Archive

Archive for October 15, 2004

ஒற்றை வரி எண்ணங்கள் – ஆனந்த விகடன்.காம்

October 15, 2004 2 comments

விகடனில் நல்ல கதைகள் வருவதில்லை என்று யார் சொன்னது? வித்தியாசமான பிண்ணனியில் எளிமையான கதை; நரசய்யாவின் முத்திரை அட்வைஸோடு

பிராயச்சித்தம் – நரசய்யா
“இன்னிக்கு பாப் நேராக நிக்கறாப்பல போட்டிருக்கான். அப்படின்னா ஒண்ணு இருக்கும்!” என்றான். அவன் குறிப்பிட்டது, அப்போது சட்டா என்றழைக்கப்பட்டு பலரும் ஆடிவந்த சூதாட்டம். காட்டன் நம்பர்களைப் பற்றியது. ஓபனிங் க்ளோஸிங் நம்பர்கள் — தினமும் அதில் பந்தயம். அதற்குத் துணையாக ஒரு யுக்திதான் இது! நான் சும்மா இருக்கவில்லை. “ஏன் அப்படிச் சொல்றே? இன்னிக்குப் பாரு, 2 — 3 தான் வரும்” என்றேன். அது பற்றி ஒரு விஷயமும் தெரியாத நான் சொன்னதை அவன் அப்படியே நம்பிவிட்டான். “2 — ஓபனிங்… 3 க்ளோஸிங் அப்படித் தானே?”

‘‘செயின்ட் அகஸ்டின் சொல்லி இருக்காராம்… ‘நீ ஞானஸ்நானம் செய்விக்கப் பட்டவனாயிருந்தால், ஆண்டவனின் எல்லாக் கட்டளைகளுக்கும் அடங்கி வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். அதற்காக வாழ்நாள் முழுவதும் ஒருவன் தவறே செய்யாமல் இருப்பான் என்று நான் சொல்லவில்லை. ஞானஸ்நானம் அந்தச் சிறிய தவறுகளை மன்னித்து, அவனைப் பரிசுத்தனாக வைத்திருக்கும். அதற்கு நீ தினமும் செய்யும் பிரார்த்தனையே போதும். சிறிய தவறுகள் மன்னிக்கப்பட்டு, உன்னை ஆண்டவன் ஏற்றுக்கொள்வார். ஆனால், இயேசுவின் தேகத்தினின்றும் உன்னையே அகற்றிக்கொள்ளும்படியான பெரிய தவறுகளைச் செய்யாதே! அப்படிச் செய்தால் அதற்குப் பிராயச்சித்தம் செய்தாக வேண்டும்…’ இதைச் சொல்லிவிட்டு அந்தப் பாதிரியார் எனக்குப் பெரிய தவறுகள் எவை என விளக்கினார்…” மெதுவாகச் சாப்பிட்டுக்கொண்டு தன்னையே மறந்தவனாகி யோசனையில் ஆழ்ந்துவிட்டான் அவன். நானும் அவனைத் தொந்தரவு செய்யாது பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.


கவர்ச்சி – ஆனந்த் ராகவ்:
என்ன சார்… நீங்களுமா! செட் தோசை


கேள்வி – பதில் – ஹாய் மதன்:
ரெ.வேல்முருகன், சீர்காழி.
விஷ பாட்டிலிலேயே விஷம் அல்லது Poison என்று எழுதி, மண்டை யோட்டுக் குறியீடு போட்டிருப்பதாகக் காட்டுவதைத்தானே தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அபத்தக் காட்சியாகக் கருதமுடியும்?

அதை ‘பி’ காம்ப்ளெக்ஸ் டானிக் என்று நீங்கள் நினைத்து விடுவீர்களோ என்கிற கவலை டைரக்டருக்கு! அதை, பின்னணி இசையோடு ‘க்ளோஸப்’பில் காட்டினால்தானே, நீங்கள் பதறுவீர்கள்?! ‘தமிழ் சினிமாவின் அபத்தக் காட்சிகள்’ என்று Yellow Pages மாதிரி தனிப் புத்தகமே போடலாம்! அதே சமயம், கொஞ்சம் கொஞ்சமாக (ஸ்லோமோஷனில்!) அபத்தங்கள் குறைந்துகொண்டு வருவதும் உண்மை!

அடுத்த நியூஸ் மேட்டர் படிக்கலியா மதன் சார்?


சந்திரமுகி:
படத்தின் ஆரம்பமே அமர்க்களம்தான். டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் என எல்லா மாநிலங்களின் தலைநகரங்களைக்காட்டி அங்கே உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் படுத்துக் கிடப்பார்கள். ‘யாராலேயும் குணப்படுத்த முடியலியே” என்று டாக்டர்கள் கையைப் பிசைந்தபடியிருக்க, ‘இவங்களைக் குணப்படுத் தணும்னா அதுக்கு ஒரே ஒருத்தர் இருக்கார். அவருதான்…” என்று சொல்ல, ரஜினி என்ட்ரி. அதிரடி வைத்தியத்தில் அத்தனை பேரையும் காப்பாற்றுவாராம் ரஜினி.

கடைசியில், சென்னையில் சித்தப் பிரமை பிடித்தவர்போல, பிரபுவின் மனைவி சிம்ரன். பிரச்னை என்ன என்று பல டாக்டர்கள் சோதித்துப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘‘நீங்க எல்லோரும் போங்க. அவர் வந்து காப்பாத்துவாரு” என்கிறார் பிரபு. உடனே சுற்றியிருப் பவர்கள், ‘‘ஆமா, அவரு எங்க வர? எப்போ ட்ரீட்மெண்ட் குடுக்க? குடுத்தாலும் எடுபடுமா? அவரு வந்தும் குணமாகலேன்னா?” என ஆளாளுக்குக் கேள்விகள். ‘‘அவர் எப்போ வருவார்… எப்படி வருவார்னு யாருக்குமே தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல வந்து நிப்பார். இப்போ பாருங்க” என ரஜினியின் பிரபல வசனம் சொல்லி, பிரபு அர்த்தத்துடன் சிரிக்க, புயலாக ரஜினி தரிசனம்.

‘‘தாங்க்ஸ் குரு” என்று ரஜினிக்கு பிரபு செல்லமாக முத்தம் கொடுக்க… ‘‘அதான் வந்துட்டேன்ல, தாங்க்ஸ் எனக்கில்ல…” என்று விரல் உயர்த்தி வானம் காட்டுவாராம் ரஜினி. ‘‘உங்க வாய்ஸ் எடு படலைனு சொன்னாங்களே குரு” என்று பிரபு கேட்க, ‘‘இப்போதானே கண்ணா ரியல் ஆட்டமே ஆரம்பம்” என பஞ்ச் வைப்பாராம்.

யாராவது ரஜினி சாருக்கு ‘தம்பிக்கு எந்த ஊரு’ போட்டுக் காட்டி எப்படி ஹிட் படம் எடுப்பது என்று சொல்லுங்கப்பா… ‘முருகா காப்பாத்து! இதை முடிஞ்சா மலையேத்து… கந்தா காப்பாத்து!’

Categories: Uncategorized

நவராத்திரி நினைவுகள் – ச.திருமலை

October 15, 2004 Leave a comment

Siva Rama (Cincinnatti) Golu
அமெரிக்காவில் அக்டோ பர் 31 ஹாலோவின் (Halloween) தினத்திலிருந்து ஆரம்பித்து ஒரு பண்டிகைக் களை கட்டிவிடும். ஹாலோவின் தினம் முதல் ஆரம்பித்து, தாங்க்ஸ் கிவிங், கிரிஸ்மஸ்,நியு இயர் வரை தொடர்ந்து அமெரிக்காவில் பண்டிகைக் காலம்தான். குளிர்காலம் மெல்ல ஆரம்பிக்கும், வானம் எப்பொழுதுமே இருள் கவிந்து, மப்பும் மந்தாரமாக இருக்கத் தொடங்கும். இருள் சீக்கிரமே கவியத் தொடங்கும், கிறிஸ்மஸ் தினத்தன்று வெள்ளைப் பனி பெய்து, வெள்ளைக் கிறிஸ்மஸ்ஸாக்கி விடும். ஹோம் அலோன் படம் நினைவில் இருக்கிறதா? ஸ்னோ பொழிந்த பின், வண்ண அலங்கார விளக்குகள் வீடுகளூக்கு புது பொலிவையும், அழகையும் கொடுக்கும். வீட்டுக் கூரைகள் எல்லாம் வெள்ளைப் போர்வை போர்த்திக் கொண்டு, நுனியில் கம்பியாக உறை பனி தொங்கிக் கொண்டு, இரவிலும் கூட வெண்மையை உமிழ்ந்து கொண்டு இருக்கும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். அந்த நாட்களில் வீடுகளும், பெரிய கட்டிடங்களும் மேலும் வண்ண விளக்குகளாலும், பல்வேறு வித அலங்காரங்களாலும், ஜொலித்துக் கொண்டிருக்கும். வெண்பனிப் போர்வை அந்த அலங்காரங்களுக்கு மெலும் அழகு சேர்க்கும். தெருக்கள், மரங்கள் எல்லாம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கத் தொடங்கப் பட்டிருக்கும். ஷாப்பிங் மால்களிலும், கடைகளிலும் சிறப்பு அலங்காரங்கள் தூள் பறக்கும். ஆங்காங்கே கிறிஸ்மஸ் தாத்தா அமர்ந்து கொண்டு குழந்தைகளுடன் போஸ் கொடுத்த படி இருப்பார். தள்ளுபடி விற்பனைகளும் கூட்டங்களும் குவியத் தொடங்கி, ஒரு மூன்று மாதத்துக்கு அமெரிக்காவே சற்று திருவிழாக் களை பூசிக் கொண்டு நிற்கும். நியுயார்க்கில் உள்ள ராக்கஃபெல்லர் மையத்தில், NBC தொலைக்காட்சிக் கட்டிடத்தின் முன் உலகத்திலேயே பெரிய கிறிஸ்மஸ் மரம் கொண்ர்ந்து வந்து நிறுவப்படும் அதற்கு GE ஏறத்தாழ முப்பதினாயிரம் வண்ண விளக்குகளைப் பொருத்தி வண்ணமயமான கிறிஸ்மஸ் மரமாக மாற்றி விடுவார்கள். அந்த மரத்தை கண்டுபிடித்து வெட்டுவதிலிருந்து, அங்கு கொண்டு வருவது வரை டி வியில் காட்டுவார்கள். டிசம்பர் 2 அன்று யாராவது முக்கியஸ்தர் வந்து பொத்தானை அமுக்கி மரத்துக்கு ஒளியேற்றுவார்கள். அது பெரிய நிகழ்ச்சியாக நடந்து டி வியில் காட்டப் படும். அந்த மரம் ஜனவரி இரண்டு வரை அங்கு இருக்கும், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து காண்பார்கள். இதெல்லாம் அமெரிக்க பண்டிகை காலக் கொண்டாட்டங்களின் ஒருவித வியாபாரத் தனமான அங்கங்கள். இங்கே பண்டிகைகள் கொண்டாடப்படுவதும் அதற்காக விடுமுறைகள் விடப்படுவதும் எல்லாமே, வியாபாரங்களை உத்தேசித்துதான். இந்தியாவிலும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மார்க்கெட்டிங் திருநாளாக மாற்றப்பட்டு வருகிறது.

