Archive

Archive for October 7, 2004

புவியில் ஓரிடம்

October 7, 2004 Leave a comment
 • அவனுக்கு வெறுப்பும் கோபமும் படபடப்புமாக வந்தது. தனக்கு இனப்பற்றெல்லாமுங்கூட உண்டா என்ன என்று கேட்டுக் கொண்டான். உண்மையிலே அந்த ஆள் பேசியதன் விளைவான அருவருப்பு மட்டுமே பிரதானமான உணர்ச்சியாகத் தெரிந்தது.
 • சுள்ளிகள் பரப்பி வைத்தாற்போலக் கூடம் முழுவதும் கால்கள் நீண்டிருந்ததைத்தான் முதலில் கவனித்தான்.
 • சிந்தனையே கூடாது என்பதுதான் அவனது ஒரே சிந்தனையாயிருந்தது.
 • உதவி கேட்க வேண்டும். ஆனால், கேட்கிற தோரணை தவறியும் எட்டிப்பார்க்கக் கூடாது. தன் மனதைப் புரிய வைத்துவிட வேண்டும். விடைகள் தாமாக எதிராளியின் பிரக்ஞை மீறி உதிரவேண்டும்.
 • அவன் சட்டென்று சின்ன மன்னியைத் திரும்பிப் பார்த்தான். பளிச்சென்று எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க எப்படி முடிகிறது இவளால்?
 • மிகச் சிறந்த சாதனையாளர்களையும் கடைந்தெடுத்த உதவாக்கரைகளையும் ஒன்றாக ஒரு கல்லூரி எப்படி உருவாக்கும்? இரண்டு விதத்திலும் சாதனை படைக்க அருகதையற்ற தன்னை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?
 • மூன்று கார்கள், இருபது மோட்டார் சைக்கிள்கள், நூற்றுப் பதின்மூன்று கால்நடையாளர்கள் கல்லூரிக்குள் நுழைந்தபிறகு ரங்கநாதன் வந்தார்.
 • ஒம்பதாவதுல ரெண்டு வருஷம். பிளஸ் ஒன்ல ரெண்டு வருஷம். கண்ணுக்குத் தெரியாத எதிரியோட சண்டை போடற மாதிரி இருக்கு.
 • “பிராமணனா பிறந்து தொலைச்சவன் சரணாகதி அடையக்கூடிய ஒரே வாசல் படிப்புதான். நாளைக்கு ஹரிஜன்ஸ் தவிர வேற யாரும் சுயதொழில் தொடங்கக் கூடாதுன்னு ஜி.ஓ. போட்டாலும் போட்டுடுவான். எச்ச இலை பொறுக்கித்தான் சாப்பிடணும்னு வேணா இப்போதைக்குச் சொல்லாம இருக்கலாம். ஜனநாயகத்துல அவாளுக்கு பிராமின்ஸ் வோட்டும் வேண்டியிருக்கே?”
 • விலை உயர்ந்த எளிமையும் அச்சமூட்டும்படியான மௌனத்தினடியில் புதைத்து வைத்த துக்கங்களுமாகப் பல நூற்றாண்டுகளாக அந்த வீட்டில் அவள் எதற்கோ தவமிருப்பது போலிருக்கும் அவனுக்கு. வினாக்களுக்கு விளக்கங்கள் தருவதும் நேர்த்தியான செயல்பாடுகளில் வீட்டை நிர்வகிப்பதும் தன் பணி என்பதாக அவளாகவே எடுத்துக் கொண்டு வருடங்கள் பலவாகிவிட்டன.
 • அதிர்ச்சியா, விரக்தியா, கோபமா, வெறுப்பா என்று புரியாத உணர்ச்சியில் பல மாதங்களைக் கரைத்துக் கொண்டிருந்தாள். சம்மதமோ, நிராகரிப்போ தொனிக்காத மௌனத்தில் பிறகு இருவரும் பழகிப் போனார்கள்.
 • மைதிலியும் வத்ஸ்லாவும் விழித்திருந்து சாதம் போட்டார்கள். அவனுக்குக் கஷ்டமாக இருந்தது.
 • சன்னலோரம் அமர்ந்து ஒன்றைப் பற்ற வைத்தான். “நாள் முழுக்க சுத்திண்டே இருக்கறதுக்கு இது ஒண்ணுதான் வழித்துணை விநாயகர். மேலுக்கு ஒரு வெத்தலை சீவல் போட்டுண்டுட்டா, மல்லாண்ட திண்தோள் மணிவண்ணனுக்கே கூட வாசனை தெரியாது. ஸ்பஷ்டம்னா அப்படியொரு ஸ்பஷ்டம். பெருமாளே எழுந்து வந்து கையைக் கட்டிண்டு உட்கார்ந்துடப் போறாரோன்னு பார்க்கத் தோணும். வைதீகத்துக்கு வைதீகம். லௌகீகத்துக்கு லௌகீகம்”.
