Archive

Archive for June 1, 2005

உடல் பருமன்

June 1, 2005 25 comments

‘தொப்பை கண்ட்ரோல்’ ஆயில் என்று ஒரு விளம்பரம் சன் டிவியில் வருகிறது. கடந்த மாதத்தில்தான் தோன்றினாலும், உடனடியாக கவனத்தைக் கவர ஆரம்பித்தது. ‘அம்மா பாசம்’, ‘அல்வா தொப்பை’, ‘எடை பார்க்க முடியாத தொப்பை’, என்று அன்றாட சபலங்களினால் ஏற்படும் குண்டு விளைவுகளை நகைச்சுவையாக சொல்கிறார்கள்.

கடைசியாகத் தொப்பையை குறைக்க சன்ஃப்ளவரோ, சன்பீமோ (Brand recognition பதிய வைக்காத விளம்பரம் எல்லாம் ஒரு விளம்பரமா… லட்சங்களை செலவழித்து என்ன பயன்?) ஏதோவொன்றை காண்பித்து பயன்படுத்துமாறு அட்வைஸ்.

எண்ணெயை கண்ணால் பார்த்தாலே ஊளைச் சதை உண்டாகும். அதற்காகவே அவர்களின் மேல் பொதுநல வழக்குப் போடலாம்.

வியர்க்க விறுவிறுக்க சோர்ந்து போகுமளவு உடற்பயிற்சி செய்தால் மட்டுமே தொப்பை கரையும். அப்படியும் எண்ணெய் வேண்டுமென்றால் ஆலிவ் ஆயில்தான் உகந்தது. மணி-பர்ஸுக்கு உகந்ததாக இல்லையே என்றால் கனோலா எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளலாம்.

MyPyramid.gov பக்கம் போனால் உங்களுக்கான தொப்பை கண்ட்ரோல் முறையை சொல்கிறார்கள். (தப்பித் தவறி MyPyramid.org சென்று விடாதீர்கள்; தொப்பை வலிக்க சிரிக்க மட்டும்தான் வைத்து அனுப்புவார்கள் ;-))

மங்கையர் மலரில் இருந்து:

சென்னை அடையார் நேச்சர் க்யூர் சென்டர் :: கீழ்க்கண்ட உணவு முறைகளை கையாண்டால் மாதம் குறைந்தது 5 கிலோ குறையும்.

காலையில் எழுந்ததும் சூரியக் குளியலை ரசித்தபடி 6 தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அல்லது இரவு ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் பத்து கிருஷ்ணா துளசிகளைப் போட்டு ஊறவைக்கவும். காலையில் துளசிகளை அதிலிருந்து வெளியே எடுத்து துளசி குணம் நிறைந்த நீரை மென்சூடாக்கி பிறகு வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

காப்பிக்குப் பதில் பால் இல்லாத சுக்குக் காப்பி சிறிது பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

ஒரு மணி நேரம் கழித்து ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்சை பழம் பிழிந்து ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்.

காலை 8.30 – 9.30 மணியளவில்: காலையில் எந்தவிதமான மாவு ஆகாரமும் சேர்க்கக் கூடாது. பசி தாங்க முடியாதவர்கள் 1 தம்ளர் கேழ்வரகு கஞ்சி அல்லது பார்லி கஞ்சி சாப்பிடலாம்.

சாத்துக்குடி ஜூஸை கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடலாம். 2 கேரட்களை கொதிக்கும் வெந்நீரில் போட்டு, கொதிக்க வைத்து, ஆறவைத்த தண்ணீரில் கழுவி சிறு துண்டுகளாக்கி சிறிது மிளகு தூள் போட்டுச் சாப்பிடலாம்.

காலை 10.30 – சாம்பல் பூசணி ஜூஸ் அல்லது முள்ளங்கி ஜூஸ்

காலை 11.00 – ஊறவைத்த அவல் + நாட்டுச் சர்க்கரை + பொடி செய்யப்பட்ட வாழைப்பழம் + வாசனைக்காக ஏலக்காய்… அனைத்தும் கலந்து அப்படியே சாப்பிடவும். (பச்சை வாழைப்பழத்தைக் கவனமாகத் தவிர்த்து விடவும்).

மதியம் சாப்பாடு: மதியம் சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன் காய்கறி சாலட் சாப்பிடவும்.

மதிய உணவிற்கு கீரையைப் பாதி வேகவைத்த நிலையிலேயே சமைத்து அதில் ஊறவைத்த பச்சைப் பாசிப் பருப்பு சேர்த்து அரிசியைக் குறைத்து நிறையக் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம்.

மாலை 3 – 4 மணி : முளைவிட்ட தானியங்கள் ஏதாவதொன்றை 4 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு அதில் கொத்துமல்லி, புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிடலாம். காப்பிக்குப் பதில் சுக்கு, கொத்துமல்லி கலந்த காப்பி சாப்பிடவும்.

மாலை 6 மணி : சிறிது வேகவைத்த முளைவிட்ட தானியத்தைச் சாப்பிடவும். பால் கலக்காத டீ சாப்பிடலாம்.

இரவு 7.30 மணி: சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பு பச்சைக் காய்கறிகள் சாப்பிடுங்கள். கவனம், எண்ணெயில் குளிப்பாட்டும் உணவுகளைத் தவிர்த்த இரவு உணவு இருக்க வேண்டும்.

பசும்பாலுக்குப் பதில் சோயா பால் சாப்பிடலாம்.

Categories: Uncategorized

குறிப்பேடுகளின் அட்டைப்படங்கள்

June 1, 2005 2 comments

Sadha in Monalisaவாசகர் டிஷ்யூம்: ஜூன் மாதம் பிறந்து விட்டது… பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட விருக்கின்றன. என்னுடைய பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்க கடைக்கு சென்றேன். சினிமா கவர்ச்சி என்பது பள்ளிக்கூட நோட்டுப் புத்தகங்கள் வரை வந்துவிட்ட கொடுமையை பார்த்து மிரண்டு போனேன். நோட்டுப் புத்தகங்களில் அரைகுறை டிரஸ்ஸில் குளோசப் படங்களாக நடிகைகள் மின்னிக் கொண்டிருந்தார்கள். அந்த நோட்டுப் புத்தகங்களைத்தான் மாணவர்கள் வாங்கிச் சென்றார்கள்.

ரோட்டில் அவ்வப்போது ஒட்டப்படும் கவர்ச்சிப் பட காட்சியைப் பார்த்து வரிந்து கட்டிக்கொண்டு நடவடிக்கை எடுக்கும் போலீஸார், இந்த மாதிரி கவர்ச்சிப் படம் போட்ட நோட்டு புத்தகங்களை தயாரித்து விற்பனை செய்யும் கம்பெனிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்?

பள்ளி ஆசிரியர்களே… பெற்றோரே… இந்த ஆண்டாவது சினிமா கவர்ச்சியை பள்ளிக்குள் அனுமதிப்பதில்லை என்று புது சபதம் போடுங்கள்!

– சிதம்பர செல்வன், சென்னை – 24.

Categories: Uncategorized