Archive

Archive for May 23, 2005

இந்திய அணிக்கு புதிய கேப்டன்

May 23, 2005 1 comment

tamiloviam.com::

சமீபத்தில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக கிரெக் சாப்பெல் சேர்க்கப்பட்டுள்ளார். ஜான் ரைட்டுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அணியில் சில மாற்றங்கள் வர வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியமும் சேப்பலும் விரும்பினார்கள். இந்த எண்ணத்தை செய்ல்படுத்தும் முதல் படியாக பிரையன் லாரா (Brian Lara) இந்தியாவுக்கு வரவழைக்கப் படுகிறார். அமர்நாத்தைப் போலவே டெண்டுல்கரும் லாராவின் வருகையை வரவேற்றுள்ளார்.

சமீப காலமாகவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு, லாராவின் இருப்பு தர்மசங்கடத்தைக் கொடுத்து வந்தது. லாரா இருந்தால் மோசமாகவும்; அணியில் லாரா ஆடாவிட்டால், மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிக் கனிகளையும் பறித்து வந்து கொண்டிருந்தது.

தெற்கு ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஜார்ஜ்டவுன் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்கள் இழப்புக்கு 543 ஓட்டங்களை மேற்கிந்திய அணிவீரர்கள் குவித்தார்கள். இந்தப் பந்தயத்தில் லாரா ஆடவில்லை. மேற்கிந்திய ஆட்டக்காரர்களில் இருவர் இரட்டை சதம் அடித்து அபாரமாக ஆடியிருந்தார்கள். இதைத் தொடர்ந்த இரு ஆட்டங்களிலும் லாரா இருந்தார். ஆனால், மொத்தத்தில் மூன்று வீரர்கள் மட்டுமே ஐம்பதைத் தொட்டிருந்தார்கள். ரிட்லி ஜேகப்ஸ் போன்ற சக வீரர்களும் லாராவைக் குறித்த விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் மேற்கிந்திய அணி தோற்றுப்போன் ஆட்டங்களை கணக்குப் போட்டு பார்த்தால் — லாரா ஆடிய ஐந்து ஆட்டங்களில் மூன்று போட்டிகளில் அவரின் அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. அதே சமயம் லாரா அணியில் இல்லாவிட்டால், நான்கு ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே புறமுதுகிட்டிருக்கிறார்கள்.

‘இது போன்ற தோல்வியை அதிகம் ஈட்டித் தரும் அம்சம் முக்கியமானதாக இந்திய நிர்வாகம் கருதியிருக்கலாம். மேலும், வெளிநாட்டு வீரரை அணியில் சேர்ப்பதனால், சொந்த நாட்டில் சரக்கிலாததை பறை சாற்றலாம். கோச் மட்டும் இறக்குமதியல்ல, அணியே அன்னியம்தான் என்னும் கொள்கையை நிலை நிறுத்த லாரா உதவுவார்.’ என்று கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியை கேட்ட முன்னாள் உலக அழகி லாரா தத்தா, பிரையனை நேரில் சென்று பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ‘என்னுடைய பெயர் கொண்ட ஒருவர் இந்தியாவில் இல்லாதது வருத்தமாக இருந்தது. இப்பொழுது இந்திய அணியிலேயே இடம்பெற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது. அவருடன் கூடிய சீக்கிரமே சினிமாவில் நடிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஏதாவது செல்பேசி விளம்பரத்திலாவது தோன்ற வேண்டும்.’ என்றார்.

கங்குலியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ‘என்னை விட மோசமான அணித் தலைவரை இதை விட எளிதாகக் கண்டிபிடிக்க முடியாது. என்னுடைய கேப்டன்சி மீண்டும் தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுக்க இது வழிவகுக்கலாம்’ என்று நெருங்கிய நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து இந்திய அணி தேர்வாளர்கள் அடுத்த வாரம் பெங்களூரில் சந்திக்கப் போகிறார்கள். அப்பொழுது பாகிஸ்தானின் அப்துல் ரஸ்ஸாக், மேட்ச் பிக்ஸிங்கிலும் முன் அனுபவமுள்ள தெற்கு ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் போன்றோரை பரிசீலிக்கப் போவதாக விஷயமறிந்த வட்டாரங்கள் பேசிக் கொள்கிறார்கள்.

– பாஸ்டன் பாலாஜி

Categories: Uncategorized