Archive

Archive for September 30, 2004

முக்கிய மாகாணம் – ப்ளோரிடா

September 30, 2004 1 comment

‘அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்’ என்று கேள்விபட்டிருக்கிறேன். சில வருடம் முன்பு மின்சாரக் கனவுகள் பார்த்தபோது இறுதிக் காட்சி ரொம்பப் பிடித்துப் போனது. காதலனின் உடல்நலனுக்காக கன்னிகாஸ்திரியாகியதாகி விடுவதாக இறைவனிடம் வேண்டிக்கொள்வார் கஜோல். அரவிந்த்ஸ்வாமி அதில் இருக்கும் பைத்தியக்காரத்தனத்தை சொல்வார். கடவுள் தண்டிப்பாரே என்று நாம் நினைத்தால் அப்புறம் கடவுளே கிடையாது. தெய்வம் என்பது அர்த்தமே இழந்துவிடும் என்னும் அர்த்தத்தில் அவர் பேசும் வசனம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அமெரிக்காவின் புயலோரத்தில்… சாரி… கிழக்குக் கடற்கரையோரத்தில் இருக்கும் ஃப்ளோரிடா பெரிதாக தவறு எதுவும் இழைக்கவில்லை. இருந்தாலும் நான்கு பெரிய புயல்கள் இவ்வருடம் கரையைக் கடந்து இருக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் போன வருடம் அவர்கள் ஜார்ஜ் புஷ்ஷுக்கு வாக்களித்ததுதான் என விளையாட்டாகப் பேசிக் கொள்கிறார்கள்.

ஃப்ளோரிடாவாசிகள் யாருக்கு வாக்களித்தனர் என்பது வோட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். இந்தியாவில் நடக்கும் கள்ள ஓட்டு, வாக்குச்சாவடி கைப்பற்றல், எதிர்க்கட்சி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் போன்ற தகிடுதத்தங்கள் அமெரிக்காவிலும் காலம் காலமாக அமைதியாக செயலாக்கப்பட்டு வருகிறது. குறைந்த வாக்கு எண்ணிக்கையில் வெல்லும் தொகுதிகள் நிறைந்த ஃளோரிடாவில் இந்த மாதிரி விஷயங்கள் 2000-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் ஊடகங்களின் பரந்த கவனிப்பைப் பெற்று வருகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் வாக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. நியு யார்க், சிகாகோ போன்ற இடங்களில் நிச்சயம் சுதந்திரக்கட்சிதான் ஜெயித்திருக்கும் என்பதால் குடியரசு நாயகர் புஷ்ஷும் இதைப் பெரிது படுத்தவில்லை. இடித்துக் கொண்டு அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள், வாக்குசாவடியை நிர்வகிப்பவரின் குழப்பங்கள் போன்றவை மட்டுமே குறைந்தது ஐந்து மில்லியன் வாக்குகளை மதிப்பிழக்க வைத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்களில் ஃப்ளோரிடாவுக்கு எப்பொழுதுமே முக்கியமான இடம் உண்டு. பல வருடங்களாக சுதந்திரக் கட்சியின் கோட்டையாக விளங்கிய ஃப்ளோரிடா, கடந்த ஆண்டுகளில் வயதானவர்களின் சொர்க்கபுரி, க்யூபாவில் இருந்து தப்பி வருபவர்களின் வரவேற்பு மையம், ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களின் பெருக்கம் போன்றவற்றால் குடியரசுக் கட்சியும் சமபலத்துடன் வலம் வரும் மாகாணமாக மாறியிருக்கிறது. இருபத்தைந்து எலெக்டோரல் வோட்டுகளுடன் ஜனாதிபதித் தேர்தலின் துருப்புச் சீட்டாக இருக்கிறது.

போன தேர்தல் போல் இல்லாமல் இந்த முறை, தொட்டால் ஓட்டு போடும் பெட்டிகளை உபயோக்கிக்கப் போகிறார்கள். வெள்ளோட்டமாக நடந்த நகராட்சித் தேர்தலில்தான், இந்த முறையும் பிரச்சினை ஆகலாம் என்பது தெரியவந்துள்ளது. பனிரெண்டே வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் வெற்றி பெறுகிறார். ஆனால், 137 வோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்படுகிறது. தொட்டவுடன் வாக்கை எடுத்துக் கொள்ளும் கணினியில், சொந்த வேலைகளை ஒதுக்கிவிட்டு வந்து வாக்களிப்பவர்கள், செல்லாத வோட்டுப் போடவா, வந்திருக்கப் போகிறார்கள்?

இந்தியாவில் தேர்தல் ஆணையம் இருப்பது போல் அமெரிக்காவில் தேர்தல்களுக்கு என்று தனியாக எதுவும் கிடையாது. ஒவ்வொரு மாகாணத்திலும் மந்திரியாக இருப்பவர்களே, தேர்தல் வேலைகளுக்கும் தலைமை தாங்குவார்கள். பல சமயங்களில் இவர்களே வேட்பாளர்களின் பிரச்சாரக் குழுவிலும் முக்கிய அங்கம் வகிப்பார்கள். சன் டிவி நடத்தும் கலாநிதி மாறனும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் போல, ஃப்ளோரிடா கவர்னர் ஜெப் புஷ்ஷும் ஜனாதிபதி வேட்பாளர் ஜார்ஜ் புஷ்ஷும் சகோதரர்கள்.

அண்ணன் ஜார்ஜ் புஷ் ஜெயிப்பதற்கான ஃப்ளோரிடா குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்தவர் காதலீன் ஹாரிஸ். இவரேதான் ஃப்ளோரிடா தேர்தல் ஆணையத்தின் தலைவரும் ஆவார். பல்லாயிரக்கணக்கான கறுப்பர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது, குற்றமற்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை வாக்களிக்க முடியாமலும், குற்றம் புரிந்த குடியரசு கட்சி ஆதரவாளர்களை நிரபராதிகள் என்றும், பட்டயம் கொடுத்தது என இவர் மீது பல குற்றச்சாட்டுகள். தமிழ்நாட்டில் ஒரு கட்சியின் கொ.ப.செ.வே, தேர்தல் கமிஷனராக வேலை பார்த்தால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைக் களைவது எவ்வளவு எளிது!

இது நடந்தது கடந்த 2000-ஆம் ஆண்டு தேர்தலில். ஆனால், இந்த வருடத்து வாக்காளர் பட்டியலிலும் இதே போன்ற செலக்டிவ் விடுபடுதல்கள் முளைத்துள்ளது. அதே ஜெப் புஷ். மீண்டும் அண்ணன் புஷ் வேட்பாளரக இருக்கிறார். லியான் மாவட்டத்திற்கு தம்பியால் நியமிக்கப்பட்ட நிறுவனம் தயாரித்த எழுநூறு பேர் அடங்கிய குற்றவாளி பட்டியலில் வெறும் முப்பத்துமூன்று பேர் மட்டுமே குற்றம் புரிந்தவர்கள். நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பதால், தவறு என்று யாராவது அனற்றினால், பழியைத் தூக்கி அவர்கள் மேல் போட்டு விடலாம்.

ஃப்ளோரிடா முழுக்க 47,000 பேர் குற்றவாளிகளாக பட்டியலிட்டுள்ளனர். இவர்களில் 61 பேர் மட்டுமே ஹிஸ்பானிக்ஸ் எனப்படும் ஸ்பானிஷ் மொழிப் பேசும் தெற்கு அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள். ஃப்ளோரிடாவின் மக்கட்தொகையில் பதினொரு சதவிகிதம் உள்ள ஹிஸ்பானிக்ஸில் இருந்து .1 சதவீதத்துக்கும் குறைந்தவர்களே பட்டியலில் இடம் பெற்றிருப்பது அசாத்தியம். விசாரணை நடத்தியதில் டேட்டாபேஸ் பிரச்சினை, தொடு உணர்வை நிரலி கண்டுபிடிப்பதில் தவறு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இவ்வளவு நுணுக்கமாக ஆய்வதால், ஃப்ளோரிடாவில் இந்தத் தேர்தலில் பிரச்சினை வராது என்றே நினைக்கிறேன். போதாக்குறைக்கு மைக்கேல் மூரும் கேமிராவைத் தூக்கிக் கொண்டு ஃப்ளோரிடாவில் டிஸ்னிவர்ல்டிலோ, எம்.ஜி.எம்மிலே டேரா போடப்போகிறார்.

பள்ளியில் கிரிக்கெட் ஆடும்போது தனியாக அம்பையர் என்று ஒருவரை வைத்துக் கொள்ள மாட்டோம். பேட்டிங் செய்யும் அணியில் இருந்தே ஒருவரை அம்பையராக வைத்துக் கொள்வோம். அவரும் அவ்வப்போது, நோபால், பந்து எல்லைக்கோட்டில் பிடிபட்டாலும் ஆட்டக்காரரின் மட்டையைத் தொடவில்லை என்று ‘உதவி’ செய்து காப்பாற்றி வருவார். இரு அணிகளுக்கும், சொந்த அணிக்காரர்களே அம்பையரிங் செய்து ஸ்கோரை ஏற்றிக் கொள்வதால் பெரிதாக சண்டையும் வராது.

அமெரிக்காவிலும் இதே நிலைதான். தேர்தல் ஆணையர்களும், கொ.ப.செ.வும் ஒருவராகவே இருக்கும் மிச்சிகன், மிஸ்ஸௌரி போன்ற மாநிலங்கள் புஷ்ஷின் குடியரசு கட்சிக்கு சார்பாக அறிவிக்கப்படலாம். வெஸ்ட் வர்ஜினியா மாநிலத்தில் சுதந்திர கட்சியும் இதே தந்திரத்தைப் பின்பற்றுகிறது. அங்கு தேர்தல் ஆணையரே, கவர்னர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

கடவுளே வேட்பாளராக தோன்றி புயல்சின்னத்தில் போட்டியிட்டாலும், அமெரிக்காவின் ஆளுங்கட்சிகளை மீறி ஜெயிப்பது கஷ்டம்.
-பாஸ்டன் பாலாஜி

பரி
திருமலை
Federal Election Commission

Categories: Uncategorized