Home > Uncategorized > பாம்பு – என்.சொக்கன்

பாம்பு – என்.சொக்கன்


© தினம் ஒரு கவிதை

டெல்லி.

நகர மறுக்கும் போக்குவரத்தில் சிக்கித் தவிப்பது, ஒரு கொடுமையான அனுபவம்.

வண்டி வேகமாகப் போனாலும் பரவாயில்லை. போகவேண்டிய இடத்துக்கு சட்டென்று போய்ச் சேரலாம். அப்படியின்றி, நகராமல் ஒரே இடத்தில் இருந்தாலும் பரவாயில்லை. அப்புறம் நிதானமாக போய்க்கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டு, சாலையோரக் கடையில் ஒரு பீடியோ, பான் பீடாவோ வாங்கிச் சுவைக்கலாம். ஆனால், இதுவுமின்றி, அதுவுமின்றி நடுத்தரமாக, லேசாக ஊர்ந்தபடி, அத்தனை வாகனப் புகையும் நம் மூக்கிலும் வாயிலும் தாக்க, செல்வதறியாது நின்றிருப்பது என்னால் தாங்கிக்கொள்ளமுடியாத விஷயம்.

ஆனால், என் விருப்பமும், விருப்பமின்மையும் கேட்டா எல்லாம் நடக்கிறது ? என்னுடைய ஆட்டோ மெதுவாக, மிக மெதுவாகதான் ஊர்ந்துகொண்டிருந்தது.

அப்போதுதான், ஆட்டோவின் வலது பக்கத் திறப்பின்வழியே அவன் எட்டிப்பார்த்தான். பல நாள் தாடி நன்கு நரைத்திருந்தது, கழுத்தில் வகைவகையான மணி மாலைகளை அணிந்திருந்தான், அழுக்கான ஆடை, அதைக்காட்டிலும் அழுக்கான தலைப்பாகை. கையில் ஒரு கூடை.

நான் அவனை கவனிப்பதை உணர்ந்ததும், அவன் சட்டென்று கையிலிருந்த கூடையைத் திறந்து காட்டினான். அதனுள் கோதுமை நிறத்தில் ஒரு பாம்பு சுருண்டு படுத்திருந்தது. கூடையின் மூடியை, அதன் அடியிலேயே பொருத்திவிட்டு, அவன் அந்தப் பாம்பின் மையமாய்த் தட்ட, அது சடாரென்று நிமிர்ந்து பார்த்துவிட்டு, மறுபடி படுத்துக்கொண்டது.

அதைப் பார்த்ததும் எனக்கு உடம்பெல்லாம் நடுங்கத்தொடங்கிவிட்டது. மிகுந்த பயத்துடனும், லேசான அருவருப்புடனும் அந்தப் பாம்பைப் பார்த்துவிட்டு, ‘என்னய்யா இதெல்லாம் ?’, என்பதுபோல் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

அவன் தனது எல்லாப் பற்களையும் காட்டிச் சிரித்தான். ஆரோக்கியமான ஈறுகளிடையே மெலிதாக காற்றை வெளிப்படுத்தியவாறு மெல்லமாய் விசிலடித்துவிட்டு, ‘கையில இருக்கிறதில பெரிய நோட்டு எதுவோ அதை எடுத்து நாகராஜன்மேல வை ராசா’, என்றான், ‘எனக்கு ஒரு பைசா வாண்டாம், பணத்தைத் தொட்டு, நீயே எடுத்துக்கோ, அதிர்ஷ்டம் கொட்டும்’, என்றான் ஹிந்தியில்.

நான் அவனை அலட்சியப்படுத்தியபடி, சட்டென்று வேறு பக்கம் திரும்பி, சற்றே நகர்ந்து அமர்ந்துகொண்டேன். ஆட்டோ டிரைவரும் அவனைச் சத்தமாய்க் கத்தி விரட்டினான்.

ஆனால், அவன் நகர்கிற உத்தேசத்தில் இல்லை, மறுபடி மறுபடி என்னைத் தொந்தரவு செய்தான், ‘ஒரே ஒரு வாட்டி, எனக்குக் காசு வேண்டாம்’, என்று அவன் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்ததால், ஒரு கட்டத்தில் நான் மிகக் கோபமாகி, ‘போய்யா யோவ்’, என்று கத்திவிட்டேன்.

என் கத்தலில், நான் தமிழன் என்று தெரிந்துகொண்டுவிட்டான். ஓட்டைத் தமிழில், ‘ஒரே ஒருவாட்டி காசு வெச்சுட்டு நீயே எடுத்துக்க சாமி’, என்றான்.

சிறிது நேரம் முயன்றும், அவனைத் துரத்த முடியவில்லை. ஆகவே, வேறு வழியில்லாமல் பாக்கெட்டிலிருந்து ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து அந்தப் பாம்பின் தலையில் வைக்க முயன்றேன்.

என் கைகள் படபடவென்று நடுங்கிக்கொண்டிருக்க, நான் அந்தப் பாம்பை நெருங்கும் நேரத்தில், அவன் சட்டென்று என் கையைப் பிடித்துக்கொண்டுவிட்டான்.

Seerum Paambai Nambu behind Reebok Car ;-)பயத்தில் எனக்கு உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது, கைக்கெட்டும் தூரத்தில் பாம்பு. அதைவிட முக்கியமாய், அதனுடைய வாய்க்கெட்டும் தூரத்தில் நான். ஒரு போடு போட்டால், நான் என்ன ஆவேனோ, பயத்தில் எனக்கு மயக்கமே வராத குறைதான்.

ஆனால், அவன் கொஞ்சமும் அசையாமல் என் கையை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தான், முன்னே, பின்னே, வலது, இடது நகர்த்தமுடியாதபடி உடும்புப் பிடி.

‘யோவ், விடுய்யா’, என்று கதறினேன் நான். இப்போது சோம்பலாய்ச் சுருண்டிருக்கிற பாம்பு (ஏன் சோம்பல் ? இப்போதுதான் யாரையோ கடித்து விழுங்கியிருக்கிறதோ ? அந்தப் பாம்பு என் விரலில் தொடங்கி, என்னை மொத்தமாகச் சுருட்டி விழுங்குவதுபோல் ஒரு பிம்பம் உள்ளே தோன்றியது !) எப்போது அசையுமோ, எப்போது என்னைப் பிடுங்குமோ தெரியவில்லையே.

என் கதறலைக் கண்டுகொள்ளாதவனாக, அவன் என் கையை இறுகப் பிடித்தபடி இருந்தான், ‘காசு தந்துடறேன் விடுய்யா’, என்றபோதும் விடவில்லை. எதுவும் பேசவும் இல்லை.

சிக்னலில் பச்சை விழுந்துவிட்டது. என் ஆட்டோ கிளம்பிவிட்டது, ஆனாலும், அவன் என் கையை விடவில்லை. இறுகப் பிடித்துக்கொண்டுதான் இருந்தான். நான் அந்தப் பாம்பை பயத்தோடு பார்த்தேன், பாம்பு கொத்தி உயிர் போகவேண்டும் என்று என் ஓலையில் எழுதியிருக்கிறதோ என்னவோ.

கடைசியில், வேறு வழியில்லாமல், என் கையிலிருந்த காசை நழுவவிட்டேன். அது அந்தப் பாம்பின் தலையில் அபத்திரமாய்ச் சென்று விழுந்ததும், அவன் சட்டென்று என் கையை விடுவித்துவிட்டான். என் ஆட்டோவும் விரைவாக சிக்னலைக் கடந்தது.

அதன்பின், நெடுநேரத்துக்கு அவன் சென்ற வழியைத் திரும்பிப் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். இன்னும் என் பதட்டம் அடங்கியிருக்கவில்லை. ஒரு பெரிய வாழ்வு – சாவு விவகாரத்திலிருந்து தப்பியதுபோல் ஒரு உணர்வு. அநியாயமாய்ப் பிடுங்கியதுதான். என்றாலும், அதற்கு ஐம்பது ரூபாய் தரலாம் என்றுதான் தோன்றியது.

நன்றி: Yahoo! Groups : dokavithai

Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: