Archive

Archive for October 1, 2004

(சொந்த) தலைபத்து பாடல்கள்

October 1, 2004 Leave a comment

10. கவிதை இரவு இரவு கவிதை – சுள்ளான்
9. என் ஆசை மைதிலியே (ரீமிக்ஸ்) – மன்மதன்
8. அடியே கிளியே உனை எந்தன் (வாத்திய இசை) – குடைக்குள் மழை
7. வைத்த கண் வைத்தது தானோடி – போஸ்
6. விழியும் விழியும் நெருங்கும்போது – சதுரங்கம்
5. அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க – 4 ஸ்டூடண்ட்ஸ்
4. கண் பேசும் வார்த்தைகள் – 7ஜி ரெயின்போ காலனி
3. சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனா தானா – வசூல்ராஜா எம்பிபிஎஸ்
2. ஆரிய உதடுகள் உன்னுது – செல்லமே
1. இலந்தப் பழம் இலந்தப் பழம் உனக்குத்தான் – மதுர

Categories: Uncategorized

கெர்ரி – புஷ் வாக்காடல் : முதல் சுற்று

October 1, 2004 Leave a comment

எதிரணியில் இருக்கும் தலைவர்கள் ஒரே மேடையில் கைகுலுக்கி, கண்ணியத்துடன் பேசுவது என்பதே ஆச்சரியமான விஷயம். நான் பாண்டிச்சேரியை சொல்லவில்லை. அமெரிக்காவில் நேற்று நடந்த ஜனாதிபதி வேட்பாளர்களின் வாக்காடலைச் சொல்கிறேன். பாண்டிசேரியிலும் அனைத்து எம்.பி. வேட்பாளர்களையும் ஒரே மேடையில் தோன்றச் செய்து பேச வைத்திருக்கிறார்கள். ஆனால், இங்கு நடந்த ‘டிபேட்’டில் முக்கிய கட்சிகளான குடியரசு கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ்ஷும், சுதந்திர கட்சியின் ஜான் கெர்ரியும் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

ஒன்றரை மணி நேரம் விளம்பர இடைவேளையில்லாமல் இரு பெருந்தலைகள் பேசுவதைக் கேட்பதற்கு நிறையப் பொறுமை தேவை. தர்க்கத்தில் வில்லாதி வில்லர் கெர்ரி. பள்ளியில் படிக்கும்போது நடக்கும் ரேஸில் சில சமயம் ‘லீட் கொடுப்பார்கள்’. அதாவது இன்னொருவன் நிச்சயம் ஜெயித்து விடுவான் என்று அறிந்திருந்தால், கூட ஓடுபவர்களை பத்தடி முன்பாக நின்று கொண்டு ரேஸை ஆரம்பிப்பார்கள். பின்னால் ஆரம்பிப்பவன் வேகமாக ஓடி மற்றவர்களை வெற்றி கொள்வான். ‘தான் ஒரு சாதாரணன்’ என்று வாதம் ஆரம்பிப்பதற்கு முன்பு பிரச்சாரம் செய்வித்து, பத்தடி முன்னால் நிற்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவர் புஷ்.

‘முயலுக்கு மூணே கால்’ என்று திருப்பி திருப்பிச் சொன்னால் இன்னொரு தடவை எண்ணிப் பார்த்துக் கொள்வார்கள் அமெரிக்கர்கள். அமெரிக்கா வந்தபிறகு நான் கூட ‘ஒருவேளை இது க்ளோன் செய்யப்பட்ட முயலோ’ என்று எண்ணிப் பார்க்க வைக்கும் மூளைச்சலவைவாசிகள். புஷ் இந்தத் துறையில் பி.எச்டி பெற்றவர். லாஜிக்காக யோசிப்பது, ஆதாரபூர்வமாக பதிலடி கொடுப்பது, யோசிக்கவைக்கும் செறிவான வாதங்களை வைப்பது போன்றவற்றை அதிகம் கொடுத்து குழப்பாமல், உணர்ச்சிபூர்வமாக மக்களை அணுகுபவர். நேற்றும் அதையே செவ்வனே செய்தார்.

கெர்ரி: ‘உம்ம அப்பாகாரு ஈராக்கை அடித்து நொறுக்கும் வாய்ப்பிருந்தும், பாஸ்ரா மட்டுமே முன்னேறிவிட்டுத் திரும்பிவிட்டாரே. அப்புறமா, புத்தகம் எழுதினப்ப கூட “ஈராக்கை தாக்குவதில் அர்த்தமில்லை” என்கிறமாதிரி சொல்லியிருக்காரே’


புஷ்: ‘சதாம் இல்லாத உலகம்; சமாதான உலகம்’


கெர்ரி: ‘சண்டைக்குப் போவதற்கு முன்பே முக்காவாசி வானப்போக்குவரத்து நம்ம கையிலே இருந்ததே… ஜெயிச்சபிறகு சமாதானத்திற்கான திட்டம் எதுவும் இல்லாமல், போருக்குப் போயிட்டு யோசிக்கலாமா?’


புஷ்: ‘நான் தீவிரவாதிகளை அழிப்பவன் என்பது மக்களுக்குத் தெரியும்’


கெர்ரி: ‘ஈராக்கிலா ஒஸாமா பின் லாடென் இருக்கிறார்? சதாம் ஹுஸேனா 9/11-க்கு காரணம்? இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி…’


புஷ்: ‘இப்ப நம்ம வீரர்கள் அங்கிருக்கிறார்கள். அவர்கள் மனம் எவ்வளவு பாடுபடும்… உலக அரங்கில் அமெரிக்கர்களை என்ன நினைப்பார்கள்! பின் விளைவுகளை யோசிக்காமல் தப்பான சண்டை, தவறான தருணம் என்று டயலாக் விடுவது நமக்குத்தான் அசிங்கம்.’


கெர்ரி: ‘பத்து நாள் முன்னாடி எதிரணிக்காக சண்டைப் போட்ட ஆ·ப்கானிஸ்தான் பண்ணையார்களை வைத்தே ஒஸாமாவை தேடச் சொன்னது என்ன லாஜிக்? ஏன், நம்முடைய நம்பிக்கையான வீரர்களை வைத்தே சல்லடை போட்டிருக்கலாமே?’


புஷ்: ‘சும்மா வெளியே இருந்துகொண்டு முன்னுக்குப் பின் முரணாக பேசிக்கொண்டு விமர்சிப்பது உங்களுக்குக் கை வந்த கலை’

கிட்டத்தட்ட முழு வாக்காடலுமே இப்படித்தான் சென்றது. கடைசியில் தொட்டுக்க கொஞ்சம் போட்டுக் கொள்ளும் மேகி கெட்ச்சப்பாக சுடான் படுகொலைகள், செசன்யா-ருஷியா ப்யூடின், வட கொரியா, ஈரான் என்று இரண்டு கேள்விகள். ஆனால், மீண்டும், மீண்டும் ஈராக், சண்டை, சரியா, முன்பின் முரண்கள் என்று அடித்துக் கொண்டதில் நாட்டின் மற்ற முக்கியமான பிரச்சினைகளையும் இன்றே எடுத்துக் கொண்டிருக்கலாமே என்று தோன்றியது.

பொருளாதாரம், படிப்பு, சுற்றுச்சூழல், ஓய்வு சேம நிதி போன்ற மிக முக்கிய கோட்பாடுகளில் தங்கள் நிலையை வாக்காடாமல், எடுத்துக் கொண்ட வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு போன்றவற்றிலும் ஈராக்கையே தொண்ணூறு நிமிடங்களுக்கு சுற்றி சுற்றி வந்தது அசாத்திய சாதனைதான். புஷ்ஷுக்கு விருப்பமான தலைப்பிலேயே தாக்குப் பிடித்து, அவரை திணறடித்திருக்கிறார் கெர்ரி. சிரித்த முகத்துடனும், அமைதியான பாவனைகளிலும் அமெரிக்கர்களிடம் ‘தலைவன்’ என்னும் அந்தஸ்த்தைப் பெற்றிருக்கிறார்.

பயம் என்னும் வஸ்துவை வைத்து அமெரிக்காவைக் கிடுக்கிப் பிடி போட்டிருக்கிறது குடியரசு கட்சி. புஷ் மதிப்பிழக்கும் அளவு எவ்வித சொதப்பலையும் நேற்று செய்யவில்லை. பிறந்த குழந்தைக்குப் புரியுமளவு உலக அரங்கில் மதிப்பை உயர்த்துவது, ஈராக் போரில் நிகழ்ந்த இமாலயத் தவறுகள், மற்ற நாடுகளின் நம்பிக்கை என கெர்ரி எடுத்துரைக்கிறார். ஆனாலும், வாக்காளர்கள் மத்தியில் பெரிதாக சலனம் எதுவுமே நிகழவில்லை. (உடனடி கருத்துக் கணிப்புகளின்படி.)

‘நாளைக்கே பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கலாம். அப்பொழுது சீனாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் தலைவர் வேண்டுமா? அல்லது சிலரைப் பகைத்துக் கொண்டாலும், உடனடி தற்காப்பாக படைகளை அனுப்பி, உங்கள் குழந்தைகளையும், நாட்டையும் ரட்சிக்கும் நான் வேண்டுமா?’ என்று புஷ்ஷைப் பார்த்து இந்திய அரசியல்வாதிகள் அறிக்கை விடுமளவு நடந்து வருகிறார் புஷ். புஷ் ஜெயித்தும் விட்டால் அவரிடம் இருந்து இந்திய அரசியல் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

-பாஸ்டன் பாலாஜி

Categories: Uncategorized