Archive

Archive for December, 2004

Sex Sells… but (துளி ‘ஏ’)

December 17, 2004 3 comments

BBC NEWS | South Asia | CEO held over student sex video: பாஸி.காம் (Baazee.com) நிறுவனத்தின் தலைவர் அவ்னிஷ் பஜாஜ் கம்பியெண்ணப் போகிறார். ‘பாஸி’ தளத்தில் டெல்லி ஸ்கூல் செக்ஸ் வீடியோவை விற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோ இரண்டு நிமிடங்கள் முப்பத்தேழு விநாடிகள் ஓடக்கூடியது போன்ற தகவல்கள் சொல்கிறார்கள். மேலும் விபரங்களுக்கு.

ஐ.ஐ.டி. மாணவரும் கைதாகியுள்ளார். விசிடி போட்டு 125 ரூபாய்க்கு விற்றவனுக்கும் ஜெயில் வாசம்.

இந்தக் கைது அருமையான முன்னுதாரணமாகத் தோன்றுகிறது. டாக்டர் பிரகாஷ் போல் சொந்தமாக படம் பிடிக்காதவர் அவ்னிஷ் பஜாஜ். பலான படத்தைக் கூட தானே நேரடியாக விற்காமல், இடைத்தரகராக தொடுப்பு மட்டும் கொடுத்தவர். ஓரளவு செல்வாக்கும் பணபலமும் உடையவர். ஈ-பே (eBay).காம் என்னும் அமெரிக்க கம்பெனியின் கீழ் இயங்குபவர். அவரின் கைது பலரையும் எழுப்பும். எதையும் செய்து தப்பித்து, பதுங்கி, ஒதுங்கி, அடக்கி, ஒளிந்து விடலாம் என்று எண்ணுபவர்கள் பயப்படுவார்கள்.

கைதுகள் த்ரிஷா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அச்சத்தைக் கொடுக்கும். விற்றவனை பிடித்தால், ஒரிஜினலாக தயாரித்தவன் என்றாவது அகப்படுவான். அப்போது மானநஷ்ட வழக்குத் தொடுக்க வசதியாக இருக்கும்.

ஒருவரின் சம்மதத்தோடு எடுக்கப்படும் வீடியோக்களை விற்பதில் தவறில்லை. அது குஷ்பூ நடித்ததாக இருக்கலாம்; அல்லது ஷகீலா படமாக இருக்கலாம். இந்தப் படங்கள் அவர்களின் நிதிநிலைமையின் முன்னேற்றத்திற்காகவோ, லட்சிய வெறிக்காகவோ செய்து கொள்ளப்பட்ட சமரசங்கள். இவை செய்யும் இடங்களில் ரெய்டு செய்து, டாக்டர். பிரகாஷ் போன்றவர்களை உள்ளே தள்ளுவதை விட, பாஸி.காம், ஐ.ஐ.டி. மாணவர் போன்ற கைதுகள் முக்கியமானவை.

மின்மடலின் மூலம் ஃபார்வார்ட் செய்வது, பொதுத்தளங்களில் சுட்டி கொடுப்பது, போன்றோரை நிறுத்தினால், இந்த மாதிரி படம் எடுப்போரும் குறைந்து போவார்கள். வரைவின் மகளிரைக் கைது செய்வது தேவையா என்பதை விட, அவ்வகை சமாசாரத்திற்கு தூண்டில் போட்டு மீன் பிடிப்பவர்களும் சட்டத்தின் பிடியில் மாட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.

வலைப்பதிவுகளில் மின்னிதழ்களில் பின்னூட்டங்களின் மூலம் பிட் நோட்டிஸ் போடுவது கூட மான நஷ்ட வழக்கிற்கு வழிவகுக்கலாம் என்கிறார் நாவி. இந்த கருத்து இந்தியாவில் உள்ளவர்களும் கவனிக்கப்பட வேண்டிய சட்ட ஆய்வு. ஏதோ ‘கண்டதை சொல்கிறேன்’ என்பது இருக்கட்டும். ஆனால், இங்கிருந்து வீடியோவை இறக்கிக் கொள்ளலாம் என்பது குற்றம். வீடியோவை இன்னொருத்தருக்குக் கொடுப்பதும் குற்றம்.

‘ஜெபர்டி’ விநாடி-வினா நிகழ்ச்சியில் முன்கூட்டியே போட்டியாளர் கென் ஜெனிங்ஸ் தோற்பார் என்பதை சொன்னதற்காக அமெரிக்க வலைத்தளம் மீது ஸோனி நிறுவனம் கேஸ் நடத்துகிறது.

அமெரிக்காவில் இருப்பவர்கள் இதற்கென காப்புரிமையும் பெற்று வைத்துக் கொள்ளலாம். மானநஷ்ட வழக்கு தொடுத்தால், அதற்கான வக்கீல் செலவுகளை, இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு விடும். யாரும் வழக்கு தொடுக்கா விட்டால், மாதா மாதம் முப்பது டாலர் பணம் செலுத்தினதுதான் செலவு. ஆனால், பிறர் மேல் வழக்கு தொடுத்தே மில்லியனராகுபவர்கள், உங்களை விட்டுவிடுவார்கள்.

யோசித்து எழுதவேண்டும். கவனித்து சுட்டி கொடுக்க வேண்டும்.

Categories: Uncategorized

தேவதையைக் கண்டேன்

December 16, 2004 Leave a comment

மாமா பைய்யா – ரஞ்சித் – நா முத்துக்குமார் – 3.5 / 4

நா முத்துக்குமார் சோகரசத்தை புன்முறுவலோடு எழுதியிருக்கிறார்.

‘கோயிலாண்ட வரச் சொன்னியே
வந்தேனே…

குங்குமத்தைத் தரச் சொன்னியே
தந்தேனே…

புருஷனா நான் நெனச்சேன்
என்ன பூசாரியா ஆக்கிப்புட்டியே

ஜீன்ஸ கிழிச்சுப் போடச் சொன்னியே
போட்டேனே…

ஜிம்முக்குத்தான் போகச் சொன்னியே
போனேனே…

அஜீத்துன்னு நான் நெனச்சேன்
எனக்கு அல்வ்வாவைக் கொடுத்துப்புட்டியே

ரிக்ஷா இழுத்தாலும்
ரிச்சா வாழ வைப்பேன்’

‘கிருதாவை வைக்கச் சொன்னியே
வெச்சேனே…

மீசையத்தான் எடுக்கச் சொன்னியே
எடுத்தேனே…

பந்தான்னு நான் நெனச்சேன்
என்னை பாகவதராக்கிப்புட்டியே

கையவிட்டு ஓட்டச் சொன்னியே
செஞ்சேனே…

ஸ்டைலுன்னு நான் நெனச்சேன்
என்ன ஸ்ட்ரெச்சரிலே ஏத்திப்புட்டியே’

ஒரே ஒரு தோப்பிலேசபேஷ், ஸ்ரீலேகா பார்த்தசாரதி – வேலம் சி மனோஹர் – 2 / 4
‘குன்றத்திலே கோயில் கட்டி’ மாதிரி ம்ம் கொட்ட வைக்கும் ஆங்கிலப் பாடல் ஆரம்பம். கதை சொல்கிறார்கள். இரட்டுற மொழிதல் விருப்பம் உள்ளவர்கள் பல அர்த்தங்களைக் காண்பார்கள்.

துண்டக் காணோம்அனுராதா ஸ்ரீராம், தனுஷ் – திரைவானம் – 1.5 / 4
எங்கேயோ கேட்ட இசையாய் துக்கடாக்கள் வருவதால் தேவாவின் இசை என்பதை தெளியலாம். தற்கால ஜானகியான அனுராதா ஸ்ரீராமை இசையமைப்பாளர்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாதது வருத்தமே.

விளக்க ஒண்ணுகிரேஸ், யுகேந்திரன் – பா விஜய் – 3 / 4

‘பொதுவாக என் மனசுத் தங்கம்’ கொஞ்சம். இன்னும் சில கண்டுபிடிக்க முடியாத க்ளாசிக்ஸ் கொஞ்சம். மும்தாஜுடன் ஆட்டம் கட்டுகிறார் தனுஷ்.

‘பொம்பள ஆசைதான் எரியும் கொசுபத்தி
இரவு முழுக்கவும் எரியும் எரியும்
ஆம்பிள ஆசைதான் எரியும் ஊதுபத்தி
கொஞ்ச நேரம்தான் புகையும் புகையும்’

‘என் நெஞ்சுக்குள்ள மீனம்பாக்கம் ஃப்ளைட் போறது’

அழகே பிரம்மனிடம்கங்கா, ஹரீஷ் ராகவேந்திரா – வேலம் சி மனோஹர் – 1.5 / 4
கூத்தாடும் வகுப்பில் இழுத்திப் போர்த்துக் கொண்டு odd man out. ஸ்ரீதேவிக்கு ஏற்ற சாதாரண காதல் டூயட்.

எனக்கு தேனிசைத் தென்றல் பிடிக்கும். ரீ-மிக்ஸ்கள் போல் அந்தக்கால ஹிட்களை நமக்கே தெரியாமல் கலந்துகட்டுவதும் பிடிக்கும். கவலைப்படாமல் கொஞ்ச நேரம் டப்பங்குத்த இன்னும் பிடிக்கும்.

கேட்க : musicindiaonline.com

Categories: Uncategorized

தமிழோவியம் தீபாவளி மலர் – விமர்சனம்

December 15, 2004 1 comment

கட்டுரைகள்

 • நரகாசுரனின் தற்கொலை – நாகூர் ரூமி : கமல் கூட தமிழோவியம் படிக்கிறார் போல. அவரும் ஹிட்லரின் தற்கொலையை குறித்து எழுதியுள்ளார். அருமையான சரித்திரப்படத்தின் திரைக்கதை போல் எழுதப்பட்டிருக்கிறது.
 • ஜோதிடம் : அடிப்படை ஜாதகம் தெரிந்திருக்க வேண்டும். 1, 4, 7, 10 கேந்திரம் போன்றவைகளுக்கு எங்காவது ஹைப்பர்லிங்க் கொடுக்க வேண்டும். லக்கினாதிபதியை லக்கி நாதிபதி ஆக்கிய பிழைகளை தவிர்க்கவும். கோட்ஸே குறித்த அலசல் புதிய விஷயங்களை சொல்லியது.
 • பா ராகவன் : நினைவலைகள். ஷங்கர் படம் என்று ‘ஜீன்ஸ்‘ ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தவுடன் கிடைத்த அனுபவம் கிடைத்தது. வண்ணமயம்; ஆனால், திருப்தியில்லை.
 • காதல் – பிச்சினிக்காடு இளங்கோ : தற்காலத்தின் தாரக மந்திரம் காதலை அலசுகிறார். சிங்கப்பூர் நிலை குறித்தும் அறியமுடிகிறது.
 • மதுரை – திருமலை : பெரிய கட்டுரைகள் (ப்ரிண்ட்-அவுட் எடுக்காமல்) படிக்க எனக்கு அலர்ஜி. துள்ளல் பேச்சும் சிலம்புக் குறிப்புகளும் தாவவிடாமல் தக்கவைக்கிறது.

