Archive
நடிகர் விஜய்க்கு சவாலா?
‘அட்டகாசம்’ படத்தில் அஜீத்தின் பாடல் — Vaali:
இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?
ஏழு கடலும் என் பெயர் சொன்னால் உனக்கென்ன?
எரிந்து போன சாம்பலில் இருந்து
எழுந்து பறக்கும் ஃபீனிக்ஸ் போல
மீண்டும் மீண்டும் பறப்பேன் உனக்கென்ன?
நான் வழ்ந்தால் உனக்கென்ன?
உனக்கென்ன ? தம்பி உனக்கென்ன?
உனக்கென்ன?
ஏற்றிவிடவோ தந்தையும் இல்லை
ஏந்திக்கொள்ள தாய் மடி இல்லை
என்னை நானே சிகரத்தில் வைத்தேன்
அதனால் உனக்கென்ன?
தாயின் கருவில் வளரும் குழந்தை
ஏழாம் மாதம் இதயம் துடிக்கும்
ஐந்தே மாதத்தில் இதயம் துடித்தேன் அதனால் உனக்கென்ன?
இவன் கொண்ட நெருப்போ குறையவில்லை
நெருப்பென்றும் தலை கீழாய் எரிவதில்லை
மலைகளின் தலையோ குனிவதில்லை
மனமுள்ள மனிதன் அழிவதில்லை
நீயென்ன உருகும் பனிமலை நான் தானே எரிமலை எரிமலை
உனக்கென்ன ? தம்பி உனக்கென்ன?
இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?
ஹிட்லராக வாழ்வது கொடியது
புத்தனாக வாழ்வதும் கடிது
ஹிட்லர் புத்தன் இருவருமாய் நான் இருந்தால் உனக்கென்ன
வெற்றி என்பது பட்டாம்பூச்சி மாற்றி மாற்றி மலர்களில் அமரும்
உனக்கு மட்டும் நிரந்தரம் என்று நினைத்தால் சரியல்ல
எனக்கொரு நண்பன் என்று அமைவதற்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை
எனக்கொரு எதிரியாய் இருப்பதற்கு உனக்கொரு உனக்கொரு தகுதியில்லை
நீயென்ன உருகும் பனிமலை
நான் தானே எரிமலை எரிமலை
உனக்கென்ன ?
தம்பி உனக்கென்ன?
நெதர்லாந்தின் மைக்கேல் மூர் படுகொலை
அமெரிக்காவில் தேர்தல் பரபரப்பில் அந்தச் செய்தி அவ்வளவாக கவனிப்பைப் பெறவில்லை. இறந்தது என்னவோ ஒருவர்தான். ஆகவே இருக்கலாம். பல்லாயிரக்கணக்கான சூடானியர்கள் இன்றும் பாதுகாப்பின்றி இருப்பதே அமெரிக்காவுக்குப் பெரிய விஷயம் இல்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஓவியரான வான் கோ (Van Gogh)-வின் உறவினர் கொல்லப்பட்டிருக்கிறார். தியோ வான் கோ (Theo van Gogh) நெதர்லாண்ட் நாட்டில் வசிக்கும் குறும்பட இயக்குநர். காலை ஒன்பது மணிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். நாக்கை அறுத்து மிகவும் கொடூரமான முறையில் கொலை நிகழ்ந்திருக்கிறது. மொரொக்கோ நாட்டில் இருந்து குடியேறிவன் கொன்றிருக்கிறான். அவன் தவிர வேறு சில மொரோக்கோ நாட்டில் இருந்து வந்த நெதர்லாந்தவர்களும் குற்றத்திற்காக பிடிபட்டிருக்கிறார்கள்.
முஸ்லீம்களை பகைத்துக் கொள்ளும் ஒரு பதினோரு நிமிட குறும்படத்தை எடுத்திருக்கிறார். திருமணமான முஸ்லீம் பெண்களின் அவலத்தை, நறுக்கென்று, ஹால்ண்ட் நாட்டு தூர்தர்ஷனில் வெளியிட்டிருக்கிறார்.
இந்த நூற்றண்டில் ஹாலண்ட் நாட்டுக்கு இது இரண்டாவது படுகொலை. இரண்டாடுகளுக்கு முன்பு ப்பிம் ஃபார்டூய்ன் (Pim Fortuyn). போன வாரம் வான் கோ. ஆனால், இந்த முறை இஸ்லாமிய தீவிரவாதம். எனவே, இன்னும் பரவலாக எதிர்க்கப்படுகிறது.
ப்பிம் ஃபார்டூய்ன் கலகக்காரர்.ஃப்ரான்ஸின் வலதுசாரி பிரமுகர் ழான்-மரீ லெ பென் (Jean-Marie Le Pen) போல தீவிரமான கொளகைப்பிடிப்போடு மிதவாதிகள் வயிற்றில் புளியோதரையே கலக்குபவர். மேற்கத்திய நாடுகளில் வறுமைக்கோட்டை நெருங்கிய நிலையில், தினப்படி வாங்கும் ஏழைகள், இப்போது இடதுசாரி கொள்கைகளைத் தூக்கி ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பி விட்டார்கள். அவர்களுக்கு புஷ் போன்ற வலதுசாரிகள் மனங்கவர ஆரம்பித்திருக்கிறார்கள்.
தங்களின் வேலைகளுக்கு லட்சுமி வெடி வைப்பதற்காக, அண்டை அயலில் இருந்து இன்னும் பரம் ஏழைகள் இறக்குமதியாவது பிடிக்கவில்லை. படித்தவர்களின் மனப்பானமையாக தாராளமயமாக்கலையும் அதன் வழித்தோன்றல்களையும் கண்டு அச்சமுறுகிறார்கள். நாகரிகம் எல்லாம் பூசி, ·பினாயில் மெழுகி, தேன் தடவியப் பேச்சுக்களின் நடுவே, இவர்களின் அடக்கி வைத்த ஆசைகளை வெளிக் கொனர்ந்தவர் ப்பிம் ·பார்டூய்ன்.
இஸ்லாம் ‘பிற்படுத்தப்பட்டது’ என்று அதிரடியாக ஆரம்பித்தார். பெண்களையும், ஓரின மக்களையும் மோசமாக நடத்துவதை நிறுத்தவேண்டும் என்றார். பெண்கள் நிலை, மனித உரிமை, அடிப்படை வசதி போன்ற பலவற்றினால் அமெரிக்காவை விட முன்னேறிய நாடாக நெதர்லாந்து கருதப்படுகிறது. நெதர்லாந்தில் ஓரினக் கல்யாணங்களுக்கு சட்டபூர்வமாக முழு அனுமதியும், சாதாரண மணமக்களுக்குக் கிடைக்கும் அத்தனை சமூக நலன்களும் கிடைக்கும்.
அமெரிக்காவில் மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு மாகாணங்களில்தான் இவை ஏனோ தானே என்று கிடைக்கிறது. கடந்த தேர்தலில் பதினொன்று மாநிலங்கள், ஓரினத் திருமணங்களை எதிர்த்து வாக்களித்திருக்கிறது.
ஹாலந்து நாட்டவருக்கும் ப்பிம்மின் பேச்சுக்கள் பிடித்திருந்தது. ஒண்டவந்தப் பிடாரன் ஊர்ப்பிடாரிகளை விரட்டுவது போல நினைத்துக் கொண்டார்கள். குடியேறிகள் புகுந்துகொண்டு தங்களின் தனித்துவத்தை மாற்றியமைப்பதை எதிர்த்தார்கள். பக்கத்து நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற நாடுகளிலும் குடிபுகல் எளிது அல்ல. நெதர்லாந்திலும் குடிபுகலை நிறுத்தி வைப்போம் என்று ப்பிம் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.ஃப்ரான்ஸின் ழான் இவரைவிட இன்னும் ஒரு படி அதிகம் சென்று வெளிநாடுகளில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தோரை துரத்தியடிப்பேன் என்று தேர்தல் அறிக்கை விடுகிறார்.
ஆனால், ப்பிம்மின் இறப்பு பெரிய அளவில் கண்டனத்துக்கு ஆளாகவில்லை. அவரின் மறைவு ஒருவித நிம்மதியையும், நிஜத்தை ஒத்திப்போடவும் வசதி செய்தது. இப்பொழுது, மீண்டும் அதே போன்ற ஒரு கொலை. ஆனால், இன்னும் கொடூரமாக. சுதந்திரப் பேச்சை அறைகூவியவர் கொல்லப்பட்டிருக்கிறார். ப்பிம் அன்றே அடித்துச் சொன்னதை உண்மையாக்கும் விதமாக நிகழ்ந்திருக்கிறது.
