Archive

Archive for October 11, 2004

ஆயிரம் வாசல் உலகம் – விமர்சனம்

October 11, 2004 2 comments

ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லை

கல்லூரியில் சேர்வதற்கு முன் இரண்டு மாத +2 விடுமுறையில் கபாலி கோவில் சென்று மார்க் நிறைய வர வேண்டுமென்று வேண்டி வருவேன். ஏதாவது இன்ஜினியரிங் அட்மிஷன் கிடைக்க வேண்டும். அங்கே போதுமான அளவு அழகழகாய் பெண்கள் இருக்க வேண்டும். ராகிங் அளவாய் இருக்க வேண்டும். நேன்ஸி ஃப்ரைடே முதல் சிட்னி ஷெல்டன் வரை கிடைக்க வேண்டும். தம்மடிக்க வைக்க சீனியர்கள் வலியுறுத்தக் கூடாது என்று நிறைய குழப்பமான வேண்டுதல்கள். பெரும்பாலானவற்றை கடவுள் நிறைவேற்றினார்.

நான் கேட்கத் தவறியது ‘கடைசி வருடம் வரும் கேம்பஸ் தேர்வுகளில் சீக்கிரமே வேலை கிடைக்க வேண்டும்’ என்பதுதான். அதற்கு இரண்டு காரணங்கள். சுஜாதாவின் ‘ஹாஸ்டல் தினங்கள்’ படித்ததில் வேறு எண்ணங்கள் மட்டுமே மனதில் பதிந்திருந்தது. இரண்டாவது காரணம் கல்லூரியில் நுழைந்த பிறகு கிடைத்த தன்னம்பிக்கை. ‘எனக்குக் மாட்டாமல் வேறு எந்தக் கொம்பனுக்குக் கிடைக்கப் போகிறது’ என்னும் அலட்சியப் போக்கு. சொக்கனின் ‘ஆயிரம் வாசல் உலகம்‘ வாசித்திருந்தால், மற்ற எல்லாவற்றையும் விட ‘முதன்முதலில் வரும் கம்பெனியில் முதலாவதாக என்னுடைய பெயர் தேர்வு செய்திருக்கப் பட வேண்டும்’ என்று மாதவப் பெருமாள் முதல் முண்டகக்கண்ணி வரை நூற்றியெட்டு வைத்திருப்பேன். (கொசுறாக பெசண்ட் நகர் வேளாங்கன்னியிலும் மெழுகு விளக்கு ஏற்றி அட்வான்ஸாக வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பேன்.)

‘பெண் பிடிக்கவில்லை’ எனப்படும் மாப்பிள்ளை வீட்டாராக வேலைக்கு ஆளெடுக்க வரும் கம்பெனிகள்; கடைசி வருட இண்டெர்வ்யூக்களுக்குத் தயாராகும் மாணவர்கள் — நிலையை படம் பிடித்து காட்டுகிறது ‘ஆ.வா.உ.’ ஹாஸ்டலை வெள்ளையடிக்கப் போகும் நொண்டி சாக்கை வைத்து கம்பெனிகளை ஒரு மாதம் தள்ளி “இன்ஜினியர் பொறுக்கலுக்கு” வருமாறு சொல்கிறது கல்லூரி நிர்வாகம். முதல் ஷோவே பத்து மடங்கு அதிகம் கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்கும் ரஜினி ரசிகனாக, நாலைந்து கோவை கல்லூரிகளையும் ஒரே தடவையாக பார்த்துவிட்டு செல்ல விருப்பப்படும் நிறுவனங்கள் ஒரு பக்கம்; மறுபக்கம், மாணவர்களை ஹாஸ்டலில் தங்கவிடமாட்டேன் என்று அரசு அலுவலர்களை வீட்டுக்கு அனுப்பும் கண்டிப்பான முதல்வர் போன்ற கல்லூரி டீன்.

தனியாகவேத் தங்கி நேர்காணல்களுக்குச் சென்று வர முடிவெடுத்து, எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதை படு சுவாரஸ்யமாக நெஞ்சில் பதிக்கிறது. சகாக்களின் கழுத்தறுப்பு; எம்.டிவி.யில் வரும் ‘ரியல் வோர்ல்ட்’ போன்ற உலகை எதிர்காணும் பயங்கள்; எஸ்.வி.சேகர் நாடகத்தனமான ‘கடி’முத்துகள்; இந்தியா தொலைபேசும்போது நீட்டிக்கவிரும்பும் பெற்றோராகப் பிரிவில் நாள் முழுக்க ‘சங்கீத ஸ்வரங்கள்… அங்கே இரவா? இல்லே பகலா?’ எனப் பேச விரும்பும் கவித்துவ காதல்; தனிமை ராஷஸனின் கைவரிசைகள்; அமெரிக்காவில் கடனேயென்று பதிலுக்குக் காத்திராமல் கேட்கும் ‘ஹவ் ஆர் யூ’ போன்ற அன்றாட நிகழ்வுகள்; கழிவிரக்கத்தின் முற்றிய அறிகுறிகள்; முதல் வேலைவாய்ப்பை சொல்லும் அப்பாயிண்ட்மண்ட் ஆரம்; ‘குஷி’த்தனமாக இடை பார்க்காத சேலைச் செருகல்; என்று நான் கண்ட + காணாத ஒவ்வொரு நிகழ்வையும் கண்முன் கொண்டு வருகிறார்.

‘மக்கள் என் பக்கம்’ படத்தில் “ஆண்டவனைப் பார்க்கணும்” பாடலில் ஒவ்வொரு வயதிலும் அந்த காலகட்டத்திற்கேற்ப நாம் கொள்ளும் குறிக்கோள்களை சொல்லும் சில வரிகள் வரும். இன்ஜினியரிங் படித்த இருபத்தியோரு வயது மாணவர் கேம்பஸ் இனடர்வ்யூக்கு அடிமை. நண்பர் ஒவ்வொருவரின் பெயராக நோட்டிஸ் போர்டில் வரும். அனைவரும் தண்ணி பார்ட்டிக்கு அழைப்பார்கள்.

ஆல்கஹால் என்பது அடியாள் போல. நாம் எந்த மனநிலையில் இருக்கிறோமோ அதை அப்படியே ‘ஆமாஞ்சாமி’ போடுவதில் கில்லாடி. சோகமாக இருந்தால் அசராமல் புலம்ப வைக்கும். வேலை கிடைத்து மகிழ்ச்சியாக இருப்பவனுக்கோ, மேலும் கொக்கரிக்க வைக்கும். ‘க்ரூப் டிஸ்கஷனில் ஏண்டா வாயை மூடிக்கிட்டு இருந்தே… உனக்குக் காதலிலும் வாயைத் தொறக்கத் தெரியாது. அங்கேயும் பேசத் தெரியாது’ என்று பயாலஜி வகுப்பில் அறுத்த தவளையை வகுந்தெடுப்பது போல் ஆணிவேர் அனாலிஸிஸ் நடக்கும்.

‘நீ பிஜே கோட்டை கடன் கேட்டபோதே நினைச்சேன்… அவனுது ராசியே இல்லைடா. அடுத்த வாட்டி லொகி கோட்டை வாங்கிப் போட்டுக்கோ’ என்று அட்வைஸ் தொடரும். ஆனால், இதே போன்று அவனுடைய இன்றைய இண்டர்வ்யூ முடிந்தவுடன் ‘என்னடா கேள்வி கேட்டாங்க…’ என்று வாசலிலே மடக்கி அறிந்துகொள்ள எத்தனிக்கும்போது, ‘சொதப்பிட்டேண்டா’ என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே வந்திருக்கும். வேலை கிடைத்தவர்கள் மேன்மக்கள். கிட்டாதோர் இழிகுலத்தோர்.

ஆனால், இவர்களுக்கு வேலை கிடைத்தாளும் சோகங்கள் போகாது. ‘இதை விட அதிக சம்பளம் தரும் ராம்கோ நாளைக்குத்தான் வருகிறான். என்னால கலந்துக்க முடியாது. சே… உன்னால கலந்துக்க முடியுமே’ என்று வருத்தப்படுவார்கள். உன் வேலையை எனக்குக் கொடுத்துவிடு என்று ஒரு தடவையாவது கேட்க மனசு விழையும். ‘பாம்பே எனக்குப் பிடிக்காதே! பெங்களூர் எச்.பி பத்தாம் தேதிதான் வருது’ என்று அலுப்புகளைக் கேட்கும்போது அனல்பார்வை கூட வீச முடியாது. பொறாமை, வெறுப்பு என்று பட்டம் வரக்கூடாதே என்று புன்சிரிப்போடு நகர்ந்து செல்வோம்.

சொக்கன் வெறுமனே மாணவர்களின் ஒருதலை பட்சமான பார்வையை மட்டும் கொடுக்காமல், நேர்முகம் காணவருபவர்களின் நிர்ப்ப்ந்தங்கள், ஏற்பாடு செய்பவர்களின் நிலைப்பாடுகள், மூன்றாவது மனிதர்களின் பற்றற்ற ஆர்வம் என்று பன்முகத்தனமையோடு கதையை நகர்த்திச் செல்வது ரசிக்கவைக்கிறது.

கதையில் வரும் மாணவர்கள் அனைவரும் அன்பாக முழுப்பெயரை சொல்லியே விளிக்கிறார்கள். ‘பிரதீபகுமார் மணிவாசகமே..’ என்று அழைக்கமால் ‘பிரதீபகுமாரே…’ போன்று செல்லமாக அழைத்துக் கொள்கிறார்கள். நான் கண்டவரை இவனுக்கு ‘பிக்’ என்று சுருக்கெழுத்துப் பெயரோ, ‘மொட்ஸ்’ என்று காரணப்பெயரோ, ‘ஆல்ஃபா’ என்ற இடுகுறிப்பெயரோ வைத்துத்தான் பார்த்திருக்கிறேன். பட்டப்பெயர் இல்லாத கல்லூரியா…

வில்லத்தனமான பாத்திரங்கள் இங்கு கிடையாது. நள்ளிரவு அன்ரிசர்வ்ட்-இல் ஒண்டிக்கொண்டு செல்லும் நங்கை, தனியே கல்லூரி கிளம்பும் நாயகி, நடுநிசியில் தொலைபேசச் செல்லும் நாயகன், வேலை கிடைக்காத சோர்வில் இருக்கும் மாணவர்கள் எல்லாருமே சௌக்கியமாக, நேர்மநறையாக உலகைப் பார்க்கிறார்கள். எதிர்கொள்ளுகிறார்கள். அதற்காக, ஆசிரியரே கிண்டலடித்துச் சொல்வது போன்ற விக்கிரமன் பட நாடகத்தனமான திருப்பங்கள், அதிரடி மாற்றங்கள் எதுவும் செய்வதில்லை.

பெண்ணின் மனதைப் புரிந்துகொள்வதில் உள்ள சிரமங்களை சில நாட்கள் முன்பு மேல்கைண்ட் வலைப்பதிவில் க்விஸ் வைத்து விளக்கியிருந்தார்கள். ஆணின் அசிரத்தையான கவனிப்பு, மனவோட்டங்களையும் அதன்கூட சேர்த்துக் கொண்டு, லலிதா-கிருபாகரனின் சந்திப்புகள் மூலம் கதை விவரிக்கிறது. தவிர்க்க விரும்பும் வாதங்களில் ஆணின் மௌனம், ‘பேசாதே’ என்று சொன்னாலும் காதலனின் நச்சரிப்பைத் தொடர்ந்து கேட்க விரும்பும் காதலியின் உள்ளம் போன்ற நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கது.

ஜான் கெர்ரி போன்ற கிருபாகரனின் தலைமையில் எல்லாம் சுபமாக நடக்கிறது. கிருபா சில சமயம் கல்லூரி முதல்வரிடம் காறி உமிழ்கிறான். அப்படியே இரண்டு அத்தியாயம் சென்ற பிறகு தர்ம்புத்திரராக நீதி, நியாயம் என்று சாந்தப்படுத்துகிறான். மீண்டும் அவரைத் திட்டி (சொக்கர் ரொம்ப கண்ணியமாக திட்ட வைத்துள்ளார்), கோபமாக மாறுகிறான். கெர்ரி கூட ஈராக் நிலைப்பாட்டை சொல்லிவிட்டார். கிருபாகரனின் ப்ரொஃபஸர் ராமானந்தம் ஆதரவு/எதிர்ப்பு நிலையையும் காரணத்தையும் வாசகனாக அறியமுடியவில்லை.

கஷ்டப்பட்டு ‘ஆயிரம் வாசல் உலக’த் தலைப்பை கடைசி வரிகளில் கொண்டு வந்து ‘ப்ரெசண்ட் சார்’ போட்டு முடித்திருக்கிறார். ஆரம்பிக்கும் போதே தலைப்பின் பொருத்தம் விளங்கும்போது, சினிமாத்தனத்தை விட்டிருக்கலாம். பெண்களுக்குக் கூட ஸ்கர்ட், கோட் போன்றவை அலுவலக ஆடைகளாகக் கருதப்படும். ஏனோ ‘சூரிதார்’ மட்டுமே நேர்காணலுக்கு ஏற்ற ஆடை என்று சொல்லிவிடுகிறார். ‘ஸில்லி’ போன்ற பெண்ணியத்துக்கு மட்டுமே தகுந்த வார்த்தைகளை, ஆண்கள் உபயோகிக்கிறார்கள். ‘டோ ண்ட் பீ ஸோ சில்லி’ என்று பெண்கள்தான் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். கோவையில் இது எதிர்மாறோ என்னவோ! மாணவர்களில் ஒருவருக்குக் கூட ஒன்றுவிட்ட அத்தையின் பக்கத்துவீட்டு மாமாவின் மகன் அமெரிக்கப் பல்கலைகளில் படிக்கவில்லை. அவர்களும் ஜி.ஆர்.ஈ., ஜிமாட் என்று எதிலும் கவனத்தைச் சிதறவிடாதது ஆச்சரியம்தான்.

கல்லூரி முதல்வரினால் விடுதிகளை விட்டுவிட்டு வெளியிடங்களில் ஒரு மாதம் காலம் தள்ளவேண்டும். ‘Beg borrow steal’ என்று ஒரு போட்டியில் ஜாலியாகப் பங்கெடுத்திருக்கிறேன். பெண்களின் காதணி, போன வாரம் வந்த திரைப்பட விளம்பரம், பதினெட்டாம் தேதி ஹிந்துவின் தலையங்கம் என்று லிஸ்ட் போட்டிருப்பதற்காக திக்கெட்டும் அலைவோம். அதுபோல, கதை மாணாக்கர்களும் உள்ளூரில் இடம் தேடிக் களைக்கிறார்கள்.

தலைப்பைக் கொண்டு வருவது கூட நியாயம்தான். கிருபாகரன் தன்னுடைய விவாதங்களை முன் பின் முரணாக்குவதும் மனிதருக்கு இயற்கைதான். ஆனால், ஒரு மாதம் தாமதமாக நிறுவனங்கள் வரமாட்டேன் என்று சொல்வதும், அதை மாணவர்கள் அப்படியே சிரமேற்கொள்வதும் நம்பமுடியவில்லை. ராமானந்தம் சொல்வது போல் ‘அவர்கள் திறமையில் அவர்களுக்கே நம்பிக்கையில்லையோ’ என்னும் ஐயப்பாட்டைத்தான் தூக்கி நிறுத்துகிறது. பல கல்லூரிகள் ஆகஸ்ட் மாதம்தான் திறக்கும். சில நிறுவனங்கள் ஜனவரி மாதம் வந்து ஆட்களை பொறுக்க விரும்பும். சிலருக்கு ஜூன். சிலருக்கு ஜூலை. உடனடியாக வேலையில் அமர வேண்டும் என்னும் அடக்கமுடியாக் கொந்தளிப்பும், சீக்கிரமே முடிவை நிர்ணயித்துக் கொள்ளும் வேட்கையும் கல்லூரியின் இறுதியாண்டில் இருப்பது இயற்கையே. அதற்காக ‘ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லை’ என்பது போல் அவசர அவசரமாக ரிஜிஸ்திரர் ஆபீஸ் திருமணம் செய்துகொள்ளப் பறப்பது பொறுத்தமாகவே இல்லை.

‘ஹாஸ்டல் தினங்கள்’ எங்கு முடிகிறதோ அல்லது எதைத் தொட வில்லையோ, அவற்றை நவீனமாக விவரிக்கிறது ‘ஆயிரம் வாசல் உலகம்’. பின்வாசல் பெட்டிக்க்டை அக்கவுண்ட் இல்லை; அதற்கு பதில் இலக்கிய தாகம் தீர்க்கும் பழையபேப்பர் கடை. கெட்ட வார்த்தை பேசும் கல்லூரி இல்லை. மரியாதையான ‘வாங்க போங்க’ சொல்லும் கோவை. எதிர்காலக் கனவுகளை அக்கறை கொள்ளாதவர்கள் அவர்கள். இவர்கள் முதல் வேலையை உயிரினும் மேலாக மதிப்பவர்கள்.

என்னை நிமிர்ந்து உட்கார வைத்த அத்தியாயமாக ஒன்பதையும், கிட்டத்தட்ட நானே எழுதிப்பார்த்துக் கொண்ட பத்தொன்பாவது அத்தியாயமும் கடந்த வாழ்வை கண்முன்னே கொண்டுவந்தது. வழுக்கிக் கொண்டு போகும் கதைகள் மனதில் பதியாது என்று நவீன நாவல்கள் படித்த பிறகு புதிய முடிவு எடுத்திருந்தேன். அவ்வாறு இல்லை; எளிதான வாசிப்பு அனுபவமும் ஆழ்தாக்கங்களை கிளப்பும் என்பதற்கு காட்டாக இருகிறது இந்த நாவல். இவ்வளவு தூரம் ஒன்றுமளவு நன்றாக இருக்கும் என்று யாராவது சொல்லியிருந்தால் முன்பேப் படித்திருப்பேன்.

அடுத்து கிருபாகரன் – லலிதா ஜோடி என்ன ஆனார்கள், சென்னையில் எவ்வாறு வேலை பார்த்தான், லலிதாவை கமர்ஷியல் ஸ்ட்ரீட்டும் அண்டர்க்ரவுண்டும் எவ்வாறு மாற்றியது, ராமநாதன் எஸ்.டி.பியில் நிறுவனம் அமைத்தாரா, மாதவன் மாடிஸனில் இருக்கிறானா, வைதேஹிக்குக் குழந்தை பிறந்ததா, ஜ்யோத்ஸனா கால் செண்டர் நிறுவினாளா, சரவணன் ஆராய்ச்சி மாணவனாக வலைதேய்த்து காலந்தள்ளினானா என்பதை அடுத்த நாவல் மூலம் சொல்லவேண்டும்.

-பாஸ்டன் பாலாஜி
ஆயிரம் வாசல் உலகம்

நன்றி 1: இந்தக் கதையை அச்செடுக்க மெனு கொடுத்த ‘தமிழோவியம்’. சோபாவில் ஜம்மென்று படுத்துக் கொண்டு, இரண்டு பக்கங்களை ஒரு பேப்பரின் இரு பக்கங்களிலும் ப்ரிண்ட் எடுத்து புத்தகம் போல ஆக்க முடிந்ததற்கு.

நன்றி 2: “நூலின் பெயர் ஹாஸ்டல் தினங்கள். மோனா பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக வந்தது. சாவியில் தொடர்கதையாக வந்தது.” ஆகிய தகவல்களை கேட்டதும் பகிர்ந்து கொண்ட சுஜாதா ஸ்பெஷலிஸ்ட் ஐகாரஸ் ப்ரகாஷுக்கு.

Categories: Uncategorized

விமர்சனம் எழுத வேண்டிய படங்கள்

October 11, 2004 2 comments

1. House of Sand and Fog – புத்தகமாக படிப்பது பெட்டர். முதல் அரை மணி நேரத்தைப் போலவே படம் முழுக்க எடுத்துச் செல்லவில்லை. தனிமைக்குத் தள்ளப்பட்ட ஜெனிஃபர் கானலி கவனமின்மையால் வீட்டை இழக்கிறாள். ஈரானை விட்டு நாடு கடத்தப்பட்ட பென் கிங்ஸ்லி இந்த வீட்டை அடிமாட்டு விலைக்கு வாங்குகிறார். மிட்-லைஃப் போராட்டத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டர் பார்வையாளனாக ஜெனிஃபருக்காகத் தடுமாறுகிறார். ஓரளவு நல்ல புத்தகம். அருமையான நடிகர்கள் — கதாபாத்திரங்கள்; அனுபவிக்கத்தக்க படப்பிடிப்பு. ஏமாற்றும் திரைக்கதை/இயக்கம்.

2. Talk to Her – துளி பிசகினால் குழம்பக்கூடிய கதை. முரட்டுக்காளைகளை அடக்கும் ஒருத்தியையும், பணக்கார உளவியல் நிபுணரின் மகளையும் விரும்பும் இருவரின் கதை. பாலே, நவீன நாடகங்களை உறுத்தாமல், பொருத்தமாக இணைத்திருக்கிறார்கள். தற்கால பரபரப்பு செவ்விக்களை கிண்டலடிக்கிறார்கள். கொஞ்சம் ‘ஈடிபஸ்’ தொட்டுக் கொள்கிறார்கள். சிந்தனையை விரிவாக்கும் படம்.

3. Insomnia – படம் முழுக்க நாமும் தூங்காமல் கஷ்டப்படுவது போன்ற பிரமை. அடக்கி வாசிக்கத் தெரிந்திருக்கும் ஆல் பசினோ மீண்டும் ‘அட’ சொல்லவைப்பார். காமெடி மட்டுமே கலக்குவார் என்று நினைத்த ராபின் வில்லியம்ஸும், ஆஸ்கார் நாயகி ஹில்லாரி ஸ்வான்க்ஸும் கூட இருப்பதாலோ? யார் நல்லவர்கள், சந்தர்ப்பவசத்தால் குற்றவாளியாவோமோ, வழிகாட்டுனர்களே வழுக்கியிருந்தால், குடும்பத்துக்காகக் கடமைகளில் சமரசம் என்று பல சங்கதிகளைத் தொடுவதால், கொஞ்சம் தாக்கம் குறைச்சலாக இருக்கிறது.

4. Mr. Deeds – 1936-இல் வெளிவந்த Mr. Deeds Goes to Town என்னும் படத்தின் மறுபதிப்பு. ஆங்காங்கே போர் அடித்தாலும் அவ்வப்போது வரும் ஜான் மெக்என்ரோ போன்ற தலைகள் சுவாரசியபடுத்துகின்றன. கவலையை மறக்க பார்க்கலாம். பார்த்த கொஞ்ச நேரத்தில் மறக்கலாம்.

5. Half Past Dead – அர்ஜுன் இன்னும் தமிழில் சுடவில்லை. மனைவியைக் கொன்றவனை ஜெயிலுக்கு வந்து கண்டுபிடிக்கும் கதை. ராஜேஷ்குமார் பாக்கெட் நாவல் போன்ற விவரிப்பு. நல்ல டைம்பாஸ் படம்.

6. The Green Mile – சோடா பாட்டில் சொல்லியதால் பார்த்த படம். ஸ்டீபன் கிங் இந்த மாதிரி புத்தகங்களும் பின்னியிருக்கார் என்பதைச் சொல்கிறது. எதற்காக ஃப்ளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது என்பது புரியவில்லை. அதிக காலம் வாழ்வதால் என்ன ஆகும் என்பதை சொக்கனும் ஒரு சிறுகதையில் கோடிட்டுக் காட்டியிருப்பார்.’கோஃபி’ நிச்சயம் பல இடங்களில் மனதைத் தொடுவார்.

7. The Scorpion King – தமிழுக்கு மொழியாக்கம் செய்யத்தகுந்த படம். இளைய தலைமுறைக்கு ஏற்ற ‘வாய்’ வைத்தியம் (போன படத்தில் கூட இதே முறையில் குணமளிக்கப் படுகிறது!); வன்முறை நிறைந்த அசகாய வாட்போர்கள்; பாலைவனத்து டூயட்; விவேக் காமெடி — என்று சகல அம்சங்களும் நிறைந்த மசாலா காவியம்.

8. Intolerable Cruelty – அருமையான கதை. சொதப்பலான இறுதிப் பகுதி. ஜீவனாம்சத்துக்காகவே திருமணம் முடிக்கும் காரியக்காரப் பெண்ணுக்கும் — அத்தகைய கரக்கும் பட்சிகளிடம் இருந்து நயாபைசா கொடுக்கவிடாமல் வாதிடும் விவாகரத்து ஸ்பெஷலிஸ்ட்டுக்கும் காதல் மலர்ந்தால்…! கமல் இந்த மாதிரி வேடங்கள் நிறைய கட்டிவிட்டார். சூர்யாவும் ஸ்னேஹாவும் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.

9. The Cell – வித்தியாசமான சங்கிலித்தொடர் கொலையாளியின் கதை + படமாக்கம். நம்ம ஊர் தர்சேம் சிங் இயக்குநர். கன்னாபின்னா கற்பனையில் அசத்தும், பயமுறுத்தும் அரங்க அமைப்புகளைக் கொண்டு வருகிறார்கள். அதுவே திகட்டி, பார்வையாளனை ஒதுக்கிவிட்டு படத்தை முன்னெடுத்துச் செல்கிறது. கெட்ட கனவில் வரும் அத்தனை அருவருப்பான சமாசாரங்களையும் எப்படித்தான் ஆவணப்படுத்தினார்களோ! ஜெனிஃபர் லோபஸ் அருமையான பாடகி; Maid in Manhattan போன்ற படங்களில் அசத்துபவர். இங்கு பொருந்தவில்லை.

10. Apocalypse Now – மார்லன் ப்ராண்டோ இறந்தவுடன் எல்லோரும் காட்ஃபாதர் குறித்துப் பேச, ‘பார்வை’ மெய்யப்பன் மட்டும் இந்தப் படத்தின் திரைக்கதைக்கான சுட்டியை எடுத்துப் போட்டார். படத்தை குறித்து நிறைய சொல்லலாம். நதியின் ஊடே மார்ட்டின் ஷீனின் பயணங்களைப் பார்த்தால் கெர்ரி மேற்கொண்ட அதி ஆபத்தான ஸ்விஃப்ட் படகு ரோந்துகளை அறியலாம். படத்தை சரியாகப் புரிந்துகொள்ள Conrad-இன் “Heart of Darkness” உதவும் என்கிறார்கள். படத்தை மீண்டும் பார்த்து கடைசி உரையாடல்களை அசை போட்ட பிறகு மீண்டும் பதியவேண்டும். வியட்னாம் சண்டையை குறித்த படங்களின் விரிவான ஆழமான அலசலுக்கு: Acid Redux – By David Edelstein

Categories: Uncategorized