Archive

Archive for May, 2005

அரைகுறைப் படமும்

May 31, 2005 6 comments

Click on the Image to Enlargeஅந்தக்கால ஆனந்த விகடனில் ‘அரைகுறைப் படமும் அவசர பிச்சு‘வும் வரும். மறுபதிப்புகளிலும், சில அசல்களையும் பார்த்து அசந்திருக்கிறேன்.

‘காது காதுன்னா வேது வேது’ என்று புரிந்து கொண்ட கதையை எங்களவர்களும் தப்பும் தவறுமாய் தேவைகளை எழுதி வைப்பார்கள். ஜாதகத்தை பலப்படுத்துவதற்காக, நாங்களும் சந்தைக்கு இன்னும் வராத பீட்டா, ஜாவா, ஷார்ப் எல்லாம் பயன்படுத்தி எழுதிவிடுவோம். கண்ணால் காணாததை கண்டதாகச் சொல்லும் போலி சாமியார் போல் சிலர் அதை உபன்யாசித்து விற்று வைப்பார்கள்.

இந்த கேலிச் சித்திரத்தை பத்து வருடம் முன்பு பார்த்து ‘நம்முடையது இவ்வாறு இருக்காது’ என்று சிரித்துச் சென்றிருக்கிறேன். வேலையில் அமர்ந்த சில காலத்திலேயே செய்முறை விளக்கம் கிடைத்தது. மறக்க முடியாத புகைப்படம்.

போன படத்துக்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை.

(c)Danzinger - Click on Image to Enlargeஅமெரிக்காவில் (இங்கிலாந்திலும்?) மே மாதக் கடைசி திங்கள்கிழமை விடுமுறை. நண்பர்களை சந்தித்துப் பேச முடிந்தது. ‘நீ… என்னப்பா! ஓரமாக உட்கார்ந்து கொண்டு கதைக்குதவாததை வைத்து ப்ளாக் நடத்துகிறாய்’ என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள்.

நானும் ரொம்ப சேரியமாய் ‘முன்பெல்லாம் பேசுவோம்; பகிர்ந்து கொள்வோம். சிலர் அவற்றை எழுத்திலும் சேமித்து வைக்கிறார்கள். விவாதத்துக்குள்ளாக்கிறார்கள்.’ என்றெல்லாம் விளக்க முயன்றேன்.

எனினும் பெரும்பாலானவர்களின் மனத்தில் இருக்கும் படிமம் இதுதான்:

Categories: Uncategorized

கல்லூரி தரப் பட்டியல்

May 26, 2005 3 comments

சில மாணவர்களுக்கு எந்தக் கல்லூரியில் சேரலாம் என்று குழம்பும் அளவு மதிப்பெண் எடுத்து விடுவார்கள். பொறியியல் கல்லூரிகளுக்கான கருத்துக் கணிப்பையும் தரப்பட்டியலையும் டேட்டாக்வெஸ்ட் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.

வழக்கம் போல் ஐஐடி கான்பூர், சென்னை, மும்பை, காசி, எல்லாம் இடம் பிடித்திருக்கிறது.

தலை பத்தை விட்டு பிட்ஸ், பிலானி இறங்கியிருப்பது வருந்தத்தக்கது. திருச்சி, வாராங்கல், சூரத்கல் ஆகியவற்றை விட பிலானி பின்தங்கியுள்ளதாக சொல்வது இன்னும் வருத்தம். ஜாதவ்பூர் போன்ற பெருமைவவாய்ந்த கல்லூரிகளை விட கிருஷ்ணா போன்ற புதியவர்கள் மதிப்பைப் பெற ஆரம்பித்திருக்கிறார்கள்.

நுழைவுத் தேர்வுகளை குறித்து விவாதிக்கும் இந்த நேரத்தில், நுழைவுத் தேர்வை உதாசீனப்படுத்தும் பிட்ஸ், பிலானியின் சரிவை கருத்தில் வைத்துக் கொள்வது முக்கியம்.

என்னுடைய முந்தைய பதிவு: நுழைவுத் தேர்வுகளைத் தவிர்ப்போம்

தொடர்புள்ள செய்தி: CIOL : News : IIT Kanpur voted best tech school: Survey

Categories: Uncategorized

Anniyan Trailer

May 26, 2005 4 comments

அன்னியனின் திரை முன்னோட்டம் இங்கே கிடைக்கிறது. (தகவல்)

விண்டோஸ் மீடியா ப்ளேயரில் ஒலி மட்டுமே கேட்டது. ஒளியுடன் பார்க்க எனக்கு டிவெக்ஸ் தேவைப்பட்டது. உங்களுக்குப் பொருத்தமானதை இறக்கிக் கொண்டுவிடுங்கள்.

ட்ரெயிலர் பார்த்தவுடன் தோன்றிய சில:

