Archive

Archive for May 6, 2005

இரு தலைக் காதல்

ஒரு தலை ராகம் ::

இது குழந்தை பாடும் தாலாட்டு, இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம், இது நதியில்லாத ஓடம்.

நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்.

வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொட்டுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்,
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப்பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி, உலகை நான் வெறுக்கிறேன்.

உளமறிந்த பின் தானோ, அவளை நான் நினைத்தது
உறவுருவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக்கொண்டு, கவிதை நான் வடிப்பது
ஒரு தலையாய் காதலிலே, எத்தனை நாள் வாழ்வது.

காதல்

உனக்கென இருப்பேன்.
உயிரையும் கொடுப்பேன்.

உன்னை நான் பிரிந்தால்,
உனக்கு முன் இறப்பேன்.

கண்மணியே, அழுவதேன்.
வழித்துணை நானிருக்க???

கண்ணீர் துளிகளை, கண்கள்
தாங்கும் கண்மணி, காதலை
நெஞ்சம் தான் தாங்கிடுமா?

கல்லறை மீது தான்
பூத்த பூக்கள் என்று தான்
வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா?

மின்சாரக்கம்பிகள் மீது,
மைனாக்கள் கூடு கட்டும்
நம் காதல் தடைகளைத்தாண்டும்.

வளையாத நதிகள் இல்லை.
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் ஆற்றும்.

நிலவொளியை மட்டும் நம்பி
இலையெல்லாம் வாழ்வதில்லை
மின்மினியும் ஒளி கொடுக்கும்.

தந்தையையும் தாயையும் தாண்டி
வந்தாய் தோழியே, இரண்டுமாய்
என்றுமே நானிருப்பேன்

தோளிலே நீயுமே சாயும்போது
எதிர்வரும் துயரங்கள்
அனைத்தையும் நானெதிர்ப்பேன்.

வென்னீரில் நீ குளிக்க,
விரகாகி தீக்குளிப்பேன்
உதிரத்தில் உன்னைக்கலப்பேன்.

விழிமூடும் போதும் முன்னே
விலகாமல் நானிருப்பேன்

கனவுக்குள் காவல் இருப்பேன்
நானென்றால் நானே இல்லை
நீ தானே நானாய் ஆனேன்
நீ அழுதால் நான் துடிப்பேன்.

Categories: Uncategorized

புக் கிளப்

May 6, 2005 2 comments

விகடன்:

சொல்லப்படாத சினிமா :: ப.திருநாவுக்கரசு

‘தமிழில் வர்த்தக சினிமாவைத் தவிர்த்து ஒரு திரைக்கலைஞன் இயங்க முடியுமா?’ என்கிற கேள்விக்கான விடையாக இருக்கிறது இந்த நூல். யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ஆவணப்படங்கள் வளர்ந்த வரலாறும் அது பற்றிய தகவல்களுமாக பயனுள்ள தொகுப்பு. 500 இந்திய & தமிழ் ஆவணப்படங்களின் அறிமுகம் கிடைப்பது நல்ல அனுபவம். கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வாங்கிய ‘பாரன்ஹீட் 9/11’ திரைப்படம் முதல் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் அவலம் காட்டும் ‘தீக்கொழுந்து’ வரை ஒரே நூலில் தெரிந்துகொள்ள முடிகிறது. அரிய புகைப்படங்களையும் தேடிச் சேர்த்திருக் கிறார்கள். சமூக அக்கறையோடு எடுக்கப்படும் ஆவணப்படங்கள், பொதுமக்களின் கவனத்தைப் பெறாமலேயே போய் விடுகிற நேரத்தில், இத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தகுந்தவை.

(வெளியீடு: நிழல். விலை ரூ.200/-)

கோபுரக்கலை மரபு :: குடவாயில் பாலசுப்பிரமணியன்

‘தமிழகக் கோயில்கள் என்பவை வெறும் வழிப்பாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. நாட்டின் பண்பாட்டை, கலை உணர்வை, சமூக ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்’ என்கிறது இந்த ஆராய்ச்சி நூல். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் எனப் பல்துறை கலைகள் செழித்து இடம் பெற்றிருக்கும் கோயில்களின் கோபுரங்களை ஆய்வு செய்திருக்கிறார்.

வரலாறு, கல்வெட்டு, கலையறிவு போன்ற பல துறை ஆர்வமில்லாவிட்டால் இந்த மாதிரி நூலை எழுத முடியாது. ‘அண்ணாந்து பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் கோயில் கோபுரங்களில் இவ்வளவு விஷயங்களா?’ என்று ஆச்சர்யமூட்டுகிற நூல்.

(வெளியீடு: கோயிற் களஞ்சியம், தஞ்சை-7. விலை. ரூ. 200/-)

Categories: Uncategorized