South Indian Specialtiesஹாலோவின் தினத்தன்று பெரியவர்களும் குழந்தைகளும் மாறுவேடங்கள் அணிந்து கொள்வார்கள். பூசணிக்காய் வடிவிலுள்ள ஒரு கூடையைக் கையில் ஏந்திக் கொண்டு வீடு வீடாகச் சென்று சாக்லெட் வசூல் பண்ணுவார்கள். ஏறத்தாள அதே சமயத்தில் நவராத்திரி தினங்களன்று குழந்தைகள் மாறு வேடங்கள் அணிந்து கொண்டு வீடு வீடாக, ஒரு கூடையை கையில் எடுத்துக் கொண்டு போய் சுண்டல் வசூல் பண்ணுவார்கள். நமது ஊரில் ஏறத்தாள இதே மாதத்தில் தொடங்கும் பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பித்து, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை என்று தொடர்ந்து பொங்கலில் வந்து முடியும். ஆக உலகெங்கும், குளிர் காலங்களில் மகிழ்ச்சியாக கழிக்கும் பல்வேறு பண்டிகைகள் அமைந்து விடுகின்றன போலும், நமக்கோ விநாயகர் சதூர்த்தியில் ஆரம்பித்து பொங்கல் வரை தொடர்கிறது. அமெரிக்கர்களுக்கோ ஹாலோவினில் ஆரம்பித்து புத்தாண்டில் முடிகிறது. நமது ஊரில் நவராத்திரிக்கு கொலு வைக்கிறார்கள், இங்கோ, கிரிஸ்மஸை முன்னிட்டு, அலங்கரிக்கப் பட்ட கிறிஸ்மஸ் மரமும், வீட்டின் முன் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப் பட்ட மான் பொம்மைகளும், கிறிஸ்மஸ் தாத்தாவின் சாராட் வண்டியும், ரயில் வண்டிகளும் அமைக்கப் படுகின்றன. ஆக அங்கே கொலு என்றால் இங்கே கிறிஸ்மஸ் பொம்மைகள். ஆக அதிலும் ஒரு ஒற்றுமை.

அமெரிக்கத் திருவிழாக்கள் தொடங்கும் நாளான ஹாலோவின் தினத்தில் குழந்தைகள் வித விதமான மாறுவேடங்கள் அணிந்து கொண்டு ‘டிரிக் ஆர் ட்ரீட்’ (Trick or Treat) என்று வீடாக வந்து கதவைத் தட்டி, சாக்லேட், மிட்டாய்கள் எல்லாம் கேட்கும் பொழுதெல்லாம் எனக்கு தவறாமல் நவராத்திரி நாட்கள் நினைவுக்கு வந்து விடும். மனசு உடனே தறிகெட்டு பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால், முப்பது வருடங்களுக்கு முன்பு டைம் டிராவல் செய்யப் போய் விடும்.

மோக முள் நாவல், நவராத்திரியின் போது கும்பகோணம் எப்படிக் கோலாகலமாக காட்சியளிக்கிறது என்பதில்தான் ஆரம்பிக்கும். அந்த வர்ணணையை, தி ஜா ரா எழுத்தில்தான் படிக்க வேண்டும். அப்படித்தான் நவராத்திரி இன்றும் பல்வேறு ஊர்களில் கொண்டாடப்படுவதாய் நம்புகிறேன்.

Balloon Golu - Bathroomஎப்படி அமெரிக்காவில் பண்டிகை நாட்கள், வானம் கருத்த, வெண்பனி பொழியும், குளிர்கால தினங்களில் ஆரம்பிக்கிறதோ அதே போல், நவராத்திரி மழைக் காலப் பொழுதில் ஆரம்பிக்கும். லேசான குளிர் கவியத் தொடங்கும் பொழுதின் முன்னிரவுகள் ஒருவித வண்ணமயமான நாட்களாகக் கழியும். மழை மேகம் கூடிய மாலைகளில், வாசல் தெளிக்கப் பட்டு, கோலமிடப்பட்டு, மாலைப் பொழுதுகளில் லேசான பதற்றம் தொற்றிக் கொள்ளும். அடுத்து வரப்போகும் தீபாவளிக்கு முன்னோடி தினங்கள் இவை.

புது பொம்மைகளை அலைந்து, பார்த்து வாங்குவதில் தொடங்கும் தினங்கள் பரவசமானவை. ஊரின் கோடியில், குளத்துக்கு அருகே பொம்மை செய்பவர்கள் வீடு இருக்கும். அழகழகான பொம்மைகள், பெரும்பாலும் சாமி உருவங்கள், போலீஸ்காரன், செட்டியார், குழந்தை, பெண், மிருகங்கள், என்று ஒரு குறிப்பிட்ட பொம்மைகளே மீண்டும் மீண்டும் செய்யப்படும். களிமண்ணை அச்சில் இட்டு செய்வார்கள். அதன் பின் அவற்றிற்கு அடிக்கப்படும் வண்ணங்களில்தான் அந்தப் பொம்மைகள் உயிர்பெரும். மொத்தமாகவும், சில்லரையாகவும் அவர்களிடம் சென்று பொம்மைகள் வாங்கிக் கொள்ளலாம். இப்பொழுதெல்லாம் காதிகிராஃப்ட், பூம்புகார் போன்ற இடங்களில் நவராத்திரி காலங்களில் பொம்மைக் கண்காட்சியே ஏற்பாடு செய்கிறார்கள். பொம்மைகள், வாங்கி, கொலுவில் வைத்து, அவற்றை மீண்டும் உடையாத வண்ணம் பேப்பர்கள் சுற்றி, அடுத்தவருடக் கொலுவுக்கு மீண்டும் பயன்படுத்துவது ஒரு பெரிய வேலை. கொலு அமைக்கும் பொழுது, பெரும்பாலும் மண்ணால் செய்த பொம்மைகளை வாங்கி அமைத்தால், களிமண் பொம்மைகள் செய்யும் கைவினைக் கலைஞர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். அவர்களது கலையும் தொழிலும் நசிவுறாமல் தொடரும். பொம்மைகள் வைத்துக் கொலு வைப்பதினால் வீட்டில் உள்ளவர்களுக்கும், ஆண்டிற்கொருமுறை ஒரு உற்சாகமான பொழுது போக்கு அமையும். இயந்திரத்தனமான வாழ்க்கையில் இது போன்ற தருணங்கள் புத்துணர்வு அளிக்கும். கலையுணர்வையும், ரசனையுணர்வையும் மேலும் தூண்டும்.

