Archive
சென்ற வாரம்
இவர்கள் மூன்று பில்லியன் டாலர் செலவில் தங்களின் நெட்வொர்க்கை மேம்படுத்தப் போகிறார்கள்.
நேஷனல் ட்ரெஷர்
நம்ப முடியாததை நம்ப வைப்பது திரைப்படங்கள். அமெரிக்காவின் ஆளுமைக்குப் பிண்ணனியில் சாணக்கியத்தனங்கள் இருந்தாலும், பில்லியனாதி பில்லியன்கள் எங்காவது ஒளிந்திருக்கும் என்று யாராவது சொன்னால், கீழ்பாக்கம் கேஸ் என்று எண்ணுவோம்.
இந்தப் படம் பார்த்தபிறகு, அவரிடம் ‘எனக்கு அது எங்கே இருக்கு என்று தெரிய வேண்டும்’ என்று சிரத்தையாக கேட்போம்.
‘நிக்கோலஸ் கேஜி’ற்கு பால்ய பருவத்தில் இருந்து பாட்டி சொன்ன கதையாக ‘நேஷனல் ட்ரெஷர்’ வேறூட்டப்படுகிறது. அமெரிக்காவின் மூதாதையர்கள் (முரண்தொடை?!) நாட்டின் அவசரத் தேவைக்காக கோடானுகோடி சொத்தை எங்கோ புதைத்து வைத்திருக்கிறார்கள். அதற்கான ஒற்றை வரி க்ளு மட்டுமே இருக்கிறது.
இந்தப் புதையலை கண்டுபிடிப்பதற்காக ஹீரோவின் குடும்பம் லாபம் விரும்பா அமைப்பொன்றை நடத்தி வருகிறது. கடகடவென்று நகரும் டைட்டிலின் இறுதியில் பெரியவனாகும் ஹீரோ, முக்கிய துப்பான கப்பலை கண்டுபிடிக்கிறார். கப்பலுக்குள் புதையல் இருந்ததா என்பதில் ஆரம்பிக்கும் சண்டை, ஹீரோவை அனாதரவாக விட்டு வில்லன் கோஷ்டியை உண்டு செய்கிறது.
தொடர்ந்து அதிபயங்கர பாதுகாப்பில் இருக்கும் சுதந்திர தின சாசனத்தைத் திருட முயற்சிக்கிறார்கள்.
ஹீரோயின் ஒட்டிக் கொள்கிறார். நக்கலடிக்கும் விவேக் போன்ற கதாநாயகத் தோழன் என்று ஹீரோவின் மூவர் அணி. பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்த வில்லன் கூட்டணி. இவர்கள் இருவரையும் வேட்டையாடும் எஃப்.பி.ஐ.
விஷமம் செய்யும் குழந்தையைத் தடுக்க ஓடும் பெற்றோரின் வேகத்தில் திரைக்கதை பறக்கிறது. ஆனாலும் ஒன்ற வைக்கிறது.
புத்திசாலியான ஹீரோயின் முரண்டு பிடிக்கிறார். கிண்டல் அடிக்கிறார். சாகசங்கள் புரிகிறார். படம் முழுக்க அதிக ஆடைகள் மாற்றி ஜொலிக்காமல் வந்தாலும், அழகாக மனதில் இடம் பிடிக்கிறார்.
ஹீரோவின் தோழராக வருபவரின் நச் காமெண்ட்கள் சீரியஸான படத்தின் இறுக்கத்தைத் தளர்த்துகிறது. ப்ராக்டிகலாக யோசித்து, கற்பனைகளில் உலாவும் அபாயத்தை பார்வையாளனைப் போல் சொல்வதால் ரொம்பவே பிடித்துப் போகிறது.
தேவைக்கேற்ப பிருமாண்டம், சாதாரண நடுத்தர வர்க்கம் போன்ற ஹீரோ, அற்புதங்கள் எல்லாம் நிகழ்த்தாமல் ஆங்காங்கே சூழ்நிலைக்கேற்ப அச்சப்படும் நாயகன் என்று வெகுவாக நம்பவைக்கும் படம். அவ்வப்போது லாஜிக் சறுக்கல்கள் இருந்தாலும் மன்னிக்கலாம்.
சைக்கிள் ரிக்ஷா, நடராஜர், தட்டுமுட்டு சாமான், செப்பு பித்தளை பாத்திரம், பிரமிடு தலைகள் என்று குறைவான செலவில் தயாரான காட்சி ஏமாற்றம். கப்பல் காட்டுகிறேன் என்று பனி சூழ்ந்த நிலத்துக்கு சென்று, சிறிய படகை காண்பித்து நம்மை ஒத்துக் கொள்ள சொல்வது கூட பட்ஜெட் தட்டுப்பாடுதான் காரணமாக இருக்கலாம். தவணை அட்டை விடுவது, அப்பா வீட்டில் ஆசுவாசப்படுத்திக் கொள்வது, மற்றவர்கள் வியர்க்க, ஹீரோயின் விறுவிறுக்காதது என்று மைக்ரோஸ்காப் கொண்டு அலசலாம்.
ஆனால், கொடுத்த காசுக்கு இரண்டரை மணி நேரம் சுவையான, அதிகம் மூளையைப் பிராண்ட வைக்காத அடிதடி மசாலா.
ஓசியன்ஸ் ட்வெல்வ்
கமல், சத்யராஜ், அஜீத், பாக்யராஜ், லிவிங்ஸ்டன், முரளி, பாண்டியராஜன் என்று பத்து ஹீரோ; ஸ்னேஹா ஹீரோயின். சில வருடம் முன்னாடி இவ்வளவு நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு, எல்லாருக்குமே சம அளவு உரிய மரியாதையும் காட்சிகளும் கொடுத்து ரசிக்கத்தக்க படமாக இருந்தது ‘ஓசியன்ஸ் லெவன்’.
அதே பத்து நாயகர்கள். கூட சிம்ரன் போல இன்னும் ஒரு ஹீரோயின். இந்த ‘ஓசியன்ஸ் ட்வெல்வ்’ எடுத்து முடிக்க இயக்குநர் திணறியிருக்கிறார்.
அதிக எதிர்பார்ப்புகளுடன் சென்றது பிரச்சினையாக இருந்திருக்கலாம். புத்திசாலித்தனமான திருட்டு வித்தைகள், புரியும்படியான வழிமுறைகள், லாஜிக் இல்லாவிட்டாலும் சுவாரசியமான திருப்பங்கள் கிடையாது. ஆசுவாசப்படுத்தக் கூட நேரம் இல்லாமல் நுனிப்புல் ஓட்டத்தில் கதை, சப்பைக்கட்டு வாதங்கள் என்று படமெங்கும் ஓட்டைகள்.
போன முறை “ஓசியன்ஸ் லெவனில்” நூற்றைம்பது கோடிக்கு ஏமாற்றப்பட்டார் சூதாட்ட விடுதி தலைவர். அந்தப் பணம் காப்புரிமை மூலமாக அவருக்கு கிடைத்துவிட்டது. இருந்தாலும் திருடிய பதினோரு பேர்களையும் அடையாளம் கண்டுகொள்கிறார். அவர்களுக்கு இரு வாரம் கெடு கொடுக்கப்படுகிறது. திருடிய பணத்தையும் அதற்கான கந்துவட்டியுடன் எண்ணி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் போலீஸ்; ஜெயில்; சிறை!
அட்டகாசமான ஆரம்பம். செட்டப்பை மாத்தி கெட்டப்பை மாத்தி போல், பத்து + நாயகியின் அமைதியான வாழ்க்கையில் திடீர் எண்ட்ரி கொடுத்து மிரட்டிச் செல்கிறார் வில்லன் – சூதாட்ட விடுதி தலைவர்.
அதன்பிறகு ஆரம்பிக்கும் சறுக்கல்கள், நிற்காமல் கடுப்பேத்துகிறது. போன முறை தெளிக்கப்பட்ட நகைச்சுவை, இந்த முறை சுழிக்க மட்டுமே வைக்கிறது. சின்னப்பையன் மாட் டேமனை அழைத்துச் சென்று சதாய்க்கும் காட்சி மட்டும் புன்முறுவலில் தேவலாம்.
காதரீன் ஜீடா ஜோன்ஸ் அநியாயத்துக்கு வேஸ்ட் செய்யப் பட்டிருக்கிறார். ஜூலியா ராபர்ஸ் பாத்திரம் அவரையும் கா. ஜீ. ஜோன்சையும் மிஞ்சும் அளவு மோசமாக்கப் பட்டிருக்கிறது. இரு அருமையான நடிகைகள். இரு அவசரக்கோலங்கள்.
படத்தின் இறுதி கட்டத்தில் மிஸ்டர். பாரத் ஸ்டைல் சவடால்கள் ‘அட’ என்று கொஞ்சம் ஆறுதல். ஆனால், குழப்பாச்சு, குப்பாச்சு மாதிரி தொடரும் விளக்கங்கள்… ‘ஆஆஆஆஆவ்வ்வ்வ்’.
வீடியோவில் வேண்டுமானால் பார்க்கலாம். நிறைய ‘டெலீடட் சீன்ஸ்’ கொடுத்திருப்பார்கள். அதன்மூலமாவது வாடகை டாலர்களுக்கு ஏற்ற திருப்தி கிடைக்கும்.
தி போலார் எக்ஸ்பிரஸ்
‘நம்பினார் கெடுவதில்லை; நான்குமலை தீர்ப்பு’ என்பதுதான் அடிநாதம். சாண்டா க்ளாஸ் இருக்கிறார் என்று நம்புவது சிறிய பருவம். இருக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்படுவது இன்னொரு பருவம். நம்பியவர் கண்ணில் நிச்சயம் தெரிவார் என்பதை கிறிஸ்துமஸ் பூர்வமாக சொல்கிறார்கள்.
விதவித வேடங்களில் டாம் ஹாங்க்ஸ். ஆனால், அவர்தான் என்று தெரியாதபடி புதுவித கணினி வித்தை. நடிகர்களின் முகங்களுக்கு ஏற்ப அனிமேஷன் முகங்கள் தயார் செய்திருக்கிறார்கள். கொஞ்சம் அவர்களைப் போலவும்; கணினியில் வரையப்பட்ட நிறைய குணநலன்களையும் கொண்டு, கலந்து கட்டி செய்யப்பட்ட தோற்றம். இரண்டு வருடங்களுக்கு முன்பே, அனைத்து நடிகர்களும் நீலத் திரைக்கு முன் நடித்து ஒளிப்பதிந்து கொள்கிறார்கள். அதை கணினியில் ஏற்றி, ஏற்கனவே செய்த முகங்களுடன் மிக்ஸ் செய்து, நிஜப் படம் தயாராகி இருக்கிறது.
பெரும் பொருட் செலவில் உருவான படம். அவ்வளவு எல்லாம் மெனக்கிட்டிருக்க தேவையே இல்லை. (கணினி வித்தை காட்டாமல் திரைக்கதை நம்பியதற்கு சமீபத்திய உதாரணம்: தி இன்கிரெடிபிள்ஸ்)
3-டி திரைகளிலும் வெளிவந்திருக்கிறது. அதற்காகவே என்னவோ, மான்கள் கொம்புகளை நீட்டுகின்றன. ஓடும் ரயிலின் மேலே நடக்கிறார்கள். கன்வேயர் பெல்ட்களில் உருண்டு பிரளுகிறார்கள். ‘ஹாட் ப்ரட்ஸ்’ உணவுகள் வாய்க்கு அருகே நீட்டப்படுகின்றன. பனிகளில் வண்டி சறுக்குகிறது. ‘டோரா டோரா’ போன்ற ரோலர்-கோஸ்டர்களின் மேலே செல்லுகிறார்கள்
படம் பெரியவர்களின் பொறுமையை சோதிக்கும் ‘மெட்ராஸ் பாஸெஞ்சர்’ வேகத்தில் நகர்கிறது. கடவுள் கற்பனையே என்றாலும் நம்பிக்கையால் அன்றாட நிகழ்வுகளிலும் கண்டு கொள்ளலாம் என்பதை சாண்டாவின் பின்புலத்தில் அருமையாக சொல்கிறது.
த்ரீ-டியில் பார்த்தால் மட்டுமே நீங்கள் கொடுத்த காசுக்கு ROI வரலாம்.
Recent Comments