கொலை செய்யும்படி தியோ வான் கோ என்ன படம் எடுத்தார்? ‘சரணாகதி’ (Submission) என்னும் தலைப்பு. கட்டாய மணத்துக்கு ஆளாகும் மணப்பெண். தினமும் அடித்து சித்திரவதைப்படுத்தும் கணவன். வன்புணரும் மாமா என்று பத்து நிமிஷத்தில் ஒரு முஸ்லீம் பெண்ணின் இரண்டாம்தர வாழ்க்கையைச் சொல்லும் படம். எழுதியவரும் ஒரு முஸ்லீம் பெண்மணி. பனிரெண்டு வருடத்துக்கு முன் சோமாலியாவில் இருந்து நெதர்லாந்துக்குக் குடியேறியவர். இன்று பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். அயான் ஹிர்ஸி அலி (Ayaan Hirsi Ali)யே படத்தில் உருக்கமான குரலில் விவரித்திருக்கிறார். வன்முறைக்குள்ளான நால்வரின் கிட்டத்தட்ட மார்பகஙள் தெரியும் ஆடையில், குரானின் வாசகங்களை எழுதி குறும்படத்தின் முடிக்கிறார் தியோ வான் கோ. ஆகஸ்ட்டில் ஒளிபரப்பானபிறகு தியோவுக்கும் அலிக்கும் கொலை மிரட்டல் வந்திருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பில் இருந்தே இஸ்லாமின் இறைத் தூதுவர் முகமத் ‘வக்கிரம் பிடித்தவர்’, ஆறு வயது ஆயிஷாவை ஐம்பத்திமூன்றில் மணமுடித்தவர் என்று ஹிர்ஸி அலி கடுமையாகத் தாக்கிவருபவர்.
மூன்று பகுதியாக இந்தத் தொடரை எடுக்க தியோ வான் கோ தீர்மானித்திருந்தார். முதல் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள். இரண்டாம் பகுதியில் ஆண்களின் நிலைப்பாடு. கடைசியாக அறிஞர்கள், முஸ்லீம் பெரியோர்களின் கருத்து. அரைகுறைப் படத்திலேயே அவசரப் பிச்சுவாக கொலையாளி, தியோவை முடித்து விட்டார்.
ஹாலந்தின் பதினெட்டு மில்லியனில் ஒரு மில்லியன் இஸ்லாமியத்தை சார்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோனோர் ‘சரணாகதி’ திரைப்படத்தையும் ஹிர்ஸி அலியையும் எதிர்த்தாலும், ஐரோப்பாவின் அராபிய லீக் தியோவின் மரணத்துக்கு அதிர்ச்சியை தெரிவித்துள்ளது.
‘சரணாகதி’ தவிர இரண்டாண்டுகள் முன்பு தீவிரவாதத்துக்கு பலியான் ப்பிம் ஃபார்டூய்ன் (Pim Fortuyn) குறித்த வாழ்க்கை வரலாற்றையும், அவர் இறந்த தேதியான 06-05 என்னும் தலைப்பில் படம் எடுத்திருக்கிறார். இது இன்னும் வெளியாகவில்லை. தொலைபேசியில் சூடான பேச்சின் மூலம் உணர்ச்சி பொங்க வைக்கும் இளவயது மாதுவை குறித்த 1-900 என்னும் படமும் பரவலாக பாராட்டைப் பெற்றது. ·போன் மூலம் செக்ஸ் பேச விரும்புபவர்கள் அமெரிக்காவில் 1-900 என்னும் இலக்கத்தில் ஆரம்பிக்கும் எண்களை அழைப்பார்கள். நெதர்லாந்து பெண்ணுக்கும் மொரோக்கோ பையனுக்கும் ஏற்படும் காதல், சிறிய வயதில் குற்றம் புரிந்தோருக்கான மறுவாழ்வு திட்டங்களை அலசும் திரைப்படம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. நெதர்லாந்து திரைப்பட விழாக்களில் பலமுறை பரிந்துரைக்கப் பட்டும், ஐந்து விருதுகளும் வாங்கியிருக்கிறார்.
ஹாலந்து நாட்டவர்கள் கொதித்துப் போயிருப்பதாக லண்டன் டைம்ஸ் எழுதுகிறது. ‘ஹிட்லரை கல்லறையில் இருந்து எழுப்ப வேண்டும்’ என்றும், ‘அனைத்து வெளிநாட்டினரும் நாடு கடத்தப்பட வேண்டும்’ என்றும் புகைப்படத்துடன் பேட்டி கொடுக்கிறார்கள். இதற்கு நேர் மாறாக மொரொக்கோ நாட்டில் இருந்து ஹாலந்தில் குடியேறுபவர்களுக்காக நடத்தப்படும் வலைத்தளங்களில் ஆதரவு கரகோஷம் எழுந்திருக்கிறது. அடுத்து ஹிர்ஸியையும் தீர்க்க வேண்டும் போன்ற பதிவுகளுக்கு அஞ்சி, பெரும்பாலான தளங்கள் மூடப்பட்டிருக்கிறது.
நெதர்லாந்து நாட்டின் குடிபுகல்துறைக்கான மந்திரியும் இஸ்லாமின் சுதந்திரத்தை ஒடுக்க நினைக்கிறார். ‘மசூதிகளில் ‘டட்ச்’ மொழிதான் ஒலிக்கவேண்டும். ஹாலந்தில் இருந்து கொண்டு எதற்கு வேற்று மொழிகள்?’ என்று கேட்டிருக்கிறார். இவர் ப்பிம் ஃபார்டூய்னின் அரசியல் கட்சி சார்ந்தவர். குடியுரிமை வழங்குவதற்கான கேள்விகளிலும், பயிற்சிகளிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார். மதத்தலைவர்களுக்கான விசா கிடைப்பதற்கே இந்தப் பரீட்சையை பாஸ் செய்ய வேண்டும். டட்ச் மொழி, ஹாலந்து சரித்திரம், சமூக அமைப்பு போன்றவற்றைக் கரைத்துக் குடிக்காவிட்டால் இமாம்களுக்கு விசாவே கிடைக்காது. கருணைக் கொலை, பேச்சு சுதந்திரம், ஆகியவையும் இதில் அடக்கம்.
ஒருவரையருவர் நம்பாத பொழுதுதான் கோபம் உதிக்கிறது. பயம் வருகிறது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட, சந்தேகக் கண்ணால் பார்க்கப்படுபவர்களுக்கு எரிச்சல் கிளம்புகிறது. சொந்த அடையாளங்கள் முக்கியத்துவம் அடைய ஆரம்பிக்கின்றன. குழுக்களாக சேர ஆரம்பித்து, தங்கள் நிலைப்பாட்டை பிரகடனப்படுத்துகிறார்கள். குடியேறியதற்காக ஃப்ரான்ஸில் சர்தார்ஜி கொண்டை கூடாது; இடுப்பில் கத்தி தவிர்க்க வேண்டும். அமெரிக்காவில் (பெரும்பாலான இடங்களில்) தீபாவளி பட்டாசு கிடையாது. வந்தேறியாக இருப்பதால், சொல்வதை எல்லாம் பின்பற்றி அடக்கமாக இருக்க வேண்டுமா? அல்லது நம் மேல் என்றாவது நம்பிக்கை பிறக்கும் என்று அமைதியாகப் பின்பற்றுவதா? அமெரிக்காவில் புஷ் ஜெயிப்பதற்குக் கூட இவ்வாறான காரணங்களை சொல்கிறார்கள். அன்னியப்படுத்தலும் பயமுமே பலரை வலதுசாரியாக்கியுள்ளது என்கிறார்கள்.
காந்தி, மார்ட்டின் லூதர் கிங் சொன்ன அஹிம்சைக்கு இது நல்ல காலமில்லை. வீரப்பனுக்கும், விஜயகுமாருக்கும் துப்பாக்கி தூக்கி காரியத்தை முடிப்பதே பெரிதெனத் தோன்றும் காலம். கொஞ்சம் அறிவியல் புனைகதை போல் யோசித்தால், அமெரிக்காவில் இருக்கும் குடியேறிகள் அனைவரும் வெளியேற்றப்படுவதாகவும், சிவில் போர் போல ஒன்று வெடிப்பதாகவும் கற்பனை விமானம் ஓடுகிறது. நீதிமன்றங்கள், மக்கள் தீர்ப்பு போன்றவற்றில் நம்மில் பலர் நம்பிக்கையிழந்து வருகிறோம். அன்றாவது ‘அரசன் அன்றே கொன்றான்’. இப்பொழுது பாதிக்கப்பட்டவர்கள்தான் இன்றே கொல்கிறார்கள்.
தன் கருத்தை பட்டவர்த்தனமாக படம் எடுத்ததற்கு தியோ பலியாகியுள்ளது வருத்தத்திற்குரியது. பேச்சுரிமை அனைவருக்கும் இருக்கும் நெதர்லாந்தில் இது இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்குகிறதோ என்று அச்சப்பட வைத்துள்ளது. கிறித்துவத்தை நக்கல் செய்து வரும் மெல் ப்ரூக்ஸ் போன்றோரின் படங்களை ஏற்றுக் கொள்ளும் சமூகத்தில் இருப்பவர்கள், இஸ்லாமியரையும் அவ்வாறே பொறுத்துப் போகச் சொல்வது மிகவும் சரியே.
ஆனால், முழுச்சுதந்திரமென்பது தங்களின் பேச்சுரிமையை அளந்து அனுபவிப்பதற்கா அல்லது தங்களின் கோட்பாடுகளை பிறர் புண்படும் அளவு நம்புவதே என்று நினைப்பதற்கா?
– பாஸ்டன் பாலாஜி
தொடர்புடைய திண்ணை கட்டுரைகள்:
அஞ்சலி: இயக்குனர் வான் கோ – ஆசாரகீனன் | Submission – ஆசாரகீனன்
Recent Comments