Archive
சுவடுகள் – விகடன்.காம்
ஒன்றுமறியா இருளாம் உள்ளம் படைத்தஎனக்கு
என்று கதிவருவது? எந்தாய் பராபரமே!
~ தாயுமானவர்
இது மட்டும் (நன்றி : தினமணி)
ஜூனியர் வி.: திரையுலகத்தினர் நடத்திய விழா மேடையில், ‘வீரப்பன் பற்றி எனக்கு நன்கு தெரியும்’ என்றும் சொல்லியிருக்கிறார். வீரப்பன் ஒரு பயங்கரமான குற்றவாளி, நூற்றுக்கணக்கான கொலைகளைச் செய்தவன். சந்தன மரம், யானைத் தந்தங்களைக் கடத்தியவன். அந்தக் குற்றவாளி பற்றி தனக்குத் தெரிந்தும் அரசுக்குத் தெரிவிக்காமல் மறைத்ததுகூட மிகப் பெரிய குற்றம்தான். அப்படி தெரிந்துவைத்திருந்தால், அவனைப் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும். இந்த விஷயங்களை மறைத்ததற்காக அந்த நடிகரை தண்டிக்கலாம். முன்பு என் தலைவர் கலைஞர், அந்த நடிகரை பெருந்தன்மையாக மன்னித்துவிட்டார்” என்றார் சரத்.
‘நெடுங்குருதி‘ குறித்து எஸ். ராமகிருஷ்ணன்:
‘‘ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நாக்கு இருக்கிறது போலும். அது தன்னோடு வாழ்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பாக ஏதோ காரணம் காட்டி வெளியேற்றி விடுகிறது. அவர்களும் எங்கோ தொலைவில் ஊரை மறந்து வாழத் துவங்கியதும் சட்டென அவர்கள் மீது விருப்பம் கொண்டது போல ஊர் திரும்பவும் தன் நாவால் அவர்களைத் தன்னிடம் இழுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன் உணவில், பேச்சில், செய்கைகளில், நினைவுகளில் தன் ஊரைக் கொண்டிருக்கிறான்.
ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடும்போது அது விளைந்த மண்ணின், நீரின் ருசியையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். ஆனால், அதை தனித்து அறிவதில்லை. எனில் ஒரு ஊர் அங்கிருக்கும் காய்களில், கனிகளில், வீடுகளில், கனவுகளில் தன் ருசியை உருவாக்கிவிடுகிறது என்பது உண்மைதானே.
ஒரு மச்சத்தைப் போல பிறந்தது முதல் என்னோடு ஒட்டியிருக்கிறது எனது கிராமம். என் பால்யத்தைப் போலவே ஊரின் பால்யமும் வேதனையும், ரகசியமான சந்தோஷங்களும் நிரம்பியது. ‘ஆரோக்ய நிகேதனம்’, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ போன்ற சிறந்த இந்திய நாவல்கள் எழுப்பிய கனவைப் போல இந்த நாவலும் ஒரு சிதறடிக்கப்பட்ட கனவைக் கொண்டிருக்கிறது.”
ஏன்? எதற்கு? எப்படி?
ஆரோக்கியம், வம்சம், சூழ்நிலை மூன்றும்தான் நரைப்பதற்குக் காரணம். முடியின் கால்களில் மெலனின் என்னும் சமாசாரம் சப்ளை தீர்ந்துவிடுவதால் நரை வரு கிறது. தலைமுடி சாதாரணமாக இரண்டிலிருந்து நான்கு வருஷம் வளர்கிறது. அதன்பின் இரண்டு, மூன்று மாசம் சும்மாயிருந்துவிட்டு உதிர்கிறது. புது கேசம் வளர்கிறது. இப்படித் தினம் ஐம்பதிலிருந்து நூறு முடிகளை நாம் இழக்கிறோம். பொதுவாக நரைமுடியைக் கறுப்பு மறைத்திருக்கும். ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழும்போது, சிலருக்கு ‘டெலோஜென் எஃப்லுவியம்’ (Telogen Effluvium) என்னும் விளைவினால் சட்டென்று ஒரு நாளைக்கு முந்நூறு முடி கொட்டிவிட, மறைந்திருந்த நரைமுடிகள் எல்லாம் பொசுக்கென்று தெரிய ஆரம்பித்துவிடும்.
வாட்டசாட்டமான பெண்களை வர்ணிக்கின்ற ஒரு ஒப்பீடு இது. காவடிச் சிந்து பாட்டில் ‘மகரத்துவஜன் கோயில் கம்பம்’ என்கிறதும் இதேதான். இம்மாதிரி ஓவர்சைஸ் பெண்களை ‘அமேஸான்கள்’ என்றும் சொல்கிறார்கள்.
பதில் தெரியுமா
விநாடி வினாவிலாவது கேட்பார்களா?
யோசிங்க
1. ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ – இது குறுந்தொகை. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது எது?
2. ‘பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா’ என்று பாடியவர் பாரதியார். ‘புதியதோர் உலகு செய்வோம்’ என்று பாடியவர் யார்?
3. ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா’ என்று பாடியவர் யார். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ – பாடியவர்?
4. ‘கல்வி கரையில: கற்பவர் நாள் சில’ என்றுரைக்கும் நூல் எது. ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டா’ என்றுரைக்கும் நூல் எது?
5. ‘அன்பே சிவம்’ என்று சொன்னவர் திருமூலர். ‘ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும்’ என்று பாடியவர் யார்?
6. ‘உள்ளம் பெருங்கோயில்: ஊனுடம்பு ஆலயம்’ என்று பாடியவர் யார்?
7. ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்.. நாமக்கல் கவிஞரின் பாடல். ‘செய்யும் தொழிலே தெய்வம் & அதில் திறமைதான் நமது செல்வம்’ என்று பாடியவர்?
8. ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ & பாடியவர் பாரதியார். ‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ — பாடியவர் யார்?
9. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்று பாடியவர் திருநாவுக்கரசர். ‘மனித சாதியில் துன்பம் யாவுமே மனதினால் வரும் நோயடா’ என்றவர் யார்?
நாணயத்தின் மறுபக்கம்!
”நீதி, நேர்மை, நாணயம்னா என்னப்பா?” ”நேத்து நான் வேலை செய்யும் கடைக்கு ஒருவர் வந்து நூறு ரூபாய் கொடுத்து இருபது ரூபாய்க்கான பொருட்களை வாங்கிக் கொண்டு, மறதியாக மீதித் தொகையை வாங்காமலே போய்விட்டார். அந்த எண்பது ரூபாயை மறுநாள் அவர் கடைக்கு வந்தபோது நான் திருப்பித் தந்திருந்தால், அதுதான் நீதி! அப்படி இல்லாமல், அந்தத் தொகையைக் கடைக்கணக்கில் சேர்த்து, என் முதலாளிக்கு லாபம் சேர்த்திருந்தால் அதுதான் நேர்மை!”
”அப்போ… நாணயம்னா?”
”அந்தத் தொகையை அவருக்கும் திருப்பித் தராமல், கடைக் கணக்கிலும் சேர்க்காமல், பக்கத்தில் நின்று என்னோடு வேலை செய்துகொண்டிருந்த சக ஊழியருடன் சமமாகப் பகிர்ந்துகொண்டேன். அதற்குப் பெயர்தான் நாணயம்!”
தேசியக் கட்சி ஒன்றின் தமிழகத் தலைவருக்கு ‘அமைதிப்படை சத்யராஜ்’ என்று அடைமொழி கொடுத்திருக்கிறார்கள் அக்கட்சியின் தொண்டர்கள். ”மூத்த தலைவர்களை நேரில் பார்க்கும்போது அப்படியரு பணிவு பவ்யம் காட்டுவார். அவங்க நகர்ந்ததும் அப்படியே கிண்டல் பண்ணுவார். பயங்கரமான ஆளுங்க” என்கிறார்கள்.
அப்பா என்றால்.. : அப்பா என்ற வார்த்தைக்கான அர்த்தம்: தான் எந்த அளவுக்குப் புத்திசாலியாக இருக்க நினைத்தானோ அந்த அளவுக்குத் தனது பிள்ளைகள் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்.
சில பதில்கள் – என். சொக்கன்
1. தங்களின் வலை அனுபவங்கள்
வலையில் அப்பவும், இப்பவும் நான் ரொம்ப ரசிப்பது விவாத மன்றங்களைதான் – ஏனோ, மிகவும் வசதியான மின்னஞ்சல் ,அரட்டையைவிட, இவைதான் என்னை ரொம்பக் கவர்கின்றன. காரணம் சொல்லத் தெரியவில்லை.
அப்படி நான் மிகவும் விரும்பும் / விரும்பிய தளங்கள் – தமிழ்த் திரையிசை விவாதங்களுக்கான டி.எஃப்.எம்.பேஜ் மற்றும் மன்றமையம் – இவற்றில் மன்றமையத்தில் நடைபெறும் விவாதங்களின் தரம் சமீபத்தில் குறைந்துவிட்டது எனக்கு ரொம்பவே வருத்தம். ஆனால் நல்லவேளையாக டிஎஃப்எம் பேஜ் அப்படி இல்லை – தமிழில் எந்தப் புதிய ஆல்பம் வெளிவந்தாலும், அதுபற்றிய விவாதங்களை அடுத்த சில மணி நேரங்களுக்குள் இங்கே படிக்கலாம் – தேர்ந்தெடுத்து வாங்கலாம் – இசை ஞானமுள்ள ரசிகர்களும், என்னைப்போல டண்டனக்கா பார்ட்டிகளும் ஒன்றாகக் கலந்து பழகும் தளம் என்பதால்தானோ என்னவோ, இங்கே எப்போதும் சுவாரஸ்யம் பொங்குகிறது !
மற்றபடி, மெயிலுக்கு ரீடிஃப், இலக்கியத்துக்கு ராயர் க்ளப், அகத்தியர், சந்த வசந்தம், மரத்தடி, அப்புறம் வழக்கமான இலக்கியப் பத்திரிகைகள், கல்கி, விகடன், குமுதம், அப்பாலே, அவ்வப்போது தொட்டுக்கொள்ள தமிழ் சினிமாச் செய்திகள் – இவ்வளவுதான் என்னுடைய தினசரி வலை உலவல் ஃபார்முலா.
2. வலைப்பதிவுகளில் மிகவும் விரும்பிப் படிக்கும் ப்ளாகுகள்
நான் தொடர்ந்து படிக்கும் வலைப்பதிவுகள் என்று பார்த்தால், பாராவின் ‘மனத்துக்கண்’ (ஒரு சுவாரஸ்யமான மிடில் மேகஸின்போன்ற வலைப்பதிவு இது – ஆனா, இப்போ காணாமபோச்சே ஏன் ?), பத்ரியின் எண்ணங்கள் (பல சமயங்களில் 4 தடவை படித்துப் புரிந்துகொள்ளுமளவு கனமான விஷயங்களை, அக்கறையோடும், கவனத்தோடும் விளக்கிச் சொல்கிறார்), உங்களோட ஈதமிழ் (யாரோ இந்த வலைப்பதிவைக் ‘குமுதம்’ன்னு சொன்னாங்கதானே ? அது பாதி தப்பு ;), மீனாக்ஸின் மார்க்கெட்டிங் மற்றும் மேல்கைண்ட் வலைப்பதிவுகள் (இந்த ரெண்டு வலைப்பதிவுகளிலுமே, நல்ல விஷயங்களும், நகைச்சுவையும் கலந்து தருவது அருமையான கலவை !), அருணின் அகரதூரிகை (அழகான நடையில், சுவாரஸ்யமான விஷயங்களைத் தேர்ந்தெடுத்து எழுதுவதால் பிடிக்கும்.)
இந்த வலைப்பதிவுகளோடு ஒப்பிட்டால், வெங்கடேஷ், எஸ். ராமகிருஷ்ணன், நாகூர் ரூமி ஆகியோர் அடிக்கடி எழுதுவதில்லை, என்றாலும், எழுதும்போது மிஸ் செய்துவிடாமல் படிப்பேன் !
