Archive

Archive for December 15, 2004

தமிழோவியம் தீபாவளி மலர் – விமர்சனம்

December 15, 2004 1 comment

கட்டுரைகள்

 • நரகாசுரனின் தற்கொலை – நாகூர் ரூமி : கமல் கூட தமிழோவியம் படிக்கிறார் போல. அவரும் ஹிட்லரின் தற்கொலையை குறித்து எழுதியுள்ளார். அருமையான சரித்திரப்படத்தின் திரைக்கதை போல் எழுதப்பட்டிருக்கிறது.
 • ஜோதிடம் : அடிப்படை ஜாதகம் தெரிந்திருக்க வேண்டும். 1, 4, 7, 10 கேந்திரம் போன்றவைகளுக்கு எங்காவது ஹைப்பர்லிங்க் கொடுக்க வேண்டும். லக்கினாதிபதியை லக்கி நாதிபதி ஆக்கிய பிழைகளை தவிர்க்கவும். கோட்ஸே குறித்த அலசல் புதிய விஷயங்களை சொல்லியது.
 • பா ராகவன் : நினைவலைகள். ஷங்கர் படம் என்று ‘ஜீன்ஸ்‘ ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தவுடன் கிடைத்த அனுபவம் கிடைத்தது. வண்ணமயம்; ஆனால், திருப்தியில்லை.
 • காதல் – பிச்சினிக்காடு இளங்கோ : தற்காலத்தின் தாரக மந்திரம் காதலை அலசுகிறார். சிங்கப்பூர் நிலை குறித்தும் அறியமுடிகிறது.
 • மதுரை – திருமலை : பெரிய கட்டுரைகள் (ப்ரிண்ட்-அவுட் எடுக்காமல்) படிக்க எனக்கு அலர்ஜி. துள்ளல் பேச்சும் சிலம்புக் குறிப்புகளும் தாவவிடாமல் தக்கவைக்கிறது.

  இன்ன பிற

 • காசி பேட்டி : கேள்விகள் சூப்பர். பதில்கள் யதார்த்தம்.
 • சுமித்ரா ராம்ஜி : நையாண்டி. சீரியஸான அடிநாதம். டிவி தொடர்களில் நிலையும் தெரிகிறது. சிரிப்பும் வருகிறது.
 • ஸுப்பரு – பேப்பி பர்த்டே டு ஸ்டார்.
 • காத்தாடி ராமமூர்த்தி சந்திப்பு : அனைவரின் பங்களிப்பு, நகர எல்லையின் விரிவு, அவன் அவளானது — ‘அய்யோ… அம்மா… அம்மம்மா‘ என்று சிரிக்காமல் யோசிக்க வைக்கிறார்.

  சிறுகதைகள்

 • வீடு – சித்ரன் : ஒத்த மனமுள்ளவர்களாக குடித்தனம் வைப்பது, சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் விஷயம். நீண்ட நாள் பிரிந்திருந்த மகன் திரும்புவது மனதுக்கு நெருக்கமான விஷயம். பின்னியிருக்கார்.
 • அம்மா பிறக்கப் போகிறாள் – நிர்மலா : நிஜத்திற்கு அருகே நிற்கும் பிண்ணனிதான். ஆனால், படித்து முடித்தவுடன் ‘அட்வைஸ் போதுமே’ என்று எனக்கு பட்டது.
 • மௌனம்தான் பேசியதே – ஷைலஜா : ரொம்ப பிடித்திருந்தது. துள்ளல் நகைச்சுவை. தீபாவளி டச். எல்லா குடும்பத்திலும் நடக்கும் ஊடல். எழுத்தாள நாயகன். ஜாலியாக இருக்கு.
 • தேய்பிறைகள் – சத்யராஜ்குமார் : அலசி காயப்போட்டு மீண்டும் உடுத்தி தோய்க்கப்பட்ட மேட்டர். இதைக் கூட அப்பாவியாக ஆரம்பித்து, முகம் மாற்றி சீரியஸாக்கி, உறையவைக்கிறார். ‘நல்ல தகப்பனா இருப்பேனா?’ — பயமுறுத்துகிறார்.
 • மாயமான் – பவித்ரா : ரசனை குறித்த பதிவு நிமிரவைக்கிறது. இனிமையான படப்பிடிப்பு. சடாரென்று முடிந்துவிட்டது.
 • நிலையை உடைத்து செய்த ஏணி – ஸ்ரீவித்யா சங்கரன் : மனைவியின் கதை. The best story in the Malar என்று சொல்லுவேன் 🙂
 • உங்கள் ஓட்டு ரகசியமானது – பாஸ்டன் பாலாஜி : சில வருடம் முன்பே எழுதியது. கொஞ்சமே கொஞ்சம் சொந்த அனுபவம். கார்த்திக்ராமஸ் மட்டும் தனிமடலில் எதிர்க்குரலிட்டிருந்தார்.
 • 30 வருஷம் – முத்துராமன் : பைண்டிங் தாத்தா முத்தையாவுக்கும் நடராஜ தாத்தாவுக்கும் மேஜிகல் கனெக்ஷன் என்னவோ?! ஒரு வீடு இரு வாசலாக இருக்கிறது. இரண்டு கதைகளும் இணையாமல் இருந்திருந்தால் அருமையான தாக்கம் கிடைக்கலாம்.
 • காட்சிப்பிழை – என் சொக்கன் : டிவி பேசும் ரியலிஸம். வெளிப்படையான கருத்துக்களை தாங்கும் சக்தி நமக்கிருக்கிறதா? ரஷியாவின் நஞ்சு வைத்தியம் போல்தான் அனைத்து சுதந்திர நாடுகளிலும் ஊடகங்களா? சிந்தையைப் புரண்டு விழிக்கவைக்கும் படைப்பு.

  கவிதைகள்

 • …திருக்கலாம் – ராஜ்குமார் : தீபாவளி ஸ்பெஷலில் கவனிக்க மறந்தவை.
 • இருப்புகள் – பாலாஜி பாரி : மறந்து போன போலிகளின் அடையாளம்?
 • கோவில், கடவுள், மனிதன் – மீனாக்ஸ் : மனசு, எளிமை, உணர்ச்சி.
 • சாலை குறித்த பூர்வாங்க விவாதம் – ஆதவன் தீட்சண்யா : கவிதையில் உரையாடல் நான் பார்த்ததில்லை. அந்த வகையில் புதுமையான பிரயோகம். அரசியலுக்கும் பொதுஜனத்துக்கும் இல்லாத இணைப்பை பறைகிறது.

  வடிவமைப்பு

 • கதைகளுக்கு படம் போட்டது போல், கவிதைகளுக்கும் புகைப்படங்கள் இட்டிருக்கலாம்.
 • அச்சு எடுக்க முடியவில்லை.
 • மேற்கோள் வைத்துக்கொள்ள நினைக்கும் பகுதிகளை காப்பி-பேஸ்ட் செய்ய முடியாது.
 • எளிய முறையில் பக்கத்துக்கு பக்கம், அச்சு புத்தகம் போல் புரட்ட முடியவில்லை. பேஜ் டவுன், பேஜ் அப் போன்ற பழக்கப்பட்ட திசைகள், ஸ்க்ரால்பார் கொண்டு டக்கென்று நாற்பதாவது பக்கத்துக்கு விரையும் மைக்ரோசாஃப்ட் வோர்ட் போன்ற பிரயோகங்கள் இல்லாதது, ஈ-கலப்பை இல்லாமல் தமிழ் அடிக்க வைப்பது போல் படுத்துகிறது.
 • மைக்ரோசாஃப்ட் ரீடர் கொடுக்கும் எளிய வசதிகளான குறிப்புகள் எடுத்துக் கொள்வது, புத்தகக் குறிகள் போன்றவையும் சாத்தியமில்லை. அடோபி, ஃபையர்ஃபாக்ஸ் போன்ற சுலபமான நிரலிகள் இருக்கும் காலத்தில், இவ்வகை வடிவமைப்பு ஏமாற்றம் அளிக்கிறது.

  Download from tamiloviam.com

  மேலும்

 • அரசியல், உலக நடப்பு, சினிமா, இசை, விமர்சன, மொழி, விஞ்ஞான, மொழிபெயர்ப்பு, பிற கலை, தத்துவ கட்டுரைகள் என்று வெரைட்டி காட்டலாம்.
 • ஆங்காங்கே இன்னும் கொஞ்சம் ஜனரஞ்சகமான துணுக்குகள், பொருத்தமான நிழற்படங்கள் இட்டிருக்கலாம்.
 • இணைய ஸ்பெஷல் என்பதால் தமிழ் வலை குறித்த பதிவுகளோ, சுட்டிகளோ, தொகுப்புகளோ சேர்த்திருக்கலாம்.
 • Categories: Uncategorized