Home > Uncategorized > வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்!

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்!


உபநயனம் – சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஐந்து வயதில் எழுத்து சொல்லிக் கொடுத்தோம். அது அட்சராப்யாசம். ஏழு வயதில் ஆரம்பிப்பது கல்வி. பரிணாம வளர்ச்சியில், தான் வாங்கிக்கொண்டதை மனதில் நிறுத்தி மறுபடி வெளியிடும் திறன் ஏழாம் வயதில்தான் வருகிறது. இதுவே உபநயன சம்ஸ்காரம் செய்ய ஏற்ற வயது.

‘கேட்பவற்றைக் கிரகித்து மனதில் நிறுத்தும் சக்தி அறுபது வயதுவரை இருக்கும்’ என்கிறது ஆயுர்வேதம். அறுபது வயதுக்குப் பிறகு இந்தச் சக்தி குறையத் தொடங்கும். ஒரு முதியவர், நாள் முழுக்கச் செய்தித் தாளைப் புரட்டிப் புரட்டிப் படித்துக் கொண்டே இருப்பார். ‘பேப்பரில் என்ன விசேஷம்?’ என்று கேட்டால் ‘பெரிசா ஒண்ணும் இல்லே…’ என்பார். அவ்வளவுதான் அவர் நினைவாற்றல்.

கர்ப்பகாலத்தையும் சேர்த்து எட்டாம் வயதில் உபநயனம் செய்விக்கவேண்டும் என்கிறார்கள். அதாவது, பிறந்து ஏழாவது வயதில். ஐந்து, ஆறு வயதுகளில் எழுத்து அறிமுகமாகிறது. ஏழாம் வயதில் இருந்து விசேஷமான கல்வியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கவேண்டும்.

பழைய காலத்தில் ஒரு நடைமுறை இருந்தது. குருகுல வாசம். குரு இருக்கும் இடத்தில் மாணவன் சென்று தங்கிக் கல்வி கற்பான். குரு தனிக் கவனம் செலுத்தி மாணவனுக்குக் கற்பிப்பார். மாணவனும் அதே கவனத்தோடு கற்றுக்கொள்வான்.

நமது தற்போதைய மேற்கத்தியக் கல்வி முறையில் ஓர் ஆசிரியர் பல மாணவர் களுக்குக் கற்பிப்பதால் எல்லா மாணவர்கள் மீதும் சமமான கவனம் செலுத்த முடியாமல் போகிறது. அதனால்தான் ஒரு மாணவன் நூறு மதிப்பெண்களும் இன்னொருவன் முப்பது மதிப்பெண்களும் வாங்க நேர்கிறது. இந்தக் குறை இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் நம் முன்னோர்கள் குருகுல வாசத்தைப் பின்பற்றினார்கள். குருவுடனான இந்த நேரடித் தொடர்பு மாணவனுக்கு உதவியாக இருக்கும் என்று கருதினார்கள்.

யார் யாருக்கு, எந்தக் கல்வி உகந்ததாக இருக்கிறதோ குருவானவர் அதைக் கற்பிப்பார். இதில் எந்தப் பாகுபாடும் கிடையாது. ராஜா மகனாக இருந்தாலும் சரி, சாதாரணக் குடிமகனாக இருந்தாலும் சரி… குருகுலத்தில் இருவரும் ஒன்றுதான். அங்கே ‘இவனுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பது என் கடமை!’ என்பதுதான் குருவின் எண்ணமாக இருக்கும். ‘இவரிடம் கல்வி பெறுவது என் உரிமை’ என்பதாக மாணவன் எண்ணுவான். இங்கே பணத்துக்கோ வேறு விஷயங்களுக்கோ சிந்தனை செல்வதில்லை. கிருஷ்ண பகவான் இளவரசனாக இருந்தாலும் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் குசேலனோடு சமமாக இருந்துதான் படித்தான்.

ராமன், தன் சகோதரர்களோடு குருகுல வாசம் செய்துதான் கல்வி பெற்றார். அவர் பெரிய ராஜாவின் பிள்ளை ஆயிற்றே… அவர் என்ன கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது? அவருக்கு ராஜ்யபாரத்தைச் சுமக்கிற கல்வி கொடுத்தார்கள். குதிரையேற, போர்புரிய, நிர்வாகம் செய்ய, ஆயுதங்கள் பிரயோகிக்கக் கற்றுக் கொடுத்தார்கள்.

இப்படியாக _ வியாபாரம், அன்றாட வாழ்க்கையைச் சிறப்பாக வாழ, தொழில் செய்ய, வேதக் கல்வி… என்று அவரவருக்கு உகந்த கல்வியை குருகுலத்தில் சொல்லித் தந்தார்கள். இதற்குத்தான் உபநயன சம்ஸ்காரம் என்று பெயர்.

கல்வி இல்லையென்றால், அவன் குருடன். அவனால் எந்தக் காரியத்தையும் ஒழுங்காகச் செய்ய முடியாது. ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை \ கல்வி. அப்படி இவனைக் கல்வி கற்க அனுப்புவதை ஒரு சம்ஸ்காரமாகக் கடைப்பிடிக்கச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

இந்த சம்ஸ்காரம் எவ்வளவு உயர்ந்ததென்று சொல்கிறேன். இந்த உலகில் நாம் பலரோடு சேர்ந்து வாழவேண்டியிருக்கிறது. நமது தேவைகளையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டியிருக் கிறது. இந்த வாழ்க்கை நமக்குச் சரியாகக் கிடைக்கவேண்டுமானால் அதற்கு வழிகாட்டியாக இருப்பது கல்விதான். அன்றாட வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது, சிரமங்கள் ஏற்படும்போது அவற்றைத் தீர்ப்பது எப்படி என்கிற அறிவை நமக்கு ஊட்டுவது கல்வி. அதனால்தான் ‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்கிறோம்.

இந்த பூமி நமக்கு எவ்வளவு சுகத்தைக் கொடுக்கிறது..! இவ்வளவு சுகங்களையும் அனுபவிப்பவர்கள் மூன்று விதமானவர்கள். ஒருவன் சூரன். இன்னொருவன் கல்விமான். மற்றவன் ஊழியம் செய்பவன். சூரன் ராஜ்யத்தை ஆள வந்ததால் அனைத்தையும் அனுபவிக்கிறான். அவனுக்குச் ஊழியம் செய்பவனும் ‘காக்காய் பிடிப்பதன்’ மூலம் காரியங்களைச் சாதித்துக்கொள்கிறான். கல்விமானுக்கோ அவன் விரும்பியதெல்லாம் சிரமமில்லாமலேயே கிடைத்து விடுகிறது. இதைத்தான்&

ஸ்வர்ண புஷ்பாம் ப்ரதிவீம்
சின்வந்தி புருஷா: த்ரய:
சூரஸ்ய க்ருதவித்யஸ்ய
யஸ்ய ஜானாதி சேவிதும்

என்கிறது ஒரு ஸ்லோகம். ‘எந்தக் கல்வியைக் கற்றுக்கொண்டால், காலமாறுபாட்டிலும் அது உதவுகிறதோ அந்தக் கல்வியைக் கற்றுக்கொள்’ என்றார்கள். கொஞ்ச நாளுக்கு முன் பி.காம். படிப்புக்கு அலைந்தார்கள். அப்புறம் கம்ப்யூட்டர் வந்தது. அதையடுத்து மைக்ரோ பயாலஜி படித்தால்தான்ஆச்சு என்றானது. ஒன்று வரும்போது இன்னொன்றுக்கு மகத்துவம் குறைந்துவிடுகிறது. இந்தக் குறைபாடுஇல்லாமல், மாறும் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் கல்வியைக் கற்றுத் தருபவர் குரு. ‘உப’ என்றால் ஆசிரியரிடம்; ‘நயனம்’ என்பதற்கு கொண்டுவிடுதல் என்று பொருள்.

