Home > Uncategorized > சுகுமாரனின் திசைகளும் தடங்களும்

சுகுமாரனின் திசைகளும் தடங்களும்


Thinnai:

பாவண்ணன் – வெளிச்சம் தரும் விளக்குகள்

கட்டுரைகளின் அமைப்பையொட்டி இத்தொகுதி ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான கட்டுரைகள் இலக்கியம், சமூகநடப்பு, திரைப்படம் சார்ந்தவை. இவற்றைப்பற்றி முன்னுரையில் குறிப்பிடும்போது சுகுமாரன் பல கட்டுரைகள் பத்திரிகைகளின் தேவையையொட்டி எழுதப்பட்டதாகச் சொன்னாலும் தேவைக்கு எழுதிக்கொடுப்பதைக்கூட தன் மனம் ஈடுபட்ட துறைசார்ந்து மட்டுமே எழுதியிருப்பதை முக்கியமான அம்சமாகக் குறிப்பிடவேண்டும்.

முதல் பகுதியில் எட்டு கவிதைத்தொகுதிகளுக்கும் கதைநூல்களுக்கும் சுகுமாரன் எழுதிய முன்னுரைகளும் அறிமுகக்கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. “சொற்களில் பொருள்படும் சொல்லைக் கடந்த இயக்கமே” சுகுமாரனுக்குக் கவிதையாகப்படுகிறது. காசியபனின் “ராதை“, “கலங்கரை விளக்கு” ஆகிய கவிதைகளையும் கலாப்ரியாவின் “எம்பாவாய்” கவிதையையும் முன்வைத்து அவர் பகிர்ந்துகொள்ளும் வரிகள் அவருடைய பார்வையைத் தெளிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளன.

விடுப்பு நாளில் தாத்தா வீட்டுக்குச் சென்று திரும்பிய பேரனின் குறிப்பைப்போன்ற நெகிழ்ச்சியோடும் நெருக்கத்தோடும் எழுதப்பட்டுள்ள கட்டுரை “எது பஷீர்?”. மூன்றரைப்பக்கம் மட்டுமே இடம்பெறக்கூடிய அக்கட்டுரை எழுப்பும் உணர்வலைகள் மறக்க இயலாதவை. அச்சந்திப்பு நிகழ்ந்த தருணம் கேரள இலக்கிய உலகில் அவரைப்பற்றிய மாற்றுக்கருத்துகள் பொய்ப்படலமாகப் படர்ந்திருந்த காலம் என்று சுகுமாரன் குறிப்பிடுகிறார். அவருடைய சொந்த வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களின் பதிவாக எழுதிய மகத்தான “மதிலுகள்” நாவலை சற்றும் நாக்கூசாமல் ஆர்தர் கோஸ்லர் எழுதிய “நடுப்பகலின் இருட்டு” நாவலின் திருட்டு என்றும் அவரை ஒரு முஸ்லிம் மதவாதி என்றும் அவதூறுகள் நிரம்பியிருந்த காலம்.

தம்மீது கொட்டப்பட்ட பொய்க்கருத்துகளை ஒட்டி எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் பஷீர் மௌனம் காத்தார். வேதனை நிரம்பிய மௌனம் அது. அம்மௌனத்தைச் சுட்டிக்காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு “சொல்லிவிட்டுப் போகட்டுமே, மனிதர்கள் என்றால் நாலு நல்லதும் சொல்வார்கள் கெட்டதும் சொல்வார்கள். நாம் நல்லதைமட்டுமே எடுத்துக்கொண்டால் போகிறது” என்று பதிலுரைக்கிறார்.

ஆளுமை மிகுந்த மற்றொரு எழுத்தாளரான தகழியும் இன்னொரு தருணத்தில் தன்னை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்விக்கு “ஒரு விவசாயி தான் விதைக்கிற எல்லா நெல்லும் முளைக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுவான்” என்று சொன்னதையும் இந்தக் கருத்தோடு இணைத்துப் பார்க்கலாம். இத்தகு மௌனங்கள் படைப்பாளிகளின் மேன்மையை ஒருவிதத்தில் அதிகரிப்பதாகவே உள்ளது. தம் படைப்புகள்மீது படியும் அவதூறுகளுக்கு விடைசொல்லிக்கொண்டும் மாற்றுத் தரப்புகளை உருவாக்கிக்கொண்டும் இருப்பதல்ல ஒரு படைப்பாளியின் வேலை.

நோபெல் பரிசுபெற்ற வில்லியம் கோல்டிங் எழுதிய படைப்புகளை அறிமுகம் செய்யும் கட்டுரை, அவருடைய புதினங்களைத் தேடிப் படித்துவிடவேண்டும் என்னும் அளவுகடந்த ஆர்வத்தை வாசகர்களிடம் உருவாக்கும் என்பது திண்ணம். “ஈக்களின் அரசன்“, “வாரிசுகள்” ஆகிய புதினங்களைப்பற்றி சுகுமாரன் தந்திருக்கும் குறிப்பு அவர் தம் வாசிப்பின் வழியே கண்டடைந்த அனுபவமாகவே இருக்கவேண்டும்.

கோல்டிங் எழுதிய புதினங்களைப்பற்றிய கட்டுரையை அடுத்து இடம்பெற்றிருப்பது ஆனி பிராங்க் என்னும் யூதச்சிறுமி எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பு. உலகையே குலுக்கிய புத்தகம். இரண்டாவது உலகப்போரின் சமயத்தில் நாஜிகள் நிகழ்த்திய அடக்குமுறைகளைப்பற்றியும் அக்கிரமங்களையும் நேருக்குநேர் பார்த்த ஒரு சிறுமி எழுதி வைத்துவிட்டுப் போன குறிப்புகள். மனித மனங்களில் நிறைந்திருக்கும் இருட்பகுதியை அம்பலப்படுத்தும் கோல்டிங் பற்றிய கட்டுரைக்கு அடுத்ததாகவே இக்கட்டுரையும் இடம்பெற்றிருப்பது விசித்திரமான ஒற்றுமை.

வாழ்வின் வேட்கை” என்னும் நூலின் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் சுகுமாரன் வான்கோ என்னும் மகத்தான ஓவியக்கலைஞனின்வாழ்க்கையை மிகத் திறமையாக அறிமுகப்படுதத்தியுள்ளார்.

(திசைகளும் தடங்களும் – சுகுமாரன். அன்னம். விலை. ரூ90 )

Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: