகளையும், பங்கு பெற்ற அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களையும், இரட்டை வேடங்களையும், பிரச்சினைக்குரிய உண்மையான தீர்வுகளையும், இன்னும் தெளிவாக ஆசிரியர் அலசியிருக்கலாம். அதற்குரிய அனைத்து ஆவணங்களையும், ஆதாரங்களையும் அலசியபின்னும் ஏதோ ஒரு தயக்கம் அவரை கருவின் ஆழத்துக்கு அவரைச் செல்ல விடாமல் கட்டிப் போட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

  எந்த பத்திரிகைக்கும் இந்த அருமையான படைப்பை வெளியிடத் தைரியம் இருந்திருக்காது. அப்படியே வெளியிட்டிருந்தாலும் அர்த்தமற்ற, உண்மை நிலையை அறிந்தும் ஜாதி அரசியல் செய்யும் அரசியல்வாதிகளாலும் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்திருக்கும்.

  கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நாவல். கதையின் அடிநாதத்தை ஒப்புக் கொள்ளாதவர்கள் கூட, கதை சொல்லப் பட்ட நேர்த்திக்காகவும், பாத்திரப் படைப்புகளுக்காகவும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. ஏற்கனவே படித்தவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

  நன்றி : ராயர் காபி க்ளப்

 • Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  Connecting to %s

  %d bloggers like this: