Archive

Archive for March 16, 2005

அமெரிக்காவில் நாடகம்

March 16, 2005 3 comments

ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் – காத்தாடி ராமமூர்த்தியின் ஆனந்தம் பரமானந்தம்
ஏப்ரல் 23 – நியு ஜெர்ஸி

ஏப்ரல் 9 – நியு யார்க்

Categories: Uncategorized

கொஞ்சம் இளைப்பாறல்

March 16, 2005 2 comments

கொஞ்சம் இந்தியப் பயணம், கொஞ்சம் சொந்த வேலை என்றிருக்கப் போவதால் பத்து பதினைந்து நாள்களுக்கு (நாட்களா? நாள்களா?) வலைப்பதிவுக்கு ஓய்வு. ஆங்கிலத்தில் குறிப்பெடுப்பதை வழக்கம் போல் தொடர்வேன். நன்றி.
-பாலாஜி

Categories: Uncategorized

எறும்பும் வெட்டுக்கிளியும்

March 16, 2005 1 comment

பாட்டி சொன்ன அந்தக் கால செவிவழிக் கதை

ஒரு ஊரில் ஒரு எறும்புக் கூட்டம் இருந்தது. வெயில் காலம் முழுக்க மாடாய் உழைத்து, எறும்பாய் சேகரித்து வந்தது. பாதுகாப்பான வீட்டைக் கட்டிக் கொண்டது. அதில், மழைக் காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை கண் துஞ்சாமல் எடுத்து வைத்துக் கொண்டது. கோடையின் கொடுமையைப் பொருட்படுத்தாமல் வேலை செய்தது.

வெட்டுக் கிளியோ கோடையை அருமையாக அனுபவித்து வந்தது. கடற்கரைக்கு சென்று வட்டமடித்தது. ஆடிப் பாடி, மலர் நுகர்ந்து, தேன் மயக்கத்தில் ஆழ்ந்தது. எறும்புகளின் முட்டாள்தனத்தை எள்ளி நகையாடியது.

கோடை முடிந்து தென்மேற்குப் பருவ மழை ஆரம்பித்தது. தான் கட்டிய வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்த எறும்புகள், சிறுகச் சிறுக சேமித்த உணவு மலையைப் பகிர்ந்து மகிழ்ந்தது. தங்குவதற்கு இடமும் இல்லாமல் மழையில் நனைந்து, அமுதும் இன்றி தவித்த வெட்டுக்கிளியோ குளிரில் நடுங்கி இறந்து போனது.

காலத்திற்கு ஏற்ற நவீன மின்மடல் கதை

ஒரு ஊரில் ஒரு எறும்புக் கூட்டம் இருந்தது. வெயில் காலம் முழுக்க மாடாய் உழைத்து, எறும்பாய் சேகரித்து வந்தது. பாதுகாப்பான வீட்டைக் கட்டிக் கொண்டது. அதில், மழைக் காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை கண் துஞ்சாமல் எடுத்து வைத்துக் கொண்டது. கோடையின் கொடுமையைப் பொருட்படுத்தாமல் வேலை செய்தது.

வெட்டுக் கிளியோ கோடையை அருமையாக அனுபவித்து வந்தது. கடற்கரைக்கு சென்று வட்டமடித்தது. ஆடிப் பாடி, மலர் நுகர்ந்து, தேன் மயக்கத்தில் ஆழ்ந்தது. எறும்புகளின் முட்டாள்தனத்தை எள்ளி நகையாடியது.

கோடை முடிந்து தென்மேற்குப் பருவ மழை ஆரம்பித்தது.

குளிரில் நடுங்கிய வெட்டுக்கிளிகள் ப்ரெஸ் மீட்டுக்கு அழைப்பு விடுத்தது. உல்லாசபுரியில் எறும்புகள் இருப்பதை எடுத்துரைத்துத் தங்களின் போராட்டத்தைத் துவக்கி வைத்தது. எறும்புகளுக்கு எல்லாம் உறைவிடம் இருப்பதும், வெட்டுக்கிளிகள் மட்டும் பனியில் பட்டினி கிடப்பதும் ஏன் என்று குரலெழுப்பியது.

சன் டிவியில் ஆளுங்கட்சியின் அட்டகாசங்கள் என்று சனி மற்றும் ஞாயிறன்று ‘சிறப்பு பார்வை’ காண்பித்தார்கள். ஜெயா தொலைக்காட்சியில் முந்தைய ஆட்சியின்போதுதான் எறும்புகள் வீடுகளைக் கட்டிக் கொண்டதாகவும், குற்றஞ்சாட்டப்படும் கோடை காலத்தில் தாங்கள் ஆளவில்லை என்றும் மறுதலிக்கிறார்கள்.

சி.என்.என்., என்.டி.டிவி., ஜீ டிவி முதலான மற்றும் பலர் வெட்டுக்கிளி ஒவ்வொன்றையும் நடைபாதைகளிலும், சலையோரங்களிலும், அனாதரவாகத் தவிப்பதை உருக்கமாக செய்தித் தொகுப்பாக்குகிறார்கள். எறும்புப் புற்றுக்குள் ரகசியமாக செல்லும் பிபிசி நிருபர், விருந்து போன்ற கூட்டாஞ்சோறுகளையும், உணவுக் கிடங்குகளையும் பதிவு செய்து உலகமெங்கும் காட்டுகிறார்.

அமெரிக்கா அதிர்ச்சியடைகிறது. ஐரோப்பிய ஒன்றியம் கண்டன அறிக்கை நிறைவேற்றுகிறது. உலக மக்கள் அனைவரும் வெட்டுக்கிளியை நினைத்து பரிதாபம் கொள்ளுகிறார்கள். எறும்புகளின் அருவருக்கத்தக்க நடத்தை பலத்த விமர்சனத்துக்குள்ளாகிறது.

அருந்ததி ராய் தலைமையில் எறும்புகளுக்கு எதிராக போராட்டம் துவங்குகிறது.

ஆம்நெஸ்டி இண்டெர்நேஷனல் போன்ற அமைப்புகள், இந்திய அரசை வெட்டுக்கிளிகளுக்கு அடிப்படை உரிமைகளாவது உடனடியாக வழங்குமாறு, கடுமையாக அறிவுறுத்துகிறது.

கோ·பி அன்னானும் கொண்டலீஸா ரைஸ¤ம் வெட்டுக்கிளிகளின் நிலைமையை நேரடியாகக் காண இந்தியாவுக்கும், இந்தியாவுக்கு விஜயம் செய்ததால் முஷார·பையும் பார்த்துவிட்டுப் போக பாகிஸ்தானுக்கும் வருகை புரிகிறார்கள்.

தன்னுடைய ஏழாவது வயதில் சிகப்பு எறும்பு கடித்த கதை, பதினோராவது வயதில் பிள்ளையார் எறும்பு குறுகுறுத்த கதை, பாம்புப் புற்றை எறும்புகள் ஆக்ரமித்துக் கொண்ட கதை, கணினிக்குள் எறும்பு சென்று கிருமி நாசினி சொவ்வறை கூட சுத்தம் செய்ய முடியாத கதை, எ பக்ஸ் லை·ப், ஆன்ட்ஸ் போன்ற படங்களின் விமர்சனங்கள், காபியில் எறும்பு கலந்து குடிக்கும் கதை, எறும்பு சாப்பிடுவதால் கண்ணாடி இல்லாமல் கண் தெரிந்த கதை, எறும்புகளுக்காக கோலம் போட்டு எதிர் வீட்டு எத்திராஜை கரெக்ட் செய்த கதை என்று இணையமே கொள்ளி எறும்பாக எங்கும் எறும்பு மகாத்மியங்கள். எறும்புகளுக்கு எதிராக முன்னூற்றி சொச்சம் பெட்டிஷன்கள் போடப் படுகிறது. வெட்டுக்கிளிகளுக்கு ஆதரவாக முன்னூற்றி சொச்சம் பெட்டிஷன்களில் பெயர் கொடுக்குமாறு தினசரி இரண்டாயிரத்து சொச்சம் மின்மடல்கள் வருகிறது.

சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்கின்றார்கள்.

எறும்புகள் காதில் குறுகுறுப்பதால் இரவு தூங்க முடிவதில்லை என்று நைட் ஷிப்ட் தொழிலாளிகளும், லாரிகளில் நுழைந்து விடுவதால் எடை அதிகரித்து விடுவதாக கனரக ஓட்டுனர்களும், பதுக்கல் சர்க்கரையில் மேய்வதாக கடை முதலாளிகளும் வருத்தம் தெரிவித்து ‘பாரத் பந்த்’ அறிவிக்கிறார்கள். கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் முழு கடையடைப்பு வெற்றி பெறுகிறது.

அவசர சட்டமாக இ. பொடா(கா.) – Immediate Prevention of Terrorism Against Grasshoppers Act [POTAGA] நிறைவேற்றப் படுகிறது. தற்போது சேமிப்பில் உள்ள பொருட்களுக்கு வரி, குடியிருப்பில் பங்கு என்று பல புதிய திட்டங்களின் மூலம் வெட்டுக்கிளிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப் படுகிறது.

பதின்மூன்று ஆண்டுகளுக்கான வரிகளை செலுத்த இயலாத எறும்புகளின் வசிப்பிடங்கள் கைபற்றப்பட்டு வெட்டுக்கிளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சமபங்காகப் பிரிக்கப் படுகிறது. ஒரு வெட்டுக்கிளி எறும்களின் கிடங்கில் இருந்து உணவையெடுத்து முதன் முதலாக உண்பதை நேரடி ஒளிபரப்பாக அகில உலகமும் கைதட்டுகிறது.

சன் டிவி மத்திய அமைச்சர்களின் வாதத் திறமையாலும், முயற்சியால் மட்டுமே வெட்டுக்கிளிகளுக்கு நீதி கிடைத்ததாக செய்தி வாசிக்கிறது. மாநில ஆட்சியில் ‘சமத்துவபுர’த்தை நிறுத்தியதன் மூலம் வெட்டுக்கிளிகளும் எறும்புகளும் நேர்ந்து வாழ வழி செய்யாததை சுட்டியும் காட்டுகிறது. ஜெயா டிவியில் மாநிலத் தலைமை அதிரடியாக எறும்பு வசிப்பிடங்களைக் கையகப் படுத்தியதையும், இ. பொடா(கா.)-வை தேனீக்கள் போன்ற பிறருக்கும் உபயோகிக்கும் நேரடி பங்களிப்பையும் முன்னிறுத்துகிறது.

போன தடவை இந்தியாவுக்கு முதலில் வந்ததால், இந்த முறை பாகிஸ்தான் மண்ணை மிதித்து விட்டு, ‘வெட்டுக்கிளி விழா’வில் பங்கெடுக்க வரும் கோ·பி அன்னான், வெட்டுக்கிளியை ஐ.நா. சபையில் பேச அழைப்பு விடுக்கிறார்.

– பாஸ்டன் பாலாஜி

தமிழோவியம்.காம்

Categories: Uncategorized

ரஜினி பத்து

March 16, 2005 Leave a comment

1. ‘சந்திரமுகி’ மோசமாக இருந்தாலும், படுமோசமாக இருந்தாலும், ஞானி முதற்கொண்டு டீக்கடை வரை நொள்ளை எழுதலாம். சொன்னவை, சொல்லாதவை, காட்டியவை, காட்டாதவை, மறந்தவை, மறக்காதவை, வெளிப்படுத்தியவை, வெளிப்படுத்தாதவை என்று படுத்தி படத்தையும் படுக்க வைக்கலாம்.

2. ரஜினியை சிலாகித்து வளர்ந்தவர்கள் நடு வயதை எட்டிப் பிடித்து வேலைக்குப் பின் ஓடிக் கொண்டிருப்பதால், தியேட்டர்களில் படச்சுருள் திருடா விட்டாலும், கோடை கால காற்று மட்டுமே அலைமோதலாம். என்னைப் போன்றவர்கள் ‘நல்லவனுக்கு நல்லவன்’ போன்ற அக்மார்க் சூப்பர் ஸ்டார் படங்களையும், தமிழகம் வாழ் மக்கள் ‘சந்திரமுகி’யையும் விசிடியில் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழலாம்.

3. ரசிகர் மன்றத்தினர்… தவறு…. நற்பணி மன்றத்தினர், ரஜினிக்கு பதிலாக ‘மாப்பிள்ளை’யின் கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் நடக்கலாம்.

4. ரஜினியிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்றே அறியாத அவர்களின் ரசிகர்கள் தெரியாத்தனமாக சந்திரமுகியை ஹிட்டாக்கி விடலாம். ‘பாபா’வாக ஆக்கினாலும் அமிதாப் போல் வயதுக்கு ஏற்ற வேஷங்களையோ, சூர்யா/மாதவன்/விஜய் போன்ற முண்ணனி நடிகர்களுடனோ, ‘தம்பிக்கு எந்த ஊரு’ போன்ற சாதாரண நடப்புகளை சித்தரிப்பதையோ தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

5. கமலை விட அதிகமாக இயக்குநரின் நல்ல பெயரை (பி வாசுவுக்கு அப்படி எல்லாம் ஒன்று இருக்கிறதா என்ன?) பலி கொடுத்து, கெடுப்பவர் என்னும் அடைமொழி கிடைக்கலாம். பாலா, ஷங்கர் போன்றோரையாவது இறைவர் காத்தருள வேண்டலாம்.

6. வலை நிறுவனங்களின் ஐ.பி.ஓ.வில் அதிரடியாக விலை அதிகரிக்கப்படுவது நான்காண்டுகளுக்குப் முன் சுரத்திழந்து போனது. ரஜினி படங்களுக்கு பதினைந்து டாலர் நுழைவுச்சீட்டு வைப்பதும் ப்ளாக்கில் ஐநூறு ரூபாய் கேட்பதும் இயலாததாகலாம்.

7. ஹியுலெட் பக்கர்ட் (HP) நிறுவனத்தில் சமீபத்தில் காவு கொடுக்கப்பட்ட தலைவர் கார்லி (Carly Fiorina) போல படம் தோல்வியடைந்தாலும் பல கோடி ரூபாய் பணம் வரவாகலாம். எல்லா குறைகளுக்கும் ·பியோரினாவை மட்டுமே குற்றங்காட்டியது போல் சந்திரமுகியின் வீழ்ச்சிக்கு ரஜினி மட்டுமே காரணமாக்கப் படலாம்.

8. ரஜினி சட்டையை அவிழ்த்து திரளாத புஜங்களை முறுக்கலாம். அப்பாஸ் மாதிரி சந்திரமுகியில் பிரபு ‘வாட் எ பாடீ’ என்று ஆங்கிலம் பேசுவதை அரசியல்வாதர்கள் எதிர்க்கலாம்.

9. திருட்டு தட்டுக்கள், அதீத எதிர்பார்ப்புகள், விகடன் விமர்சனங்கள், கதாபாத்திர பொருத்தங்கள், இது போன்ற பத்து அஸ்துக்கள் எல்லாவற்றையும் மீறி அறியாமையாக ‘படையப்பா’வாக்கி விடலாம். ஷாலினி – அஜீத்தின் மகளை ஹீரோயினாக அடுத்த படத்துக்கு புக் செய்யலாம்.

10. அயிங்காரன் வெளியீட்டையோ வெள்ளித் திரையிலோ பார்த்தவர்கள் மட்டுமே பாய்ந்து மிதிக்கலாம். காமிரா ப்ரிண்ட் களித்தவர்கள் முகமூடி தாங்கி விமர்சிக்கலாம்.

– பாஸ்டன் பாலாஜி
tamiloviam.com

Categories: Uncategorized