 • நவநவீன ஆடைகளிலும் சதா அழகாய்த்தான் இருக்கிறார். (கண்ணும் கண்ணும் நோக்கியா).
 • I Know What you did last Summer-இல் ஆரம்பித்து மேட்ரிக்ஸ் வரை ‘எப்படம் யார் யார் எடுத்தாலும், அப்படம் தமிழ்ப்படம் ஆக்குவது அறிவு’ என்று கூட்டுப்பதிவு முதல் காலச்சுவடு வரை இடிபடப்போவது உறுதி.
 • ‘எகிறி குதித்தேன்’ பாடலின் ஆரம்பத்தில் வீணடிக்கப்பட்ட freeze-frames, jump-cuts, flashbacks, color shifts, and handheld camerawork, ஆக்கபூர்வமான முறையில் உபயோகிக்க வழி கண்டுபிடித்திருக்கிறார்.
 • ஜீன்ஸில் வந்த ‘அன்பே அன்பே’, அய்யங்காரு வீட்டு அழகாகவும், இந்தியனின் நிழல்கள் ரவி கொலையும், இன்னும் பல ஷங்கரின் மறக்கமுடியாத காட்சிகள் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டிருக்கும்!?
 • பிரும்மாண்டத்திற்கு பெயர் பெற்றவர் என்றாலும், பத்தாயிரத்து முன்னூற்றி ஏழு (10,307) கராத்தே வீரர்களை க்ளைமாக்சுக்கு அடித்து நொறுக்குவதாக காட்டுவதெல்லாம் திருப்பாச்சிக்கிரமம்.
 • விவேக், சிரிக்கும் லாரிகள், சைபர் குற்றம் (?), பிரகாஷ்ராஜ், சில் த்ரில்லர்கள், கல்கி அவதாரம் என்று ஜனரஞ்சகமாக இருக்கிறது.

  சந்திரமுகியை விரட்ட அன்னியன் தயார் போலத்தான் தெரிகிறது.

 • Categories: Uncategorized

  கலைமகள் – மே 05

  May 26, 2005 Leave a comment

  sify.com ::

  * தாம்பிரவருணி பதில்கள்
  தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதே அளவுத் தொகை (12%) தொழில் அதிபர்கள் பங்களிப்பாக ஊழியர்களின் சேமநலநிதிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

  * சிரி(ற)ப்பு அண்ணா கி.வா.ஜ
  அடுத்த கூட்டத்திற்கு யாரை அழைக்கலாம்?’ என்று நாங்கள் கூடிப் பேசியபோது, “வாகீச கலாநிதி’ கி.வா.ஜ.வை அழைக்கலாம் என்று முடிவெடுத்தோம்.

  * சமையல் போட்டி திருவிழா
  சமையல் கலை இன்று நவீனமாக அவதாரம் எடுத்துள்ளது. ஒரு சமையல் அறையை பெரிய ஹோட்டல்களில் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்?

  * ஊருக்கு உழைத்திடல் யோகம்!
  அதிகாலை ஆறு மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலடி வைத்தபோது என் மனதுக்குள்ளே ஒரு குறுகுறுப்பு. அதிலும் திருப்பதி ஸப்தகிரி விரைவு வண்டியில் ஏறி அமர்ந்தபிறகு, என் மனம் எங்கெல்லாமோ சிறகடித்துப் பறந்தது.

  * நூல் அரங்கம்
  தண்ணீர் தனியார் மயமாக்கப்படுவதால் ஏற்படும் விபரீதங் களை இந்நூலில் ஆசிரியர் கூறியுள்ளார். உலக நாடுகள் பலவற்றிற்கு பயணம் செய்து மிகுந்த அனுபவ அறிவு பெற்றவர் ஆசிரியர் பால்பாஸ்கர்.

  * நிறம் மாறிய வானவில்
  உஷாவுக்கு அன்றைக்கு வேலைக்குப் போகப் பிடிக்கவில்லை. லீவ் போட்டு விட்டாள். நல்ல மழை பெய்து குளுமையாக இருந்தது. சுடச்சுட பஞூஜி சாப்பிட்டுக் கொண்டே கிரிக்கெட் மாட்ச் பார்க்கும் திட்டத்தில் இருந்தாள்

  * ஓவியன்
  நகரத்தின் எல்லைக்கு வெளியே. நெடுஞ்சாலைப் பாலத்துக்குக் கீழ்புறம் பள்ளத்து மேட்டில் நாலைந்து குடிசைகள் அநாதைப் பிள்ளைகள் போல இருந்தன.

  * நாடி சொல்லும் கதைகள்
  அகஸ்தியரின் நாடியை நம்புகிறோம். ஆனால் இப்படியொரு தெய்வீக சந்திப்பைப் பற்றி நம்பும்படி இல்லை. ஜீரணிக்கவே கஷ்டமாகத்தான் இருக்கிறது” என்று நேரிடையாகவே நிறைய பேர் சொன்னதும் உண்டு.

  * மலேசியா பயணக்கட்டுரை
  சாதாரணமாக வெளிச்சத்திற்காக நாம் மெழுகுவர்த்திகளை உபயோகிப் போம். ஆனால் வித்தியாசமாக ஒரு மெழுகுவர்த்தியைக் காண நேர்ந்தது. இதுபல மருத்துவ குணங்களைக் கொண்டது. இதை இயர்கேண்டில் என்கிறார்கள்.

  * மதுரவல்லி
  மாலைத் தென்றலின் சுகமான காற்றையும், பூக்களின் நறுமணங்களையும் இரசித்தபடி பாண்டிய அரண்மனையின் நந்த வனத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர், தென்னவனும், மதுரவல்லியும்.

  * பொழுதும் போதும்
  தமிழர், காலத்தைச் சிறுபொழுது, பெரும்பொழுது என்று இரண்டு பிரிவாகப் பிரித்தனர். அவற்றுள் சிறு பொழுது ஆறு; பெரும்பொழுது ஆறு. சிறுபொழுது ஐந் தென்பது ஒரு சாரார் கொள்கை. வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்னும் ஆறும் சிறுபொழுகளாம். இவற்றில் ஒவ்வொன்றும் பப்பத்து நாழிகைகளை உடையது. பெரும்பொழுதை இருதுவென்று கூறுவர் வட நூலார்

  * அழகு மயில் ஆட
  சில முகங்கள் பார்த்தவுடனேயே “பச்’ சென்று பதிந்து விடும். இன்னும் சில முகங்கள் வயசு வித்தியாசம் இல்லாமல் சினேகிக்கத் தோன்றும்.

