Archive

Archive for March 10, 2005

தோல்விகள் – ஆண் – செல்வி

March 10, 2005 Leave a comment

நன்றி: குமுதம்.காம்

கமல் — இரா. ரவிஷங்கர்

தமிழ் சினிமாவில் சில பரீட்சார்த்தமான முயற்சிகளை அவ்வப்போது மேற்கொள்கிறீர்கள். அந்த முயற்சிகள் மக்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாத சூழ்நிலையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

‘‘எதனால் எனக்கு சோகம் வரப்போகிறது? ‘என் கடமை’ முடிந்து எம்.ஜி.ஆருக்கு வராத சோகம், ‘உத்தமப் புத்திரன்’ முடிந்து சிவாஜி சாருக்கு வராத சோகம், ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’, ‘தாழம்பூ’ முடிந்து எம்.ஜி.ஆருக்கு வராத சோகம் எனக்கு ஏன் வரப்போகிறது. கமல்ஹாசனுக்கு ஏன் வரவேண்டும்?

‘பாசம்’ ஒரு நல்ல படம். காட்சிகள் _ கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். எம்.ஜி.ஆர் இறந்து போகிற மாதிரியாகக் காட்டியதால் படம் ஓடவில்லை என்றார்கள். படம் ஓடாததற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். ஒரேயரு காரணத்தினால் எந்தப் படமும் ஓடாமல் போகாது.

அபார்ஷன் ஆனால் தாய்க்கு வருத்தம் இருக்காதா? பிறந்த குழந்தை இறந்து போனால் தாய்க்கு வருத்தம் இருக்காதா? அந்த வருத்தம் கலைஞனுக்கும் இருக்கலாம். அதுக்காக அந்த தாயை மலடாக விட முடியுமா? அடுத்து ஒரு காதல் வரும். அடுத்து ஒரு இரவு வரும். அடுத்து ஒரு கனிவு வரும். கணவருடன் இருக்கும் போது கரு வளரும். மறுபடியும் குழந்தை பிறக்கும்.

எங்கம்மாவை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். ஆனால் நான்குதான் தேறின. இரண்டாவது குழந்தை இறந்துபோனது. அவர்கள் அதோடு நிறுத்தவில்லை. கமல்ஹாசன் வரை பார்த்துவிட்டுத்தான் போனார்கள்.”

உங்களுடைய படங்களில் எவ்வளவு சீரியஸான கதையாக இருந்தாலும் சரி, காமெடியான கதையாக இருந்தாலும் கிளர்ச்சியூட்டக் கூடிய காட்சிகள் அதிகம் இடம்பெறுகிறதே? என்ன காரணம்?

‘‘நான் யாரைச் சொல்வேன். வாத்ஸ்யாயனரைச் சொல்வேனா. தி. ஜானகிராமனைச் சொல்வேனா. இந்திரா பார்த்தசாரதியை, சுஜாதாவை, ஜெயகாந்தனை, புஷ்பா தங்கதுரை இவர்களைச் சொல்வேனா சிவாஜியே ‘புதிய பறவையில்’ எச்சப்படுத்திவிட்டு வாயைத் துடைத்து கொள்வாரே அவரைச் சொல்வேனா. இல்லை, எம்.ஜி.ஆரைச் சொல்வேனா, ஜெமினி மாமாவைச் சொல்வேனா. நான் என்ன பண்ணுவேன் என்று நீங்களே சொல்லுங்கள்.

இதுபோக ஆங்கிலப் படங்கள் வேறு பார்க்கிறேன். மலையாளப் படத்தில் இருந்து டிரெய்ன் ஆகி வந்தவன் நான். அந்த யதார்த்தமும், நேர்மையும் இருக்கத்தான் செய்யும். அதில் இடக்கரடக்கல் சொல்வதில் அர்த்தமில்லை. இப்போது நான் சொல்வதே அடக்கி வாசிப்பதுதான்.”

சொந்த வாழ்க்கை குறித்து…

வீடு நன்றாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுப் போகலாம். உள்ளே கொஞ்சம் தெரிந்தால், கூடத்தில் நான் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தால், சரி கொஞ்சம் சந்தோஷமான வீடு என்று தெரிந்து கொள்ளலாம். பூ, கால் தெரிந்தால் அன்று மட்டும் எல்லோரையும் வீட்டிற்குள்ளே விடுவார்கள். யாரும் தடை சொல்ல மாட்டார்கள். காரணம் ஒரு பிணம் கிடக்கும். அந்த நிலைமை இன்னும் வரவில்லை. அதனால வாசலோடு வந்து போய்விடலாம்.”


கே. பாக்யராஜ் : திரைக்கதையில வித்தியாசமாகக் காட்டலாம் என்பதற்கு ஒரு சீன். ஒரு வீட்டுல நாலஞ்சு குழந்தைங்க. வீட்டுல இருக்கிற ஒரு பொருளையும் விடாம போட்டு உடைச்சு விளையாடிக்கிட்டு இருப்பாங்க. வீட்டுக்குள்ளே வர்ற பாண்டியராஜன், ‘டேய் பசங்களா பார்த்துப்பா _ கை, கால்ல அடிபட்டுடாம’ன்னு சொல்வார். குழந்தைங்க பண்ற சேட்டைகளை கண்டிக்காம, அவங்களுக்கு ஒண்ணும் ஆகிட கூடாதுங்கிறதுலதான் அவர் கவனம் இருக்கும். ‘என்னடா மனுஷன் இப்படி இருக்கானே’ன்னு நாம நினைக்கும் போதுதான், ஒரு அம்மா வந்து, ‘ராஜாவை அவங்கப்பா கூப்பிடுறாரு’ன்னு சொல்வாங்க. இதே மாதிரி ஒவ்வொரு குழந்தைகளையும், அக்கம் பக்கத்து வீட்டுல உள்ளவங்க கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க. கடைசியில புருஷன், பெண்டாட்டி மட்டும் இருப்பாங்க. நமக்குன்னு குழந்தை இல்லையேன்னு மனைவி கண் கலங்குவாள். உடனே புருஷன், ‘உனக்கு நான் குழந்தை. எனக்கு நீ குழந்தை’ன்னு சொல்லி ஆறுதல் படுத்துவான்.

இதை கதையில… அந்த தம்பதிக்கு திருமணமாகி அஞ்சு வருஷமா குழந்தை இல்லைன்னு மூணு வரியில சிம்பிளாக எழுதிடுவாங்க. ஆனால் சினிமாவுல காட்டும்போது, சுவாரஸ்யமாக, உருக்கமாக சொல்ற மாதிரி சீன் வைக்கணும். இதுதான் திரைக்கதை.

‘மௌன கீதம்’ படத்துல எல்லோரும் எதிர்பார்க்கிற, நினைச்ச விஷயத்தைதான் காட்சியாக வச்சிருந்தேன். சரிதாவின் குழந்தையை ஒருத்தன் கடத்தி வச்சிருக்கிறதா போன் பண்ணுவான். ‘இந்த ஹோட்டலுக்கு நீ மட்டும் தனியாக வரணும்’னு சரிதாகிட்ட சொல்வான். சரிதாவும் அந்த இடத்துக்குத் தனியாகப் போவாங்க. இதைப் பார்க்கும் போதே, அந்தப் பொண்ணு தனியாக போறா… அவன் அவளை கற்பழிச்சிடுவான்னு நினைப்பாங்க. அதுக்கேத்த மாதிரி, சரிதா ஹோட்டல் ரூமுக்குள்ளே நுழைஞ்சதுமே கதவைப் பூட்டிடுவான். அவன் நம்மை கெடுக்கப் போறான்னு நினைச்சுக்கிட்டு, அந்தப் பொண்ணு ஒரு பாட்டிலை உடைச்சு பிடிச்சுக்குவாள். ‘நீ நெருங்கினால் என்னை நானே குத்திக்குவேன், இல்ல உன்னை குத்திடுவேன்’னு சொல்வாள். பல படங்களைப் பார்த்த பழக்கதோஷத்துல அடடா அடுத்து கற்பழிப்புதான் நடக்கப் போகுதுன்னு நமக்கு நினைக்கத் தோணும். இதே மூடுக்கு இந்தக் காட்சியைக் கொண்டுபோயிட்டு சின்னதா ட்விஸ்ட் வச்சிருப்பேன்.

அந்தப் பொண்ணு கையில பாட்டிலோடு மிரட்டும்போது, அவன் எதையும் கண்டுக்காம சிரிச்சபடியே தலையைக் கலைச்சு விட்டுக்குவான். இன் பண்ணின சட்டையை வெளியே எடுத்துவிடுவான். சட்டை பட்டன்களை கழற்றி விட்டுடுவான். அதைப் பார்க்கும்போது, ஒரு கற்பழிப்பு நடந்தால் எப்படி ஒரு சூழ்நிலை இருக்குமோ அதைக் கொண்டு வந்துடுவான். உடனே கூலாக, ‘நீ வந்து ரெண்டு நிமிஷத்துக்கும் மேலே ஆயிடுச்சு. ‘இந்தக் கோலத்துல நான் வெளியே போனாலே போதும். கற்பழிப்புதான் நடந்திருக்கும்னு யூகிச்சுப்பாங்க. அதனால நான் உன்னை ஒண்ணுமே பண்ணப் போறது இல்ல’ன்னு வெளியே போயிடுவான். இதுதான் இந்தக் காட்சியில புதுசு.


ஸ்னேஹா: ‘‘எம்.ஜி.ஆர். சார் மாதிரி ஆகணும்னு ஆசை. இன்னும் சொல்லணும்னா நான் ‘பொம்பளை எம்.ஜி.ஆர். ஆக ஆசைப்படறேன். பொதுவாக ஜெயலலிதா மேடம் மாதிரியாகணும் என்ற ஆசையும் இருக்கு. அரசியல் திறமையை மட்டும் சொல்லலை. நிலையான மனநிலை, தெளிவான நடவடிக்கைன்னு கஷ்டமான சூழ்நிலைகளிலும் மிகத் தைரியமாக செயல்படுறாங்க. எவ்வளவு பிரச்னைகளை எதிர் கொண்டாலும் ரொம்ப நார்மலா இருக்காங்களே இது எப்படின்னு ஆச்சர்யப்படுவேன்.”

Categories: Uncategorized