Archive

Archive for November 10, 2004

தீபாவளி வாழ்த்துக்கள்

November 10, 2004 Leave a comment

நாளை மற்றொரு நாளே என்பது போல் தீபாவளியன்றும் அலுவலகம் சென்று வேலை பார்க்கலாம்; வீட்டிலிருந்து வேலை பார்ப்பதாக சொல்லி சன் டிவி கவனிக்கலாம்.

தீபாவளிக்கான வெடிகள் என்றுமே மனங்கவர்ந்ததில்லை. சஞ்சிதாவின் முதல் பிறந்த நாளுக்கு சென்னை சென்றபோது தீபாவலியாகிப் போனது. வெடிச் சத்தம் கண்டு அவள் அலற, நாங்கள் ஏதோ அனுகுண்டு போடப்படுவது போல் ஒலிகள் புகா அறை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். இரவு பத்து மணிக்கு மேல் வெடிக்கக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், தொடர்ந்து காசைக் கரியாக்கிக் கொண்டிருந்தார்கள். நான் வலைப்பதிவில் விடாமல் பைட் நிரப்புவது போல் அவர்களுக்கும் அது மனமகிழ்வைக் கொடுத்திருக்க வேண்டும்.

இப்பொழுது சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் விளம்பரம் வேறு படுத்துகிறது. நாய்கள் அச்சமுறும் என்றெல்லாம் சொல்கிறார்கள். மனேகா அமைச்சராக இல்லாதபோதும் பிராணிகளுக்குக் கனிவு கிடைக்கிறது.

தீபாவளி என்றால் பிடித்திருப்பது புத்தாடைகளும், இனிப்புகளும். சியர்ஸும், வால்-மார்ட்டும் சேல் போடும்போதெல்லாம் புத்தாடைகள் எடுப்பதால் கொஞ்சம் மதிப்பு குறைந்துதான் போனது. இருந்தாலும் புதுசு என்றுமே புதுசுதான். இனிப்புகள் அமெரிக்காவின் உணவுநலப் பிரசாரங்களினால் பயத்துடன் கும்பிடு போட வைத்திருக்கிறது.

‘சோயா’ விளம்பரமொன்றில் ‘சாப்பிடு ராஜா… சாப்பிடு…’ என்று வாயில் விதம் விதமாகத் திணிப்பது போல், விருந்து வந்தால்தான் காலா ஜாமுன், சம்-சம், பால் கோவா உண்ண மனோபலம் இருக்கிறது. தீபாவளி புது ட்ரெஸ்ஸை நண்பர்களிடம் காட்டும்போது ஏற்படும் ‘இதுதானா…’ என்பது போல், பார்ட்டிகளில் பட்டும் படாமல் பேசிக் கொள்வது சோர்வைத் தரலாம்.


போன வருட விகடன் தீபாவளி ஸ்பெஷலைப் புரட்டியதில் ஜெயமோகனிடம் கேட்ட சில கேள்விகள்:

 • எழுத்துமூலம் எதை அடைய நினைக்கிறீர்கள்?
 • சிறுபத்திரிகை உலகில் சமீபமாக சண்டை சச்சரவுகள் அதிமாகியிருக்கிறதே… சமீபத்தில் ‘சொல்புதிது’ பத்திரிகையில் வந்த ‘நாச்சார் மட விவகாரம்’ கதையில் சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டிருந்தார்கள் என்றுகூட சர்ச்சை எழுந்ததே..”
 • உங்கள் நூல்வெளியீட்டு விழாவில் பேசும்போது ‘இளையபாரதி நூல்கள் வெளியீட்டு விழாவில் கருணாநிதி அவர்களுக்கு இலக்கியவாதிகள் சிலர் காவடி தூக்கி விட்டார்கள்’ என ஆவேசமாகப் பேசி இருக்கிறீர்கள். அதோடு கலைஞரின் படைப்புகளை நிராகரித்தும் பேசி இருக்கிறீர்கள். என்ன கோபம் அது?”