 • ‘குடுமிதான் ஓர் ஆணுக்கு எத்தனை கம்பீரம் தந்துவிடுகிறது என்று அவளுக்குத் தோன்றியது. “அவாவா ப்ரொஃபஷனுக்கு ஏத்த மாதிரி ட்ரெஸ் பண்ணிக்கறா.”‘
 • அம்மாவுக்கு எப்போதும் சில பயங்கள் உண்டு; அவை தீரவே தீராது என்று வரதன் நினைத்தான்.
 • படிப்பு பிரமாதமில்லை. சாதம் போட்டா சுத்தி வர்ற நாய்க்குட்டி மாதிரிதான்.
 • ‘”அப்பாக்கு வடகலைன்னாலே அலர்ஜி. நீ வடமாள்ல தேடிறியா? தூக்கம் கலைய மூஞ்சி அலம்பிக்கற மாதிரி பார்த்து ‘ரெஃப்ரெஷ்’ பண்ணிக்கறதோட நிறுத்திக்கோ, பேச்சுக் கொடுத்து சோத்தைக் கெடுத்துண்டுடாதே.” அவனுக்கு எந்தப் பெண்ணை பார்த்தாலும் மைதிலியின் சாயல் துளியாவது ஒட்டிக் கொண்டிருப்பது போலவே பட்டது. அது சாயல் இல்லை; ஒரு குறியீடு போல அண்ணாவின் ஞாபகம் தன்னை மன்னியின் உருவில் கட்டிப் போடுவதாகப் பிறகு உணர்ந்தான்.
 • பிரத்தியேகமாக தன்னை நன்கு அறிந்து கொண்டே அவன் பேசுவது போல இருந்தது. சிறிதளவேனும் கோபமோ, குற்ற உணர்வோ இன்றி, தான் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதே அவனுக்கு வினோதமாகவும் வியப்பாகவுமிருந்தது. வேறு யாராவது ஒரு சாதிக்காரனிடம் இப்படிப் பேச முடியுமா, கேட்டுக் கொண்டு சும்மா வருவானா என்று யோசித்துப் பார்த்தான். இது தன் சகிப்புத்தன்மை என்று கூட அவன் நினைக்கவில்லை. ஒரு சிறு சலனம் குட உண்டு பண்ண இயலாத நிலையல்லவா ஜாதிக்குத் தன்னிடம் அங்கீகாரம் மறுக்கப்பட்டிருக்கிறது.
 • தி.க.காரா நல்லதுதான் பண்ண நினைக்கறா. பூணூலை அறுத்துப் போட்ட கையோட, அத்தனை பிராம்மணனும் இனிமே ‘பேக்வர்ட் காஸ்ட்’னு சொல்லி, அதுக்கு சட்டபூர்வமா அங்கீகாரம் வாங்கித் தந்துட்டார்ன்னா, நான் கூட ஜீயரை விட்டுட்டு, பெரியாருக்குக் கொடி பிடிக்க ஆரம்பிச்சுடுவேன்.
 • சம்பாத்தியமும் மூணுவேளைச் சாப்பாடுமே பெரிசா தெரியறதாலே சம்பிரதாயமெல்லாம் துச்சம்மாத்தான் படும்.
 • ‘பளிச்சென்று நாமம் போட்டால் எந்தக் கழுதைக்கும் அந்த தேஜஸ் வரும்’ என்று வாசுவுக்கு நாக்கு நுனிவரை வந்துவிட்டது.
 • எதற்காகத் திரைக்கு மேல் திரையாகப் போட்டுக் கொண்டே போகிறேன்? யார், எதைக் கண்டுபிடித்துவிடக் கூடுமென்று அஞ்சுகிறேன்?
 • வாழ்ந்துகொண்டிருந்த உடல்களுக்கு அவரறியாமல் ஏதோ ஆகிவிட்டிருக்கிறது. மேலான புன்னகையில் எல்லாருமே எதையாவது ஒளித்துவைக்கப் பழகித்தானிருக்கிறார்கள்.
 • எதையும் மறைப்பதில் எப்போதும் சிக்கல்கள்தான் வந்து சேருகின்றன. உண்மையைச் சொல்பவனுக்கு எதையும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க அவசியம் ஏற்படுவதில்லை.
 • முட்டாளாக வாழ்வதில், அல்லது காட்டிக் கொள்வதில் உள்ள சௌகரியங்களை இரண்டரை வருட தில்லி வாழ்க்கையில் அவன் நன்றாக உணர்ந்திருக்கிறான். உள்ளுக்குள் போடும் கணக்குகள் உண்டாக்கும் பரவசத்தை வெளிக்காட்டி விடாதபடிக்கு முகத்தில் நிரந்தரமாகப் படிந்துவிட்ட அப்பாவித் திரையும் மொழியில் தட்டுப்படும் கோழைத்தனமும் ஓர் அரணாயிருக்கின்றன. சகலமானவர்களும் வசப்படுகிறார்கள்.
 • ஞாபகமில்லாத வயதில் கோயிலுக்குப் போவதையும் குளிப்பதையும் எப்போதும் இணைத்தே அம்மா சொல்லிவந்திருப்பது, பிரக்ஞையின் பிடிகளுக்கு அகப்படாமலே இத்தனை வருடங்கள் நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. ஒரு வெறுப்பில் எத்தனையோ சம்பிரதாயங்களைக் காலந்தோறும் அவன் உதறி வந்திருக்கிறான். இலக்கணம் என்று சுட்டிக்காட்டப்பட்டவற்றை வலிந்து மீறிவிடுவதன் மூலம் தன் பிரத்தியேக அடையாளங்களை அழித்துக் கொள்ள எத்தனை சிரமப்பட்டிருக்கிறான்!
 • பணம். அது நிற்காமல் முன்னே பாய்ந்து கொண்டிருக்கிறது. ஒரு எட்டில் ஓரமாகத் துளி பிடித்துக் கொண்டுவிட்டால் எத்தனை தூரத்துக்குச் சிரமமில்லாமல் அதுவே இழுத்துக் கொண்டோடி விடுகிறது!
 • “எல்லாப் பெண்களிடமும் என் மன்னியின் சாயல் கொஞ்சம் இருக்கிறது.”
 • ‘எப்படி உன்னால் சாப்பிட்டு எச்சில் பிரட்டித் துடைப்பது போல் உறவுகளைத் துடைத்து எறிந்துவிட்டுக் கண்காணாமல் இருக்க முடிகிறது என்பதுதான் புரியாத சங்கதியாக உள்ளது.’
 • பணம் பிரதானமாகத் தோன்றும் வயசு ஒன்று உண்டு. முப்பதிலிருந்து நாற்பத்தைந்து வரை பேயாய் அலையத் தோன்றும். ஏனோ, உனக்கு அது சீக்கிரம் வந்துவிட்டது. அதே மாதிரி பணம் அலுப்பூட்டும் காலமும் வரும். வெறுமையில், ரூபாய் நோட்டை எப்போதாவது கிழித்துப் போடலாமா என்று தோன்றும்.
 • வீட்டில் மூத்தவனாகப் பிறப்பது என்பது நம் குலத்தில் ஒரு சாபம்.
 • மனித வாழ்வின் அர்த்தமே, புரிந்து கொள்வது என்கிற ஒற்றைச் சொல்லில் முடிந்து விடுவதாகத்தான் நான் நினைக்கிறேன்.
 • பிரும்மம் உணர்ந்த பண்டிதர்களைப் புதைத்த இடத்தில் புல் முளைத்துக் காடாகி, விலங்குகள் குடியேறிவிட்டன. அடையாளம் தொலைத்துவிட்ட ஒரு சமூகத்தைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருப்பது எரியும் பிணத்தை இழுத்துப் போட்டு அடிப்பதல்லாமல் வேறென்ன?
 • ‘பிராமணனுக்கு உடலுழைப்பு வராது. பிசினஸ் சரிப்படாது. வலி தாங்கமாட்டான். அவமானம் அவன் சகித்துக் கொள்ளக்கூடிய உனர்ச்சி அல்ல. தவிர, அவன் கோழை. ஒரு தட்டுத் தட்டினால் வேட்டியை நனைத்துக் கொண்டு விடுவான். அவனால் முடிந்ததெல்லாம் ப்டிப்பது. அசை போடும் பசுவைப் போல் உருப்போட்டுத் தேர்வெழுதித் தேறி, வெள்ளைக் காலர் வேலைகளில் புத்தியின் மூலம் அமர்ந்து விடுவது. பிறகு வீடு, மனைவி, பணம், பாதுகாப்பு. வயதான காலத்தில் வாசலில் ஒரு ஈஸிசெர். வாயில் நாலாயிரம். வ்சவில் நூறாயிரம். இறந்த பின் திவசம்; எள்ளுக்குக் கேடு. இதுதானே உங்கள் இறுதி மதிப்பீடு?’
Categories: Uncategorized

காட்சிப்பிழை – சொக்கன்

October 7, 2004 1 comment

டிவி என்னும் வஸ்து எனக்கு மிகவும் பிடித்தது. சரித்திர நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். சமகால அலசல்களை வியக்கலாம். செய்திகளை அறியலாம். கடவுளைக் கண்ணுறலாம். ஸ்னேஹா மாமியானதை வியக்கலாம். ரீமா ஹீரோயினானதை தெரிந்துகொள்ளலாம். மாமியார்-மருமகள் பிரச்சினை, பிறன்மனை நோக்கல், இல்லத்து உறவுகள் கொண்ட தொடர்களை நக்கலடிக்கலாம். மூடுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு பயன்கள்.

டிவி பார்க்காத வாரயிறுதிகள் போரடிக்காமல் பயமுறுத்தும். அமெரிக்காவின் ‘உழைப்பாளர் தினத்தைக்’ கொண்டாட நாங்கள் கொலராடோ சென்றபோது அன்னை தெரஸாவும், லேடி டயானாவும் அடுத்த அடுத்த நாளில் உயிரை இழந்திருந்தார்கள். செய்திகளை வெகுத் தாமதமாகத்தான் பார்த்தேன். நான் தெரிந்து கொண்டதும் எதுவும் செய்யவில்லை என்பது நீங்கள் அறிந்திருந்தாலும், ‘அச்சச்சோ’ என்று வருத்தப்பட காலவிரயமானது.

