Archive

Archive for October 20, 2004

சாப விமோசனம் – பேஸ்பால்

October 20, 2004 8 comments

Red Sox Celebration (c) New York Timesநியு இங்கிலாந்து ரெட் சாக்ஸ் நியு யார்க்/நியு ஜெர்ஸி யான்கீஸை வென்றிருக்கிறார்கள்.

அமெரிக்கா வந்து சில நாட்களே ஆன போது பார்க்க ஆரம்பித்த விளையாட்டு. அதிகம் ரசிக்கவில்லை. ஆனால், உள்ளூர் அணி வெற்றி வாகை சூடிக் கொண்டிருந்ததாலும் அலுவலகத்தில் காபி போடும் சில விநாடி அலசல்களில் பேந்த பேந்த விழித்ததாலும் பார்க்க ஆரம்பித்தேன். ஆட்டம் நடக்கும் ப்ரான்க்ஸில் (Bronx – நியு யார்க்) இருந்து பலகாத தூரம் தள்ளி இருக்கும் எடிஸனில் வசித்தாலும் ‘நம்ம டீம்’ என்னும் அடைமொழி கொடுத்து, விதிகளை நண்பர்கள் விளக்க, விளையாட்டில் ஆர்வம் பிறந்தது.

பாஸ்டன் பெயர்ந்த பிறகு ரெட் சாக்ஸும் சோபிக்கவில்லை. ஆட்டமும் ரசிக்கவில்லை. அதற்கேற்ப அமெரிக்கக் கால்பந்து போன்ற பிற விளையாட்டு அணிகள் கலக்க ஆரம்பிக்க, பேஸ்பந்தை மறந்தே போனேன்.

Boston's Johnny Damon (c) New York Times

வருடா வருடம் நடக்கும் உலகக்கோப்பை (அமெரிக்காவும் தொட்டுக்கக் கொஞ்சமே கொஞ்சம் கனடாவும்) போட்டிகளில் அரையிறுதிக்குத் தகுதியாவது; பிறகு நியு யார்க் ‘எலி – ஜெர்ரி’ யான்கீஸிடம், ‘டாம் – பூனை’யாக அடிபடுவது; எனத் தொடர்ந்தது.

இதற்கெல்லாம் அடுத்த படியாக போன வருடப் போட்டிகளில் இரு அணிகளுக்கும் இடையே கைகலப்பு. பாஸ்டன் ஆடுகளத்தில் சிப்பந்தி ஒருவர் யான்கீஸ் தோற்கும் நிலையில் இருந்ததனால் கெக்கலித்திருக்கிறார். பொறுக்காத ‘நியு யார்க்’தனமையுடன் யான்கீ ஒருவர் கையை ஓங்கியிருக்கிறார். ஏற்கனவே, ஜென்ம விரோதி போல் முறைத்துக் கொண்டவர்கள், பாரதப் போருக்கே இறங்கினார்கள். எனினும், வழக்கமான பாஸ்டன் தோல்வியே முடிவாக இருந்தது.

இந்த எண்பத்தியாறு வருட தோல்விமுகத்துக்குக் காரணமாக சொல்லப்படுவது ‘பேப் ரூத்’ என்னும் ஆட்டக்காரரின் சாபம் என்று சொல்லப்பட்டு வந்தது. அற்புதமாக விளையாடி பேஸ்பால் உலகையே புரட்டிப் போடப் போகும் அவரின் அருமை தெரியாமல், பணத்துக்கு லொத்துப்பிடித்த பாஸ்டனின் ரெட் சாக்ஸ், பேரம் பேசி நியு யார்க்கிற்குத் தள்ளிவிட்டுவிட்டார்கள். அப்பொழுது, மனம் நொந்து அவர் கொடுத்த சாபம் இன்று வரை தொடர்ந்திருக்கிறது.

இந்த வருடமும் வெற்றி எளிதாக விழவில்லை. இப்பொழுது நடக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா ஐந்துநாள் போட்டிகளில் இரண்டு டெஸ்ட்களைக் கைப்பற்றினால், தொடரில் வெற்றி. அதே போன்று, பேஸ்பாலில் நான்கு ஆட்டங்களை வென்று விட்டால், தொடர் முடிந்து விடும். முதல் மூன்று ஆட்டங்களில் மண்ணைக் கவ்வி, மீதம் இருக்கும் நான்கையும் வென்றாலே, அமெரிக்கன் லீக் தொடரை வெல்ல முடியும்.

Boston's Curt Schilling (c) Boston Globe

ஆடிய முதல் ஆட்டத்திலேயே, நட்சத்திர பந்து வீச்சாளர் ஷில்லிங் அடிபட்டுக் கொண்டார். நேற்றைய ஆட்டத்தில் காலுறையில் ரத்தம் கசிய பந்து வீசி ரெட் சாக்ஸின் மூன்றாவது வெற்றியைப் பெற்றுக் கொடுத்து, தொடரை சமன்படுத்தினார்.

இந்தத் தொடரின் ஒவ்வொரு ஆட்டமுமே பல இன்னிங்ஸ்கள் நீண்டு, இரவுத் தூக்கங்களை குறைத்தும், இருதயத் துடிப்பை அதிகரித்தும், சோபாவை அதிகம் தேய்க்காமல் சீட் நுனிக்குத் தள்ளிவிட்டிருந்தது. பேஸ்பாலும் (பழைய) டேவிஸ் கோப்பையும் ஒரே போல. அந்தக் கால டேவிஸ் பந்தயங்களில் கடைசி செட்டுக்கு ‘டை-ப்ரேக்கர்’ கிடையாது. எந்த வீரராவது, எதிராளி பந்து வீசும் ஆட்டத்தை மொத்தமாக முறிக்கும் வரை நீண்டு கொண்டே போகும். அதே போல், எந்த அணியாவது ‘ஹோம் ரன்’ என்று விளிக்கப்படும் கிரிக்கெட்டின் சிக்ஸரை அடிக்காவிட்டால், இரு அணிகளும் ஆட்டத்தை முடிக்காமல் தொடரும்.

நேற்றைய ஆட்டம் முடிந்தபோது நடுநிசி. முந்தாநாள் பின்னிரவு இரண்டு மணி. நியு யார்க்கை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அடுத்து யாரோ… ஹூஸ்டனா, செயிண்ட் லூயிஸா? எவராக இருந்தால் என்ன 😉

Categories: Uncategorized

கொலு பொம்மைகள்

October 20, 2004 Leave a comment

மிகவும் ரசித்த பொம்மைகள்

1. ராமர் கட்டும் ராமேஸ்வரம் பாலம்
2. திருவண்ணாமலை கிரிவலம்
3. பாரதப் போரில் கண்ணனின் விஸ்வரூபம்
4. டைனோசார்கள் உலவும் ஜுராஸிக் பார்க்
5. ஆர்க்கெஸ்ட்ரா/கர்னாடக இசை கச்சேரி
6. உலக அதிசயங்கள்
7. திரைப்படபிடிப்பு தளம்
8. அரசியல் தலைவர்கள் செட்
9. தேர்த் திருவிழா கூட்டம்


அலுத்துப்போன பொம்மைகள்

1. கோபிகா வஸ்திராபரணம் (“அப்பா… ஏன் பப்பி ஷேமா இருப்பது விளையாட்டு?”)
2. கிரிக்கெட் செட் (“என்னய்யா இது… ஆளுக்கொரு பக்கம் நிக்கறாங்க?”)
3. ஊஞ்சல் கல்யாணம் (“சுத்தி எதுக்கு இவ்வளவு பேர்?”)
4. மனுநீதிச் சோழன்
5. சங்ககால அரசசபை
6. அஷ்டலஷ்மி
7. கொங்கை பிடிக்கும் ராதாகிருஷ்ணர்
8. அறுபடை வீடு
9. தசாவதாரம்


வரவேண்டிய பொம்மைகள்

1. கணினி நிறுவன இயங்குபாடு
2. புத்தக அலமாரியுடன் நவீன எழுத்தாளர்களின் மீட்டிங்
3. விதவிதமான மருத்துவ நிபுணர்கள்
4. ஜுலை நான்கு வாணவேடிக்கைக்குக் காத்திருக்கும் நதியோரத்து அமெரிக்க நகரம்
5. நியு யார்க் சுற்றுலா செட்
6. தமிழ் ஹீரோயின்கள் – அன்றும் இன்றும் செட்
7. தியேட்டரில் சந்திரமுகி வெளியீடு
8. நதிநீர் இணைந்த இந்தியா
9. ஜி.டி. நிற்கும் நாக்பூர் ஜங்ஷன்

Categories: Uncategorized