இவைதவிர, தமிழ் மணம் தளத்தில் உலவும்போது, அவ்வப்போது கண்ணில்படுகிற நல்ல கட்டுரைகளையெல்லாம் தவறாமல் வாசித்துவிடுவேன்.
3. விரும்பிப் படித்த பதிவுகள்
அப்படித் தவறவிட்டது சத்யராஜ்குமார், சித்ரன் ஆகியோரின் வலைப்பதிவுகளைதான். அப்புறம், மாலனின் சில வலைப்பூக்கள்.
4. படிக்காவிட்டால், ஏன் தற்போது படிப்பதில்லை?
இப்போது அவர்கள் அப்டேட் செய்வதே இல்லை (அப்படிதான் நினைக்கிறேன் !)
5. எப்பொழுது, எப்படி, எதற்காக உங்களுக்கான வலைப்பதிவு அமைக்க விருப்பம்?
எனக்கான வலைப்பதிவு இன்னும் இல்லையே என்று பல நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள் – கூடாது என்றில்லை, வலைப்பதிவுகளின் அதீத சுதந்திரம் எனக்கு ரொம்ப பயமாயிருக்கிறது.
சாதாரணமாகவே, நான் பெரிய சோம்பேறி. என் கழுத்தில் ரெண்டு, மூன்று கத்திகளை வைத்து, லேசாக அழுத்தினால்தான் எழுத ஆரம்பிப்பேன். இல்லையென்றால், சோபாவில் சாய்ந்துகொண்டு டாம் அண்ட் ஜெர்ரி பார்ப்பதோ, அமர் சித்ரகதா புரட்டுவதோதான் என் விருப்பங்கள்.
ஆகவே, வலைப் பதிவு என்று ஆரம்பித்துவிட்டு, அதில் எப்போதுவேண்டுமானாலும் எழுதலாம், மாதக்கணக்கில் எழுதாமலும் இருக்கலாம் என்கிற சுதந்திரமெல்லாம் எனக்கு ரொம்ப அதிகம். வாரம் ஒன்று அல்லது, வாரத்துக்கு நாலு அல்லது மாதத்துக்கு ஒன்று எழுதினால்தான் ஆச்சு என்று உறுதியான கெடு வைத்து மிரட்டினால்தான் எனக்குக் கை வளையும் (அல்லது தட்டும் !).
நீங்கள் இந்த பதிலை ஏற்கமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், ‘வாரம் நாலு என்று வைத்துக்கொண்டு எழுதேன், யார் உன்னைத் தடுக்கிறார்கள் ?’, என்றுதான் பதில் கேள்வி கேட்பீர்கள்.
ஆனால், நான் முன்பே சொன்னதுபோல், எனக்கு அப்படிப்பட்ட self-management குணமெல்லாம் சுத்தமாகக் கிடையாது. யாரேனும் விடாமல் நச்சரித்துக்கொண்டே இருந்தால்தான் எழுதுவேன்.
இதெல்லாம் சும்மா சாக்கு, உண்மையான உண்மையைச் சொல்வதானால், எனக்கு வேகமாக எழுதிப் பழக்கமே இல்லை. சிறிய கட்டுரைக்குக்கூட ஒரு வாரத்துக்குமேல் எடுத்துக்கொள்வேன். அப்படி நேரமெடுத்து எழுதுவதற்குள், நான் எழுத நினைத்த விஷயம் பழசு கண்ணா பழசு என்றாகிவிடும் !
இப்போதைக்கு, எனக்கு வேகமாக எழுதத் தெரிந்த ஒரே விஷயம் – சிறுகதைகளும், வாழ்க்கை வரலாறுகளும்தான். அதையெல்லாம் வலைப்பதிவில் யாரும் படிப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை !
இவ்வளவும் சொன்னபின், ஒரு கடைசி விஷயம் – நானும் ஒரு வலைப்பதிவு தொடங்கியிருக்கிறேன் – சொ. மணியன் என்ற பெயரில், வெண்பாவில் உலக நடப்பைச் சொல்வதற்காக ஒரு வலைப்பதிவு அது. ஆனால், நான் களமிறங்கிய ஒன்றிரண்டு நாள்களுக்குள், கிருஷ்ண சைதன்யா என்பவர் என்னைவிட அபாரமாக, இதேவிதமான வெண்பாக்களை எழுதிக் குவித்துவிட்டார். அவருடைய வேகத்துக்குமுன் நம்மால் ஆகாது என்று ஜகா வாங்கிவிட்டேன் 🙂
6. (பாரா சொன்னது போல்) புதிதாக ஒன்பதே ஒன்பது கட்டளைகள் எழுத நினைத்தால் என்ன சொல்வீர்கள்?
ஏன் ஸ்வாமி ? நான் ஏதோ நன்றாக இருப்பது பிடிக்கவில்லையா ? 🙂
சில பதில்கள் – கணேஷ் சந்திரா
முன்குறிப்பு : கேள்விகளுக்கு சுருக்கமா பதில் எழுத சொன்னார் பாபா. ஆகவே ….
1. தங்களின் தமிழ் வலை அனுபவங்கள்.
தமிழ் வலைக்குள் விழுந்தது 2000ம் ஆண்டு – ஆரம்ப நாட்களில் அம்பலம், ஆறாம்திணை, குமுதம் பிடித்த இணையங்கள். இப்பொழுது நிறைய. அன்றும் இன்றும் முரசு அஞ்சலே நம்ம தோழன்.
2. வலைப்பதிவுகளில் மிகவும் விரும்பிப் படிக்கும் ப்ளாகுகள்
இப்போ தமிழ்மணம் இருக்கறதால அப்படியே கடைசி பத்து மேட்டரை படிப்பேன். அதுக்கு முன்னே அரசியல், ஜனரஞ்சக சினிமா, நையாண்டி, புத்தக விமர்சனம் இது எங்கே எல்லாம் இருக்கோ தேடிப் படிப்பேன்.
3. விரும்பிப் படித்த பதிவுகள் ?
இது ரொம்ப வம்பு பிடிச்ச கேள்வி. ஒரு சிலரோட எழுத்து ஸ்டைல் நம்ம ரசனையோட ஒத்து போகும். அவங்க வலைப்பதிவை கண்டிப்பா படிப்பேன்.
4. படிக்காவிட்டால், ஏன் தற்போது படிப்பதில்லை ?
அவங்க எழுதறது இல்லே / அவங்க பதிவே காணோம்னு அர்த்தம்.
5. எப்பொழுது, எப்படி, எதற்காக உங்களுக்கான வலைப்பதிவு அமைக்க விருப்பம் ?
எனக்கு சொந்தமாக வலைப்பதிவில் எழுதுவதை விட சொந்தமாக வலைப்பதிவு எழுதவே அதிக விரும்பம்.
6. (பாரா சொன்னது போல்) புதிதாக ஒன்பதே ஒன்பது கட்டளைகள் எழுத நினைத்தால் என்ன சொல்வீர்கள் ?
கட்டளைகளா ? கிழிஞ்சுது போங்க. கட்டளைகளுக்கு பதிலா ஆலோசனை வேணா சொல்லறேன்.
[
]
போடுங்க. அப்போ உங்க படம் கட்டுரையோட சேர்ந்து இருக்கும்.
அங்கும் எங்கும்
தேங்க்ஸ் கொடுக்கல்-வாங்கல தினம்
சாதாரண அமெரிக்கர்களைப் பொறுத்தவரை நன்றி வழங்குதல் தினம் — நான்கு நாள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கிறது.
சின்ன வயதில் பொங்கல் என்றால் நாலு நாள் விடுமுறை, சர்க்கரைப் பொங்கல், கணுப்பொடி வைத்தல், பொங்கல் கட்டுரை எழுதுதல் என்பேன். (இன்றும் அதே நிலைதான்.)
தேங்க்ஸ்கிவிங் என்றால் வான்கோழி பிடித்து ஓவனில் சமைத்தல், தொட்டுக்க க்ரான்பெர்ரி ஜெல்லி சாஸ், கொஞ்சம் அசட்டு தித்திப்போடு சாம்பார், உருளைக்கிழங்கும் இன்ன பிறவும் போட்ட கறி — இதுதான் சமையல்.
வான்கோழியை அதிகம் வேக வைக்க கூடாது. குறைந்து வெந்திருந்தாலும் விஷமாகிப் போகும். பார்த்து டைமர் வைத்து விசிலடித்தவுடன் அடுப்பை அணைப்பது முக்கியம். ஃபில்லிங் எனப்படும் மொறு மொறு கறியை கோழி முதல் உருளை வரை வறுத்து செய்யலாம்.
நண்பர்களையும் உறவினர்களையும் வியாழன் இரவு விருந்துக்கு அழைக்கிறார்கள். அந்தக்காலத்தில் அறுவடை நடந்திருக்கும். தோட்டத்தில் விளைந்த சர்க்கரைப் பூசணிக்காயை கேக்குக்குள் அடைத்து, ஒரு வருடமாக வளர்த்த வான்கோழியை வெட்டி சமைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள்.
முன்னும் ஒரு காலத்தில் இக்கால அமெரிக்கர்களை வரவேற்ற, ஐ.எஸ்.ஐ. அமெரிக்கர்களான செவ்விந்தியர்களுக்கு நன்றி வழங்குதலாக தொடங்கியது. இன்று யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டுமோ உணவு உண்பதற்கு முன் நவில்கிறார்கள்.
நிறைய அமெரிக்கப் ஃபுட்பால், வியாழனின் மிச்சம் மீதியை திங்கள் மதியம் மட்டும் வெட்டுதல், உள்ளூர் கலாச்சாரத்தை தெப்பத் திருவிழாவாக தரையில் காட்டும் அணிவகுப்புகள், நத்தார் தின சாண்டா பரிசு வழங்கலுக்கான ஷாப்பிங், என அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.
என்னை நீ கைது செய்
ஆயுள் தண்டனை ஒன்று
உன் நெஞ்சில் வாங்கி வை”
என்னும் ‘சத்ரபதி’ படத்தின் பாடல் ரொம்பவும் பிடித்திருக்கிறது. எஸ்.ஏ ராஜ்குமாரின் ஒரு படத்தில் ஒரு ஹிட் என்னும் ஃபார்முலா சரிதான். பாடியவர்கள் யார் என்று சொன்னால் தன்யனாவேன்.
பாடலைக் கேட்க: Music India OnLine – Chatrapathy (2004)
பாம்பு – என்.சொக்கன்
© தினம் ஒரு கவிதை
டெல்லி.
நகர மறுக்கும் போக்குவரத்தில் சிக்கித் தவிப்பது, ஒரு கொடுமையான அனுபவம்.
வண்டி வேகமாகப் போனாலும் பரவாயில்லை. போகவேண்டிய இடத்துக்கு சட்டென்று போய்ச் சேரலாம். அப்படியின்றி, நகராமல் ஒரே இடத்தில் இருந்தாலும் பரவாயில்லை. அப்புறம் நிதானமாக போய்க்கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டு, சாலையோரக் கடையில் ஒரு பீடியோ, பான் பீடாவோ வாங்கிச் சுவைக்கலாம். ஆனால், இதுவுமின்றி, அதுவுமின்றி நடுத்தரமாக, லேசாக ஊர்ந்தபடி, அத்தனை வாகனப் புகையும் நம் மூக்கிலும் வாயிலும் தாக்க, செல்வதறியாது நின்றிருப்பது என்னால் தாங்கிக்கொள்ளமுடியாத விஷயம்.
ஆனால், என் விருப்பமும், விருப்பமின்மையும் கேட்டா எல்லாம் நடக்கிறது ? என்னுடைய ஆட்டோ மெதுவாக, மிக மெதுவாகதான் ஊர்ந்துகொண்டிருந்தது.
அப்போதுதான், ஆட்டோவின் வலது பக்கத் திறப்பின்வழியே அவன் எட்டிப்பார்த்தான். பல நாள் தாடி நன்கு நரைத்திருந்தது, கழுத்தில் வகைவகையான மணி மாலைகளை அணிந்திருந்தான், அழுக்கான ஆடை, அதைக்காட்டிலும் அழுக்கான தலைப்பாகை. கையில் ஒரு கூடை.
நான் அவனை கவனிப்பதை உணர்ந்ததும், அவன் சட்டென்று கையிலிருந்த கூடையைத் திறந்து காட்டினான். அதனுள் கோதுமை நிறத்தில் ஒரு பாம்பு சுருண்டு படுத்திருந்தது. கூடையின் மூடியை, அதன் அடியிலேயே பொருத்திவிட்டு, அவன் அந்தப் பாம்பின் மையமாய்த் தட்ட, அது சடாரென்று நிமிர்ந்து பார்த்துவிட்டு, மறுபடி படுத்துக்கொண்டது.
அதைப் பார்த்ததும் எனக்கு உடம்பெல்லாம் நடுங்கத்தொடங்கிவிட்டது. மிகுந்த பயத்துடனும், லேசான அருவருப்புடனும் அந்தப் பாம்பைப் பார்த்துவிட்டு, ‘என்னய்யா இதெல்லாம் ?’, என்பதுபோல் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.
அவன் தனது எல்லாப் பற்களையும் காட்டிச் சிரித்தான். ஆரோக்கியமான ஈறுகளிடையே மெலிதாக காற்றை வெளிப்படுத்தியவாறு மெல்லமாய் விசிலடித்துவிட்டு, ‘கையில இருக்கிறதில பெரிய நோட்டு எதுவோ அதை எடுத்து நாகராஜன்மேல வை ராசா’, என்றான், ‘எனக்கு ஒரு பைசா வாண்டாம், பணத்தைத் தொட்டு, நீயே எடுத்துக்கோ, அதிர்ஷ்டம் கொட்டும்’, என்றான் ஹிந்தியில்.
நான் அவனை அலட்சியப்படுத்தியபடி, சட்டென்று வேறு பக்கம் திரும்பி, சற்றே நகர்ந்து அமர்ந்துகொண்டேன். ஆட்டோ டிரைவரும் அவனைச் சத்தமாய்க் கத்தி விரட்டினான்.
ஆனால், அவன் நகர்கிற உத்தேசத்தில் இல்லை, மறுபடி மறுபடி என்னைத் தொந்தரவு செய்தான், ‘ஒரே ஒரு வாட்டி, எனக்குக் காசு வேண்டாம்’, என்று அவன் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்ததால், ஒரு கட்டத்தில் நான் மிகக் கோபமாகி, ‘போய்யா யோவ்’, என்று கத்திவிட்டேன்.
என் கத்தலில், நான் தமிழன் என்று தெரிந்துகொண்டுவிட்டான். ஓட்டைத் தமிழில், ‘ஒரே ஒருவாட்டி காசு வெச்சுட்டு நீயே எடுத்துக்க சாமி’, என்றான்.
சிறிது நேரம் முயன்றும், அவனைத் துரத்த முடியவில்லை. ஆகவே, வேறு வழியில்லாமல் பாக்கெட்டிலிருந்து ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து அந்தப் பாம்பின் தலையில் வைக்க முயன்றேன்.
என் கைகள் படபடவென்று நடுங்கிக்கொண்டிருக்க, நான் அந்தப் பாம்பை நெருங்கும் நேரத்தில், அவன் சட்டென்று என் கையைப் பிடித்துக்கொண்டுவிட்டான்.
பயத்தில் எனக்கு உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது, கைக்கெட்டும் தூரத்தில் பாம்பு. அதைவிட முக்கியமாய், அதனுடைய வாய்க்கெட்டும் தூரத்தில் நான். ஒரு போடு போட்டால், நான் என்ன ஆவேனோ, பயத்தில் எனக்கு மயக்கமே வராத குறைதான்.
ஆனால், அவன் கொஞ்சமும் அசையாமல் என் கையை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தான், முன்னே, பின்னே, வலது, இடது நகர்த்தமுடியாதபடி உடும்புப் பிடி.
‘யோவ், விடுய்யா’, என்று கதறினேன் நான். இப்போது சோம்பலாய்ச் சுருண்டிருக்கிற பாம்பு (ஏன் சோம்பல் ? இப்போதுதான் யாரையோ கடித்து விழுங்கியிருக்கிறதோ ? அந்தப் பாம்பு என் விரலில் தொடங்கி, என்னை மொத்தமாகச் சுருட்டி விழுங்குவதுபோல் ஒரு பிம்பம் உள்ளே தோன்றியது !) எப்போது அசையுமோ, எப்போது என்னைப் பிடுங்குமோ தெரியவில்லையே.
என் கதறலைக் கண்டுகொள்ளாதவனாக, அவன் என் கையை இறுகப் பிடித்தபடி இருந்தான், ‘காசு தந்துடறேன் விடுய்யா’, என்றபோதும் விடவில்லை. எதுவும் பேசவும் இல்லை.
சிக்னலில் பச்சை விழுந்துவிட்டது. என் ஆட்டோ கிளம்பிவிட்டது, ஆனாலும், அவன் என் கையை விடவில்லை. இறுகப் பிடித்துக்கொண்டுதான் இருந்தான். நான் அந்தப் பாம்பை பயத்தோடு பார்த்தேன், பாம்பு கொத்தி உயிர் போகவேண்டும் என்று என் ஓலையில் எழுதியிருக்கிறதோ என்னவோ.
கடைசியில், வேறு வழியில்லாமல், என் கையிலிருந்த காசை நழுவவிட்டேன். அது அந்தப் பாம்பின் தலையில் அபத்திரமாய்ச் சென்று விழுந்ததும், அவன் சட்டென்று என் கையை விடுவித்துவிட்டான். என் ஆட்டோவும் விரைவாக சிக்னலைக் கடந்தது.
அதன்பின், நெடுநேரத்துக்கு அவன் சென்ற வழியைத் திரும்பிப் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். இன்னும் என் பதட்டம் அடங்கியிருக்கவில்லை. ஒரு பெரிய வாழ்வு – சாவு விவகாரத்திலிருந்து தப்பியதுபோல் ஒரு உணர்வு. அநியாயமாய்ப் பிடுங்கியதுதான். என்றாலும், அதற்கு ஐம்பது ரூபாய் தரலாம் என்றுதான் தோன்றியது.
நன்றி: Yahoo! Groups : dokavithai
நன்றி வழங்கல்
நாலு நாள் பயணம். கால் அலுக்க சுற்றினாலும் திகட்டாத நியு யார்க் நகரமும் அது சார்ந்த ஜெர்ஸி தமிழர் பிரதேசங்களும். கல்லூரி நண்பர்கள். புத்தம்புது இணையத் தோழர்கள். புதுப்பிக்கப்பட்ட அமெரிக்கத் தொடர்புகள். இன்பமாக கழிந்த நான்கு நாட்கள்.
நியு யார்க் ஃப்ளஷிங் கோவில் மனதுக்கு மிகவும் முக்கியமானது. வேலை இன்னும் கிடைக்காத ‘பென்ச்’ தேய்த்த காலத்தில் ஒரு விஸிட் அடித்தவுடனேயே, இண்டர்வ்யூ முடிந்து, வேலையும் வாங்கிக் கொடுத்த பெரிய பிள்ளையார். திருப்பதிக்கு போகும் வழியில் திருத்தணி இருப்பதால், முருகருக்கு அரோகரா போல், நியு யார்க் போகும் வழியில் ஃபளஷிங் விநயகருக்கும் பரிவாரங்களுக்கும் சல்யூட் எப்போதும் உண்டு. இந்த முறை மேசீஸ் தேங்க்ஸ் கிவிங் பரேட் பார்க்க செல்வதால் அவரை சாய்ஸில் விட்டு விட்டோம்.
போகும் வழி கனெக்டிக்கட்டில் புதிதாய் முளைத்திருக்கும் சத்யநாராயணாவை தரிசித்தோம். எளிமையான கோவில். ‘ஹரே க்ருஷ்ணா’ போல் ஹிப்பித் தலை வட இந்திய ஸ்டைல் ராமர், கிருஷ்ணர். ராதைக்கு கால் வரை நீளும் தலைமுடி. ஜெயின மதத்துத் துறவிகள் ‘ஏன் பப்பிஷேம் ஆக இருக்காங்க?’ என்னும் கேள்விக்கு நீட்டிமுழக்கினேன். அடுத்து துர்கை கையில் பளபளக்கும் விருமாண்டி வீச்சருவாவும் பூசி மெழுக வைத்தது.
கோவிலில் பிடித்த விஷயம், சூரிய ஒளி எப்பொழுதும் உள்ளே விழும் அமைப்பு. இயற்கை ஒளியை அதிகம் உபயோகப் படுத்திக் கொண்டது ஒரு வித சாந்நித்தியத்தைக் கொடுத்தது. நவக்கிரங்களின் படு திருத்தமாக ஒன்பது பேரும் காட்சியளித்தார்கள். உருவம், வாகனம், அணிகலன்கள், ஆயுதங்கள், அனைத்தும் உருவங்கள் கொண்டிருந்தது.
அங்கிருந்து கிளம்பி கனெக்டிகட் மிடில்டவுன் உடுப்பியில் சாப்பிட்டவுடன் ஸியஸ்டா மயங்க நினைத்தாலும், கடமை அழைப்பதால் டிரைவர் வேலையைத் தொடர்ந்தேன். நாங்கள் செல்வதற்குள் நியு யார்க் நகர அணிவகுப்பு முடிந்து விடும் என்பதால், நேராக கல்லூரி நண்பனின் வீட்டிற்கு வண்டி செலுத்தினேன். எல்லாரும் உறவோடு வான்கோழி உண்பதற்காக மூட்டை முடிச்சுகளுடன் சென்று கொண்டிருந்தார்கள். எள் போட்டால் எண்ணெயாகும் அளவு ட்ராஃபிக்.
நண்பனின் வீட்டில் உண்டு கதைத்தவுடன் அனைவரையும் மகிழ்விக்க ‘How to lose a guy in 10 days’ திரையிட்டோம். மனைவிகள் எவ்வாறு எங்களை இயல்பாக தர்மசங்கடத்துக்குள்ளாக்குகிறார்கள் என்பதை சிரிப்போடு சொன்ன படம். தமிழில் சூர்யாவும் ரீமா சென்னும் நடித்தால் அமோகமாக ஹிட் ஆகும்.
அடுத்த நாள் காலையிலேயே நகரமையத்துக்குக் கிளம்பத் திட்டமிட்டிருந்தோம். குழந்தைகளுடன் கிளம்புவது தனிக்கலை. அவர்கள் காலணி, கோட் எல்லாம் அணிவிப்பது முதல் கட்டம். உருட்டுகட்டையாகத் தூக்கிச் சென்று கார் இருக்கையில் அமர்த்தி பெல்ட் போடுவது அடுத்த நிலை. போட்ட பின் வண்டி ஓட ஆரம்பித்த அறுபத்தி ஏழாவது விநாடியில் ‘potty’, ‘மூச்சா’ என்று விதவிதமாக குரல் கொடுப்பதை இருபத்தி இரண்டு நிமிடங்கள் சமாளிப்பது சிறப்பு பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே முடிவது மோன நிலை.
இவற்றையெல்லாம் திடீரென்று ஒரு நாள் செய்ய நேருவது விபரீத நிலை.
அன்று அம்மாக்கள் நியு யார்க் நகர மையத்தில் ஷாப்பிங் செய்ய, நாங்கள் வாண்டுக்களை சமாளித்தோம். உணவு கொடுப்பது, தூக்கம் செய்வது போன்றவற்றை ஆண் மகன் செய்யும் விதத்தை ஆடம் சாண்ட்லர் ‘Big Daddy’யில் சொல்லிக் கொடுத்த விதம் செய்து முடித்தேன். நடுவில் அனாதரவாக மகளிர் காலணி இரண்டு ஜதை நிறைந்த பையைப் பார்த்து பதைபதைத்தோம். காவலரிடன் சென்று முறையிட்டால், எங்களை சந்தேகப் பார்வை பார்த்தபடி, ஷூ தங்களுக்குப் பொருந்துமா, கேர்ள்ஃப்ரெண்ட்களுக்குப் பொருந்துமா, என்று பொருத்தம் பார்த்து எடுத்துக் கொண்டார்கள்.
மனைவிகள் பத்து டாலருக்கு குளிர்கால ஆடைகள் கிடைக்கும் இடங்களுக்கும், பத்து மடங்குக்கு அதிகம் விலைக்கு கைப்பை விற்கும் இடங்களுக்கும் சென்று மிதிபட்டு, பிழியப்பட்டு திரும்பினார்கள். ஆறு வயதுக்குக் கீழ் வயதிருந்தால் பல இடங்களுக்கு செல்ல முடியாது. ஐ.நா. சபை பர்வையிடுதல், என்.பி.சி. தொலைக்காட்சி ஸ்டூடியோக்களைப் பார்வையிடுதலும் இதில் அடக்கம். நாங்கள் அடக்கமாக ஒரு நாளாவது முழுக்க முழுக்கக் குழந்தையைக் கவனிக்கிறோம் என முன்வந்தோம். குடும்ப உறுப்பினர்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்க, சோர்வுடன் ஆண்கள் வீடு திரும்பியது அதிசயம்.
அடுத்த நாள் தமிழோவியம் கணேஷ் சந்திரா, எடிட்டர் மீனாக்ஷியின் சந்திப்பு. சிரிக்கும் புத்தர்களும் குடைப் பிள்ளையார்களும் பீங்கான் பொம்மைகளும் நிறைந்த வரவேற்பறை. காதிகிராஃப்ட் ஷோரூம் போன்ற ரம்மியமான தேர்வுகள் கொண்ட அலங்கரிப்புகள். அவற்றில் ரசித்ததையெல்லாம் என் பெண் சுட்டிக்காட்ட ‘உனக்கே உனக்காக எடுத்துக் கொள்’ என்று அன்பு மழை.
தமிழோவியத்தில் எழுதிய சமையல் குறிப்புகளை எல்லாம் செய்து காட்டி அசத்தியிருந்தார். மூக்குப் பிடிக்க சாப்பிட்டது போக, கண்ணையும் பிடிக்குமளவு பாயசத்துடன் உணவு. வழக்கம் போல் வலைப்பதிவுகளின் சூடான நிகழ்வுகள், முகமூடி அலசல் கொண்ட இலக்கிய உரையாடல்.
நியு ஜெர்ஸியில் எம்.எல்.ஏ.வுக்கு நின்றால் கணேஷ் சந்திரா ஜெயித்துவிடுவார். ஓக் ட்ரீ ரோடில் சிடிக்களும் காராசேவுக்களும் கதகளி பொம்மைகளும் மேய்ந்த கடைகளில் எல்லாம் விதம் விதமாக கணேஷ் சந்திராவை நலம் விசாரித்தார்கள். அவர் பேரைச் சொன்னால், பாதிக் கடைகளில் தள்ளுபடி விற்பனை கிடைக்கும்.
பாஸ்டன் டு நியு யார்க் நான்கு மணி நேரப் பயணம். திரும்பி வரும்போது அனைத்து கார்களும் விரும்பும் I-95 நெடுஞ்சாலைத் தொடாவிட்டாலும் ஏழு மணி நேரம் ஆகிப்போனது. அடுத்த முறையாவது இந்த முறை சந்திக்க இயலாத நட்புகளைப் பார்க்க வேண்டும்.
திரும்பி வந்து யாஹுவைத் திறந்தால் அதிகம் தனி மடல்கள் இல்லை. முன்பெல்லாம், இவ்வாறு நான்கு நாட்கள் இணையத் தொடர்புத் துண்டித்து வாழ்ந்தால், குறைந்தது ஐம்பது நண்பர்களிடமிருந்து, பதிலெழுத வேண்டிய மின்மடல்கள் நிறைந்திருக்கும். வலையில் பதிவதாலோ என்னவோ இது போன்ற நண்பர்களின் ஊடாட்டம் குறைந்திருக்கிறது. இந்தப் புது வருடம் புதிய சபதம் ஏதாவது எடுக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு நட்பையாவது தொலைபேசி மூலம் புதுப்பித்துக் கொள்வது என்று ஏதாவது எடுத்து பின்பற்றுவேன்.
மீதமுள்ள மின்மடல்களைக் களைந்ததில் தி ஹிந்துவில் என் வலைப்பதிவு பற்றிய குறிப்பு இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தந்தது.
நன்றி திலோத்தமா.
நண்பரின் இல்லத்தில் பார்த்த ‘சிற்றகல்‘ புத்தகம் வாங்க வேண்டிய பட்டியலில் சேர்த்திருக்கிறேன். நூற்றியேழு கவிஞர்கள். 211 கவிதைகள். பூமா ஈஸ்வரமூர்த்தியும் லதா ராமகிருஷ்ணனும் தொகுப்பாளர்கள். மரத்தடியில் எஸ்.பாபு வழங்குவது போல் சிற்றிதழ் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார்கள். குழு மனப்பான்மை இல்லாமல் எல்லா ரகங்களும் கொண்டிருக்கிறது.
“இன்று நவீன தமிழ்க் கவிதையின் பல்வேறு தொனிகள், போக்குகள், கருப் பொருட்கள், பாணிகள் முதலியவை குறித்த அறிமுகத்தையும் பரிச்சயத்தையும், அதன் வழி அவற்றிற்கான ரசனையையும் பரவலாக்க பல கவிஞர்களை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு அவசியம்” என்கிறார் லதா ராமகிருஷ்ணன்.
தினம் ஒரு கவிதை, தினம் ஒரு சொல் போல் தினம் ஒரு கவர்ந்த பதிவை (blog post) யாராவது கொடுக்கலாம். அந்த வார நட்சத்திரமாகவோ, குறிஞ்சி மலர் போல் பதிபவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. விருப்பம் கொண்ட அனைவருமே, தங்கள் வலைப்பதிவின் ஓரத்தில் தங்களைக் கவர்ந்த அன்றைய பதிவை இடலாம்.
