Archive

Archive for April, 2005

பிரார்த்தனை

April 29, 2005 1 comment

தமிழோவியம் ஆசிரியர் மீனாக்ஷிக்கு நிம்மோனியா வந்துள்ளது. முழுமையாக குணமடைய இரண்டு வாரங்களாவது எடுக்கும் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் நலமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

Categories: Uncategorized

திரைப்படத்தில் திருமா

April 29, 2005 Leave a comment

செய்தி: Thirumavalavan goes from censoring Movies to Acting in them

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார். ‘அடங்க மறு’ போன்ற அரசியல் கட்டுரைகள் தொகுப்பின் மூலம் எழுத்தாளராகவும் அறியப்பட்டவர் திருமா.

மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘அன்புத் தோழி’ படத்தில் நடிப்பதற்கு அணுகியுள்ளார்கள். ஏற்கனவே பி.ஜே.பி.யின் எம்.பி. திருநாவுக்கரசர், திமுக-வின் ஸ்டாலின், பா.ம.க.வின் ராமதாஸ் போன்றோர் வெள்ளித்திரையில் தலையை காட்டி இருக்கிறார்கள்.

திருமா ஈழப் போராட்டத்தை முனைப்புடன் கவனித்து ஈடுபட்டும் வருகிறார். இலங்கையில் நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட கதைக்கு திருமாவின் ஒப்புதலும் கிட்டிவிட்டது.

கிருபா சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக பரணியும் (?) நாயகியாக சௌம்யாவும் நடிக்கிறார்கள்.

நன்றி: teakada

திருமா குறித்த முந்தைய பதிவு | நையாண்டி — திட்டாந்தப்பேச்சு

Categories: Uncategorized

சுகுமாரனின் திசைகளும் தடங்களும்

April 29, 2005 Leave a comment

Thinnai:

பாவண்ணன் – வெளிச்சம் தரும் விளக்குகள்

கட்டுரைகளின் அமைப்பையொட்டி இத்தொகுதி ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான கட்டுரைகள் இலக்கியம், சமூகநடப்பு, திரைப்படம் சார்ந்தவை. இவற்றைப்பற்றி முன்னுரையில் குறிப்பிடும்போது சுகுமாரன் பல கட்டுரைகள் பத்திரிகைகளின் தேவையையொட்டி எழுதப்பட்டதாகச் சொன்னாலும் தேவைக்கு எழுதிக்கொடுப்பதைக்கூட தன் மனம் ஈடுபட்ட துறைசார்ந்து மட்டுமே எழுதியிருப்பதை முக்கியமான அம்சமாகக் குறிப்பிடவேண்டும்.

முதல் பகுதியில் எட்டு கவிதைத்தொகுதிகளுக்கும் கதைநூல்களுக்கும் சுகுமாரன் எழுதிய முன்னுரைகளும் அறிமுகக்கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. “சொற்களில் பொருள்படும் சொல்லைக் கடந்த இயக்கமே” சுகுமாரனுக்குக் கவிதையாகப்படுகிறது. காசியபனின் “ராதை“, “கலங்கரை விளக்கு” ஆகிய கவிதைகளையும் கலாப்ரியாவின் “எம்பாவாய்” கவிதையையும் முன்வைத்து அவர் பகிர்ந்துகொள்ளும் வரிகள் அவருடைய பார்வையைத் தெளிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளன.

விடுப்பு நாளில் தாத்தா வீட்டுக்குச் சென்று திரும்பிய பேரனின் குறிப்பைப்போன்ற நெகிழ்ச்சியோடும் நெருக்கத்தோடும் எழுதப்பட்டுள்ள கட்டுரை “எது பஷீர்?”. மூன்றரைப்பக்கம் மட்டுமே இடம்பெறக்கூடிய அக்கட்டுரை எழுப்பும் உணர்வலைகள் மறக்க இயலாதவை. அச்சந்திப்பு நிகழ்ந்த தருணம் கேரள இலக்கிய உலகில் அவரைப்பற்றிய மாற்றுக்கருத்துகள் பொய்ப்படலமாகப் படர்ந்திருந்த காலம் என்று சுகுமாரன் குறிப்பிடுகிறார். அவருடைய சொந்த வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களின் பதிவாக எழுதிய மகத்தான “மதிலுகள்” நாவலை சற்றும் நாக்கூசாமல் ஆர்தர் கோஸ்லர் எழுதிய “நடுப்பகலின் இருட்டு” நாவலின் திருட்டு என்றும் அவரை ஒரு முஸ்லிம் மதவாதி என்றும் அவதூறுகள் நிரம்பியிருந்த காலம்.

தம்மீது கொட்டப்பட்ட பொய்க்கருத்துகளை ஒட்டி எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் பஷீர் மௌனம் காத்தார். வேதனை நிரம்பிய மௌனம் அது. அம்மௌனத்தைச் சுட்டிக்காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு “சொல்லிவிட்டுப் போகட்டுமே, மனிதர்கள் என்றால் நாலு நல்லதும் சொல்வார்கள் கெட்டதும் சொல்வார்கள். நாம் நல்லதைமட்டுமே எடுத்துக்கொண்டால் போகிறது” என்று பதிலுரைக்கிறார்.

ஆளுமை மிகுந்த மற்றொரு எழுத்தாளரான தகழியும் இன்னொரு தருணத்தில் தன்னை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்விக்கு “ஒரு விவசாயி தான் விதைக்கிற எல்லா நெல்லும் முளைக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுவான்” என்று சொன்னதையும் இந்தக் கருத்தோடு இணைத்துப் பார்க்கலாம். இத்தகு மௌனங்கள் படைப்பாளிகளின் மேன்மையை ஒருவிதத்தில் அதிகரிப்பதாகவே உள்ளது. தம் படைப்புகள்மீது படியும் அவதூறுகளுக்கு விடைசொல்லிக்கொண்டும் மாற்றுத் தரப்புகளை உருவாக்கிக்கொண்டும் இருப்பதல்ல ஒரு படைப்பாளியின் வேலை.

நோபெல் பரிசுபெற்ற வில்லியம் கோல்டிங் எழுதிய படைப்புகளை அறிமுகம் செய்யும் கட்டுரை, அவருடைய புதினங்களைத் தேடிப் படித்துவிடவேண்டும் என்னும் அளவுகடந்த ஆர்வத்தை வாசகர்களிடம் உருவாக்கும் என்பது திண்ணம். “ஈக்களின் அரசன்“, “வாரிசுகள்” ஆகிய புதினங்களைப்பற்றி சுகுமாரன் தந்திருக்கும் குறிப்பு அவர் தம் வாசிப்பின் வழியே கண்டடைந்த அனுபவமாகவே இருக்கவேண்டும்.

கோல்டிங் எழுதிய புதினங்களைப்பற்றிய கட்டுரையை அடுத்து இடம்பெற்றிருப்பது ஆனி பிராங்க் என்னும் யூதச்சிறுமி எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பு. உலகையே குலுக்கிய புத்தகம். இரண்டாவது உலகப்போரின் சமயத்தில் நாஜிகள் நிகழ்த்திய அடக்குமுறைகளைப்பற்றியும் அக்கிரமங்களையும் நேருக்குநேர் பார்த்த ஒரு சிறுமி எழுதி வைத்துவிட்டுப் போன குறிப்புகள். மனித மனங்களில் நிறைந்திருக்கும் இருட்பகுதியை அம்பலப்படுத்தும் கோல்டிங் பற்றிய கட்டுரைக்கு அடுத்ததாகவே இக்கட்டுரையும் இடம்பெற்றிருப்பது விசித்திரமான ஒற்றுமை.

வாழ்வின் வேட்கை” என்னும் நூலின் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் சுகுமாரன் வான்கோ என்னும் மகத்தான ஓவியக்கலைஞனின்வாழ்க்கையை மிகத் திறமையாக அறிமுகப்படுதத்தியுள்ளார்.

(திசைகளும் தடங்களும் – சுகுமாரன். அன்னம். விலை. ரூ90 )

Categories: Uncategorized

சூதுச்சரண்

April 29, 2005 Leave a comment

திண்ணை அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிய கதை இது. அறிவியல் பின்புலம் இருக்கிறதா, சிறுகதையா என்று யோசிக்கலாம் 🙂

திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் பரிசு பெற்ற கதைகள்

‘ஏலி ஏலி லாமா சபக்தானி’ (முதல் பரிசு) :: சேவியர்
வானத்திலிருந்து வந்தவன் (இரண்டாம் பரிசு) :: நளினி சாஸ்திரி
எதிர்காலம் என்று ஒன்று….! (இரண்டாம் பரிசு) :: ரெ.கார்த்திகேசு
பிம்ப உயிர்கள் (மூன்றாம் பரிசு) :: அருண் வைத்யநாதன்
மழலைச்சொல் கேளாதவர் (மூன்றாம் பரிசு) :: என். சொக்கன்

முதல் பரிசுபெற்ற கதை குறித்த கருத்து கடிதம் :: அருள்ராஜ் நவமணி

Categories: Uncategorized

நூல் அறிமுகம் : திராட்சைகளின் இதயம்

April 29, 2005 Leave a comment

tamiloviam.com

சாய் பாபாவின் பக்தனாக என் நண்பன் ஆனது விநோதமான கதை. நாகூர் ரூமியின் ‘திராட்சைகளின் இதய’த்தைப் போல.

அவன் கடவுளை விட பாபாவைப் பெரிதும் நம்புபவன். டென்னிஸ் பந்து போல் பெங்களூருக்கும் சென்னைக்கும் வாராவாரம் விழுந்து கொண்டிருந்தாலும், ஒயிட்·பீல்டையும் சுந்தரத்தையும் தவற விடாதவன். ஒவ்வொரு வியாழன். அன்றும் பஜன் ஞாயிறன்று வீட்டிலேயே பஜனை விளக்க கூட்டங்கள். (நல்ல அறுசுவை உண்டியுடன் என்பதால் நானும் அவ்வப்போது ஆஜர்.) அவரின் படத்தில் இருந்து விபூதி கொட்டுவது அனேக தினங்களில் நிகழும் மாயாஜாலம். கண்ணாடி ·ப்ரேமுக்குள் இருந்த பாபாவை இமைப்பதற்கு மட்டுமே கண்ணை மூடி நான் கண்காணித்தாலும், பூஜையின் முடிவில் சந்தனம் குங்குமம் பூசிக் கொண்டிருப்பார். அவனுடைய வாழ்விலும் பாபா நிறைய மாற்றங்களை நிகழ்த்தியதாக நண்பன் உறுதியாக நம்பினான். கண்ணுக்குத் தெரிந்த அதிசயங்களை விட, பாபாவினாலேயே, தனக்கு பணி மாற்றமும், சமூக உயர்வும் அடைய முடிந்ததாக விளக்கியிருக்கிறான்.

பாபாவினைத் தொழ ஆரம்பித்த பிறகு அவனிடம் பல மாற்றங்களை உணர முடிந்தது. பெங்களூரின் மதுக்கடைகளுக்கு எங்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தவன், தான் தன்னார்வலனாகத் தொண்டாற்றும் மருத்துவமனைக்கு ஒத்தாசைக்கு வருமாறுக் கூப்பிட ஆரம்பித்தான். மாலைகளை எவருடனும் செலவிடாமல், தனிமையில் கழித்தவனுக்கு, பொருத்தமான நட்பு வட்டம் கிடைத்திருந்தது. கிடைத்த வேலையில் காலந்தள்ளிக் கொண்டிருந்தவன், சுய முனைப்பினால் விருப்பமான துறைகளை எங்களுடன் கலந்தாலோசிக்க ஆரம்பித்தான். எதை எடுத்தாலும் ‘அது அப்படித்தான்’ என்ற விட்டேற்றித்தனம் ஓடிப்போய், தன்னம்பிக்கை தெரிந்தது. எங்களின் நான்காண்டு கல்லூரி வாசம் செய்ய முடியாததை, சாய் பாபா ஊட்டி விட்டிருந்தார்.

அவன் கொஞ்ச நாள் கழித்து அமெரிக்கா வந்தபிறகும் பாபாவை மறக்கவில்லை. ஆனால், முன்புபோல் கண்மூடித்தனமான நம்பிக்கை குறைந்திருக்கிறது. ஞாயிறுகளில் இன்றும் தன்னார்வ நிறுவனங்களின் தொண்டுகளுக்கு சென்று வருகிறான். அவ்வப்போது பஜன்களுக்கும் போகிறான். ஆனால், அவனின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ‘பாபா பார்த்துக்குவார்’ என்னும் மனோபாவம் காணவில்லை.

‘திராட்சைகளின் இதய’த்தைப் படிக்கும்போது என் நண்பனின் நினைவு வந்தது. அவனிடம் புரிந்து கொள்ள இயலாத பாபாவின் பக்தியை, கொஞ்சம் திரையைத் திறந்து, புரியவைக்க முயற்சிக்கிறார் ரூமி. இந்தியாவில் அவன் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையையும், காலப்போக்கில் மாற்றிக் கொண்ட பற்றையும், முசலியார் ஹஜ்ரத்தைக் கொண்டு விளக்கிச் செல்கிறார். இந்தப் புரிதல்களுக்கு, முஸ்லீம் சூழல்களும் இஸ்லாமிய தத்துவங்கள் சிலவும் கை கொடுக்கிறது.

கலகலவென்று மெஹ்ருன்னிஸாவின் அறிமுகம். கோபமான தமிழ்ப் பட ஹீரோ போன்ற ஜுனைத்தின் கோட்பாடுகள் என்று அமர்க்களமான ஆரம்பம். Archetype, comfort-zone, புத்தரின் ஆசை மறுப்பு போன்ற எண்ணங்களை நேரடியாகப் போட்டுடைக்கும் சொற்பொழிவுகள் என்று தொடரும்போதுதான் அயர்ச்சி முதன் முறையாக எட்டிப் பார்த்தது.

தொலைக்காட்சித் தொடர்களின் ஆளுமைகளுக்கு வீழ்வதைப் போல் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிப் போவதை ஆண்டவனின் லீலைகளுடன் அலசுகிறார். I, Robot திரைப்படத்தில் வரும் உகந்த கேள்விகளை உரிய தருணத்தில் கேட்கும் முக்கியத்துவத்தை எடுத்து வைக்கிறார். இறப்புக்குப் பின்னும் உயிர்ப்புடன் இருக்கும் வார்த்தைகள் போல் குருவின் சொற்பொழிவுகளைக் காட்டுகிறார். ஆனால், ‘காதலன்’ படத்தின் ‘பேட்டை ராப்’ பாடல் போலின் அர்த்தமற்ற அடுக்கு சொற்கள் போல நடு நடுவே நிகழ்த்தப்படும் அற்புதங்கள் தொய்வைக் கொடுக்கிறது. இந்த அதிசயங்கள், எனக்கு முசலியாரிடம் மதிப்பை விட ‘சரி… அப்புறம்??!’ என்னும் எதிர்பார்ப்பையே அதிகரித்து ஏமாற்றியது.

நடுத்தர வர்க்கத்தின் ‘நாளை’ குறித்த பயம் இன்னும் அழுத்தமாக அலசப்பட்டிருக்கலாம். அவர்கள் திருப்தியான வாழ்வை எதிர்நோக்குபவர்கள். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்தாக நினைப்பவர்கள். அடைய முடியாததை வெட்டென மறப்பவர்கள். சுய முன்னேற்ற நூல்களைக் கூட skeptic ஆக பார்ப்பர்வகள். இவை தடிமனானப் புத்தகத்தின் பொருளடக்கத்தை மட்டும் படிப்பது போல் எழுதப் பட்டிருக்கும் பகுதிகள்.

வாழ்வின் லட்சியங்கள், இளக்காரம் செய்வது, extroverts/introverts, போன்ற பல கனமான விஷயங்களை இலக்கிய புத்தகத்தில் பொம்மை பார்ப்பதையொத்து முசலியார் தொட்டு மட்டும் செல்கிறார். உண்மைகளின் பின்னால் பொதிந்திருக்கின்ற அந்த உண்மையான உணமையை அடையாளம் காட்டவில்லை. அவற்றை சுய விவாதமாக்க உள்ளத்தில் சிந்தனைகளையும் கிளப்பவில்லை.

இஸ்லாமிய சொற்களுக்கான விளக்கங்களை ஆங்காங்கே கொடுத்திருப்பதற்கு பதிலாக புத்தகத்தின் இறுதியில் மொத்தமாக தொகுத்திருக்கலாம். விட்டுப் போன சொற்களையும் சேர்த்திருக்க இந்த முறை வசதியாக இருக்கும்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கும்போது கேரளாவின் பூந்தானம் தவறாக சொல்வதை, பாகவதத்துக்குப் பொருள் எழுதிய நாராயண பட்டத்திரி திருத்துவார். குருவாயூரப்பனுக்கே இந்த பெரிய மனுஷத்தனம் பிடிக்காமல், அடுத்த நாள் நாராயண பட்டத்திரியின் கவிதைகளுக்கு ஒப்புதல் தராமல் நிராகரிப்பார். இறுதியில் பூந்தானத்திடமே சென்று விளக்கம் பெற்று, அலங்கார பக்தியை விட அடக்கமான பக்தியே மேல் என்று பட்டத்திரி புரிந்து கொள்வார். அதே போல் ஓதச் சொல்லும் இஸ்முகள் அரபி இலக்கணப்படி தவறாக இருந்தாலும், பக்தியோடு ஓதினால் பலன் கிடைக்கும் என்பதை ‘கை·பியத்’ என்று விளக்கும் இடங்கள் வெகு அருமை.

முதலமைச்சருக்கு வழங்கப்படும் பொக்கேயை அதீத மரியாதையுடன் வளைந்து வாங்கிச் செல்லும் ச·பாரி அதிகாரி போன்ற உவமைகள் வறட்சியான கோடை மழை போல் ஆங்காங்கே புன்னைகையோட விடுகிறது. Bipolar disorder மாதிரி உளவியல் ரீதியிலும் ஞானிகளையும் சூ·பிக்களையும் விளக்க முயற்சித்திருக்கலாம். இதற்கு அடிக்கல்லாக சில இடங்களைக் கோடிட்டாலும் ஆழங்களுக்கு இட்டுச் செல்லாமல் கடற்கரையிலேயேக் கையை விட்டு விடுகிறார்.

ஒடையாத பொருளைப் பத்தி ஒரு மணி நேரம் பேசணும். ஒடஞ்சி போன பொருளே ஒரு விநாடிலெ நீங்க மறக்கணும்.‘ என்று முசலியார் சொல்வார். ‘திராட்சைகளின் இதயம்’ என்னுடைய புரிந்துணர்வில் உடையப் பட்ட பொருள். ஆனால், இன்றளவில் என்னால் உடைந்தவைகளை சீக்கிரமே மறக்க முடிவதில்லை.

——————————————————————————–

நாவலில் இருந்து….

  • ‘தன்னுடைய வாழ்வையும் பிரச்னைகளையும் தொலைபேசி மூலம் இன்னொருவரிடம் ஒப்படைப்பவர்களை நினைத்து ரொம்ப எரிச்சலாக வந்தது.’
  • ‘கடற்கரை மண்ணில் உடல் படும்போது மெத்தையில் இல்லாத சுகம் கிடைக்கிறது. ஏன், ஊரில் இருந்த வேல்முருகன் டூரிங் டாக்கீஸில் சினிமா பார்க்கும்போது, தரை டிக்கெட்டில் மண்ணைக் குவித்து அதன் மீது உட்கார்ந்து கொள்ளும் போதும்தான் நாற்காலியில் உட்காரும்போது கிடைக்காத சுகம் கிடைக்கிறது. மண்ணின் மகிமை என்பது அதுதானோ?’
  • ‘தப்பு பண்றதைவிட தப்பு, அதுக்கு காரணம் சொல்றது.’
  • ‘இந்த மாதிரி உணவு வகைகளைக் கண்டுபிடித்தவர்களுக்கு நோபல் பரிசு மாதிரி ஏதாவது கொடுக்க வேண்டும்.’
  • ‘என்னப் பத்தி யாராவது உங்களுக்கு கோவம் வர்ற மாதிரி, வருத்தம் வர்ற மாதிரி பேசுனா, நீங்க கேட்டுகிட்டு மல்லாக்கொட்டை மாதிரி சும்மா இருக்கணும். அது மட்டுமல்ல, நீங்க செய்யுற வேலெய அந்த சொல் பாதிச்சுடாம பாத்துக்கணும்.’
  • குருக்கள் தமது விளையாட்டுக்களை (சோதனைகளை) சிஷ்யர்களோடு மட்டும் வைத்துக் கொள்வது நல்லது.
  • புத்தக விபரங்கள்:

    திராட்சைகளின் இதயம் – நாகூர் ரூமி
    கிழக்கு பதிப்பகம் – விலை ரூ. 75

    மேலும் விவரங்களுக்கு: kamadenu.com

    Categories: Uncategorized

    பாரதிதாசன் பிறந்தநாள்

    April 28, 2005 Leave a comment

    tamiziyakkam” by pAvEntar pAratitAcan ::

    மிகுகோவில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர், விழாவெ டுப்போர்,
    தகுமாறு மணம்புரிவோர், கல்விதரும் கணக்காயர், தம்மா ணாக்கர்,
    நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ? நல்வாழ் வுக்கோர்
    புகும்ஆறு புறக்கணித்தும் தமிழர்உயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே.

    வாணிகர்,தம் முகவரியை வரைகின்ற பலகையில்,ஆங் கிலமா வேண்டும்?
    ‘மாணுயர்ந்த செந்தமிழால் வரைக’ என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்!
    ஆணிவிற்போன் முதலாக அணிவிற்போன் ஈராக அனைவர் போக்கும்
    நாணமற்ற தல்லாமல் நந்தமிழின் நலம்காக்கும் செய்கையாமோ?

    உணவுதரு விடுதிதனைக் ‘கிளப்‘பெனவேண் டும்போலும்! உயர்ந்த பட்டுத்
    துணிக்கடைக்கு ‘சில்குஷாப்‘ எனும்பலகை தொங்குவதால் சிறப்புப் போலும்!
    மணக்கவ ரும் தென்றலிலே குளிராஇல்லை? தோப்பில் நிழலா இல்லை?
    தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தா னில்லை!

    திருடர்கள் ஜாக்கிரதைஇதைத் திருடருண்டு விழிப்போடி ருங்கள் என்றால்
    வருந்தீமை என்ன?நியா யஸ்தலத்தை அறமன்றம் எனில்வாய்க் காதோ?
    அருவருக்கும் நெஞ்சுடையார் அருவருக்கும் செயலுடையார் அன்றோ இந்தக்
    கருவறுக்கும் வினைசெய்வார். கலப்பாலில் துளிநஞ்சும் கலத்தல் வேண்டாம்.

    தமிழ்ப்புலவர் ஒன்றுபடும் நன்னாளே தமிழர்க்குப் பொன்னா ளாகும்!
    தமிழ்ப்பெருநூல் ஒன்றேனும் ஒற்றுமையைத் தடைசெய்யக் கண்ட துண்டோ?
    தமிழ்ப்புலவர் தமக்குள்ளே மாறுபட்ட தன்மையினால் இந்நாள் மட்டும்
    தமிழ்ப்பெருநா டடைந்துள்ள தீமையினைத் தமிழறிஞர் அறிகி லாரோ?

    ‘வாட்டடங்கண்’ ‘கற்றரை’யை வாள்த்தடங்கண் கல்த்தரைஎன் றெழுதி முன்னைப்
    பாட்டினிலே பெரும்பிழையைப் பல்குவிப்பா னுக்குமணிப் பண்டி தர்கள்
    சாட்டைகொடுத் தறிக்கைவிடத் தாள்ஒன்றும் அற்றதுவோ! தமக்குச் சோறு
    போட்டிடுவார் ஒப்புகிலார் எனுங்கருத்தோ மானமற்ற போக்குத் தானோ!

    ‘கூ’ எனவே வையத்தின் பேருரைத்துக் குயில் கூவும். ‘வாழ் வாழ்’ என்று
    நாவினிக்க நாய்வாழ்த்தும். நற்சேவல் ‘கோ’ என்று வேந்தன் பேரைப்
    பாவிசைத்தாற் போலிசைக்க, வரும்காற்றோ ‘ஆம்’ என்று பழிச்சும்! இங்கு
    யாவினுமே தமிழல்லால் இயற்கைதரும் மொழிவேறொன் றில்லை யன்றோ?

    வெளியினிலே சொல்வதெனில் உம்நிலைமை வெட்கக்கே டன்றோ? நீவிர்
    கிளிபோலச் சொல்வதன்றித் தமிழ்நூற்கள் ஆராய்ந்து கிழித்திட் டீரோ?
    புளிஎன்றால் புலிஎன்றே உச்சரிக்கும் புலியீரே புளுக வேண்டாம்
    துளியறிவும் தமிழ்மொழியில் உள்ளதுவோ பாடகர்க்குச் சொல்வீர் மெய்யாய்!

    மற்போர்க்கே அஞ்சிடுவோம் ஆயினும்யாம் வன்மைமிகு தமிழர் நாட்டில்
    சொற்போருக் கஞ்சுகிலோம் என்றாராம் ஒருமுதியார் அவர்க்குச் சொல்வேன்
    கற்போரின் பகுத்தறிவைக் கவிழ்க்கின்ற ஒழுக்கமிலாக் கதையைத் தாங்கி
    நிற்பாரும் நிற்பாரோ நின்றாலும் வீழாரோ நெடுங் காலின்றி?

    ஓவியத்தின் மதிப்புரையும் உயர்கவியின் மதிப்புரையும் இசையின் வல்லார்
    நாவிலுறு பாடல்களின் நயம்ப்ற்றி மதிப்புரையும் உரை நடைக்கு
    மேவுகின்ற மதிப்புரையும் கூத்தர்களின் மதிப்புரையும் விள்வார். நாங்கள்
    யாவும்அறிந் தோம்என்பார். பெரும்பாலோர் பிழையின்றி எழுதல் இல்லார்.

    தொண்டர்படை ஒன்றமைத்துத் தமிழ்எதிர்ப்போர் தொடர்ந்தெழுதும் ஏட்டை யெல்லாம்
    கண்டறிந்தபடி அவற்றை மக்களெலாம் மறுக்கும்வணம் கழற வேண்டும்.
    வண்டுதொடர் மலர்போலே மக்கள்தொடர் ஏடுபல தோன்றும் வண்ணம்
    மண்டுதொகை திரட்டி,அதை ஏடெழுத வல்லார்பால் நல்க வேண்டும்!

    நேர்மையின்றிப் பிறர்பொருளில் தம்பெயரால் கல்லூரி நிறுவிப் பெண்ணைச்
    சீர்கெடுத்தும் மறைவழியாய்ச் செல்வத்தை மிகவளைத்தும் குடி கெடுத்தும்
    பார்அறியத் தாம்அடைந்த பழியனைத்தும் மறைவதற்குப் பார்ப்பான் காலில்
    வேர்அறுந்த நெடுமரம்போல் வீழ்ந்தும்அவன் விட்டதுவே வழியாம் என்றும்

    Wikipedia: Bharathidasan

    Categories: Uncategorized

    ஆளுங்கட்சி ஆதங்கம்

    April 27, 2005 Leave a comment

    கழுகு: சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலை மையம் கொண்டு, உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் விவாதங்கள் ஆளுங்கட்சியினரை சோர்வடையச் செய்திருக்கிறது. ‘நம்ம கவுன்சிலர் ஒருவரின் காரையே தி.மு.க. எரித்திருக்கிறது. ஆளுங்கட்சியினர் இருபது பேர் தி.மு.க-வினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அண்ணாசாலை போன்ற மிக முக்கியமான போக்குவரத்துத் தடங்களில் எக்காரணம் கொண்டும் சாலை மறியல் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு! ஆனால், ஸ்டாலின் அங்கே சாலை மறியல் செய்தார். அவரால்தான் ஒட்டுமொத்த போக்குவரத்தும் தடைபட்டு மூச்சுத் திணறியது. ஆனால், இதையெல்லாம் அரசு வழக்கறிஞர்கள் சரிவர உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைக்கவில்லை’ என்பது ஆளுங்கட்சியினரின் ஆதங்கம்.

    தேர்தல்/மறியல் தகவல்கள்/பிண்ணணி

    Categories: Uncategorized

    இரவல் பிழைப்பு

    April 27, 2005 2 comments

    கல்கி: ஒரு நண்பர் என்னிடம் பலமாகச் சண்டை பிடித்தார். நான் புனை பெயர் வைத்துக்கொண்டு பத்திரிகைகளுக்கு எழுதுவது தான் அவருடைய கோபத்துக்குக் காரணம். ”ஏன் சொந்தப் பெயர் போட்டுக் கொண்டு எழுதக்கூடாது? சொந்தப் பெயரைச் சொல்லிக்கொள்ள வெட்கமாயிருக்கிறதா?

    “ஏன் இந்தக் கோழைத்தனம்?” என்று அவர் கேட்டார். உண்மை என்னவென்றால், அவருக்கு ஒரு பிரமை.

    என்னுடைய கதைகள், கட்டுரைகள் முதலியவற்றினால் எனக்கு வரவேண்டிய கீர்த்தி (!) அவ்வளவும் என்னைச் சேராமல் அநியாயமாய்க் கொள்ளை போய்விடுகிறதென்பது அவருடைய கவலை.

    பெயர் போட்டுக் கொள்ளாததற்குக் கோழைத்தனம் காரணமல்ல என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

    அப்படி வெட்கப்படும்படியான சங்கதி ஏதேனும் நான் எழுதுகிறேனா என்ன? ஒன்றுமில்லை. பின்னர், புனைபெயர் ஏன்? உலகத்தின் மனப்போக்குதான் அதற்குக் காரணம். சொந்தமாகச் சிந்தனை செய்யும் சக்தியை, இந்த உலகத்தில் பகவான் மிகவும் கொஞ்சமாக வைத்துவிட்டார். நம்மில் பெரும்பாலோர் பிறருடைய அபிப்பிராயங்களையே நம்முடைய சொந்த அபிப்பிராயமாகக் கொண்டு போராடுகிறோம்.
    …………….
    ஏதேனும் ஒரு விஷயம் கேள்விப்பட்டால், அதன் குணா குணங்களைப் பற்றி முதலில் ஆராய்வதில்லை. அதைச் சொல்வது யார் என்று முதலில் கவனிக்கிறோம்.

    சொல்பவர் பிரசித்தி பெற்றவராயிருந்தால் அல்லது நமக்குப் பிடித்தவராயிருந்தால் உடனே விஷயத்தை ஆதரிக்கத் தொடங்குகிறோம்; அதைப் பாராட்டுகிறோம்; அதன் புகழைப் பாடுகிறோம். சொல்பவர் சாதாரணப் பேர்வழியாயிருந்தால் உடனே அதை மறந்துவிடுகிறோம். சொல்பவர் நமக்குப் பிடிக்காதவராயிருந்தாலோ, உடனே குறை சொல்லத் தொடங்கி விடுகிறோம். இலக்கியத் துறையில் மட்டுமல்ல; அரசியல், சங்கீதம், சமூக சீர்திருத்தம் ஆகிய எல்லாவற்றிலும் இப்படித்தான்.

    பெரும்பாலும், எல்லாவற்றிலும் நாம் இரவல்பிழைப்பே பிழைத்து வருகிறோம். சென்னையிலுள்ள எனது நண்பர் ஒருவருக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் அபார பிரேமை. ஆகையால் அவருக்குப் பண்டித நேருவைக் கொஞ்சமும் பிடிக்காது. ஒருநாள் நான் பத்திரிகை படிக்க அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்திய சட்டசபையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் செய்த பிரசங்கத்தைப் படித்தேன். அப்போது அவர் அடைந்த உற்சாகத்தையும், காட்டிய சந்தோஷத்தையும் சொல்ல முடியாது.

    பிரசங்கம் முடிந்ததும், ”ஓ! நீர் என்னதான் சொல்லும், அந்த ஒரு மனுஷனால்தான் இப்படிப் பேச முடியும்!” என்றார் நண்பர். ”சுவாமி! மன்னிக்க வேண்டும். பெயர் தவறாகச் சொல்லிவிட்டேன். இப்பொழுது படித்தது பண்டித நேருவின் பிரசங்கம்” என்றேன் நான். அவரால் நம்ப முடியவில்லை. பத்திரிகையை வாங்கிப் பார்த்துவிட்டு, ”சரிதான்; தொலையட்டும். நடுவில் கொஞ்சம் சந்தேகமாய்த்தானிருந்தது. இவ்வளவு அசம்பாவிதமாய் ஐயங்கார் பேசியிருக்க முடியாதே என்றுகூட நினைத்தேன்” என்றார்.

    சற்று முன்னால், நான் பிரசங்கம் நன்றாயில்லையென்று சொல்லியிருந்தால், அவர் என்னை அடிக்கவே வந்திருப்பார்.

    கல்கி கட்டுரைகள் (தொகுதி -3) :: மணிவாசகர் பதிப்பகம்

    Categories: Uncategorized

    ஓர்பு

    April 27, 2005 Leave a comment

    Reflection for the Day: சௌகரியமும் சொகுசுமே வாழ்க்கையின் அத்தியாவசியமாக நாம் செயல்படுகிறோம். ஆனால் நமது உளக்கிடக்கைக்கு எதிலாவது முனைப்புடன் ஈடுபடுதலே போதுமானது.

    சார்லஸ் கிங்ஸ்லி

    Categories: Uncategorized

    அக்கம்பக்கம்

    April 26, 2005 3 comments

    Mdeii Life ::

    திரைக்கதையில் வரும் காட்சிகள் போல் சில பதிவுகள். எதற்காக அடுத்தவன் டைரியைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு காட்டாக சில நேர்மைகள். இணையவழக்கம் போல் வித்தியாசமான முகவரியில் இருக்கிறாரே என்று படிக்க ஆரம்பிக்கலாம்.

    பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசிரு‘ என்று ஆட்டம் கட்டி கலக்கியவன். இன்று நுணுக்கமாக கன்னத்தில் முத்தமிட்டாலை அலசுகிறார் என்று செய்தியோடையை ஷார்ப்ரீடரில் போட வைக்கும் பதிவுகள்.

    Categories: Uncategorized