Ganesh Chandra (Tamiloviam) Parkபரண்களில் தூங்கும் பொம்மைகளை எடுத்து பத்திரமாக கீழே இறக்குவது ஒரு சுவாரசியமான வேலை. அவ்வாறு அவற்றை இறக்க ஏறும் பொழுது பரண்களில் தூசியின் நடுவே ஒரு தொல் பொருள் ஆராய்ச்சியே நடக்கும். காணாமல் போன பழைய பொருட்கள் கண்ணில் பட்டு, நினைவோடையில் எண்ணங்களை இழுத்துச் செல்லும் நேரங்கள் மற்றுமொரு அனுபவம். பின்னர் பெட்டிகளை பத்திரமாக இறக்கிய பின், கொலுப் படிகள் அமைக்க வேண்டும். அதற்காக வைக்கப் பட்டிருக்கும் பெட்டிகளையும், படிகளையும் எடுத்து தூசி தட்டி, அலம்பி தயார் செய்ய வேண்டும். பின்னர் அவற்றை அமைத்து, எந்தப் படியில் எந்த பொம்மை என நிர்மாணித்து, அந்த ஆண்டு சேர்க்க வேண்டிய புதிய பொம்மைகளை சேர்த்து, பாலம் கட்டி, குளம் கட்டி, தண்ணீர் விட்டு, ரயில் பாதை அமைத்து, சீரியல் பல்புகளை எரிய விட்டு, கொலுவை அமர்க்களமாக ஆக்க ஏகப் பட்ட முஸ்தீபுகள் நடக்கும். பெண்களுக்கோ, ஒன்பது தினங்களும் என்ன பட்டுப் புடவை அணிவது, எங்கு எந்தப் பாட்டுப் பாடுவது, குழந்தைகளுக்கு என்று என்ன வேடம் கட்டுவது என்று ஏகப் பட்ட பரபரப்புகள். இதன் நடுவே, சுண்டல் தயார் செய்வது, அக்கம் பக்கத்து வீடுகளை கொலுவுக்கு அழைப்பது, அவர்களுக்கு கொடுப்பதற்கு வெற்றிலை பாக்கு, ஜாக்கெட் துணி சேகரிப்பது, என்று படு பிஸியான நாட்களாக அமைந்து விடும் நவராத்திரி காலங்கள். குழந்தைகள் கிருஷ்ணர் வேடங்களிலும், இன்ன பிற வேடங்களிலும் அக்கம்பக்கத்து வீடுகளுக்கு சென்று விடுவர். சுண்டலும், பயறுகளும், பொரியும், கடலையுமாக வீடு நிரம்பி விடும்.

Balloon Golu - Kids Playgroundநவராத்திரியின் கடைசி இரு நாட்கள் முக்கியமானவை. அன்றுதான் அலுவலகங்களிலும், தொழிற்கூடங்களிலும், கடைகளிலும் விசேஷமாக இருக்கும். இப்பொழுதெல்லாம் ஒலிபெருக்கியின் அலறல்கள் தாங்க முடிவதில்லை. கடை வீதிகளில் ஒரே நேரத்தில் தாயே கருமாரி, மாணிக்க வீணையே, அம்பிகையே ஈஸ்வரியே, மாரியம்மா என்று ஏக காலத்தில் எல் ஆர் ஈஸ்வரி, சுசீலா, டி எம் எஸ், சீர்காழி எல்லோரும், உச்ச ஸ்தாயியில் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கடை வீதியெங்கும், சந்தனமும், ஊதுபத்தி வாசமும், அவலும், பொரியும், பூம்பருப்பு சுண்டலும், விபூதியும், குங்குமமாகப் பக்தி மணம் கமழும். இதெல்லாம் கலந்த ஒரு வாசனைதான் பக்தி மணம் போலும். பெரும்பாலான கடைகளில் தீபாவளிப் போனள் சரஸ்வதி பூஜை அன்றே ஆரிவிக்கப் படும். கடைகள், சிறு தொழிற்சாலைகள் எல்லாம் வண்ண சீரியல் விளக்குகள் அலங்கரிக்கும். எங்கள் பக்கத்து வீட்டு தங்க நகை ஆசாரி, தனது பெரிய இரும்புப் பெட்டிக்கு பெரிய சைசில், சந்தனம், குங்குமம், வீபூதி அணிவித்து, அதற்கு மேல் சரஸ்வதி முகம் வைத்து பூஜை பண்ணுவார். பெரிய தொந்திக்கு மேல் துண்டைக் கட்டிக் கொண்டு, பயபக்தியுடன் பக்திப் பாடல்கள் பாடி, சூட ஆராதனைக் காண்பித்த பின் சுண்டல் வினியோகம் தொடங்கும். முழு பூஜையுமே ஒருவிதக் கவித்துமாக இருக்கும். மறக்க முடியாத நாட்கள அவை.

