Archive

Archive for May 25, 2005

தினகரன் – மெடிமிக்ஸ் விருதுகள்

May 25, 2005 4 comments

விருது என்றவுடனே ஆஸ்கார் நினைவுக்கு வந்தது. ஆங்கிலப் படங்கள், பாடல்கள் விருது எல்லாமே வார்ப்புருவில் செய்யப்பட்டது போல் இருக்கும்.

  • விளம்பரதாரர் மேடையில் தோன்றி விருதுகளைத் தரமாட்டார்.
  • திடீரென்று ஏடாகூடமான கேள்வி எல்லாம் கேட்டு விருது பெறுபவரை ‘ஏண்டா சாமீ… விருது வழங்கினே!’ என்று விசனப்பட வைக்க மாட்டார்கள்.
  • விருதுப் பெறப் போகும் வழியில் முத்தங்கள் கிடைக்கும்; கை கூப்பி, காலில் விழுந்து, கையை அசைத்து ‘கவனிக்க’ வேண்டாம்.
  • விருது கொடுப்பவர் தயாராக மேடையில் இருக்க, அதன் பின்புதான் – பெறப் போகிறவர் மேடையில் தோன்றுவார்.
  • ஒவ்வொரு விருதுக்கும் பரிந்துரைக்கப் பட்டவர்களின் பட்டியல் சொல்லப்பட்டு, விருது வாங்குபவர் யாரென்பது ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்.
  • வாழ்நாள் விருது பெறுபவருக்கு வருகை புரிந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மகிழ்வார்கள்.
  • பதக்கம் மாட்ட மாட்டார்கள்.

    இவை எல்லாம் தினகரன் விழாவில் வித்தியாசப்பட்டாலும், மற்ற இடங்களில் ஆஸ்கார் விருதுகளுக்கு நிகராகவே இருந்தது.

  • அங்கே ஜெனிஃபர் லோபஸ் அரைகுறையாய் ஆடுவார்; இங்கே ரகஸியா, ரம்பா, தேஜாஸ்ரீ, மதுமிதா, சொர்ணமால்யா.
  • அங்கே ‘Good Will Hunting’ பென் அஃப்லெக்; இங்கே ‘மன்மதன்’ சிம்பு போல ஒரு சிலர் அதிகமாய் அலட்டிக் கொள்வார்கள்.
  • சிறந்த நடிகர் விருதைப் பெறுபவர் அமைதியாய், விக்ரம் போன்றோரின் இருப்பை உணர்ந்து, விஜய் போல் அடக்கமாய் இருப்பார்.
  • ஸ்ரீமானும் பெயர் மறந்துபோன சின்னத்திரை நாயகியும் நன்கு தொகுத்து வழங்கினார்கள்.
  • சாதனையாளர் விருது பெறுபவர் எதையாவது தாக்குவது வழக்கம்: நாகேஷுக்கு பத்மஸ்ரீ வழங்காததை எண்ணி வருந்திக் கொண்டார்.
  • நாகேஷுக்குப் தேவையான பதிலை முன்கூட்டியே வாலி சொல்லியிருந்தார்: ‘பக்கபலமோ போஷகரோ இல்லாத திறமை வீண்‘.
  • கிடைத்ததை யாருக்காவது காணிக்கையாக்குவது சர்வ சாதாரணம்; அனேகர் நன்றி மட்டும் நவின்றாலும், ஜோதிகா மட்டும் சூர்யாவுக்கு அர்ப்பணித்தார்.
  • விருது எதுவும் கிடைக்காவிட்டாலும் வைரமுத்து வந்திருந்து, வாலி விருது பெறுவதற்காக சண்டை எல்லாம் போடாமல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
  • உருப்படியான சிலருக்கும் பொதுமக்கள் வாக்களிப்பார்கள்: ‘அழகிய தீயே’ ராதாமோகன், ‘காமராஜ்’ திரைப்படம், ‘ஆட்டோகிராஃப்’, இசைக்கு ‘7ஜி ரெயின்போ காலனி’, வில்லனுக்கு பிரகாஷ்ராஜ்.
  • சம்பந்தமே இல்லாமல் க்ளோசப் கொடுத்தாலும் மிடுக்கு குறையாமல் அரங்கத்தை கவனித்துக் கொண்டிருந்த சிறந்த ‘நடிகை’ ஜோதிகா.

    சன் டிவி போட்டிருப்பதை எண்ணி சந்தோஷப்பட வைத்த பதிவு.

    2004 வருட விருதுகள் குறித்த பதிவு | Dinakaran Awards

  • Categories: Uncategorized

    ராமகிருஷ்ணா

    May 25, 2005 2 comments

    ‘காதல் கோட்டை’ கூட்டணியில் இன்னொரு படம் என்று சொல்லி விளம்பரம் செய்து வந்தார்கள். அகத்தியனும் சிவசக்தி மூவி மேக்கர்ஸும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

    பணக்கார முதலாளி ஜெய் ஆகாஷ். தகப்பன் பெயர் தெரியாமல் அயல்நாட்டில் வளர்த்த அம்மா சரண்யாவிடம் ஓவர் பாசமாய் பொழிகிறார். அம்மா தவறி விழுந்ததால் தவறிப்போனபின், அவரின் கட்டளைப்படி கிராமத்திற்கு செல்கிறார். அப்பா விஜயகுமாரை கண்டுபிடிக்கிறார். ஸ்ரீதேவிகாவுடன் காதல். ஆட்டக்காரியாக இன்னொரு நாயகி வாணி வந்து போகிறார்.

    ஹீரோயின் ஸ்ரீதேவிகா விகல்பமில்லாத பாசங்காட்டுகிறார். ஜெய் ஆகாஷும் இயல்பாக நடித்திருக்கிறார். இளமையான அலட்டல் இல்லாத நாயகன்.

    முத்துக்காளையும் சார்லியும் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகளை ஏற்கனவே சன் டிவியில் ரசித்திருந்ததால், மீண்டும் பாராட்ட முடியவில்லை. படத்தின் நகைச்சுவை தவிர நயமிக்கதாக இரண்டு இடம் இருக்கிறது.

    * கிராமத்தில் ஒண்ணு, ரெண்டு, மூணு மனனம் செய்வதற்குப் பயன்படும் வித்தைகளை சொல்லி, காதல் பாடலுக்கு அழைத்துச் செல்லும் இடம்.

    கொக்குச்சி கொக்கு
    ரெட்டசிலாக்கு
    மூக்கு சிலந்தி
    நாகுவா வர்ணம்
    ஐயப்பஞ்சோறு
    ஆறுமுகத் தாளம்
    ஏழுக்குக் கூழு
    எட்டுக்கு முட்டி

    பாடலை கேட்கப் போனால், பாடியவர்கள் கார்த்திக் ராஜாவும் சாதனா சர்கமும்! சாதனா சர்கம்தான் தெளிவாக கிராமத்துத் தமிழில் உச்சரித்திருக்கிறாரா அல்லது ஒக்கச்சி எல்லாம் கொக்கச்சி ஆகிப் போனதா என்று அறியமுடியாத ஆனால் வித்தியாசமான பாடல்.

    * தட்டான் தாழப் பறந்தால் மழை வரும், இன்னும் ஏதோ ஒன்று காணப்பட்டால் அடை மழை, எப்பொழுது சிதறல், எப்பொழுது புயல் என்று சராமாரியாய் அடுக்கும் வசனங்களும் வானிலை ஆய்வாளர்களை விட துல்லிதமாக கணிக்கும் வித்தையை சொல்லியது.

    சில புகைப்படங்கள்

    Categories: Uncategorized