இப்படிப்பட்ட கல்விக்கு விடுவதற்கு முன் சில தகுதிகள் வேண்டும். மாணவனுக்கு விநயம் & பணிவு இருக்கவேண்டும். குரு சொல்வதைக் கேட்கவேண்டும். ‘வித்தையுள்ளவன் தூங்கான். விசாரமுள்ளவன் தூங்கான். அர்த்தமுள்ளவன் (பணமுள்ளவன்) தூங்கான். அனர்த்தமுள்ளவன் தூங்கான்’ என்று ஒரு பழமொழி உண்டு. வித்தை கற்றுக்கொள்ள விரும்புகிறவன் தூக்கத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உனக்கு சுகம்தான் வேண்டும் என்றால் கல்வியை விட்டுவிடு. கல்வி வேண்டு மென்றால் சுகங்களை விட்டுக்கொடு. சுகத்தை நினைத்துக்கொண்டால் கல்வி வராது. கல்வியே கண்ணாக இருக்கும்போது சுகம் இருக்காது&

சுகார்த்தீசேத் தெதேத் வித்யாம்
வித்யார்த்தீசேத் தெதேத் சுகம்
சுகார்த்தீந: குதோ வித்யா
வித்யார்த்தீந: குதோ சுகம்

என்கிறது வேதம்.

கல்விக்குப் போகுமுன் எதைக் கட்டிக் கொடுத்தார்கள்? ரெண்டு பிஸ்கட், கொஞ்சம் பால், இடைவெளியில் தின்னச் சில பழத்துண்டுகள்… இவற்றைக் கட்டிக் கொடுக்கவில்லை. அவன் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான நல்ல குணங் களின் விதைகளைக் கட்டிக்கொடுக்கச் சொன்னார்கள். வெறுமனே சொல்லிக் கொடுக்காமல் உபநயன சம்ஸ்காரத்தின் மூலமாகத் தகுதியை ஊட்ட வேண்டுமென்றார்கள்.

முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது வேதம். ஏன் வேதம் கற்றுக்கொள்ள வேண்டும்? அந்தப் பெரும் பொக்கிஷத்தைக் காப்பாற்றி அடுத்த அடுத்த தலைமுறை களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அரசாங்கத்தை ஆளவிருப்பவன் ராஜ்ய பரிபாலனத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். வியாபாரம் செய்ய விரும்புபவன் அதற்குத் தேவையானதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் வெற்றி பெறுவது மாத்திரம் அல்ல கல்வியின் நோக்கம். உள்ளத்தையும் அது பதப்படுத்தவேண்டும். மனிதராகப் பிறந்த நம்மை மோட்சப் பிராப்திவரை கொண்டுசெல்ல, ஆன்மிக முழுமையைக் கொடுக்க, துக்கமே இல்லாமல் ஆனந்தமாக வைத்திருக்க… எந்தக் கல்வி உதவுகிறதோ, அதுவே சிறந்த கல்வி! அறியாமையை அழித்து, தான் யார் என்பதை அறிவதற்குக் கல்வி உறுதுணையாக இருக்கவேண்டும்.

மனதைத் தூய்மை செய்வது சனாதனக் கல்வி. எளிய வாழ்க்கை மற்றும் உயர்ந்த சிந்தனையைத் தருவது அது. ஏனெனில், வேதம் ஒரு தனி மனிதனால் சொல்லப்பட்டதல்ல. நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொள்ள உதவும் வேதத்தை சேமித்துவைக்க, தேவைப்படுகிற நேரத்தில் எடுத்துக்கொடுக்க, அந்தத் தொகுப்பை நிரந்தரமாக வைக்க வேதக் கல்வி அவசியம். அதை வலியுறுத்துவதே உபநயன சம்ஸ்காரம்.

இதைப் பெரும்பாலும் ஒரு சாராரே மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், உபநயன சம்ஸ்காரம் ஒரு சாராருக்கு மட்டுமல்ல.

கர்ப்பாஷ்டமேஷு ப்ராமண உபநயீத
கர்ப்பைகாதெசேஷு ராஜன்யம்
கர்ப்பத்வாத்யசேஷு வைஸ்யம்!
என்கிற ஸ்லோகத்திலிருந்து, இது ராஜாக்களுக்கும் வைஸ்யர்களுக்கும்கூட உண்டு என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒரு கல்யாணத்துக்குப் போகிறோம். நிகழ்ச்சி பலபேரின் ஒத்துழைப்போடு நடக்கிறது. உணவு வேளையில் ஒருவர் பாயசம் பரிமாறுகிறார். ஒருவர் தண்ணீர் எடுத்துவைக்கிறார். இன்னொருவர் ஊறுகாய் போடுகிறார். இவர்களில் பாயசம் போடுபவர்தான் உயர்ந்தவர்; ஊறுகாய் போடுபவர் சுமாரானவர்; தண்ணீர் எடுத்துவைப்பவர் தாழ்ந்தவர் என்று பாகுபாடு பார்க்கிறோமா? இல்லையே!

இன்னோர் உதாரணம்: ஒரு நிறுவனம் இருக்கிறது. அதில் எக்ஸிகியூட்டிவ் கமிட்டி, மார்க்கெட்டிங், அட்மினிஸ்ட்ரேஷன், லேபர் என்றெல்லாம் பிரிவுகள் இருக்கின்றன. இந்தத் துறைகளில் ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று சொல்ல முடியாது. உயரதிகாரி செய்வதைத் தொழிலாளியால் செய்யமுடியாது; தொழிலாளி செய்வதை உயரதிகாரியால் செய்யமுடியாது. இதனைஇதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விட்டிருப்பார்கள். அதில் எந்த ஒரு துறை இல்லையென்றாலும் நிர்வாகம் சீராக இயங்காது.

அதேபோல கல்வியிலும் உயர்வு \ தாழ்வில்லாத பிரிவினைகள் உண்டு. சிறு வயதிலிருந்து தங்களுக்கு எந்தக் கல்வியில் இஷ்டமோ அந்தக் கல்வியில் ஞானத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

வேதக் கல்வி பயின்று, அதன் மகத்துவம் குன்றாமல் காப்பாற்றுவது பெரும் பொறுப்பு. அந்தப் பொறுப்பை ஏற்க விரும்புபவனிடம்அதைக் கொடுக்கவேண்டும். இதற்கெனவே வழிவழியாக, நாம் இதுவரை பார்த்த சம்ஸ்காரங்களை எல்லாம் முறையாகச் செய்துவந்தவன், உபநயன சம்ஸ்காரத்துக்கும் தயாராக இருக்கிறான்.

மற்றபடி சனாதனம், மனிதர்களிடையே பேதம் பார்ப்பதில்லை. சனாதனத்தில் கோணல் இல்லை. கோயில் எந்த இனத்துக்கு? எல்லா மனிதர் களுக்காகவும்தான். ஒரு கோயிலில் உற்சவம் என்றால் பூசாரி, தேர் இழுப்பவர்கள், வாத்யம் இசைப்பவர்கள், பந்தல் போடுபவர், மாவிலை கொணர்பவர், காவல்காரர் என்று எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. அவரவர்களைக் கௌரவித்து, வேண்டியதை வாங்கிக் கொள்கிறோம்.

அதேபோல, சனாதனம் பணம் சேர்க்க விடுவதில்லை. ‘ஏழைக்கு, பசித்தவனுக்கு தானம் செய்’ என்கிறது. ‘தேவைக்குமேல் சேர்த்து வைத்திருப்பவன் திருடன்’ என்கிறது. ஒரு நாவிதர் இருக்கிறார் என்றால் அவர் தன்னை நம்பி வாழவில்லை. தன் கலையை நம்பியேவாழ்கிறார். அவரைக் கௌரவித்து, அவரது கலையை மதிக்கப் பழகவேண்டும். அவர் செய்யும் வேலைக்கு நாம் ஏதோ கூலி கொடுப்பதாக எண்ணுவது தவறு.

சனாதனக் கல்வியில் அகங்காரத்துக்கு இடமில்லை. உள்ள உயர்வுக்கு வழிவகுப்பது உபநயன சம்ஸ்காரம்.

Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: