Archive

Archive for December, 2004

குறிப்பிடத்தக்க ஆங்கிலப் படங்கள்

December 30, 2004 Leave a comment
 • Eternal Sunshine of the Spotless Mind: Adaptation எடுத்தவரின் அடுத்த படம். இரண்டு படங்களுமே கொஞ்சம் மண்டை காய வைப்பதால், ரொம்ப நாள் அசை போட வைத்து யோசிக்கவும் வைக்கும்.
 • Collateral : தலை டாம் க்ரூய்ஸ் நடித்திருப்பதால் நான் குறிப்பிடுகிறேன். துணை நாயகருக்கு கோல்டன் க்ளோப் பரிந்துரையும் கிடைத்திருக்கிறது.
 • Maria Full of Grace: கதையைக் கேட்டவுடன் பார்க்கத் தூண்டிய படம். கர்ப்பிணிப் பெண் போதை கடத்துகிறாள் என்பதை (கொஞ்சம் ஓவர்) உருக்கமாய் காட்டுகிறார்கள்.
 • Incredibles: ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு படம்.கலக்கிட்டாங்க!
 • Kinsey: பேசாப் பொருளைப் பேச வைத்த கதை.
 • Bad Education: ஸ்பானிஷ் ஆய்த எழுத்தின் நாயகர் ‘பெர்னால்’ நடித்திருக்கிறார் என்பது முக்கிய அம்சம். நினைவுகள் எங்கே முடிகிறது; படம் எங்கே ஆரம்பிக்கிறது என்பதைத் தெரியாமல் காலச்சுவடில் (ரமேஷ் வைத்யா?) கதை ஒன்று படித்த ஞாபகம். இது திரைப்படம்.
 • Kill Bill – II : கொன்னுட்டாங்க 😉
 • Closer : யார் யாரை நேசிக்கிறார்கள் என்று குழம்பிப் போகுமளவு கதை எழுதலாம். ஆனால், ‘ஏன்’ பிறரை காயப்படுத்துகிறார்கள் என்று ஜூலியா ராபர்ஸையும் அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்கள்.
 • The Manchurian Candidate : இது தேர்தல் வருடம். பருவத்துக்கு ஏற்ற டென்ஸல் வாஷிங்டன்.
 • National Treasure: மசாலாதான் என்று சொல்லிவிட்டு — ஏமாற்றாமல் ஓட வைக்கிறார்கள்.
 • Categories: Uncategorized

  குறிப்பிடத் தகாதப் படங்கள்

  December 30, 2004 Leave a comment
 • The Passion of the Christ : உம்மாச்சி கண்ணை குத்திடும்.
 • Fahrenheit 9/11 : புலம்பல்
 • Harry Potter and the Prisoner of Azkaban : நோ மேஜிக்; லாஜிக்கும் லேது.
 • Oceans Twelve: அஅஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் (பனிரெண்டு எழுத்தில் விமர்சனம் 🙂
 • Meet the Fockers: எல்லா சிரிப்பையும் ட்ரெயிலரில் (மட்டும்) கண்டு களிக்கலாம்.
 • The Polar Express: முப்பரிமாணத்தில் (3-டி) பார்த்தால் மட்டுமே பெரியவர்களுக்கு ரசிக்கும்.
 • Shrek 2: கருத்து நல்ல கருத்து. வினாடிக்கு நிறைய ஜோக் கொடுப்பதால் கிரேஸி ஸ்டைலில் பறக்கிறது. ஆற அமர டிவிடியில் பார்க்கணும்.
 • Categories: Uncategorized

  பொங்குமாக்கடல் – அருணன்

  December 30, 2004 Leave a comment

  ஈரோடு தமிழன்பன் – “நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்

  1. செம்மாங்குடிகள் பாட்டில்
  இசையிருக்கிறது
  நம் கொல்லங்குடிகள் பாட்டில்
  இதயம் அல்லவோ இருக்கிறது
  கற்றவனுக்குக்
  கம்பன் அமுதக் கிண்ணம்
  கல்லாதவனுக்கோ
  கண்ணதாசனும்
  பட்டுக்கோட்டையும்
  கஞ்சிக் கலயம்

  சினிமாப் பாட்டு பற்றிய சர்ச்சையே கவிதையாகியிருக்கிறது. எளியவர்பால் கொண்ட அன்பு, கலையில் எளிமையை அழகாக நியாயப்படுத்தியிருக்கிறது.

  2. நீ உயர முடியவில்லை
  என்பதற்காக மலை மீது
  கற்களை விட்டெறியாதே
  உனக்கும்
  உண்மைக்கும் ஊடல் என்றால்
  பொய்யின் கன்னத்திலா
  போய் முத்தமிட்டுக்
  கொண்டிருப்பாய்

  எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே எதிர்ப்பவர்களை இதைவிடக் கவித்துவமாகக் கண்டித்துவிட முடியுமா?

  நன்றி: பொங்குமாக்கடல் – அருணன் : வசந்தம் வெளியீட்டகம்; பக்கங்கள்: 400; விலை: ரூ. 150/-

  வெளியான இதழ்: இந்தியா டுடே

  Categories: Uncategorized

  மின்மடலில் வந்தவை

  December 27, 2004 Leave a comment
 • Oxfam: தவணை அட்டை மூலமாக நன்கொடை வழங்குவதற்கு ஏற்ற தளம். இலங்கை, தெற்காசியாவில் பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாகப் போய் சேரும். அமெரிக்கா, இங்கிலாந்தில் வசிப்பவர்களுக்கு வருமான வரிவிலக்கும் கிடைக்கும்.
 • குப்பை கூளங்களைக் கூட பயனுள்ள பொருட்களாக ஆக்கி விற்கும் தளம். பழைய வட்டுகள், காலியான வெண்குழல் பெட்டிகள், மென்தட்டுகள், கிராமஃபோன், என்று எல்லாவற்றின் செட்டப்பையும் கெடப்பையும் மாற்றியிருக்கிறார்.
 • VPN மூலமாக வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் கையில் ஒரு பேஜர் போன்ற கருவியின் மூலம் ஆறு இலக்க எண்ணை வைத்துக் கொண்டிருப்போம். இப்பொழுது வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாள்ர்களுக்கு இதே பாதுகாப்பு முறையைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் ஏற்கனவே இவை அறிமுகமாகி இருந்தாலும், அமெரிக்காவில் ஈ*ட்ரேட் (E*Trade) அடுத்த வருடம் முதல் இந்த வசதியைக் கொடுக்கிறது. தானியங்கி வங்கிகளிலிருந்து பணம் எடுக்கும்போது வேவு பார்ப்பது, கடவுச்சொல்லை கண்டுபிடுத்துத் திருடுவது போன்ற கள்ளர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள நல்ல வழிமுறை.
 • Categories: Uncategorized

  உதவி தேவை

  December 22, 2004 11 comments

  ஃபயர்ஃபாக்ஸ் உதவி

  நெருப்புநரியில் எந்த யூனிகோட் பக்கம் சென்றாலும் எனக்கு மேற்கண்டவாறுதான் தெரிகிறது. இதை நிவர்த்தி செய்ய ஆலோசனைகள் சொல்லவும். தீர்த்து வைப்பவர்களுக்கு மைக்ரோசாஃப்ட்டின் எரிச்சல் கிடைக்கும். என்னுடைய மனமார்ந்த நன்றிகளும்.

  என்னுடைய செட்டிங்ஸ்:
  தமிழ் | யூனிகோட்

  View –> Character Encoding –> Auto Detect –> Off என்று எல்லாம் போட்டு பார்த்தேன். Always Use My Fonts – On / Off செய்து பார்த்தேன். எதற்கும் சரிப்படாமல் விநோதமாகவேத் தெரிகிறது.

  தொழில்நுட்பம் முழுவதும் தெரிந்திருப்பது நல்லது. ஒன்றும் தெரியாவிட்டால் டபுள் ஒகே. என்னை மாதிரி கொஞ்சம் தெரிந்தால் வினைதான். உதவ வேண்டுகிறேன்.

  இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் தமிழோவியம், திசைகள், மரத்தடி போன்ற அனைத்து யூனிகோட் பக்கங்களும் அழகாகத் தெரிகிறது. ஃபயர்ஃபாக்ஸின் மூலம் விசிட் அடித்தால், எல்லா பதிவுகளும் புத்தம் புதிய தமிழில் கண்ணைக் கெடுக்கின்றன.

  அடுத்த வருடம் வரை இனி எனக்கு விடுமுறை. சில பழைய நண்பர்கள் (காசி) சந்திப்பு, விருந்துகள் என்று வீட்டிலேயே கழிக்க எண்ணம். அனைவருக்கும் இனிய போஷாக்கான புத்தாண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  அப்புறம், ஊரே அல்லோலகல்லப்படுகிறது. ஞாயிறு, ஜனவரி, 2, 2005 – Ash on 60 Minutes என்று. அறுபது நிமிடங்கள் என்று சொல்லி நாற்பது நிமிடம் ஒளிபரப்பாகும் செய்தித் தொகுப்பொன்றில் ஐந்து நிமிடம் ஐஷ்வர்யா செவ்விக்கப் போகிறார்.

  இவங்களுக்கு வேற வேலையே கிடையாது என்பது போல், பிபிசியில் அடுத்த தேர்தலை தொடங்கி விட்டார்கள். யாருக்கு ஏன் ஓட்டுப் போடம் மாட்டேன் என்று சொல்வதை விட, பல தெரியாத முகங்களை அறிந்து கொண்டேன்.

  இப்பொழுது வீடியோக்களைத் தேடுவதுதான் கஷ்டமான காரியம். Video searches on Web don’t always click yet என்று சொல்லி விட்டு, Yahoo! Video Search போன்றவற்றின் தொழில்நுட்பங்களையும் சொல்கிறார்கள். கலைஞர் கைது, ம.கோ.ரா. அமரர் ஊர்வலம் (டிச. 24 நினைவு நாள்) என்று தேடிப் பார்த்தேன். எதுவும் மாட்டவில்லை. உங்களுக்கு வேண்டியதைத் தேடிட்டு சொல்லுங்க.

  Baazee.com விவகாரம் சூடாக இருக்கும்போதே, அமெரிக்காவில் செல்பேசிகளில் நீலப்படங்கள் குறித்த நிலைப்பாட்டையும் அறிந்து கொள்ளலாம். இப்போதைக்கு இலை மறை காய் ஒகேவாம். ஆனாலும், 40% இணையத் தேடல்கள் செக்ஸ் சம்பந்தமானவை என்பது நமது அறிவின் தாகத்தை எடுத்துறைக்கிறது.

  Neocons setting up Rumsfeld as Iraq fall guy என்னும் பதிவில் விடை உறுத்திய கேள்விக்கு வழி தெரிந்தது. ரம்ஸ்ஃபீல்ட் எப்படி நியோகான்களின் பலியாடாகிறார் என்பதை அரசியல்பூர்வமாக எடுத்துரைக்கிறார்கள். தலைவனின் தவறு அல்ல… தளபதியின் தவறு என்பதை தூவ ஆரம்பித்திருக்கிறார்கள். தம்பி ஜெப் புஷ்ஷுக்கு வளமான எதிர்காலமும் சாமர்த்தியமான கார்ல் ரோவும் துணையிருக்க பயமேன்!

  நெட்டில் படித்தது: Martini’s are like the breasts of a woman: one is not enough, three are too many–and two are just right. — Jose Espino

  Categories: Uncategorized

  அருட்பா? மருட்பா?

  December 21, 2004 Leave a comment

  சக்தி விகடன்: பிறருக்காக அழுது அழுது, தொழுது தொழுது பாடியவை வள்ளலாரின் பாடல்கள். ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்ய வேண்டிய அவரது பாடல்களை மக்கள் ‘திரு அருட்பா’ என்று போற்றினர். இந்தப் போற்றுதல் ஒலி சிலருக்கு நாராசமாகப் பாய்ந்தது. எதிர்ப்புக் குரல் எழுந்தது. ‘அருளாளர்கள் பாடியவைதான் அருட்பா. சாதாரண மானிடர் ராமலிங்கம் பாடியதெல்லாம் எப்படி அருட்பா ஆகும்? அவை வெறும் மருட்பா (மயக்கத்தில் பாடியது)’ என்று வாதிட்டனர் சில தமிழறிஞர்கள். இவர் களுக்குத் தலைமை தாங்கியவர் யாழ்ப்பாணம் கதிரைவேல்பிள்ளை என்ற தமிழறிஞர்.

  வள்ளலாரின் சீடர்கள், ‘ஐயா, இவ்வளவு நடந்தும் தாங்கள் மௌனமாக இருக்கிறீர்களே?’ என்று முறையிட்டனர். அதற்கு அடிகளார், ‘தம்மை உணர்ந்தோர் பாட்டெல்லாம் அருட்பா. மற்றையவை மருட்பா. மூவர் பாடியவை தேவாரம் என்றும் மணிவாசகருடைய பாட்டை திருவாசகம் என்றும், மற்றும் தமிழ் வேதம், திருப்பாட்டு, திருவிசைப்பா என்பதெல்லாம் மரபு ஆகும்’ என்று சாந்தமாகக் கூறினார்.

  மருட்பா கட்சியினர் இதை வழக்காக்கினர். ‘ராமலிங்கத்தின் பாடல்களை ‘அருட்பா’ என்பது தவறு.’ என்று வாதிட்டனர். வள்ளலார் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கவேண்டும் என்பது நீதிமன்றத்தின் ஆணை. வழக்குத் தொடுக்கக் காரணமான கதிரை வேல்பிள்ளையே நீதிமன்றம் வர விரும்பவில்லை. ‘சின்ன விஷயத்தைப் பெரிதுபடுத்திவிட்டனரே.’ என வருந்தினார். அவரைச் சமாதானப்படுத்தி நீதிமன்றம் அழைத்து வர வேண்டியதாயிற்று.

  வழக்கு தினத்தில் ராமலிங்க அடிகளார் நீதிமன்றத்தில் நுழைந்தார். கதிரைவேல்பிள்ளை, வழக்கறிஞர்கள் முதலிய அனைவருமே எழுந்து நின்று அடிகளாருக்கு மரியாதை செலுத்தினர். நீதிபதியும் இருக்கையை விட்டு எழுந்து, பின் அமர்ந்தார்.

  நீதிபதி தீர்ப்பைப் படிக்க ஆரம்பித்தார். ‘வழக்குத் தொடுத்த எதிரிகள் உட்பட அனைவருமே வள்ளலாரை வணங்கிப் போற்றியதைக் கண்டோம். பகைவரும் வணங்கும் பெருமையுடைய வள்ளலார் மீது வழக்கு எதற்கு? அதனால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்’ என்று அறிவித்தார்.

  Categories: Uncategorized

  வைகுண்ட ஏகாதசி

  December 21, 2004 Leave a comment

  சக்தி விகடன்: வைணவர்கள் முக்கியமாகக் கருதுவது நான்கு ஏகாதசிகள். ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசியிலிருந்து ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசி வரை திருமால் யோகநித்திரை செய்வதாகக் கூறப்படுகிறது.

  ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு சயன ஏகாதசி என்று பெயர். ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி அன்று பெருமாள் வலப்புறமாகத் திரும்பிப் படுப்பார். அந்த நாளுக்கு பரிவர்த்தனை ஏகாதசி என்று பெயர். கார்த்திகை மாத வளர்பிறை ஏதாதசியன்று அவர் துயில் கலைந்து எழுந்திருக்கும் நாள். அந்த நாளை உத்தான ஏகாதசி அல்லது பிரபோதனி ஏகாதசி என்பர். மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.

  ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று _ ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

  Categories: Uncategorized

  மேடை – ஜெயபாஸ்கரன்

  December 20, 2004 Leave a comment

  Jayabaskaran Kavithaigal:

  இதுவரை
  இருபது முறைகளுக்கு மேல்
  எதிரிகளை
  ”எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்”
  என்றாய்.
  சலனமற்றுக் கிடந்த
  உன் ஆதரவாளர்களின்
  முன்னிலையில்

  ”நான் சொல்லிக் கொள்வது
  என்னவென்றால்”
  என்பதைத் தாண்டி
  எதுவுமே விளங்கவில்லை
  நீ சொல்லிக் கொண்டது
  எதுவும்.

  ”இன்னொன்றையும்
  குறிப்பிட்டாக வேண்டும்” என்று
  பலமுறை அறிவித்தாய்!
  ஆயினும்,
  ஒருமுறைகூட
  குறிப்பிடவில்லை
  அந்த ‘இன்னொன்றை!”

  ”இறுதியாக ஒன்றைச் சொல்லி”
  விடைபெறுவதாக முழங்கினாய்
  அந்த ஒன்றையாவது
  சொல்லிவிட்டுப் போயிருக்கலாமல்லவா நீ?

  நன்றி: ஆறாம்திணை

  Categories: Uncategorized

  குருதிப்புனல் (நாவல்)

  December 19, 2004 2 comments

  முன்னுரை – இந்திரா பார்த்தசாரதி

  தமிழில் சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற இந்நாவல், வங்க மொழியில் ஆக்கம் பெற்றது. மொழி பெயர்ப்புக்காகச் சாஹித்ய அகாடமி பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மொழிபெயர்த்தவர் கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி.

  இந்நாவல் வெளியானபோது, பல விவாதங்களுக்குள்ளானது. கீழ்வெண்மணிச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலை மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தாக்கி எழுதினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. ஆனால் கேரள் மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை ‘தேசாபிமானி’ இந்நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

  ‘நாவலாசிரியரின் ஃப்ராயிட் அணுகுமுறை, விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி விட்டது’ என்று தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தைக் கேரள, வங்காள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இந்நாவலைப் பற்றிய ஒரு செய்தி.

  ஓர் உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு படைப்பாளி எழுதும்போது அவன் சம்பவங்களை உள்வாங்கிக் கொண்டு சம்பவங்களின் தீவிரத்தை மலினப் படுத்தாமல், அவன் கற்பனைக்கேற்ப புதினம் உருவாக்குவதில் தவறேதுமில்லை என்பதுதான் என் கருத்து.

  காரல் மார்க்ஸின் ஆதர்ச எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் என்பது தமிழக மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு ஏன் தெரியாமல் போயிற்று என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.

  அணமையில் தமிழக மார்க்ஸியக் கட்சி இந்நாவலை அப்பொழுது எதிர்த்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

  இந்நாவல் ஆங்கிலத்தைத் தவிர ஐந்து இந்திய மொழிகளில் (ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, மலையாளம்) மொழி பெயர்ப்பாகி உள்ளது.

  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அமரர் கநா சுப்ரமணியன்.

  குருதிப்புனல் – ரூ. 85/- : கலைஞன் பதிப்பகம்

  Categories: Uncategorized

  கீழ்வெண்மணி – மணா

  December 19, 2004 6 comments

  44 உயிர்களும் அரைப்படி நெல்லும்

  36 வருஷங்களாகியும் உயிர் பொசுங்கிய நெடியடிக்கிறது இந்தக் கிராமத்து மண்ணில்.

  நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுகாவில் கீழ்வெண்மணிக்குள் நுழைகிற இடத்தில் வெண்மணிச் சம்பவத்தை நினைவூட்டுகிற சிவப்பு வளைவு. உள்ளே போனால் காலனி தெரு. அதில் ரத்தசாட்சி போல சிவப்புமயமான கட்டிடம்.

  1967ல் 44 உயிர்கள் விறகுகள் மாதிரி எரிக்கப்பட்ட இடம் இதுதான். ஜாலியன் வாலா பாக்கில் உள்ள நினைவுச் சின்னம் மாதிரியே வடிவமைத்திருக்கிறார்கள் இதையும். ஜோதிபாசு அடிக்கல் நாட்டி 1970ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டத்தைத் திறந்து வைத்தவர் கம்யூனிஸ்ட் தலைவரான பி. ராமமூர்த்தி. நினைவுத்தூண்களில் வரிசையாகப் பதிந்திருக்கின்றன சாகடிக்கப்பட்ட அந்த 44 பேர்களின் பெயர்கள்.

  தஞ்சை மண்ணில் ‘பண்ணையாள் முறை’ ஆழமாக வேரூன்றியிருந்த காலம். விவசாய வேலைகளில் சற்று சுணக்கம் காட்டினாலும் உடம்பில் சவுக்கடி விழுந்து வலியுடன் ரத்தம் கசியும். அதோடு மாட்டுச் சாணியைப் பால் மாதிரி கரைத்து அந்தத் தொழிலாளர்களைக் குடிக்கச் சொல்வார்கள். கசங்கிய முகத்துடன் வேறுவழியில்லாமல் குடிப்பார்கள் விவசாயத் தொழிலாளிகள். எதிர்த்துச் சிறுவார்த்தை கூடப் பேச முடியாது.

