Archive

Archive for October 6, 2004

மாமியார் உடைத்தால்

October 6, 2004 3 comments

மாமியார் உடைத்தால் பொன்குடம்
மருமகள் உடைத்தால் மண்குடம்

1. டிக் சேனி ஆயுதத் தளவாடங்களுக்கான மசோதாவை நிராகரித்தால் ‘நாட்டின் நன்மைக்காக’.
ஜான் கெர்ரி அதே மசோதாக்களுக்கு எதிராக வாக்களித்தால் ‘தேசத்தின் பாதுகாப்பை காற்றில் வீசுபவர்’.

2. ‘மிஸெரி’யை பாலு மஹேந்திரா எடுத்தால் நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்.
இன்னிசைத் தென்றல் பிறமொழி இசையை தமிழில் கொடுத்தால் ‘ஜெராக்ஸ் திலகம்’ பட்டம்.

3. நேரு குடும்பத்தில் பிறந்தால் தொலை நோக்கு பார்வையும் அரசாள்வதறகான மக்கள் செல்வாக்கையும் உடையவர்.
சாஸ்திரி, ராவாக இருந்தால் காங்கிரஸ் பிரதமரானாலும் சாதனைகள் பட்டியலிடாமல் மறக்கலாம்.

4. பில் காஸ்பியும் க்ரிஸ் ராக்கும் கறுப்பர்களின் சீரழிவுக்கு அவர்களேதான் காரணம் என்றால் ‘ஆஹா’!
குடியரசு கட்சிகாரர்கள் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வளர்ச்சியின்மைக்கு வளரும் சூழ்நிலையும், பெற்றோருமே காரணம் என்றால் ‘ஆதிக்க மனப்பான்மை’.

5. ஆங்கிலப் பட காமெடியை விவேக் நடித்தால் ‘சிரிப்பு’.
சன் டிவி சூப்பர் 10-இல் தமிழ்ப்படங்களை உல்டா செய்தால் ‘உவ்வே’.

6. ஸ்பானிஷ் மொழிப்படத்தில் விவகாரமான உறவுகளைக் காண்பித்தால் ஆஸ்கார் பரிந்துரை.
தமிழ்ப்படங்களில் அன்றாட நிகழ்வுகளைப் பதிந்தாலும் ‘கலாசார சீரழிவு’.

7. ஆ·ப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் சுதந்திரம் நிலைநாட்டுவதற்காக எதிரிப் பட்டத்துடன் படையெடுப்பு.
சவுதி அரேபியாவில் உள்ளூர் தேர்தலே முதல் முறையாக நடத்தப்பட்டாலும், கார் கூட ஓட்ட அனுமதியில்லாத பெண்கள் இருந்தாலும் உறவு நாடு.

8. ரஜினி எதிரிகளைப் பந்தாடினால் சூப்பர் ஸ்டைல்.
சுள்ளான் துவம்சம் செய்தால் ‘விளையும் முன்னே வீண் முயற்சி’.

9. டெண்டுல்கர் இல்லாவிட்டாலும் டிவி கவரேஜ்.
விஸ்வநாத் ஆனந்த் ஆடினாலும் எட்டாம் பக்க மூலையில் விளம்பரம் வந்துசேராததால், நாலுவரிச் செய்தி.

10. திசைகள்.காம் மரத்தடியில் அறிவித்தால், தனிமடலில் பரிசீலனை செய்ய வேண்டுகோள்.
மற்ற இதழ்கள் மரத்தடியில் இற்றைப்படுத்துவதை அறிவித்தால் பொதுமடலில் பிட் நோட்டிஸ் பட்டம்.

Categories: Uncategorized

கவுண்டர் கல்ச்சர் அன்லிமிட்டெட் – வளர்மதி

October 6, 2004 Leave a comment

(பிரமிள் நினைவாக)

அருகில் வாவென அழைத்து
எதிரில் வாகாய் நிறுத்தி
காறியுமிழ்ந்தேன் அவன் முகத்தில்
உமிழ்நீர் வழிய
உறைந்து அதிர்ந்து விழித்து
(வேறு வரிசையாகவும் இருக்கலாம்)
நின்றவன் கன்னத்தில்
ஓங்கி விட்டேனொரு அறையும்
திக்கெட்டும் கூவியழைத்து ஓலமிட்டு ஒப்பாரிவைத்து
(சந்தேகமில்லை, சாட்சாத் இதே வரிசைதான்)
அழுகிறானவன்
வேடிக்கை பார்க்க கூடியதொரு கூட்டம்
அவன் வித்தைகளை விளக்கு பிடித்துக் காட்டி
வசூலும் செய்தான்
அழுக்கைத் தேய்த்து உருட்டி
பொட்டலம் கட்டி விற்கும் சமர்த்தனொருவன்
“அறம் பிறழ்ந்தவன்”
என்று சுட்டுவிரல் நீட்டினான்
எப்போதும் கைவிலங்கை இடுப்பில்
கட்டித்திரியும் கலாச்சாரக் காவல்காரன்
காட்டிக்கொடுப்பவனை
கூட்டிக்கொடுப்பவனை
கூழைக்கும்பிடுபோடுபவனை
கூட இருந்தோரை குழிக்குள் தள்ளி மண்ணள்ளிப் போட்டு
காததூரம் ஓடி காதொளித்து நின்றவனை
செவிட்டிலறைவதில் அறமென்ன பிறழ்ந்துவிட்டது!
“உன் ஆவேசத்தை எழுத்தில் காட்டு”
கரிசனம் கொண்டவர் சொன்ன புத்தியிது
ஒருவேளை
அன்று சாட்சியாய் நின்றிருந்துவிட்டு
இங்கு
வேறொரு ‘கவிதையைக்’ கழித்திருக்கவேண்டுமோ?

வெளி வந்த இதழ்: கவிதாசரண் மே-ஜூன், 2003

Categories: Uncategorized