இன்று தமிழ்வலையை நுனிப்புல்லியதில் அமெரிக்காவில் வாழும் மனைவிகளின் கதி என்னைக் கவர்ந்தது. நிறைய எழுதவேண்டிய, பேசப்படவேண்டிய சமாச்சாரம்.
குட்நைட் சொல்லி உறங்கச் செல்லுமுன் இந்த வார நட்சத்திரமாக்கியதற்கு என்னுடைய நன்றி. மீண்டும் உங்களை வணங்கி வலைப்பதிவதில் மகிழ்கிறேன். இந்த வாரம் முழு ஐந்து நாட்களும் வேலை. மூன்று வார வேலை நாட்கள் கொண்ட போன வாரத்தில் இருந்து நிறைய வித்தியாசம். பளுவைத் திணிக்கும் வாரம். இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்.
என்னைக் குறித்த அறி(மறு)முகம்
என்னுடைய செய்திக் கோவை (ஆங்கிலம்)
காலேஜ் கானா
நெட்டில் கேட்டது:
ஆடிய ஆட்டம் என்ன
விட்ட ஜொள்ளு என்ன
திரிந்ததோர் தெருக்கள் என்ன…
கல்யாணம் ஆகி போனால்
கூடவே வருவதென்ன..
ஹோ….ஓஓஓ
ஹால்டல் வரை புக்கு
காம்பவுண்ட் வரை லுக்கு
பஸ்ஸு வரை ஃபிகரு
கடைசி வரை யாரோ
கடைசி வரை யாரோ?
பாலஸ்தீனம்
பா. ராகவன்: “1948-ம் வருடம் வரை இஸ்ரேல் என்றொரு தேசம் கிடையாது. அது, யூதர்களின் மனத்தில்தான் அதுநாள்வரை கருவாக வளர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரிட்டிஷ்காரர்கள் பாலஸ்தீனைக் கூறுபோட்டார்கள். அவர்கள்தாம் அப்போது அந்தப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவர்கள். ஒரு கூறுக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள். அது யூதர்களின் தேசமானது. இன்னொரு கூறு பாலஸ்தீனிய அரேபியர்களின் இடமாகவே தொடர்ந்து இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது வேறு.
இஸ்ரேலை யூதர்கள் ஸ்தாபித்ததை விரும்பாத சில அரேபிய தேசங்கள் (எகிப்து, ஜோர்டன், சிரியா, லெபனான், ஈராக்) தலைவர்களற்ற பாலஸ்தீனியப் போராளிகளுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்த்தன. 1948-ம் ஆண்டு நடைபெற்ற இந்த முதல் யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேல் ஒவ்வொரு நாட்டுடனும் ஓர் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு, போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஜோர்டன் படை முன்னேறி வந்த மேற்குக்கரையின் பெரும்பகுதி அந்நாட்டுக்கே சொந்தம் என்றானது. எகிப்துப் படைகள் நிலைகொண்ட காஸா பகுதி, எகிப்தின் சொந்தமானது. கூறுபோட்ட பிரிட்டன், தன்வேலை அதோடு முடிந்ததாகச் சொல்லி விலகிக்கொண்டது. பாலஸ்தீனிய அராபியர்கள் வேறுவழியின்றி, தனியே போராட்டத்தில் குதித்தார்கள். ஐம்பதாண்டு காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்தப் போராட்டத்தில் அவர்கள் எத்தனையோ வீழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அராஃபத்தின் மறைவைக் காட்டிலும் ஒரு பெரிய வீழ்ச்சி அங்கே இதுகாறும் ஏற்பட்டதில்லை.
இஸ்ரேல் _ பாலஸ்தீன் பிரச்னையின் சுருக்கத்தை நான்கு வரியில் சொல்லுவதென்றால், அது மேலே உள்ளதுதான். ஆனால் இது நான்கு வரிகளில் முடிகிற விஷயம் இல்லை. நாலாயிரம் வருட சரித்திரச் சிக்கல்களை உள்ளடக்கியது.
தொட்டால் அல்ல; முகர்ந்து பார்த்தாலே கூடப் பற்றிக்கொள்ளக்கூடிய மிகத்தீவிரமான பிரச்னையின் மையப்புள்ளி இது. ஏனெனில் இதில் அரசியல் மட்டுமல்ல; மதமும் கலந்திருக்கிறது. மதமும் அரசியலும் இரண்டறக் கலந்த இடத்தில் பற்றிக்கொள்ள பெட்ரோல் இருந்துதான் ஆகவேண்டுமென்று அவசியமா என்ன?”
உக்ரெய்ன்
உக்ரைன் நாட்டில் தேர்தல் முடிவு தொடர்பான முட்டுக்கட்டை நீடிப்பு: நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷியாவிற்கு ஆதரவான தற்போதைய பிரதமர் விக்டர் யானுகோவிச்சிற்க்கே வெற்றி என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. உக்ரெய்ன் நாட்டில் சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலின் முடிவுகளை விவாதித்து வரும் அந் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வெளியே பெரும் மக்கள் கூட்டம் கூடியுள்ளது. கூடியுள்ளோரில் பலர் எதிர்க்கட்சித் தலைவர் விக்டர் யுஷென்கோவிற்கு ஆதரவாக கோஷமிட்டு வருகின்றனர். நடைபெற்ற தெர்தலில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக விக்டர் யுஷென்கோ கூறுகிறார். தலைநகர் கியவ்வில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் அரசு தொலைக்காட்சியிலும், அரசு ஆதரவு தொலைக்காட்சிகளிலும் காட்டப்படவில்லை.
நன்றி: BBC Tamil
சுட்டித்தமிழ்
அருண் அறிமுகப்படுத்திய ஜனாவிற்கு ‘பிஞ்சு படைப்பாளி’ (‘Creative Child’) என்னும் தேசிய விருது கிடைத்திருப்பதாக கணேஷ் சந்திரா சொன்னார். டிசம்பர் மூன்றாம் தேதி கலாம் கையால் விருதைப் பெறுகிறார்.
ரியல் சாதனையாளர். இறைவன் அருளால் ஆசைப்பட்டது அனைத்தும் கிட்ட வேண்டுகிறேன்; வாழ்த்துகிறேன்.
Recent Comments