  இன்ன பிற

 • காசி பேட்டி : கேள்விகள் சூப்பர். பதில்கள் யதார்த்தம்.
 • சுமித்ரா ராம்ஜி : நையாண்டி. சீரியஸான அடிநாதம். டிவி தொடர்களில் நிலையும் தெரிகிறது. சிரிப்பும் வருகிறது.
 • ஸுப்பரு – பேப்பி பர்த்டே டு ஸ்டார்.
 • காத்தாடி ராமமூர்த்தி சந்திப்பு : அனைவரின் பங்களிப்பு, நகர எல்லையின் விரிவு, அவன் அவளானது — ‘அய்யோ… அம்மா… அம்மம்மா‘ என்று சிரிக்காமல் யோசிக்க வைக்கிறார்.

  சிறுகதைகள்

 • வீடு – சித்ரன் : ஒத்த மனமுள்ளவர்களாக குடித்தனம் வைப்பது, சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் விஷயம். நீண்ட நாள் பிரிந்திருந்த மகன் திரும்புவது மனதுக்கு நெருக்கமான விஷயம். பின்னியிருக்கார்.
 • அம்மா பிறக்கப் போகிறாள் – நிர்மலா : நிஜத்திற்கு அருகே நிற்கும் பிண்ணனிதான். ஆனால், படித்து முடித்தவுடன் ‘அட்வைஸ் போதுமே’ என்று எனக்கு பட்டது.
 • மௌனம்தான் பேசியதே – ஷைலஜா : ரொம்ப பிடித்திருந்தது. துள்ளல் நகைச்சுவை. தீபாவளி டச். எல்லா குடும்பத்திலும் நடக்கும் ஊடல். எழுத்தாள நாயகன். ஜாலியாக இருக்கு.
 • தேய்பிறைகள் – சத்யராஜ்குமார் : அலசி காயப்போட்டு மீண்டும் உடுத்தி தோய்க்கப்பட்ட மேட்டர். இதைக் கூட அப்பாவியாக ஆரம்பித்து, முகம் மாற்றி சீரியஸாக்கி, உறையவைக்கிறார். ‘நல்ல தகப்பனா இருப்பேனா?’ — பயமுறுத்துகிறார்.
 • மாயமான் – பவித்ரா : ரசனை குறித்த பதிவு நிமிரவைக்கிறது. இனிமையான படப்பிடிப்பு. சடாரென்று முடிந்துவிட்டது.
 • நிலையை உடைத்து செய்த ஏணி – ஸ்ரீவித்யா சங்கரன் : மனைவியின் கதை. The best story in the Malar என்று சொல்லுவேன் 🙂
 • உங்கள் ஓட்டு ரகசியமானது – பாஸ்டன் பாலாஜி : சில வருடம் முன்பே எழுதியது. கொஞ்சமே கொஞ்சம் சொந்த அனுபவம். கார்த்திக்ராமஸ் மட்டும் தனிமடலில் எதிர்க்குரலிட்டிருந்தார்.
 • 30 வருஷம் – முத்துராமன் : பைண்டிங் தாத்தா முத்தையாவுக்கும் நடராஜ தாத்தாவுக்கும் மேஜிகல் கனெக்ஷன் என்னவோ?! ஒரு வீடு இரு வாசலாக இருக்கிறது. இரண்டு கதைகளும் இணையாமல் இருந்திருந்தால் அருமையான தாக்கம் கிடைக்கலாம்.
 • காட்சிப்பிழை – என் சொக்கன் : டிவி பேசும் ரியலிஸம். வெளிப்படையான கருத்துக்களை தாங்கும் சக்தி நமக்கிருக்கிறதா? ரஷியாவின் நஞ்சு வைத்தியம் போல்தான் அனைத்து சுதந்திர நாடுகளிலும் ஊடகங்களா? சிந்தையைப் புரண்டு விழிக்கவைக்கும் படைப்பு.

  கவிதைகள்

 • …திருக்கலாம் – ராஜ்குமார் : தீபாவளி ஸ்பெஷலில் கவனிக்க மறந்தவை.
 • இருப்புகள் – பாலாஜி பாரி : மறந்து போன போலிகளின் அடையாளம்?
 • கோவில், கடவுள், மனிதன் – மீனாக்ஸ் : மனசு, எளிமை, உணர்ச்சி.
 • சாலை குறித்த பூர்வாங்க விவாதம் – ஆதவன் தீட்சண்யா : கவிதையில் உரையாடல் நான் பார்த்ததில்லை. அந்த வகையில் புதுமையான பிரயோகம். அரசியலுக்கும் பொதுஜனத்துக்கும் இல்லாத இணைப்பை பறைகிறது.

  வடிவமைப்பு

 • கதைகளுக்கு படம் போட்டது போல், கவிதைகளுக்கும் புகைப்படங்கள் இட்டிருக்கலாம்.
 • அச்சு எடுக்க முடியவில்லை.
 • மேற்கோள் வைத்துக்கொள்ள நினைக்கும் பகுதிகளை காப்பி-பேஸ்ட் செய்ய முடியாது.
 • எளிய முறையில் பக்கத்துக்கு பக்கம், அச்சு புத்தகம் போல் புரட்ட முடியவில்லை. பேஜ் டவுன், பேஜ் அப் போன்ற பழக்கப்பட்ட திசைகள், ஸ்க்ரால்பார் கொண்டு டக்கென்று நாற்பதாவது பக்கத்துக்கு விரையும் மைக்ரோசாஃப்ட் வோர்ட் போன்ற பிரயோகங்கள் இல்லாதது, ஈ-கலப்பை இல்லாமல் தமிழ் அடிக்க வைப்பது போல் படுத்துகிறது.
 • மைக்ரோசாஃப்ட் ரீடர் கொடுக்கும் எளிய வசதிகளான குறிப்புகள் எடுத்துக் கொள்வது, புத்தகக் குறிகள் போன்றவையும் சாத்தியமில்லை. அடோபி, ஃபையர்ஃபாக்ஸ் போன்ற சுலபமான நிரலிகள் இருக்கும் காலத்தில், இவ்வகை வடிவமைப்பு ஏமாற்றம் அளிக்கிறது.

  Download from tamiloviam.com

  மேலும்

 • அரசியல், உலக நடப்பு, சினிமா, இசை, விமர்சன, மொழி, விஞ்ஞான, மொழிபெயர்ப்பு, பிற கலை, தத்துவ கட்டுரைகள் என்று வெரைட்டி காட்டலாம்.
 • ஆங்காங்கே இன்னும் கொஞ்சம் ஜனரஞ்சகமான துணுக்குகள், பொருத்தமான நிழற்படங்கள் இட்டிருக்கலாம்.
 • இணைய ஸ்பெஷல் என்பதால் தமிழ் வலை குறித்த பதிவுகளோ, சுட்டிகளோ, தொகுப்புகளோ சேர்த்திருக்கலாம்.
 • Categories: Uncategorized

  பத்து ‘தலை’

  December 14, 2004 Leave a comment

  Barbara Walters’ Most Fascinating People: கடந்த வருடத்தில் வியக்கத்தக்க பத்து பெயர்களை ஏபிஸி தொலைக்காட்சியில் பார்பரா வால்டர்ஸ் பட்டியலிட்டார். போன வார நிகழ்ச்சியில் அவர்களின் பேட்டியும் இடம்பெற்றது.

  Karl Rove: ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் மூளை என்று வர்ணிக்கப்படுபவர். இரண்டாம் முறை வெற்றிக்கனியை பெற வைத்தவர்.

  Mel Gibson: இருபத்தைந்து மில்லியன் செலவழித்து உம்மாச்சி படம் எடுத்தவர். ‘ப்ரேவ்ஹார்ட்’ போன்ற படங்கள் நடித்து இயக்கியிருந்தாலும், ‘பாஷன் ஆஃப் தி க்ரைஸ்ட்’டில் பெரிய நட்சத்திரங்கள் எதுவும் இல்லாமல், முக்கிய நிறுவனங்கள் விநியோகிக்க மாட்டோம் என்று கைவிரித்துவிட, சொந்தமாக ரிலீஸ் செய்தவர். இதுவரை ஐநூறு மில்லியன் லாபம் பார்த்து இருக்கிறார்.

  Google Founders Larry Page and Sergey Brin: நம்ம கூகிள்… புத்தம்புதிய Google வழிகாட்டி பார்த்தாச்சா?

  World Series-winning Boston Red Sox pitcher Curt Schilling: ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேடட் முதல் தி ஹிந்து வரை பாராட்டும் ரெட் சாக்ஸ் அணி சார்பாக காலில் கட்டுடன் செவ்வி கொடுத்தார்.

  Michael Moore: ரொம்ப ஃபாரன்ஹீட் ஏற்றாமல் அமைதியாகப் பேசினார்.

  Usher: ரெக்கே & ப்ளூ பாடல் பாடும் ஆப்பிரிக்க அமெரிக்கர். பாடி கேட்டதில்லை.

  Paris Hilton: பாரிஸ் ஹில்டன் இடம்பெறாவிட்டால்தான் ஆச்சரியம்.

  Oprah Winfrey: ஐம்பதிலும் இந்திரா காந்தி போன்ற நளினமான வசீகரம். அரட்டை அரங்கத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கார் பரிசளித்து பிறந்த நாள் கொண்டாடியவர். இவர் வாய் திறக்கக் கூட வேண்டாம்… கண் காட்டினால் போதும். மார்குவேஸ் முதல் மடிக்கணினி வரை விற்று தீர்ந்துவிடும்.

  Donald Trump: மஞ்சக் கடுதாசி கொடுத்தாலும் மற்றவர்களின் சீட்டை (வேலையில் அமர்த்திக் கொள்ளாமலே) நீக்கி வருபவர். நிஜமாகவே நிஜ-நாடகக் காட்சியான ‘அப்ரெண்டிஸி’ல் சுவாரசியப்படுத்துபவர்.

  Ken Jennings: தமிழ் வலைப்பதிவுலகில் (Final Jeopardy – Domesticated Onion) வெங்கட், பிபி (Of Cabbages and Kings: They Killed Kenny!) என்று பலராலும் பதியப்பட்டவர்.

  தமிழில் சென்ற வருட ‘தலைகள்’ யாரு?

 • ஜெயேந்திரர்
 • விஜயகுமார் (டி.எஸ்.பி.)
 • ஜெயலட்சுமி (சிவகாசி)
 • சோனியா அகர்வால்
 • ப. சிதம்பரம்
 • சௌந்தர்யா
 • வைரமுத்து
 • ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
 • திருமுருகன் (மெட்டி ஒலி)
 • சுஜாதா
 • ஏ. ஆர். ரெஹ்மான்
 • ரம்யா கிருஷ்ணன்
 • த்ரிஷா
 • திருச்செல்வன் (கோலங்கள்)
 • ஜோதிகா
 • Categories: Uncategorized

  லேடரல் கேள்விகள்

  December 14, 2004 3 comments

  (கடி) விடை கொடுப்பதற்காக ஒரேயொரு சாம்பிள்:
  Q. How can you lift an elephant with one hand?
  A. It is not a problem, since you will never find an elephant with one hand.

  1. முட்டையை கான்க்ரீட் தரையில் போடும்போது உடைக்காமல் போடுவது எப்படி?

  2. ஒரு சுவற்றை எழுப்புவதற்கு எட்டு மனிதருக்கு பத்து மணி நேரம் பிடித்தது. அப்படியென்றால் நான்கு பேருக்கு எத்தனை நேரம் எடுக்கும்?

  3. உங்களின் ஒரு கையில் மூன்று ஆப்பிள்களும் நான்கு ஆரஞ்சுகளும், மற்றொரு கையில் மூன்று ஆரஞ்சுகளும் நான்கு ஆப்பிள்களும் இருந்தால், மொத்தம் என்ன இருக்கும்?

  4. எட்டு நாள் தூங்காமல் மனிதனால் எப்படி இருக்க முடியும்?

  5. சிவப்பு நிறமுடைய கல்லை, நீலக்கடலில் போட்டால், கல் என்னவாகும்?

  6. பாதி திராட்சையை ஒத்திருப்பது எது?

  7. காலையில் சாப்பிடவே முடியாதது எது?

  8. சக்கரம் கண்டுபிடித்தவுடன் என்ன நிகழ்ந்தது?

  கரெக்டாக சொல்வதற்காக மொழிபெயர்க்க இயலாத இன்னொரு சாம்பிள்:
  9. Bay of Bengal is in which state?
  A : Liquid

  Categories: Uncategorized

  சென்ற வாரம்

  December 11, 2004 2 comments
 • Remembering MS Subbulakshmi என்று லேஸிகீக் தன்னுடைய வலைமனையில் காட்டிய விதம், எம்.எஸ். கொள்ளை கொண்ட விதத்தைச் சொன்னது.
 • ‘நான் சின்ன வயசில் இருந்தே உங்க ப்ரொகிராமைப் பார்ப்பேன்’ என்று ‘பெப்சி’ உமாவைப் பார்த்து சீரியஸாக சொன்னார் நடிகர் ஷாம்.
 • ‘செல்லமே’ படத்தை சிரிப்பு வருமாறு கிண்டலடித்தார்கள் சூப்பர் 10.
 • மொஸாம்பிக் தேர்தல் முடிந்துவிட்டது. அர்மாண்டோ க்வெபூஸா (Armando Guebuza) வெற்றி பெறுகிறார். 1986-இல் இருந்து ஆளும் ஜோகிம் சிஸானோ (Joaquim Chissano) ஒருவழியாக ஜனாதிபதி பதவியை விடுகிறார்.
 • அமெரிக்காவின் புகழ்பெற்ற செல்பேசி நிறுவனங்களில் ஸ்பிரிண்ட் பிசிஎஸ் முக்கியமானது. இதை வைத்துக் கொண்டிருப்பவர்களை நக்கலடிப்பது மற்ற செல்பேசி விளம்பரங்களின் முக்கிய அம்சமாகும். நின்றால் அவுட்-ஆஃப்-நெட்வொர்க். வீட்டில் இருந்தால் ‘ரோமிங்’ என்று முகஞ்சுளிக்க வைக்கும் கம்பியில்லா வலைப்பின்னல். ஆனாலும், குறைந்த விலையில் அதிக நிமிடங்கள் கொடுக்கிறார்கள் என்பதற்காக மூன்றாண்டுகள் சாசனம் எழுதுபவர்கள் பலர். (நானும் இரண்டாண்டுகள் வெறுப்பான செல்பேசி காலம் தள்ளியதுண்டு.)
  இவர்கள் மூன்று பில்லியன் டாலர் செலவில் தங்களின் நெட்வொர்க்கை மேம்படுத்தப் போகிறார்கள்.

 • பெட்ரோல் விலை மிகவும் குறைந்துவிட்டதாக ஓபெக் நாடுகள் மூக்கால் அழுது, விலையேறுவதற்கு ஆவன செய்ய முடிவெடுத்துள்ளார்கள். (ப. சிதம்பரம் கனவில் மண்?)
 • ஈ.டி.ஏ. பிரிவினைவாதிகளின் ஸ்பெயின் குண்டுவெடிப்பில் யாரும் இறக்காதது சந்தோஷமான விஷயம்.
 • காங்கோவில் மாதாமதம் 31,000 பேர்கள் இறக்கடிக்கப் படுகிறார்கள். போர் முடிந்தாலும், பட்டினி சாவுகளை நிறுத்த முடியாத ஐக்கிய நாடுகள் அமைப்பு.
 • சார்க், ஆசியான், ஈயூ போல தென் அமெரிக்க நாடுகளும் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்று யூனியன் அமைக்க முடிவெடுத்துள்ளார்கள். வர்த்தகம் பலுப்படவும், ஒற்றுமையாக அமெரிக்காவிடம் கோரிக்கைகள் வைக்கவும் இது உதவலாம்.
 • தாய்லாந்தில் ஆரிகமி (பேப்பர் கலை) பறவைகளை பறக்க விட்டு அமைதியை நிலைநாட்ட முயற்சித்ததை சன் செய்திகள் காண்பித்தது. ஆனால், அடுத்த நாளே, அமைதிப் பறவைகள் விட்ட தெற்கு பகுதியில், குண்டுகளும் வெடித்தது. பேப்பர் எல்லாம் பறக்கவிட்டு ஸ்டண்ட் அடிக்காமல், எதற்கு தாக்குகிறார்கள் என்று தெரிந்து கொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கலாமே!?
 • Categories: Uncategorized

  நேஷனல் ட்ரெஷர்

  December 11, 2004 Leave a comment

  நம்ப முடியாததை நம்ப வைப்பது திரைப்படங்கள். அமெரிக்காவின் ஆளுமைக்குப் பிண்ணனியில் சாணக்கியத்தனங்கள் இருந்தாலும், பில்லியனாதி பில்லியன்கள் எங்காவது ஒளிந்திருக்கும் என்று யாராவது சொன்னால், கீழ்பாக்கம் கேஸ் என்று எண்ணுவோம்.

  இந்தப் படம் பார்த்தபிறகு, அவரிடம் ‘எனக்கு அது எங்கே இருக்கு என்று தெரிய வேண்டும்’ என்று சிரத்தையாக கேட்போம்.

  ‘நிக்கோலஸ் கேஜி’ற்கு பால்ய பருவத்தில் இருந்து பாட்டி சொன்ன கதையாக ‘நேஷனல் ட்ரெஷர்’ வேறூட்டப்படுகிறது. அமெரிக்காவின் மூதாதையர்கள் (முரண்தொடை?!) நாட்டின் அவசரத் தேவைக்காக கோடானுகோடி சொத்தை எங்கோ புதைத்து வைத்திருக்கிறார்கள். அதற்கான ஒற்றை வரி க்ளு மட்டுமே இருக்கிறது.

  இந்தப் புதையலை கண்டுபிடிப்பதற்காக ஹீரோவின் குடும்பம் லாபம் விரும்பா அமைப்பொன்றை நடத்தி வருகிறது. கடகடவென்று நகரும் டைட்டிலின் இறுதியில் பெரியவனாகும் ஹீரோ, முக்கிய துப்பான கப்பலை கண்டுபிடிக்கிறார். கப்பலுக்குள் புதையல் இருந்ததா என்பதில் ஆரம்பிக்கும் சண்டை, ஹீரோவை அனாதரவாக விட்டு வில்லன் கோஷ்டியை உண்டு செய்கிறது.

  தொடர்ந்து அதிபயங்கர பாதுகாப்பில் இருக்கும் சுதந்திர தின சாசனத்தைத் திருட முயற்சிக்கிறார்கள்.

  ஹீரோயின் ஒட்டிக் கொள்கிறார். நக்கலடிக்கும் விவேக் போன்ற கதாநாயகத் தோழன் என்று ஹீரோவின் மூவர் அணி. பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்த வில்லன் கூட்டணி. இவர்கள் இருவரையும் வேட்டையாடும் எஃப்.பி.ஐ.

  விஷமம் செய்யும் குழந்தையைத் தடுக்க ஓடும் பெற்றோரின் வேகத்தில் திரைக்கதை பறக்கிறது. ஆனாலும் ஒன்ற வைக்கிறது.

  புத்திசாலியான ஹீரோயின் முரண்டு பிடிக்கிறார். கிண்டல் அடிக்கிறார். சாகசங்கள் புரிகிறார். படம் முழுக்க அதிக ஆடைகள் மாற்றி ஜொலிக்காமல் வந்தாலும், அழகாக மனதில் இடம் பிடிக்கிறார்.

  ஹீரோவின் தோழராக வருபவரின் நச் காமெண்ட்கள் சீரியஸான படத்தின் இறுக்கத்தைத் தளர்த்துகிறது. ப்ராக்டிகலாக யோசித்து, கற்பனைகளில் உலாவும் அபாயத்தை பார்வையாளனைப் போல் சொல்வதால் ரொம்பவே பிடித்துப் போகிறது.

  தேவைக்கேற்ப பிருமாண்டம், சாதாரண நடுத்தர வர்க்கம் போன்ற ஹீரோ, அற்புதங்கள் எல்லாம் நிகழ்த்தாமல் ஆங்காங்கே சூழ்நிலைக்கேற்ப அச்சப்படும் நாயகன் என்று வெகுவாக நம்பவைக்கும் படம். அவ்வப்போது லாஜிக் சறுக்கல்கள் இருந்தாலும் மன்னிக்கலாம்.

  சைக்கிள் ரிக்ஷா, நடராஜர், தட்டுமுட்டு சாமான், செப்பு பித்தளை பாத்திரம், பிரமிடு தலைகள் என்று குறைவான செலவில் தயாரான காட்சி ஏமாற்றம். கப்பல் காட்டுகிறேன் என்று பனி சூழ்ந்த நிலத்துக்கு சென்று, சிறிய படகை காண்பித்து நம்மை ஒத்துக் கொள்ள சொல்வது கூட பட்ஜெட் தட்டுப்பாடுதான் காரணமாக இருக்கலாம். தவணை அட்டை விடுவது, அப்பா வீட்டில் ஆசுவாசப்படுத்திக் கொள்வது, மற்றவர்கள் வியர்க்க, ஹீரோயின் விறுவிறுக்காதது என்று மைக்ரோஸ்காப் கொண்டு அலசலாம்.

  ஆனால், கொடுத்த காசுக்கு இரண்டரை மணி நேரம் சுவையான, அதிகம் மூளையைப் பிராண்ட வைக்காத அடிதடி மசாலா.

  Categories: Uncategorized

  ஓசியன்ஸ் ட்வெல்வ்

  December 11, 2004 Leave a comment

  கமல், சத்யராஜ், அஜீத், பாக்யராஜ், லிவிங்ஸ்டன், முரளி, பாண்டியராஜன் என்று பத்து ஹீரோ; ஸ்னேஹா ஹீரோயின். சில வருடம் முன்னாடி இவ்வளவு நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு, எல்லாருக்குமே சம அளவு உரிய மரியாதையும் காட்சிகளும் கொடுத்து ரசிக்கத்தக்க படமாக இருந்தது ‘ஓசியன்ஸ் லெவன்’.

  அதே பத்து நாயகர்கள். கூட சிம்ரன் போல இன்னும் ஒரு ஹீரோயின். இந்த ‘ஓசியன்ஸ் ட்வெல்வ்’ எடுத்து முடிக்க இயக்குநர் திணறியிருக்கிறார்.

  அதிக எதிர்பார்ப்புகளுடன் சென்றது பிரச்சினையாக இருந்திருக்கலாம். புத்திசாலித்தனமான திருட்டு வித்தைகள், புரியும்படியான வழிமுறைகள், லாஜிக் இல்லாவிட்டாலும் சுவாரசியமான திருப்பங்கள் கிடையாது. ஆசுவாசப்படுத்தக் கூட நேரம் இல்லாமல் நுனிப்புல் ஓட்டத்தில் கதை, சப்பைக்கட்டு வாதங்கள் என்று படமெங்கும் ஓட்டைகள்.

  போன முறை “ஓசியன்ஸ் லெவனில்” நூற்றைம்பது கோடிக்கு ஏமாற்றப்பட்டார் சூதாட்ட விடுதி தலைவர். அந்தப் பணம் காப்புரிமை மூலமாக அவருக்கு கிடைத்துவிட்டது. இருந்தாலும் திருடிய பதினோரு பேர்களையும் அடையாளம் கண்டுகொள்கிறார். அவர்களுக்கு இரு வாரம் கெடு கொடுக்கப்படுகிறது. திருடிய பணத்தையும் அதற்கான கந்துவட்டியுடன் எண்ணி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் போலீஸ்; ஜெயில்; சிறை!

  அட்டகாசமான ஆரம்பம். செட்டப்பை மாத்தி கெட்டப்பை மாத்தி போல், பத்து + நாயகியின் அமைதியான வாழ்க்கையில் திடீர் எண்ட்ரி கொடுத்து மிரட்டிச் செல்கிறார் வில்லன் – சூதாட்ட விடுதி தலைவர்.

  அதன்பிறகு ஆரம்பிக்கும் சறுக்கல்கள், நிற்காமல் கடுப்பேத்துகிறது. போன முறை தெளிக்கப்பட்ட நகைச்சுவை, இந்த முறை சுழிக்க மட்டுமே வைக்கிறது. சின்னப்பையன் மாட் டேமனை அழைத்துச் சென்று சதாய்க்கும் காட்சி மட்டும் புன்முறுவலில் தேவலாம்.

  காதரீன் ஜீடா ஜோன்ஸ் அநியாயத்துக்கு வேஸ்ட் செய்யப் பட்டிருக்கிறார். ஜூலியா ராபர்ஸ் பாத்திரம் அவரையும் கா. ஜீ. ஜோன்சையும் மிஞ்சும் அளவு மோசமாக்கப் பட்டிருக்கிறது. இரு அருமையான நடிகைகள். இரு அவசரக்கோலங்கள்.

  படத்தின் இறுதி கட்டத்தில் மிஸ்டர். பாரத் ஸ்டைல் சவடால்கள் ‘அட’ என்று கொஞ்சம் ஆறுதல். ஆனால், குழப்பாச்சு, குப்பாச்சு மாதிரி தொடரும் விளக்கங்கள்… ‘ஆஆஆஆஆவ்வ்வ்வ்’.

  வீடியோவில் வேண்டுமானால் பார்க்கலாம். நிறைய ‘டெலீடட் சீன்ஸ்’ கொடுத்திருப்பார்கள். அதன்மூலமாவது வாடகை டாலர்களுக்கு ஏற்ற திருப்தி கிடைக்கும்.

  Categories: Uncategorized

  தி போலார் எக்ஸ்பிரஸ்

  December 11, 2004 1 comment

  ‘நம்பினார் கெடுவதில்லை; நான்குமலை தீர்ப்பு’ என்பதுதான் அடிநாதம். சாண்டா க்ளாஸ் இருக்கிறார் என்று நம்புவது சிறிய பருவம். இருக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்படுவது இன்னொரு பருவம். நம்பியவர் கண்ணில் நிச்சயம் தெரிவார் என்பதை கிறிஸ்துமஸ் பூர்வமாக சொல்கிறார்கள்.

  விதவித வேடங்களில் டாம் ஹாங்க்ஸ். ஆனால், அவர்தான் என்று தெரியாதபடி புதுவித கணினி வித்தை. நடிகர்களின் முகங்களுக்கு ஏற்ப அனிமேஷன் முகங்கள் தயார் செய்திருக்கிறார்கள். கொஞ்சம் அவர்களைப் போலவும்; கணினியில் வரையப்பட்ட நிறைய குணநலன்களையும் கொண்டு, கலந்து கட்டி செய்யப்பட்ட தோற்றம். இரண்டு வருடங்களுக்கு முன்பே, அனைத்து நடிகர்களும் நீலத் திரைக்கு முன் நடித்து ஒளிப்பதிந்து கொள்கிறார்கள். அதை கணினியில் ஏற்றி, ஏற்கனவே செய்த முகங்களுடன் மிக்ஸ் செய்து, நிஜப் படம் தயாராகி இருக்கிறது.

  பெரும் பொருட் செலவில் உருவான படம். அவ்வளவு எல்லாம் மெனக்கிட்டிருக்க தேவையே இல்லை. (கணினி வித்தை காட்டாமல் திரைக்கதை நம்பியதற்கு சமீபத்திய உதாரணம்: தி இன்கிரெடிபிள்ஸ்)

  3-டி திரைகளிலும் வெளிவந்திருக்கிறது. அதற்காகவே என்னவோ, மான்கள் கொம்புகளை நீட்டுகின்றன. ஓடும் ரயிலின் மேலே நடக்கிறார்கள். கன்வேயர் பெல்ட்களில் உருண்டு பிரளுகிறார்கள். ‘ஹாட் ப்ரட்ஸ்’ உணவுகள் வாய்க்கு அருகே நீட்டப்படுகின்றன. பனிகளில் வண்டி சறுக்குகிறது. ‘டோரா டோரா’ போன்ற ரோலர்-கோஸ்டர்களின் மேலே செல்லுகிறார்கள்

  படம் பெரியவர்களின் பொறுமையை சோதிக்கும் ‘மெட்ராஸ் பாஸெஞ்சர்’ வேகத்தில் நகர்கிறது. கடவுள் கற்பனையே என்றாலும் நம்பிக்கையால் அன்றாட நிகழ்வுகளிலும் கண்டு கொள்ளலாம் என்பதை சாண்டாவின் பின்புலத்தில் அருமையாக சொல்கிறது.

  த்ரீ-டியில் பார்த்தால் மட்டுமே நீங்கள் கொடுத்த காசுக்கு ROI வரலாம்.

  Categories: Uncategorized

  பாஸ்டன் முப்பெரும் விழா

  December 9, 2004 8 comments

  பாஸ்டனில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இதை முப்பெரும் விழாவாக கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

 • ‘கலக்கல்’ காசிக்கு பாராட்டு விழா
 • கேள்வி நாயகர் கார்த்திக் ராமஸுக்கு வேள்வி விழா
 • கஞ்சி ஊற்று சுந்தருக்கு கஞ்சி வழங்கு விழா

  நிகழ்ச்சி நிரல்

  தேதி: டிசம்பர் 25, 2004
  கிழமை: சனி
  நேரம்: 4:00
  இடம்: மெய்யப்பனாரின் திராட்சைரசம் சேமிக்கும் நிலவறை


  தமிழ்த்தாய் வாழ்த்து: நித்திலன்
  வரவேற்புரை: நியு இங்கிலாந்து தமிழ் வலைப்பதிவோர் சங்கம் (வடக்கு வட்டம்) தலைவர் மெய்யப்பன்
  தலைமையுரை: பெயரிலி பேரவை
  விருந்தினர் உரை: கனெக்டிகட் சிங்கம் சுந்தர வடிவேலு
  சிறப்புரை: வாஷிங்டன் பெருநகர செயலாளர் கார்த்திக் ராமஸ்
  ஏற்புரை: ‘கலக்கல்’ காசி
  முடிந்தால் உரை: வலைப்பூலி பாலாஜி
  தேசிய கீதம்: கதிர்

  ஒளிப்பதிவு: ‘காண்பதுவே’ மாது

  வட அமெரிக்கத் தோழர்களை அட்லாண்டிக் கடலென திரண்டு வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்!

  வெள்ளி மாலையன்று (டிச.24) — விருந்தினர்களுக்கு சிறப்பு வரவேற்பு!!

  முகமூடிகளுடன் வருபவர்களுக்கு ஜெட்-பிரிவு பாதுகாப்பு உத்தரவாதம்!!!

  மேலும் விபரங்களுக்கு bsubra @ யாஹூ.காம் அல்லது meyps@ஹாட்மெயில்.காம் தொடர்பு கொள்ளவும். நியு ஜெர்ஸி உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டும் 🙂

 • Categories: Uncategorized