  * 220 கோடி குழந்தைகள்
  உலகின் குழந்தைகளில் 18 வயதுக்குக் கீழுள்ள 220 கோடி குழந்தைகள்.

  * பாலாஜிக்கு டான்ஸ் ஆடத் தெரியும்!
  இந்திய கிரிக்கெட் பவுலர் பாலாஜி ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்.

  * அருணா ஓர் ஆச்சர்யம்
  பணம் மட்டும் இருந்தால் என்ன வெல்லாம் செய்யலாம். அபஸ்வரமாகப் பாடினால்கூட “சங்கீத பாரதி’ விருது பெறலாம். சுமாராக ஆடினால் கூட “பரத மயூரி’ பட்டம் வாங்கலாம். யார் யாரோ நெற்றி வியர்வை சிந்த உழைத்ததை எல்லாம், தானே சுயமாய் வடிவமைத்ததாகச் சொல்லி பெயர் வாங்கிக் கொண்டு போகலாம். பத்து பேரை சுற்றி வைத்துக் கொண்டு ஆஹா ஓஹோ என துதி பாடச் செய்யலாம்.

  * ஆலோசனை மையம்
  எனக்கு வயது 26. எனக்கு முகத்தில் பருக்கள் கொத்து கொத்தாக இருக்கிறது. எனது தங்கை, வயது 18 அவளுக்கும் இருக்கு. ஆனால் ஒன்றிரண்டு மட்டும். ஏன் எனக்கு இப்படி…. இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்

  Categories: Uncategorized

  தினகரன் – மெடிமிக்ஸ் விருதுகள்

  May 25, 2005 4 comments

  விருது என்றவுடனே ஆஸ்கார் நினைவுக்கு வந்தது. ஆங்கிலப் படங்கள், பாடல்கள் விருது எல்லாமே வார்ப்புருவில் செய்யப்பட்டது போல் இருக்கும்.

 • விளம்பரதாரர் மேடையில் தோன்றி விருதுகளைத் தரமாட்டார்.
 • திடீரென்று ஏடாகூடமான கேள்வி எல்லாம் கேட்டு விருது பெறுபவரை ‘ஏண்டா சாமீ… விருது வழங்கினே!’ என்று விசனப்பட வைக்க மாட்டார்கள்.
 • விருதுப் பெறப் போகும் வழியில் முத்தங்கள் கிடைக்கும்; கை கூப்பி, காலில் விழுந்து, கையை அசைத்து ‘கவனிக்க’ வேண்டாம்.
 • விருது கொடுப்பவர் தயாராக மேடையில் இருக்க, அதன் பின்புதான் – பெறப் போகிறவர் மேடையில் தோன்றுவார்.
 • ஒவ்வொரு விருதுக்கும் பரிந்துரைக்கப் பட்டவர்களின் பட்டியல் சொல்லப்பட்டு, விருது வாங்குபவர் யாரென்பது ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்.
 • வாழ்நாள் விருது பெறுபவருக்கு வருகை புரிந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மகிழ்வார்கள்.
 • பதக்கம் மாட்ட மாட்டார்கள்.

  இவை எல்லாம் தினகரன் விழாவில் வித்தியாசப்பட்டாலும், மற்ற இடங்களில் ஆஸ்கார் விருதுகளுக்கு நிகராகவே இருந்தது.

 • அங்கே ஜெனிஃபர் லோபஸ் அரைகுறையாய் ஆடுவார்; இங்கே ரகஸியா, ரம்பா, தேஜாஸ்ரீ, மதுமிதா, சொர்ணமால்யா.
 • அங்கே ‘Good Will Hunting’ பென் அஃப்லெக்; இங்கே ‘மன்மதன்’ சிம்பு போல ஒரு சிலர் அதிகமாய் அலட்டிக் கொள்வார்கள்.
 • சிறந்த நடிகர் விருதைப் பெறுபவர் அமைதியாய், விக்ரம் போன்றோரின் இருப்பை உணர்ந்து, விஜய் போல் அடக்கமாய் இருப்பார்.
 • ஸ்ரீமானும் பெயர் மறந்துபோன சின்னத்திரை நாயகியும் நன்கு தொகுத்து வழங்கினார்கள்.
 • சாதனையாளர் விருது பெறுபவர் எதையாவது தாக்குவது வழக்கம்: நாகேஷுக்கு பத்மஸ்ரீ வழங்காததை எண்ணி வருந்திக் கொண்டார்.
 • நாகேஷுக்குப் தேவையான பதிலை முன்கூட்டியே வாலி சொல்லியிருந்தார்: ‘பக்கபலமோ போஷகரோ இல்லாத திறமை வீண்‘.
 • கிடைத்ததை யாருக்காவது காணிக்கையாக்குவது சர்வ சாதாரணம்; அனேகர் நன்றி மட்டும் நவின்றாலும், ஜோதிகா மட்டும் சூர்யாவுக்கு அர்ப்பணித்தார்.
 • விருது எதுவும் கிடைக்காவிட்டாலும் வைரமுத்து வந்திருந்து, வாலி விருது பெறுவதற்காக சண்டை எல்லாம் போடாமல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
 • உருப்படியான சிலருக்கும் பொதுமக்கள் வாக்களிப்பார்கள்: ‘அழகிய தீயே’ ராதாமோகன், ‘காமராஜ்’ திரைப்படம், ‘ஆட்டோகிராஃப்’, இசைக்கு ‘7ஜி ரெயின்போ காலனி’, வில்லனுக்கு பிரகாஷ்ராஜ்.
 • சம்பந்தமே இல்லாமல் க்ளோசப் கொடுத்தாலும் மிடுக்கு குறையாமல் அரங்கத்தை கவனித்துக் கொண்டிருந்த சிறந்த ‘நடிகை’ ஜோதிகா.

  சன் டிவி போட்டிருப்பதை எண்ணி சந்தோஷப்பட வைத்த பதிவு.

  2004 வருட விருதுகள் குறித்த பதிவு | Dinakaran Awards

 • Categories: Uncategorized

  ராமகிருஷ்ணா

  May 25, 2005 2 comments

  ‘காதல் கோட்டை’ கூட்டணியில் இன்னொரு படம் என்று சொல்லி விளம்பரம் செய்து வந்தார்கள். அகத்தியனும் சிவசக்தி மூவி மேக்கர்ஸும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

  பணக்கார முதலாளி ஜெய் ஆகாஷ். தகப்பன் பெயர் தெரியாமல் அயல்நாட்டில் வளர்த்த அம்மா சரண்யாவிடம் ஓவர் பாசமாய் பொழிகிறார். அம்மா தவறி விழுந்ததால் தவறிப்போனபின், அவரின் கட்டளைப்படி கிராமத்திற்கு செல்கிறார். அப்பா விஜயகுமாரை கண்டுபிடிக்கிறார். ஸ்ரீதேவிகாவுடன் காதல். ஆட்டக்காரியாக இன்னொரு நாயகி வாணி வந்து போகிறார்.

  ஹீரோயின் ஸ்ரீதேவிகா விகல்பமில்லாத பாசங்காட்டுகிறார். ஜெய் ஆகாஷும் இயல்பாக நடித்திருக்கிறார். இளமையான அலட்டல் இல்லாத நாயகன்.

  முத்துக்காளையும் சார்லியும் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகளை ஏற்கனவே சன் டிவியில் ரசித்திருந்ததால், மீண்டும் பாராட்ட முடியவில்லை. படத்தின் நகைச்சுவை தவிர நயமிக்கதாக இரண்டு இடம் இருக்கிறது.

  * கிராமத்தில் ஒண்ணு, ரெண்டு, மூணு மனனம் செய்வதற்குப் பயன்படும் வித்தைகளை சொல்லி, காதல் பாடலுக்கு அழைத்துச் செல்லும் இடம்.

  கொக்குச்சி கொக்கு
  ரெட்டசிலாக்கு
  மூக்கு சிலந்தி
  நாகுவா வர்ணம்
  ஐயப்பஞ்சோறு
  ஆறுமுகத் தாளம்
  ஏழுக்குக் கூழு
  எட்டுக்கு முட்டி

  பாடலை கேட்கப் போனால், பாடியவர்கள் கார்த்திக் ராஜாவும் சாதனா சர்கமும்! சாதனா சர்கம்தான் தெளிவாக கிராமத்துத் தமிழில் உச்சரித்திருக்கிறாரா அல்லது ஒக்கச்சி எல்லாம் கொக்கச்சி ஆகிப் போனதா என்று அறியமுடியாத ஆனால் வித்தியாசமான பாடல்.

  * தட்டான் தாழப் பறந்தால் மழை வரும், இன்னும் ஏதோ ஒன்று காணப்பட்டால் அடை மழை, எப்பொழுது சிதறல், எப்பொழுது புயல் என்று சராமாரியாய் அடுக்கும் வசனங்களும் வானிலை ஆய்வாளர்களை விட துல்லிதமாக கணிக்கும் வித்தையை சொல்லியது.

  சில புகைப்படங்கள்

  Categories: Uncategorized

  ஊடகச் செல்லம்

  May 24, 2005 2 comments

  ஃப்ரென்ச் ஓபன் முதல் சுற்றிலேயே சானியா மிர்ஸா தோற்றிருக்கிறார்.

  வழக்கம் போல் ஜெயித்தவரின் புகழ் பட்டியலோடுதான் செய்திகள் வெளியிட்டிருக்கிறார்கள். முன்பாவது ‘கிட்டத்தட்ட #1’ வில்லியம்ஸிடம்தான் தோற்றுப் போனார் என்று சமாதானப்பட்டுக் கொண்டோம். இப்பொழுது முப்பதாம் இடத்தில் இருந்தாலும் ‘சிறந்தவர்… வல்லவர்…’ என்று மோதிரக் கையால் குட்டுப்பட்டதாய் ரிப்போர்ட் கொடுக்கிறார்கள்.

  ஆஸ்திரேலியாவிடமோ தெற்கு ஆப்பிரிக்காவிடமோ (கிரிக்கெட்டில்) தோற்றால் பரவாயில்லை. ஒலிம்பிக்ஸில் ஒக வெண்கலம் கிடைத்தால் போதும். ஹாக்கியில் கால்-இறுதிக்கு தகுதிப் பெற்றாலே போதும். கை நிறைய சம்பளம் கிடைத்தால் போதும் என்னும் நடுத்தர வர்க்கம் (இன்னும் இப்படி ஒன்று இருக்கிறதா?) சித்தாந்தம் இப்பொழுது விளையாட்டில் மேலோங்கி நிற்கிறது.

  அழகாக இருக்கிறார். விகடனில் எழுதியிருந்தது போல் ‘வாளிப்பான தக்காளி’ என்று மனசுக்குள் சப்புக் கொட்ட நிறையவர்கள் உண்டு. அவர்களுக்கான குட்டிகுரா முகப்பூச்சுகளும், குளிர் சாதன விளம்பரங்களிலும் தோன்றிக் கொண்டே இருக்கலாம்.