  அவர்களிடமும் வந்தது விழிப்பு. “நியாயமான கூலியைக் கேள். குருடனாக இருக்காதே… கண்ணைத் திற ஊமையாக இருக்காதே – பேசு…” என்று நரம்புகளை அதிரவைக்கிறபடி பிரச்சாரம் பண்ணினார்கள் கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் சீனிவாசராவும். சங்க உணர்வை உருவாக்கினார்கள். பிரச்சார பொறி பலருடைய மனசில் விழுந்து கணகணத்தது. ஒன்று சேர்ந்தார்கள். உருவானது விவசாயிகள் சங்கம். எழுந்தது தட்டிக் கேட்கிற குரல்.

  அந்த ஒற்றுமையே பெரும் சலசலப்பை உருவாக்கிவிட்டது. ‘தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது’ என்று கண்டுபிடித்துச் சொன்னார் ராஜாஜி. நிலச்சுவான்தார்களும் கூடினார்கள். நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். மஞ்சள் கொடியை ஏற்றி செங்கொடியை இறக்கச் சொன்னார்கள். அதை மறுத்து அரைலிட்டர் நெல்லைக் கூட்டி கூலியாகக் கேட்டார்கள் விவசாயிகள்.

  ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. தோல்விதான். அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரப் பொறி.

  1967 டிசம்பர் 25. கிறிஸ்துமஸ் தினம். நிலச்சுவான்தார்களின் அடியாட்கள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகள் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார்கள். கிராமமே ரணகளமானது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஒரே பீதி. வேட்டையின் தீவிரம் தாளாமல் பலர் ஓடியிருக்கிறார்கள். ஒரு தெருவின் மூலையில் ராமையனின் குடிசை. மேலே கூரை. அதற்குள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள சின்ன அறையில் அடைசலாக 48 பேர்.

  கொஞ்ச நேரத்தில் கதவடைத்து தீவைத்து விட்டார்கள். வெப்பம் தகித்து ஒரே கூச்சல். நெருப்பை மீறி ஆறுபேர் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். வந்ததில் இரண்டு பேரையும், ஒரு தாய் தூக்கி வெளியே வீசிய குழந்தையையும் திருப்பி குடிசைத்தீயில் வீசியிருக்கிறது வெளியே இருந்த கும்பல். தீ வேகத்துடன் எரிய அந்தப் பிழம்பில் கசிந்தது உயிர் கருகிய நாற்றம்.

  நடு இரவில் போலீஸ் வந்து கனன்று கொண்டிருந்த கனலை விலக்கிப் பார்த்தால், உள்ளே கரிக்கட்டைகளாக எரிந்து அவிந்து கிடந்தன 44 உயிர்கள். அதில் பெண்கள் 14 பேர். குழந்தைகள் 22 பேர். போஸ்ட் மார்ட்டத்திற்காக நாகப்பட்டினத்திலிருந்து வந்த டாக்டர் கைவிரித்தார். அடையாளம் சொல்ல முடியாமல் ‘விடிந்ததும் செய்தி பரவி தமிழகமே அதிர்ந்தது’. ‘நாட்டுக்கே அவமானம்’ என்று கட்டம் கட்டி வெளியிட்டன டெல்லிப் பத்திரிகைகள்.

  106 பேர் கைதானார்கள். திமுக ஆட்சி நடந்த அந்த நேரத்தில் கைதானவர்களில் பலர் காங்கிரஸ்காரர்கள். தப்பிப் பிழைத்தவர்கள் சாட்சியம் சொன்னார்கள். ‘இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல்’ என்று சொன்னது போலீஸ்.

  ‘அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…’ என்று 1973 ஏப்ரல் 6ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டதும், விடுதலையானார்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள். சட்டரீதியாக அடங்கிப் போனது கீழ்வெண்மணிப் புகை.

  நன்றி: புதிய பார்வை – செப். 1 2004

  Categories: Uncategorized