Archive

Archive for November 22, 2004

எனது வெண்பாப் புராணம் – என். சொக்கன்

November 22, 2004 2 comments

© தினம் ஒரு கவிதை

சென்றவாரத் தொடர்ச்சி

சென்றமுறை, வார இறுதி விடுமுறையில் சேலம் சென்றிருந்தபோது, என்னுடைய மடிக்கணினியை, வீடியோ கேம் விளையாடுவதற்காக என் தம்பி கொண்டுசென்றுவிட்டான். ஆகவே, சில மணி நேரங்கள் என்ன செய்வதென்று புரியாமல் அமர்ந்திருந்தேன்.

அப்போதுதான், ‘தினகரன்’ நாளிதழில் வெளியாகியிருந்த ஒரு சிறிய விளம்பரம் கண்ணில் பட்டது. 2004ம் ஆண்டு தொழில் மலருக்காக, கவிதை மற்றும் சிறுகதைப் போட்டிகளை அறிவித்திருந்தார்கள்.

கவிதைப் போட்டிக்கு, கும்பகோணம் பள்ளித் தீவிபத்தை நினைவுபடுத்தும்வகையில், ‘அக்னியில் அரும்புகள்‘ என்று தலைப்பு கொடுத்து, அதிலும் பின்குறிப்பாக, ‘மரபுக் கவிதை’மட்டும்தான் எழுதவேண்டும் என்று விதிமுறை தந்திருந்தார்கள். எந்தப் பாவகை என்று ஏதும் குறிப்பு இல்லை, ஆனால், மொத்தம் பதினாறே வரிகள்தான் அனுமதி !

சரி, சும்மா உட்கார்ந்திருப்பதற்கு, நான்கு வெண்பாக்கள் எழுதி, அந்தப் பதினாறு வரிகளை ஒப்பேற்றலாமே என்கிற ஒரு ஆர்வக் குறுகுறுப்பில், ஒரு பழைய நோட்டை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.

சுமார் அரை மணி நேரம், பலவிதமான அடித்தல், திருத்தல்களில் சென்றது. இப்படி நான்கைந்து பக்கங்களைக் கிறுக்கி நிரப்பியபின், ஒருவழியாக நான்கு வெண்பாக்கள் வந்திருந்தன.

மீண்டும் படித்துப்பார்த்தபோது, ஓரளவு நன்றாகவே வந்திருப்பதாகத் தோன்றியது – இதைப் போட்டிக்கு அனுப்பிவைக்கலாம் என்று எண்ணி, வேறொரு காகிதத்தில் படியெடுத்தேன். என்னுடைய கையெழுத்து, கோணல்மாணலாக வந்ததில், அந்த ‘fair draft’கூட, ‘rough draft’போல்தான் தெரிந்தது. கவே, நமக்கு ஏன் இந்த வம்பு என்று அதைக் கிழித்து எறிந்துவிட்டேன்.

பிறகு, பெங்களூர் வந்தபிறகு, சட்டைப்பையில் அந்தக் கிறுக்கல் காகிதங்கள் தென்பட்டன. அவற்றை மறுபடி கணினியில் தட்டச்சு செய்து, அச்சிட்டு, தினகரன் முகவரிக்கு அனுப்பிவைத்தேன்.

அதே தொழில் மலரின் சிறுகதைப் போட்டியிலும் கலந்துகொள்வதாக எண்ணியிருந்ததால், ஒரு வித்தியாசத்துக்காக, இந்தக் கவிதைகளை என் பெயரில் அனுப்பாமல், என் தம்பி சுவாமிநாதனுடைய பெயர், முகவரியில் அனுப்பினேன். இதைப்பற்றி அவனிடமும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கவேண்டும். மறந்துவிட்டேன்.

சில நாள்கள்கழித்து, அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. தினகரனிலிருந்து, தொழில் மலர் கவிதைப்போட்டியில் அவனுக்கு முதல் பரிசு கிடைத்திருப்பதாகத் தகவல்.