ஆயுத பூஜையன்று வீட்டில் உள்ள அனைத்து ஆயுதங்களும் சுத்தம் செய்யப் பட்டு, எண்ணெய் பூசப் பட்டு, சந்தன குங்கும அலங்காரங்களுடன் பூஜைக்கு ஆஜராகி இருக்கும், இது தவிர வீட்டில் உள்ள சைக்கிள் முதலான வாகனங்களும் சுத்தமாக குளிப்பாட்டப் பட்டு, எண்ணெய் காண்பிக்கப் பட்டு, சந்தன குங்கும அலங்காரங்களுடன் காட்சியளிக்கும். ஒரு விஜயதசமி அன்று என் தாத்தா, நெல்லைப் பரப்பி அதில் என் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக ‘அ’ எழுதச் செல்லிக் கொடுத்தது லேசாக நினைவில் இருக்கிறது. சரஸ்வதி பூஜை வருடத்தில் முக்கியமான ஒரு நாள். ஏனென்றால் அன்று எதையும் படிக்க வேண்டியதில்லை. முக்கியமான புத்தகங்கள் எல்லாம் சேமிக்கப் பட்டு, மேடையில் அடுக்கி வைக்கப் பட்டு அவையெல்லாம் ஒரு பட்டு வேட்டியினால் மறைக்கப் பட்டு அதன் மீது சரஸ்வதி பொம்மை, படங்கள் எல்லாம் ஏற்றி வைக்கப் படும். ஏடு அடுக்குவது என்று பெயர். புஸ்தகங்களை சரஸ்வதி அருள்பாலித்த பின் மறு நாள் விஜய தசமி அன்று ஏடு பிரித்து படிக்கும் வைபவம் நடக்கும். காலை எழுந்து,பூஜைகள் முடித்து, முக்கிய புஸ்தகங்களிலிருந்து கொஞ்சம் சாம்பிளுக்குப் படித்த பின்புதான் மற்ற வேலைகள்.

Thirumala Thirupathi Ezhumalaiநவராத்திரி சமயத்தில் கோவில்களும் அமர்க்களப் படும். பெரும்பாலான கோவில்களில், கொலு என்று சொல்லி கோவிலில் உள்ள உற்சவர் எழுதருளும் வாகனங்கள் எல்லாம் ஒரே இடத்தில் வைக்கப் பட்டிருக்கும் அவைதான் கோவிலில் வைக்கப்படும் கொலுக்கள். பொம்மைகளை நினைத்துப் போனால் ஏமாந்து விடுவோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஆடி வீதியில், நவராத்திரியில் முக்கிய கச்சேரிகள் இருக்கும். அதற்கு வரும் ஜேசுதாசையும், இளையராஜாவையும் சினிமா பாட்டுப் பாடச் சொல்லி, மக்கள் கத்தி வெறுக்கடிக்கப் பண்ணி விடுவார்கள். பாடகர்கள் பாதி நிகழ்ச்சியிலேயே கோவித்துக் கொண்டு போவதும் நடக்கும். சினிமாவில் வரும் நவராத்திரிகளில், ஏ பி நாகராஜனனின் நவராத்திரி மறக்கமுடியாத ஒன்று. அது போலவே இரு கோடுகளில் வரும் நவராத்திரி பாடலும் கூட.

மெதுவாக நவராத்திரி முடியத் தொடங்குகையில், அடுத்து வரப்போகும் தீபாவளிக்குப் புதுத் துணி, பட்டாஸுகள் அன்று அடுத்த பண்டிகைக்கு சுறுசுறுப்பாக தயாராகி விடுவார்கள். ஹாலோவினில் ஆரம்பித்து எங்கோ போய் விட்டேன் பாருங்கள். இப்படிதான் அடிக்கடி நினைவு குரங்கு போல் தாவி விடுகிறது. சரி, சரி, பக்கத்து வீட்டுக் கொலுவுக்குப் போய் சுண்டல் வாங்கிக் கொண்டு வரவேண்டும், அப்புறம் பார்க்கலாம்.

Categories: Uncategorized