  அப்படியே கொஞ்சம் புத்தம்புதிய, என்னுடைய ஃபேவரிட் மைக்ரோசாஃப்டின் தேடலை முடுக்கிப் பார்த்ததில் கிடைத்தவை:

  1. Lifcobooks.com – Diwali Celebrations

  3. Namakkal kavinjar Ramalingam Pillai pATalkaL- தீபாவளி எனும் திருநாள்:
  “தனித்தனி வீட்டின் தரைமெழுகி
  தரித்திரப் பீடையைத் தலைமுழுகி,
  மனத்துயர் யாவையும் மறந்திடுவோம் ;
  மகிழ்வுடன் உள்ளதை விருந்திடுவோம்.

  உதவாப் பழசாம் வழக்கமெல்லாம்
  உதறித் தள்ளுதல் ஒழுக்கமெனப்
  புதிதாம் ஆடைகள் புனைந்திடுவோம்.
  புதுப்புது வழிகளில் நினைந்திடுவோம்.

  கட்சிச் சண்டைகள் பட்டாசைக்
  கட்டுக் கட்டாய்ச் சுட்டேபின்
  பட்சம் வந்த மனத்துடனே
  பழகுவம் எல்லாம் இனத்துடனும்.

  ஒவ்வொரு வீட்டிலும் பலகாரம் ;
  ஒருவருக் கொருவர் உபகாரம் ;
  இவ்வித வாழ்வே தினந்தோறும்
  இருந்திட வேண்டிநம் மனம்கோரும்.”


  சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’: “விகடன் தீபாவளி மலர் மறுபடியும் வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. எங்கள் இளமைக்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் தீபாவளி என்றால் அதிகாலை எண்ணெய்க் குளியல், புத்தாடைகள், பட்சணங்கள், பட்டாசு, தீபாவளி ரிலீஸ் படங்களுடன், தீபாவளிமலரும் பண்டிகையின் ஓர் அங்கம். ஏஜெண்டிடம் சொல்லி வைத்து, உறை பிரிக்காமல் முகப்புப் படத்தில் கண்ணாடி பேப்பருடன் வரும் மலரை முதலில் கையில் வைத்து வாசனை பார்ப்பதே இன்பமான தீபாவளி அனுபவம். போட்டி போட்டுக் கொண்டு படிப்போம். நான் முதலில் பொம்மை பார்த்துவிட்டு, ‘இவர்கள் எல்லாம் சண்டைபோட்டு ஓயட்டும்… நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம்… எங்கே போகிறது?’ என்று விட்டுப் பிடிப்பேன். யாரார் வீட்டில் மலர் வாங்கி இருப்பார்கள் என்பது தெருவுக்கே தெரியும். ‘ஒரு க்ளான்ஸ் பார்த்துட்டு, இதோ இப்பக் கொடுத்துர்றேன்’ என்று கூசாமல் இரவல் வாங்கிச்செல்வார்கள். கொடுத்தது வீதியெங்கும் ஒரு ரவுண்ட் முடித்துவிட்டு – தற்செயலாக தெற்குச் சித்திரை வீதிக்குப் போனால், அங்கே நம் கையெழுத்துடன் மலர் ஓடிக் கொண்டிருக்கும். பொலிவிழந்து, பக்கங்கள் காது மடங்கி, சில தேவ தேவதைகள் நீக்கப்பட்டு, ஒரு மாதம் கழித்துப் பிரசவத்துக்கு வரும் மகள் போல அல்லது ஹாஸ்டலிலிருந்து லீவுக்கு வரும் மகன் போல் திரும்பி வரும்.

  என் நினைவில் தேவனின் மல்லாரிராவ் கதையோ, துப்பறியும் சாம்பு கதையோ ஒவ்வொரு ஆண்டும் இருக்கும். சில்பியின் தெய்வீகச் சித்திரங்கள், கோபுலுவின் முழுப்பக்க ‘நார்மன் ராக்வெல்’ ரக ஓவியம், ராஜுவின் நகைச்சுவை ஓவியங்கள் இவையெல்லாம் இன்றும் நினைவில் பசுமையாக உள்ளன.

  விகடன் பவழவிழா மலர் போட்ட போது, அதற்குக் கிடைத்த ஆதரவைப் பார்த்து நானும் பிரமித்தேன். இதுதான் தீபாவளி மலரை மறுபடி கொண்டுவரும் தைரியம் தந்திருக்கிறது. சில கலாசார அடையாளங்கள் மறைந்தாலும் திரும்பி வந்துவிடும் என்று மக்லூஹன் சொன்னது நினைவுக்கு வருகிறது.”

 • Categories: Uncategorized