இதைக் கேட்டதும், என் தம்பிக்கு ஒன்றுமே புரியவில்லை. சிறுகதைப் பரிசு என்றாலாவது நடந்ததை ஓரளவு ஊகித்திருப்பான், கவிதை என்பதால், யாரோ விளையாடுகிறார்கள் என்று எண்ணி, அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டான் அவன்.

சில பல குழப்பங்களுக்குப்பின், நடந்ததையெல்லாம் அவனிடம் சொல்லி, உடனடியாக தினகரன் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளச் சொன்னேன். நல்லவேளையாக, அவர்களும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவனுக்குப் பரிசைக் கொடுத்துவிட்டார்கள்.

இந்த வருட (சேலம் மாவட்ட) தினகரன் தொழில் மலரில், அந்த வெண்பாக்கள் நான்கும், என் தம்பி பெயரில் வந்திருக்கிறது. கடைசிப் பக்கத்தில் அவனுடைய புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள், ‘வெண்பா இலக்கணம் தெரியாமல் வெண்பாப் பரிசு வாங்கிய ஒரே ஆள் நீதான்’, என்று அவனைக் கிண்டலடித்துக்கொண்டிருக்கிறேன்.

இதை ஏன் இங்கே எழுதுகிறேன் என்றால், கவிதை எழுதத் தொடங்கி, சிறுகதைக்குத் தாவினேன் நான். இப்போது என்னுடைய எழுபது சிறுகதைகளுக்குமேல் வெளியானபின், முதன்முறையாக என்னுடைய கவிதை(கள்) அச்சில் வந்திருக்கிறது – அந்த அல்ப சந்தோஷம்தான் !

பரிசுபெற்ற அந்த வெண்பாக்களை இங்கே தந்திருக்கலாம். னால், அடிப்படையில் நான் ஒரு கவிஞனில்லை என்பதாலும், இந்தக் கவிதைகள், கொடுக்கப்பட்ட தலைப்புக்கு எழுதிய பாக்கள் என்பதாலும், ‘ரெடிமேட்’ கவிதைகளுக்குண்டான எல்லாக் குறைகளும் இவற்றில் நிரம்பியிருந்தன. ஆகவே, அவை ‘தினம் ஒரு கவிதை’யின் பிரசுரத்துக்கு ஏற்கப்படவில்லை !ஒரு சந்தேகம் – Home, House இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

House என்றால், வெறும் கட்டிடம். Home என்றால்தான், ஒரு குடும்பம் வாழ்கிற வீடு என்று யாரோ சொன்னார்கள். னால், அதை எந்த அளவு நம்புவது என்று தெரியவில்லை.

ஏனெனில், ‘House wife’ என்கிறோம், ‘Home Wife’ என்று சொல்வதில்லை. அப்படியிருக்க ‘Home’ எப்படி குடும்ப வீடாகமுடியும் ?


சமீபத்தில் வாசித்த நாவல், சிட்னி ஷெல்டனின் லேட்டஸ்ட், ‘Are you Afraid of Dark ?’

வழக்கமான க்ரைம் நாவல்தான். என்றாலும், தாத்தா ஷெல்டனின் விறுவிறுப்பான விவரிப்புக்காகவே, நானூற்றிச் சொச்ச பக்கங்கள் நீண்ட நாவலை ஒரு ராத்திரியில் படித்துமுடித்தேன்.

லேசாக நம் ஊர் ‘கில்லி’யை நினைவுபடுத்தும் கதை. நாவலின் இறுதியில், கவிதைபோன்ற அந்தக் கடைசி வரிகள் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. னால், ஷெல்டனின் முந்தைய நாவல்களோடு கொஞ்சமும் ஒப்பிடமுடியாதபடி, நாவலின் கட்டுமானம் தொளதொளா, சம்பவங்களிலும் நம்பகத்தன்மை குறைச்சல்.

நன்றி: Yahoo! Groups : dokavithai

Categories: Uncategorized