சித்தார்த்த பாசு இல்லாவிட்டால் க்விஸ் நிகழ்ச்சிகளிலும், துக்கடா ட்ரிவியாக்களிலும் ஆர்வம் பிறந்திருக்காது. ப்ரணாய் ராய் இல்லாவிட்டால் ஸ்விங் என்பது ஆட்சியாளரை மாற்றுகிறது என்று அறிந்திருக்க மாட்டேன். ‘சுனௌதி’ கல்லூரியினால் கிடைக்கப்போகும் ரம்மியமான தோழிகளை சொல்லித்தந்தது. ‘மலரும் நினவுகளால்’ சுயசரிதை படிக்கும் ஆர்வம் கிடைத்தது. மாலா மணியனும், ரத்னாவும், ஜேம்ஸ் வசந்தனும் திரைப்பட ஆர்வத்துக்கு நிறையவே தூண்டில் போட்டார்கள்.

பிற்காலத்தில் டிவி பேசும் என்பதை சில அறிவியல் கதைகள் சொல்லியிருக்கிறது. டிவி போன்ற பொருட்களே மக்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்று ஜீனோ பேசியிருக்கிறது. அந்த தொலைக்காட்சியை வைத்துக்கொண்டு சுவாரசியமான தற்கால சிந்தனைகளை எதிர்காலத்தின் மீது ஏற்றி யோசிக்கவைக்கும் கதையாக இருக்கிறது ‘காட்சிப் பிழை’. எனக்கு என்னுடைய மனசாட்சியே இங்கு டிவியாக மாறினது போல் ஒரு பிரமை. சில சமயம் மனைவி போல். ஒரு சமயம் ஆட்சி மாற்றத்தை செய்ய விரும்பும் சமூகவீரனாக. அங்காங்கே சூழ்நிலைக் கைதியாக வாழும் நடுத்தர வர்க்கமாக. சில சமயம் தற்போது காணும் வழக்கமான தொலைக்காட்சியாக….

உண்மையில் எது என்பதை வாசகருக்கே விட்டிருக்கிறார். மரத்தடி-திண்ணை போட்டியின் சமயத்தில் மற்றுமொரு சாம்பிள் அறிவியல் கதை.

வெளிவந்த இதழ்: படித்துறை

 • அவன் கையிலிருந்த ரிமோட்டை அதன்மேல் எறிந்து, ‘வாயை மூடு, முட்டாள் இயந்திரமே’ என்றபடி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தான்.
 • டிவி வழக்கமான விசாரணையை ஆரம்பித்தது, ‘எங்கே போய்விட்டு வருகிறாய் ?’
 • இயந்திரம் மீண்டும் பேச ஆரம்பித்தது, ‘என்ன பேச்சையே காணோம் ? வேலை பார்ப்பதாய் உத்தேசம் இல்லையா இன்றைக்கு ?’
 • அவன் பெரும்பாலான நேரங்களில் நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் சும்மாவே உட்கார்ந்திருப்பான், அல்லது பதினான்காம் நூற்றாண்டு மன்னன் ஒருவனின் காதல்கதையை அவன் எழுதிக்கொண்டிருக்கிற சரித்திர நாவலுக்குள் சேர்ப்பது பற்றி யோசித்துக்கொண்டிருப்பான்.
 • அந்த அறைக்குள் நுழையும்போதே அடுப்பில் ஏதோ தீய்ந்த வாடை அடிக்கும் அவனுக்கு.
 • “வேலையில்லாத சிறுபையன்களும், வேலைபார்த்துக் களைத்த நடுத்தர வயதினரும்தான் அதைப் பார்க்கிறார்கள், அவர்களைத் தூண்டிவிட்டால் ஏதும் பெரிதாய் நடந்துவிடாது”
 • ‘தன்னால் இத்தனை முடியும் என்று தெரிந்தபிறகு, தன்னைக் கட்டிவைத்துக்கொள்வது எவ்வளவு சிரமம் தெரியுமா ?’

Categories: Uncategorized