Home > Uncategorized > கீழ்வெண்மணி – மணா

கீழ்வெண்மணி – மணா


44 உயிர்களும் அரைப்படி நெல்லும்

36 வருஷங்களாகியும் உயிர் பொசுங்கிய நெடியடிக்கிறது இந்தக் கிராமத்து மண்ணில்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுகாவில் கீழ்வெண்மணிக்குள் நுழைகிற இடத்தில் வெண்மணிச் சம்பவத்தை நினைவூட்டுகிற சிவப்பு வளைவு. உள்ளே போனால் காலனி தெரு. அதில் ரத்தசாட்சி போல சிவப்புமயமான கட்டிடம்.

1967ல் 44 உயிர்கள் விறகுகள் மாதிரி எரிக்கப்பட்ட இடம் இதுதான். ஜாலியன் வாலா பாக்கில் உள்ள நினைவுச் சின்னம் மாதிரியே வடிவமைத்திருக்கிறார்கள் இதையும். ஜோதிபாசு அடிக்கல் நாட்டி 1970ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டத்தைத் திறந்து வைத்தவர் கம்யூனிஸ்ட் தலைவரான பி. ராமமூர்த்தி. நினைவுத்தூண்களில் வரிசையாகப் பதிந்திருக்கின்றன சாகடிக்கப்பட்ட அந்த 44 பேர்களின் பெயர்கள்.

தஞ்சை மண்ணில் ‘பண்ணையாள் முறை’ ஆழமாக வேரூன்றியிருந்த காலம். விவசாய வேலைகளில் சற்று சுணக்கம் காட்டினாலும் உடம்பில் சவுக்கடி விழுந்து வலியுடன் ரத்தம் கசியும். அதோடு மாட்டுச் சாணியைப் பால் மாதிரி கரைத்து அந்தத் தொழிலாளர்களைக் குடிக்கச் சொல்வார்கள். கசங்கிய முகத்துடன் வேறுவழியில்லாமல் குடிப்பார்கள் விவசாயத் தொழிலாளிகள். எதிர்த்துச் சிறுவார்த்தை கூடப் பேச முடியாது.

அவர்களிடமும் வந்தது விழிப்பு. “நியாயமான கூலியைக் கேள். குருடனாக இருக்காதே… கண்ணைத் திற ஊமையாக இருக்காதே – பேசு…” என்று நரம்புகளை அதிரவைக்கிறபடி பிரச்சாரம் பண்ணினார்கள் கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் சீனிவாசராவும். சங்க உணர்வை உருவாக்கினார்கள். பிரச்சார பொறி பலருடைய மனசில் விழுந்து கணகணத்தது. ஒன்று சேர்ந்தார்கள். உருவானது விவசாயிகள் சங்கம். எழுந்தது தட்டிக் கேட்கிற குரல்.

அந்த ஒற்றுமையே பெரும் சலசலப்பை உருவாக்கிவிட்டது. ‘தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது’ என்று கண்டுபிடித்துச் சொன்னார் ராஜாஜி. நிலச்சுவான்தார்களும் கூடினார்கள். நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். மஞ்சள் கொடியை ஏற்றி செங்கொடியை இறக்கச் சொன்னார்கள். அதை மறுத்து அரைலிட்டர் நெல்லைக் கூட்டி கூலியாகக் கேட்டார்கள் விவசாயிகள்.

ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. தோல்விதான். அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரப் பொறி.

1967 டிசம்பர் 25. கிறிஸ்துமஸ் தினம். நிலச்சுவான்தார்களின் அடியாட்கள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகள் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார்கள். கிராமமே ரணகளமானது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஒரே பீதி. வேட்டையின் தீவிரம் தாளாமல் பலர் ஓடியிருக்கிறார்கள். ஒரு தெருவின் மூலையில் ராமையனின் குடிசை. மேலே கூரை. அதற்குள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள சின்ன அறையில் அடைசலாக 48 பேர்.

கொஞ்ச நேரத்தில் கதவடைத்து தீவைத்து விட்டார்கள். வெப்பம் தகித்து ஒரே கூச்சல். நெருப்பை மீறி ஆறுபேர் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். வந்ததில் இரண்டு பேரையும், ஒரு தாய் தூக்கி வெளியே வீசிய குழந்தையையும் திருப்பி குடிசைத்தீயில் வீசியிருக்கிறது வெளியே இருந்த கும்பல். தீ வேகத்துடன் எரிய அந்தப் பிழம்பில் கசிந்தது உயிர் கருகிய நாற்றம்.

நடு இரவில் போலீஸ் வந்து கனன்று கொண்டிருந்த கனலை விலக்கிப் பார்த்தால், உள்ளே கரிக்கட்டைகளாக எரிந்து அவிந்து கிடந்தன 44 உயிர்கள். அதில் பெண்கள் 14 பேர். குழந்தைகள் 22 பேர். போஸ்ட் மார்ட்டத்திற்காக நாகப்பட்டினத்திலிருந்து வந்த டாக்டர் கைவிரித்தார். அடையாளம் சொல்ல முடியாமல் ‘விடிந்ததும் செய்தி பரவி தமிழகமே அதிர்ந்தது’. ‘நாட்டுக்கே அவமானம்’ என்று கட்டம் கட்டி வெளியிட்டன டெல்லிப் பத்திரிகைகள்.

106 பேர் கைதானார்கள். திமுக ஆட்சி நடந்த அந்த நேரத்தில் கைதானவர்களில் பலர் காங்கிரஸ்காரர்கள். தப்பிப் பிழைத்தவர்கள் சாட்சியம் சொன்னார்கள். ‘இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல்’ என்று சொன்னது போலீஸ்.

‘அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…’ என்று 1973 ஏப்ரல் 6ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டதும், விடுதலையானார்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள். சட்டரீதியாக அடங்கிப் போனது கீழ்வெண்மணிப் புகை.

நன்றி: புதிய பார்வை – செப். 1 2004

Categories: Uncategorized
 1. December 20, 2004 at 2:33 am

  அஜித்தின் படம் ஒன்று தயாராகும்போது அது கீழ்வெண்மணிக்கதை என்று சொன்னார்கள்.பின்னர் படம் பார்த்தபோது அந்த சம்பவம் பற்றி முன்னர் கேள்விப்படாததால்
  அறிய ஆவலிருந்தது.தடயம் கிடைக்கவில்லை

  இப்பொழுது இந்த கட்டுரை மூலம் முழு விபரமும் கிடைத்திருக்கிறது.

  குற்றவாளிகள் விடுதலையானார்கள் என்பது அந்த சம்பவத்தை விட கொடுமை.

 2. December 20, 2004 at 8:31 am

  விருமாண்டியில் ரோகிணி, பேய்க்காமனிடம்(உண்மைப்பெயர் தெரியவில்லை)..
  ப்ராபர் தேஞ்சூருங்கலா என்ற கேள்விக்கு
  இல்லை…. கீழ்வெண்மணி….. என்று சற்று அழுத்திச்சொல்வார்.

  அந்த ஊரில் ஏதோ நடந்திருக்கிறது என யூகித்தேன்..
  இவ்வளவு விஷயமிருக்கா?

  குற்றவாளிகள் விடுதலைதான் உறுத்துகிறது.
  என்ன சட்டமோ… நம் சட்டம்?

 3. December 20, 2004 at 8:42 am

  thanks forthe article.

 4. December 20, 2004 at 9:02 am

  அஜீத்தின் ‘சிடிசன்’ படத்தில் ஒரு கிராமமே காணாமல் போக்கப்பட்டதை சொல்லியிருந்தார்கள். இருந்தாலும், இந்த நிகழ்வை அழுத்தமாகக் காண்பிக்கவில்லை.

  குண்டடிப்பட்டவர்கள் இன்னும் குண்டு பாய்ந்த உடம்புகளுடன் இருப்பதும், கொன்றவர்கள் சுதந்திரமாக இருப்பதும், காலங்கடந்தாவது (மேல்முறையீடு?) சட்டத்தின் முன் கொண்டுவரப் படவேண்டும்.

 5. December 20, 2004 at 1:13 pm

  thanks for such an article…could you give me the link for puthiya paarvai…

 6. December 20, 2004 at 1:15 pm

  நான் அறிந்தவரையில் அச்சில் மட்டுமே கிடைக்கிறது. இணையத்தில் பதிப்பிப்பது இல்லை.

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: