Archive

Archive for January 20, 2005

சுண்டக்கா முக்கா பணம்

January 20, 2005 4 comments

Kamadenu.com

ரொம்ப நாளாச்சே புத்தகம் புரட்டி என்று காமதேனு.காம் தளத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல் நப்பாசைபட்டு சில புத்தகங்களை கூடையில் போட்டும் வைத்தேன்.

  • மிகை நாடும் கலை
  • இதம் தந்த வரிகள்
  • ஆட்சியில் இந்துத்துவம்
  • காலச்சுவடு கதைகள் 1994-2000
  • அடங்க மறு
  • உண்மை சார்ந்த உரையாடல்
  • இவை என் உரைகள்

    மொத்தம் 758 ரூபாய்தான். ஜரூராக செக்-அவுட் செய்யும்போதுதான் சுமகூலி (தபால் செலவு) 760 ரூபாய் காட்டியது. அடுத்த முறை இந்தியா செல்லும்போது வாங்கிக் கொள்ளலாம் என்று நிர்க்கதியாய் கூடையை விட்டுவிட்டேன்.

    காமதேனு.காம் அருமையாக இருக்கிறது. தமிழினி, யுனைட்டடு ரைட்டர்ஸ், காலச்சுவடு என்று பதிப்பாளர்களைக் கொண்டு மேயலாம். எழுத்தாளர்களைக் கொண்டும் தேடலாம்.

    இணையத்தளத்தில் பதிவு செய்தவர்கள் புத்தகங்களைக் குறித்து இரண்டு வரி எழுத வசதி செய்யலாம். அமேஸான் போல் விஷ் லிஸ்ட் என்று இன்ன பிறவும் செய்யலாம். ஆனால், ஷிப்பிங் & ஹாண்ட்லிங்கை இன்னும் குறைக்க ஏதாவது வழி இருக்கிறதா!

  • Categories: Uncategorized

    What are you doing with your life?

    January 20, 2005 Leave a comment

    நன்றி : ulagatamil.com Ilakiyam Kavithai

    சந்தோஷமாக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது? — ஜே. ஜே. கிருஷ்ணமூர்த்தி
    தமிழில்: ஆனந்த் செல்லையா

    நீங்கள் சூரியன் மறைவதை, ஒரு அழகான மரத்தை, அகன்று, வளைந்துசெல்கிற நதியை, அழகான முகத்தைப் பார்க்கிறீர்கள். அவற்றையெல்லாம் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை உங்களுக்குத் தருகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது? அந்த முகம், அந்த நதி, அந்த மேகம், அந்த மலை ஒரு ஞாபகமாக மாறும்போது, மேலும் மேலும் சந்தோஷத்தின் தொடர்ச்சியைக் கேட்கும்போதுதான் அவை குழப்பமாக, துன்பமாக மாறுகின்றன. அத்தகைய விஷயங்கள் மீண்டும் நடக்க வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம்.

    எனக்கு ஒரு விஷயம் மகிழ்ச்சியைத் தந்தால், அது திரும்பவும் நிகழ்வதை மனம் விரும்புகிறது. அது பாலுணர்வு சார்ந்ததாகவோ, கலையுணர்வுடன் கூடியதாகவோ, அறிவு சார்ந்ததாகவோ, இவற்றில் எந்தக் குணமும் அற்ற வேறெதுவாகவோ இருக்கலாம். இங்குதான் மகிழ்ச்சி மனத்தை இருளடையச் செய்யத் தொடங்குகிறது.

    தன்னிறைவு அடைவதில், ஒரு குறிப்பிட்ட ஆளுமையாக இருப்பதில், ஒரு நூலாசிரியராகவோ ஓவியராகவோ பெரிய மனிதராகவோ அங்கீகரிக்கப்படுவதில் உள்ள சந்தோஷத்தை நாம் புரிந்துகொள்கிறோமா? ஆளுமையைச் செலுத்துவதிலும் நிறைய பணம் வைத்திருப்பதிலும் வறுமையை சவாலில் தோற்கடிப்பதிலும் இருக்கிற சந்தோஷத்தை நாம் புரிந்துவைத்திருக்கிறோமா? சந்தோஷத்தைப் பெற முடியாதபோதுதான் ஏமாற்றமும் கசப்புணர்வும் ஆரம்பமாகின்றன.

    இரண்டு வகையான வெற்றிடங்கள் இருக்கின்றன.

  • மனம் தன்னைத் தானே பார்த்து,”நான் வெறுமையுடன் இருக்கிறேன்” என்று சொல்லிக்கொள்வது ஒரு வகை.
  • இன்னொன்று உண்மையான வெற்றிடம்.

    நான் வெற்றிடத்தை நிரப்ப விரும்புகிறேன். ஏனெனில் வெற்றிடத்தை, அந்தத் தனிமையை, தனித்து விடப்படுவதை, எல்லாவற்றிலிருந்தும் நான் முழுமையாகத் துண்டிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நம்மில் ஒவ்வொருவரும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விதத்திலோ, தற்செயலாகவோ, மிக ஆழமாகவோ அந்த உணர்ச்சியைப் பெற்றிருந்திருக்க வேண்டும். அந்த உணர்ச்சி குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதன்மூலமாக ஒருவர் அதிலிருந்து திட்டவட்டமாகத் தப்பிக்கிறார். அறிவின்மூலமாக இன்னொருவர் அதை அடக்க முயல்கிறார். அல்லது உறவுகளின் மூலமாக, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையேயான உன்னதமான சேர்க்கையின் மூலமாக, மீதமிருக்கும் அனைத்தின் மூலமாக. உண்மையில் இதுதான் நடக்கிறது, இல்லையா? நான் எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஒருவர் தன்னைத் தானே கவனிக்கும்போது, தனக்குள்ளேயே கொஞ்ச தூரம் செல்லும்போது – மிகப் பெருமளவில் அல்ல, அது பின்னாட்களில்தான் நடக்கும் – இது உண்மை என்று தெரியவரும். தாங்கிக்கொள்ள முடியாத தனிமையுணர்வு, வெற்றிடம் இருப்பதாக மனம் உணர்வதால் ஏற்படும் வெறுமையுணர்வு இவை இருக்கும் இடத்தில்தான் அதை அடக்க வேண்டும் என்ற மிகப் பெரும் உந்துதல் இருக்கிறது.

    அதனால், சுயநினைவுடன் அல்லது தன்னுணர்வற்ற நிலையில் ஒருவர் இந்த நிலையைப் பற்றிய விழிப்புடன் இருக்கிறார். நான் வெற்றிடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் அது ஒரு அழகான வார்த்தை. ஒரு கோப்பையைப் போல, ஒரு அறையைப் போல வெற்றிடமாக இருக்கும்போது உபயோகமானதாக இருக்கும் ஒரு பொருள். ஆனால் கோப்பை நிரம்பியிருந்தால், அறை மரச் சாமான்களால் குழுமியிருந்தால் அது பயனற்றதாகிவிடுகின்றது. வெறுமையுடன் இருக்கும்போது எல்லா வகையான சப்தங்களாலும் சந்தோஷத்தாலும் தப்பித்தலின் ஒவ்வொரு வடிவத்தாலும் நம்மை நாமே நிரப்பிக்கொள்கிறோம்.

    சில முந்தைய பகுதிகள்:
    மூளைக்கும் அறிவுக்குமான வித்தியாசம்
    வார்த்தைகளின் வலையில் சிக்காத மனம்
    நம்மை முடமாக்கும் தீர்மானங்கள்
    நிர்ணயிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளும் பழக்கம்
    உண்மையைக் கவனியுங்கள்

    வெளிவந்த வலையிதழ்: உலகத்தமிழ்.காம்

  • Categories: Uncategorized