  லியாண்டர் பேயஸின் வழக்கம் போல் இரட்டையர் ஆட்டத்தில் இறுதிச் சுற்று வரை தத்தித் தடுமாறி வந்து கொண்டேயிருந்தால் டப்புக்குக் குறைச்சல் இருக்காது. இப்படியே செட்டில் ஆகிவிடலாம் என்னும் எண்ணத்தை ஊக்கப் படுத்தாவிட்டால் நல்லது.

  அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் சமயத்தில் சர்ச்சையை கிளப்பிய ‘நைகி’ விளம்பரம்:

  வெள்ளியை வெல்வது என்பது தங்கத்தைத் தட்டிச் செல்லாததற்கான சப்பைக்கட்டு.

  (“You don’t win silver, you lose gold” and
  “If you are not here to win a medal, you are a tourist”?)

  Categories: Uncategorized

  இந்திய அணிக்கு புதிய கேப்டன்

  May 23, 2005 1 comment

  tamiloviam.com::

  சமீபத்தில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக கிரெக் சாப்பெல் சேர்க்கப்பட்டுள்ளார். ஜான் ரைட்டுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  இதைத் தொடர்ந்து அணியில் சில மாற்றங்கள் வர வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியமும் சேப்பலும் விரும்பினார்கள். இந்த எண்ணத்தை செய்ல்படுத்தும் முதல் படியாக பிரையன் லாரா (Brian Lara) இந்தியாவுக்கு வரவழைக்கப் படுகிறார். அமர்நாத்தைப் போலவே டெண்டுல்கரும் லாராவின் வருகையை வரவேற்றுள்ளார்.

  சமீப காலமாகவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு, லாராவின் இருப்பு தர்மசங்கடத்தைக் கொடுத்து வந்தது. லாரா இருந்தால் மோசமாகவும்; அணியில் லாரா ஆடாவிட்டால், மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிக் கனிகளையும் பறித்து வந்து கொண்டிருந்தது.

  தெற்கு ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஜார்ஜ்டவுன் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்கள் இழப்புக்கு 543 ஓட்டங்களை மேற்கிந்திய அணிவீரர்கள் குவித்தார்கள். இந்தப் பந்தயத்தில் லாரா ஆடவில்லை. மேற்கிந்திய ஆட்டக்காரர்களில் இருவர் இரட்டை சதம் அடித்து அபாரமாக ஆடியிருந்தார்கள். இதைத் தொடர்ந்த இரு ஆட்டங்களிலும் லாரா இருந்தார். ஆனால், மொத்தத்தில் மூன்று வீரர்கள் மட்டுமே ஐம்பதைத் தொட்டிருந்தார்கள். ரிட்லி ஜேகப்ஸ் போன்ற சக வீரர்களும் லாராவைக் குறித்த விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

  கடந்த ஐந்தாண்டுகளில் மேற்கிந்திய அணி தோற்றுப்போன் ஆட்டங்களை கணக்குப் போட்டு பார்த்தால் — லாரா ஆடிய ஐந்து ஆட்டங்களில் மூன்று போட்டிகளில் அவரின் அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. அதே சமயம் லாரா அணியில் இல்லாவிட்டால், நான்கு ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே புறமுதுகிட்டிருக்கிறார்கள்.

  ‘இது போன்ற தோல்வியை அதிகம் ஈட்டித் தரும் அம்சம் முக்கியமானதாக இந்திய நிர்வாகம் கருதியிருக்கலாம். மேலும், வெளிநாட்டு வீரரை அணியில் சேர்ப்பதனால், சொந்த நாட்டில் சரக்கிலாததை பறை சாற்றலாம். கோச் மட்டும் இறக்குமதியல்ல, அணியே அன்னியம்தான் என்னும் கொள்கையை நிலை நிறுத்த லாரா உதவுவார்.’ என்று கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

  செய்தியை கேட்ட முன்னாள் உலக அழகி லாரா தத்தா, பிரையனை நேரில் சென்று பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ‘என்னுடைய பெயர் கொண்ட ஒருவர் இந்தியாவில் இல்லாதது வருத்தமாக இருந்தது. இப்பொழுது இந்திய அணியிலேயே இடம்பெற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது. அவருடன் கூடிய சீக்கிரமே சினிமாவில் நடிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஏதாவது செல்பேசி விளம்பரத்திலாவது தோன்ற வேண்டும்.’ என்றார்.

  கங்குலியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ‘என்னை விட மோசமான அணித் தலைவரை இதை விட எளிதாகக் கண்டிபிடிக்க முடியாது. என்னுடைய கேப்டன்சி மீண்டும் தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுக்க இது வழிவகுக்கலாம்’ என்று நெருங்கிய நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.

  தொடர்ந்து இந்திய அணி தேர்வாளர்கள் அடுத்த வாரம் பெங்களூரில் சந்திக்கப் போகிறார்கள். அப்பொழுது பாகிஸ்தானின் அப்துல் ரஸ்ஸாக், மேட்ச் பிக்ஸிங்கிலும் முன் அனுபவமுள்ள தெற்கு ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் போன்றோரை பரிசீலிக்கப் போவதாக விஷயமறிந்த வட்டாரங்கள் பேசிக் கொள்கிறார்கள்.

  – பாஸ்டன் பாலாஜி

  Categories: Uncategorized

  நமது நம்பிக்கை – மே 05

  May 20, 2005 Leave a comment

  நமது நம்பிக்கை::

  * வென்றவர் வாழ்க்கை நாச்சிமுத்து கவுண்டர்
  இன்று அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் என்று அழைக்கப்படும் தொழிலதிபர், 50 ஆண்டுகளுக்கு முன் அஆப மகாலிங்கம் என்றுதான் அறியப்பட்டார். அஆப என்பது ஆனைமலை பஸ் ட்ரான்ஸ்போர்ட்

  * களஞ்சியம் சின்னப்பிள்ளையின் வாழ்க்கைத் தொடர்
  ஒருவருக்கு நாலணா என்று தொடங்கிய சந்தா, சிறிது சிறிதாக வளர்ந்து மாதம் ஒன்றுக்கு ரூபாய் இருபது என வளர்ந்துவிட்டது. பலர் இப்போது சின்னாவைப் பார்த்துப் பேச, அறிவுரை கேட்க வர ஆரம்பித்து விட்டார்கள். கடைக்குப் புறப்பட்டுப் போனபோது எதிர்த்தாற்போல் சோணை வந்தான்.

  * ஆளப்பிறந்தவன் நீ
  நீங்கள் விரும்பிய வண்ணம் செயலாற்றுங்கள்.அலுவலகம், தொழிற்சாலை, வணிக மையம் என பல்வேறு களங்களில் நம் அன்றாடப் பணிகளை நாம் செய்துகொண்டிருக்கிறோம். எல்லா இடங்களிலும் நாம் செயலாற்றுகிறோம்

  * மலைக்க வைக்கும் மனித சக்தி
  வேர்த்திடு முடலில் வெள்ளம் திரட்டி
  விளைச்சலை உழுதவன் மனிதன்!
  ஆர்த்திடு மாயிரம் இயந்திரம் ஓட்டி
  ஆலைகள் கண்டவன் மனிதன்!

  * ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!
  தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது என்றும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதிய உணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிறோம்.

  * சந்தைப் படுத்துவோம் சாதனை குவிப்போம்
  பப்ளிசிட்டி அன்ட் புரமோஷன் என்ற இரண்டு ஆங்கிலச் சொற்களும் அடிக்கடி நாம் பயன்படுத்தும் சொற்கள்

  * பாலகுமாரன் நேர்காணல்
  எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் சமூகம், ஆன்மீகம், காதல் என்று, பல்வேறு பரிமாணங்களில் வாழ்க்கையின் உன்னதங்களைத் தனது படைப்புகளில் பதிவு செய்து வருபவர். இவரை, பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், தங்கள் வழிகாட்டியாக வரித்துக்கொண்டிருக்கின்றனர். நமது நம்பிக்கை வாசகர்களுடன் ஒரு விரிவான உரையாடலை நிகழ்த்துகிறார் திரு. பாலகுமாரன்.

  * புதுக்கணக்கு
  மலையைப் புரட்டும் இலட்சியத்தோடு
  மனிதா தொடங்கு புதுக்கணக்கு;
  விலையாய் உழைப்பைக் கொடுத்தால் போதும்
  வளைந்து கொடுக்கும் விதிக்கணக்கு;

  * காப்பீட்டு முகவர்களே கவனியுங்கள்
  காலத்தை அதன் போக்கிலேயே விட்டுவிடாமல் படைப்பாற்றல் திறனால் காலத்தையே தமது போக்கிற்கு மாற்றியமைத்து வெற்றி கண்டவர்கள் பலர் உண்டு

  * சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?
  நம்மில் பலருக்கு இந்த குணமிருக்கும். அல்லது, நம் நண்பர்களுக்காவது இருக்கும். மற்றவர்கள் நம்மை விமர்சிக்க வேண்டுமென்று கேட்போம். அவர்கள் தயங்குவார்கள்.

  * பொதுவாச் சொல்றேன்
  ஒரு விஷயம் கண்ணுக்குத் தெளிவாத் தெரியாத போது, பார்வையிலே இருக்கிறகுறைபாட்டுக்கு ஏற்றமாதிரி மூக்குக் கண்ணாடி போட்டக்கறோம். ரொம்ப ரொம்பச் சின்ன விஷயங்களை, பூதக்கண்ணாடி வைச்சுப் பார்க்கறோம்

  * எது உள்ளுணர்வு? எது சந்தேகம்?
  எந்த ஒரு சிந்தனையாளரைக் கேளுங்கள் உங்கள் உள்ளுணர்வின் குரலுக்கு மதிப்புக் கொடுங்கள்++ என்று திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஒரு காரியத்தைத் தொடங்கலாமா வேண்டாமா என்று உள்ளுணர்வு உணர்த்துவது சரியாக இருக்கும் என்பார்கள்

  * புதிய பயணத்தின் பெருமை மிக்கஆரம்பம்
  நமது நம்பிக்கை மாத இதழ் மற்றும் பி.எஸ்.ஆர். சாரீஸ் இணைந்து நடத்தும் வெற்றிப்பாதை தொடர் பயிலரங்குகளின் தொடக்க விழா கோவை திவ்யோதயா அரங்கில் நடைபெற்றது.

  * உனக்கும் கீழே உள்ளவர் கோடி
  சோர்வு என்பது பெரிய விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறோம். அதில் ஒரே எழுத்து மாறினால் போதும், தீர்வு பிறந்து விடும்

  * மாணவ மனசு! கோடை விடுமுறை
  ஒரு காலத்தில் கோடை விடுமுறை என்பது மாணவர்கள், பெற்றோர்கள் இருவருமே ஏங்கித் தவிக்கிற விஷயமாக, எப்போது வரும் என காத்திருக்கும் ஒன்றாக, பலமாத காலங்களுக்கு முன்பே திட்டமிடுகிற விஷயமாக, குடும்பத்தின் அனைவருமே கொண்டாடி மகிழுகிற தருணமாக இருந்து வந்தது

  Categories: Uncategorized

  காலச்சுவடு – மே 2005

  May 20, 2005 Leave a comment

  Kalachuvadu ::

  * சிறுகதை: சாயம் போன வானம்
  உருக்காண்டிதான் தகவல் சொன்னான். நம் தோட்டத்தில் யார் செத்தாலும் அவன் சொல்லித்தான் எனக்குத் தெரியவரும். உங்களைப் பற்றிச் சொல்லும்போது ஒன்றும் உணர்ச்சி இல்லை. ஏதோ பத்திரிகைச் செய்தி மாதிரி சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டான். வேறு யாராவது செத்திருந்தால் உச்சுக் கொட்டி வருத்தப்படுவான்.

  * முரண்படும் மொழிபெயர்ப்புகள்
  தவறான, முரண்பட்ட மொழிபெயர்ப்புகள் மூலநூல் படைப்பாளியின் படைப்புத் திறனை அங்கஹீ(கீ)னப்படுத்தி அவரைப் பற்றிக் குறைத்து மதிப்பிடும் விமரிசன சூழல் தோன்றுவதற்கு வழிவகை செய்துவிடும் அபாயம் உள்ளது.

  * ஹாலிவுட் திரைப்படங்கள் சொல்லாத அரசியல்
  வழமையாகவே ஹாலிவுட்டின் பெரும் தயாரிப்புகள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு இணக்கமாகவும் அமெரிக்க விசுவாசத்தை ஊறவைப்பதாகவும் அமெரிக்காவின் பண்பாட்டை உலகெங்கும் பரப்புவதாகவுமே அமைந்துவருகின்றன.

  * வாசகர் முற்றம்: படைப்பாளிக்குப் பின்னால் ஒளிந்திருப்பவர்

  * குமுதம் தீராநதியின் இதழியல் திருட்டு
  தனது பணியாளர் ஒருவர், காலச்சுவடுக்கு எதிரான, தனிப்பட்ட, வெறுப்பு சார்ந்த இலக்கிய அரசியல் நடத்துவதற்காக குமுதம் குழும இதழ்களைப் பயன்படுத்திக்கொள்வதை அனுமதித்துவரும் குமுதம் நிர்வாகத்தின் இயலாமை பல முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்றே தோன்றுகிறது.

  * கருத்தரங்கு: புது யுகத்தில் தமிழ் நாவல்கள்
  ‘கடவு’ இலக்கிய அமைப்பும் ‘காலச்சுவடு அறக்கட்டளை’யும் இணைந்து மதுரையில் ‘புது யுகத்தில் தமிழ் நாவல்கள்’ என்ற கருத்தரங்கை நடத்தின. ஒரு வசதி கருதிக் கடந்த ஐந்தாண்டுகளில் (2000ஆம் முதல் 2004 முடிய) ஒருவர் எழுதிய ஒரு நாவல் மட்டும் என்கிற வரையறையுடன் நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

  * அற்றைத் திங்கள்: கி. ராஜநாராயணன்
  ‘அற்றைத் திங்கள்’ என்னும் இத்தொடர் நிகழ்வுகளின் கால அவசியம் குறித்தும் அதன் மூலம் விரிவடையப்போகும் வாசகர் – படைப்பாளி உறவு பற்றியும் காலச்சுவடு ஆசிரியர் கண்ணனின் சுருக்கமான உரைக்குப் பின் கி.ரா. பேசத் தொடங்கினார். அவரது பேச்சின் சாரம் இது.

  * கேரளமும் கண்ணகியும்
  சிலப்பதிகாரம் கொண்டாடும் கண்ணகி வழிபாடு கேரளத்தில் இன்றும் விளங்கிவருகிறது. பல நாட்டுக் கதைப் பாடல்களும் மரபுகளும் வழங்கிவருகின்றன. கோயில்கள் போக மலைப் பகுதிகளில் பழங்குடிகளிடமும் அது தொடர்பான வழிபாடுகளும் காணப்படுகின்ற செய்தி ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

  * இலங்கையின் கலைச் சூழல் குறித்த தீவிர வாசிப்பு
  இலங்கையின் கலை, அதன் வரலாறு, கலைஞர்கள், நிகழ்வுகள் முதலியவற்றை ஆழமான, தீவிரமான பார்வையுடன் அலசும் முயற்சியாக வெளிவருகிறது அழ்ற்ப்ஹக்ஷ என்னும் ஆறுமாத இதழ்.

  * விவாதம்: வகாபியிசம்: சில விளக்கங்கள்

  * திறந்த வெளி: ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் கதை

  * அஞ்சலி: சால் பெல்லோ (1915 – 2005)
  அமெரிக்க யூத எழுத்தாளர்களில் ஐசாக் பாஷெவிஸ் சிங்கருக்கு நிகரான இடத்தைப் பெற்றது மட்டுமல்லாது நோபல் பரிசையும் பெற்றுச் சிறப்படைந்தவர் சால் பெல்லோ.

  * அஞ்சலி: ஆலன் டண்டிஸ் (1934-2005)
  கடந்த 30 ஆண்டுகளாக அனைத்துலக நாட்டார் வழக்காற்றியல் கல்விப் புலத்தில் தலைசிறந்த ஆய்வாளர் அவர் என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்வர். உண்மையில் அவர் தனித்தன்மை வாய்ந்த ஆய்வாளர்; கல்வியாளர்; மனிதாபிமானி; ஒரு மறுமலர்ச்சியாளர்.

  * அஞ்சலி: சி.டி. நரசிம்மையா (1920-2005)
  தெலுங்கரான சி.டி. நரசிம்மையா மைசூரிலிருந்து உலகெங்கும் உள்ள அனைத்து இந்திய எழுத்தாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்கினார்.

  * அஞ்சலி: ஜெமினி கணேசன் (1920 – 2005)
  சிவாஜிக்கு முக்கியத்துவம் தரும் 13 படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் ஜெமினி. எம்.ஜி.ஆர். இதைக் குறிப்பிட்டு, ஜெமினி தன் தனித்துவத்தை விட்டுத்தருகிறாரே என்று வருத்தப்பட்டார்.

  * அஞ்சலி: ஓ.வி. விஜயன் (1930-2005)
  மலையாள நாவலின் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றில் மிக முக்கியமான இரண்டோ மூன்றோ எழுத்தாளர்களில் ஒருவர் ஓ.வி. விஜயன். ‘கஸôக்கின் இதிகாசம்’, ‘தர்மபுராணம்’ ஆகியவை உள்பட விஜயனின் படைப்புகள் மலையாளத்தில் நாவல் என்ற இலக்கிய வடிவத்தின் போக்கையே மாற்றின.

  * அஞ்சலி: ஆதி. குமணன் (1950 – 2005)
  ஆதி. குமணன் உண்மை, நேர்மை, நியாயம் என்ற கொள்கைகளில் மிகப் பிடிவாதமாக இருந்தவர் என்பதால் பத்திரிகைப் பணியில் சிறந்தார் என்பதைவிட அவரிடம் இருந்த மனிதாபிமானமே அவரை எப்போதும் உயர்த்திக்காட்டியது.

  * எழில்வரதன்: குலைவுகளின் சித்திரங்கள்
  எந்த இதழிலும் பிரசுரம் காணாத பதினைந்து சிறுகதைகள் கொண்ட ‘ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு’ என்னும் முதல் தொகுப்பின் மூலம் வாசகர்களின் கவனத்தில் உடனடியாகப் பதிந்த புதிய இளந்தலைமுறைப் படைப்பாளி எழில்வரதன்.

  * பிள்ளை கெடுத்தாள் விளையும் சந்தேகங்களைக் கொண்டாடும் எழுத்து முறையும்
  கதைக்குள் ஓடும் காலம் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு. அந்த நூற்றாண்டைச் சரியாக வாசித்தவர்கள் இந்தப் பிரதி கிறித்தவ மதத்திற்கு மாறிய அன்றைய தாழ்ந்த சாதியான ஒரு நாடார் பெண்ணின் கதை என்பதை எளிதாகப் புரிந்துகொள்வர்.

  * பசித்த மானிடம்: நினைவுக் கிடங்கிலிருந்து வெளிச்சத்திற்கு
  வாழ்க்கை யதார்த்தங்களை கரிச்சான் குஞ்சுவின் கலைப் பார்வை அணுகும் விதமே இந்நாவலை வேறுபடுத்திக் காட்டுகிறது. யதார்த்தத்தை ஒப்பனைகளற்ற அடையாளங்களுடன் முன்வைப்பதே அவருக்கு உவப்பானதாக இருக்கிறது.

  * கவிதைகள்

  * தேவதச்சன் கவிதைகள்: காணுலகும் வியனுலகும்
  சொற்களுக்கு நாம் பொதுவில் புனைந்துகொண்டுள்ள அர்த்தங்களைக் கடந்து செல்கிறபோது நாம் நுழைந்துவிடக்கூடிய நமக்குப் பரிச்சயமில்லாத அர்த்தப் பரப்பில் இந்தக் கவிதைகள் புழங்குகின்றன. எனவே அநேகக் கவிதைகளும் நூறு சதவிகித வாசக கவனத்தைக் கோருபவை.

  * நேர்காணல்: அமினாட்டா ஃபோர்னா
  நாவல் எழுதும்போது அதன் அடிவானம் தெரிவதில்லை. அது எங்கே போகிறதோ அதன் பின்னால் போய் ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். சிறுகதை அப்படி இல்லை. எங்கே போய் முடிய வேண்டும் என்று ஓர் ஊகம் இருக்கும். ஆகவே எது மிகச் சுருக்கமான பாதையோ அதைப் பிடித்துப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும்.

  * இரண்டாவது அம்மா

  * தலையங்கம்: இளகும் எல்லைகள்
  இந்திய – பாகிஸ்தான் உறவில் நம்பிக்கை தரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. கிரிக்கெட் தோல்வியை மறக்கடிக்கச் செய்வதாக இருந்தது மன்மோகன் சிங் – முஷரஃப் சந்திப்பு. வெற்றிகரமாகத் தொடங்கியுள்ள ஸ்ரீநகர் – முசாபராபாத் பேருந்துப் போக்குவரத்து இரு நாடுகளின் அரசியல் உறுதியை எடுத்துக்காட்டியது.

  * தாழ்த்தப்பட்டோரும் மொழிப் போரும்
  சாதி முகத்தை மறைத்துக்கொள்வதற்கான முகமூடியாகத் ‘தமிழன்’ என்ற அடையாளம் ஒரு தரப்பினரால் முன்வைக்கப்பட்டுவந்துள்ளது. மறுபுறம் சாதியைக் கடப்பதற்கான வழிமுறையாகத் ‘தமிழன்’ என்ற அடையாளம் இன்னொரு தரப்பினரால் கைக்கொள்ளப்பட்டுள்ளது.

  Categories: Uncategorized