Archive

Archive for June 2, 2005

சுட்டும் சுட்டி

June 2, 2005 8 comments

சுட்டாமல் சுட்டு சுட்டித் தொடர் எழுதும் சுலப ஃபார்முலா:

 1. பொருத்தமான புத்தகத்தை எடுத்துக் கொள்ளவும்.
 2. சம்பந்தப்பட்ட சாப்டரைத் திறக்கவும்.
 3. கணினியில் டைப் செய்யவும் (அல்லது எழுத்துணரி செய்தால், வேலை மிச்சம்).
 4. முதல் பாராவை மூணாவதுக்குப் போடவும்.
 5. மூணாவது பாராவை ஏழாவதுக்குப் போடவும்.
 6. ஏழாவது பாராவை முதலாவதாகப் போட்டுவிடவும்.
 7. If in current chapter sachin’s age is ஆங்காங்கே சச்சினின் சமீபத்திய சாதனைகளைப்பற்றி ஒன்றிரண்டு வரிகள் நுழைக்கவும்.
 8. உருக்கமான வசனங்களோ, வர்ணனைகளோ சேர்க்கலாம், தப்பில்லை.
 9. கடைசியாக, சச்சினைப்பற்றி யாராவது பெரிய மனிதர் சொன்ன ஒரு வரியைப் போடவும், அல்லது சச்சினே தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்ட வரியையும் போடலாம்.
 10. ஓவியர் பாண்டியனை அழைத்து, சச்சினின் இளவயது பொம்மை ஒன்றைக் கொடுத்து, ஓவியம் வரைய சொல்லவும்.
 11. இஷ்யூவுக்கான சாப்டர் ரெடி!

சிகரம் தொட்ட சச்சின் :: வள்ளி (நன்றி – சுட்டி விகடன்)

லக்ஷ்மிபாய் என்ற பாட்டி சச்சினையும் அந்த வீட்டுச் சுட்டிகளையும் பராமரித்து வந்தார். அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போய் விடுவார்கள். பாட்டிதான் சச்சினுக்கு வளர்ப்புத்தாய், விளையாட்டுத்தோழி எல்லாமே! இரண்டரை வயதிலேயே சச்சினுக்கு கிரிக்கெட் ஆர்வம் பற்றிக் கொண்டது. வீட்டுவேலை செய்துகொண்டிருக்கும் லக்ஷ்மிபாயைப் பந்துவீச அழைப்பார் குட்டி சச்சின். துணி துவைக்கப் பயன்படும் மரக்கட்டைதான் சச்சினின் முதல் பேட்! பாட்டி பிளாஸ்டிக் பந்தை வீச, அதை அழகாக அடித்து விட்டுச் சிரிப்பார் சச்சின்.

“லக்ஷ்மிபாய் தாதிதான் என் முதல் கிரிக்கெட் கோச். கிரிக்கெட் பற்றித் தெரியாமலேயே எனக்கு அருமையாகப் பயிற்சி அளித்தவர் அவர். மறக்க முடியாத நபர்களில் முக்கியமானவர்.” இங்கிலாந்து உலகக் கோப்பை போட்டிகளின்போது சச்சின் சொன்னது இது.

லக்ஷ்மிபாய் தாதியும் சச்சினின் மழலைக் குறும்புகளை நினைவு வைத்திருந்து அடிக்கடி சொல்வார். “அவன் எல்லோருக்குமே செல்லம். சரியாக நடக்கக்கூடத் தெரியாது அவனுக்கு. அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டே இருப்பான். ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டான். வேகமான, துடிப்பான பிள்ளை. அவனுடைய சுருள்முடியையும், கொழுகொழு கன்னங்களையும் பார்க்கிறவர்கள் சச்சினைக் கொஞ்சாமல் போக மாட்டார்கள். அந்தக் குட்டிப்பையன் இன்று உலகம் மதிக்கும் விளையாட்டுக்காரனாக உருவாகி இருக்கிறான். அதைப் பார்ப்பதே எனக்குப் பெரிய பரிசு!” – இப்படி சச்சின் பற்றிப் பேசி மகிழ்வார் லக்ஷ்மிபாய்.

சச்சினின் அண்ணன் அஜித் டெண்டுல்கர். சச்சினை விட 11 வயது பெரியவர். பள்ளி, கல்லூரி மற்றும் கிளப்களுக்காக கிரிக்கெட் ஆடியவர். (இவர் சச்சினைப்பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூலே எழுதியிருக்கிறார். 1996-ல் அது வெளிவந்தது.) சச்சினுக்கு அறிமுகமான முதல் கிரிக்கெட் பேட் அஜித்துடையதுதான். ஒரு குட்டிப் பையனால் தூக்கமுடியாத அளவு கனமாக இருந்தது அந்த பேட். அதைத் தூக்குவதற்கே சச்சின் சிறப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டார்! விரைவிலேயே அதைப் பயன்படுத்தி விளையாடவும் தொடங்கிவிட்டார். அதனால்தானோ என்னவோ, இப்போதும் எடை அதிகமான பேட்டையே பயன்படுத்தி வருகிறார் சச்சின். கனமான பேட்டைக் கொண்டுதான், பந்துகளை பவுண்டரிக்கு விரட்டுகிறார்.

அஜித், இன்னொரு அண்ணன் நிதின், அக்கா சவீதா ஆகிய மூவரும்தான் சச்சினின் கிரிக்கெட் ஆர்வம் மென்மேலும் வளரக் காரணம். வீட்டில் இருக்கும் போதெல்லாம் கிரிக்கெட் பற்றியே பேசிக்கொண்டு இருப்பார்கள். அதிலும் அஜித் போட்டிகளுக்கு ஆடத் தொடங்கிய பிறகு வீட்டில் கிரிக்கெட் மழையே பொழிவார். தன் அணி சந்தித்த ஒவ்வொரு பந்தையும் வர்ணிப்பார். அண்ணன்களும், அக்காவும் பேசுவதைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருப்பார் சச்சின். இதனால் நாளுக்குநாள் சச்சினுக்குள் கிரிக்கெட் தீபம், பற்றி எரிந்தது. இதற்கிடையே சிறிதுகாலம் சச்சினின் ஆர்வம் டென்னிஸ் பக்கம் திரும்பியது.

சச்சின் மொழி

“உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கவேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை எதுவும் கிடையாது. இந்திய அணிக்குப் பயன்படும் வகையில் நன்றாக ஆடவேண்டும் என்பதே என் விருப்பம்…”


சச்சின் – ஒர் புயலின் பூர்வ கதை : சொக்கன் ::

சச்சின் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது இரண்டரை வயதில். லக்ஷ்மிபாய் வீட்டு வேலைகளில் தீவீரமாய் மூழ்கியிருக்கும்போது, துணி துவைக்கிற கட்டையைக் கையிலெடுத்துக்கொண்டு அவரைப் பந்துவீசுமாறு தொந்தரவு செய்வானாம். நீளமான சுருள்முடியும், புசுபுசுக் கன்னங்களுமாய்ச் சிரிக்கிற மழலையை மறுக்க யாருக்கு மனம் வரும் ? சிறு பிளாஸ்டிக் பந்தை அவர் வீச, அதை அவரிடமே திருப்பியடிப்பதில் சச்சினுக்கு அளவில்லாத சந்தோஷம். இப்படி வீட்டுக்குள், மாடியில் துணி உலர்த்தும்போது என்று அவர்கள் இருவரும் பல களங்களில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள்.

லக்ஷ்மிபாய்க்கு இப்போது வயது எழுபதுக்கும் மேல், குழந்தை சச்சினைப்பற்றி பேசும்போதெல்லாம் அவரது கண்களில் ஆசை தெறிக்கிறது, ‘கடைக்குட்டி என்பதால் சச்சின் எல்லோருக்கும் செல்லம், அவன் எது செய்தாலும் யாரும் எதிர்த்துப் பேசுவதில்லை’, சிரிப்போடு சொல்கிற அவர், சச்சினை ‘நடக்கத் தெரியாத பிள்ளை’ என்று குறும்பாய் வர்ணிக்கிறார், ‘எப்போதும், எங்கேயும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் அவனுக்கு, ஒரு இடத்தில் சும்மா நிற்பதுகூட பிடிக்காது, எல்லாவற்றிலும் வேகம், துள்ளல், கலகலப்பு, பெரிதாய்ச் சத்தம் போடுவது, சின்னச்சின்ன கலாட்டாக்கள் செய்வது என்று எல்லோராலும் கவனிக்கப்பட்ட பிள்ளை அவன்’

சச்சினின் குடும்பத்துக்கும், கிரிக்கெட்டுக்கும் அப்போதிருந்த ஒரே தொடர்பு அஜீத் டெண்டுல்கர்தான். சச்சினைவிட பதினோரு வயது பெரியவரான அவர், நல்ல கிரிக்கெட் வீரர் – தனது கல்லூரி அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தார். ஆகவே அவரது பேட் வீட்டில் இருந்தது, அதுதான் சச்சின் தொட்டுணர்ந்த முதல் கிரிக்கெட் மட்டை! அப்போது அந்த பேட் கிட்டத்தட்ட சச்சினின் உயரத்துக்கு இருந்தது. ஒரு சிறுவனால் சாதாரணமாய்த் தூக்கமுடியாதபடி கனம், ஆனாலும் சச்சின் விடவில்லை. தான் ஏந்திக்கொண்டிருப்பது நிஜமான கிரிக்கெட் பேட் என்கிற எண்ணம் தருகிற சிலிர்ப்பே அவனுக்குப் பெரிய உந்துசக்தியாயிருந்தது. ஆகவே மெல்லமெல்ல அந்த கனமான மட்டைக்குப் பழகிக்கொண்டு, அவனால் அதைச் சுலபமாய் கையாளமுடிந்தது. இந்த தொட்டில் பழக்கமே இன்றுவரை சச்சினுடைய பேட் மற்றவர்களைவிட அதிக கனமாயிருப்பதற்குக் காரணம்!

அந்த வயதில் சச்சினைக் கவர்ந்த இன்னொரு விளையாட்டு, டென்னிஸ். குறிப்பாய் ஜான் மெக்கன்ரோவின் பெரிய ரசிகனாயிருந்தான் சச்சின். மெக்கன்ரோ விளையாடுகிற போட்டிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போதெல்லாம் தனது ஹீரோ ஜெயிக்கவேண்டும் என்று அவன் போடுகிற சப்தத்தில் வீடே அதிரும். அவனோடு உட்கார்ந்து மேட்ச் பார்க்கிறவர்கள் மெக்கென்ரோவை ஆதரிக்காவிட்டால் போச், மேலும் கலாட்டாக்கள் தொடரும்.

மெக்கென்ரோவைப் பார்த்துப்பார்த்து ஆசைகொண்ட சச்சின் அவரைப்போலவே விளையாடுகிற ஆசையோடு டென்னிஸ் ராக்கெட்டைக் கையிலெடுத்துக்கொண்டான், அதோடு நிற்கவில்லை. மெக்கென்ரோவின் குறிப்பிடத்தக்க அடையாளம், தலையிலும், இரண்டு கைகளின் மணிக்கட்டிலும் அவர் அணிந்திருக்கிற வியர்வைப் பட்டைகள் – வீட்டில் அடம்பிடித்து அதையெல்லாமும் வாங்கி அணிந்துகொண்டு, தன் லட்சிய நாயகனைப்போலவே கர்வத்தோடு நடைபயின்ற சச்சினை, அவனது நண்பர்கள் ‘மேக்’ என்று செல்லமாய் அழைக்க ஆரம்பித்தார்கள்.

டென்னிஸில் ஆர்வமிருந்தாலும், ஏனோ சச்சினை அந்த ஆட்டம் ரொம்பவும் வசீகரிக்கவில்லை. சீக்கிரமே சாஹித்ய சஹ்வாஸ் கிரிக்கெட் அணியில் சேர்ந்துகொண்டான் அவன்.

Categories: Uncategorized

அரசியல் அண்ணாசாமி

June 2, 2005 Leave a comment

appusami.comசாவி ::

காலை பத்திரிகையில் வரும் செய்திகளை ஒன்று விடாமல் படித்துவிட்டு மாலையில் கூடும் அந்தப் பார்க் பெஞ்சு மாநாட்டில் விஷயங்களை அலசிவிட்டுப் போனால்தான் அங்கே கூடும் ‘பென்ஷன்’களுக்கெல்லாம் தூக்கம் வரும்.

”அண்ணாசாமி ஸார், வாங்க வாங்க. நீங்க இல்லாமல் கான்பரன்ஸே ‘டல்’ அடிக்கிறது. ஏன் லேட்?”

”இதென்ன கேள்வி? ஆபீஸ் விட்டதும் சர்க்கார் பஸ்ஸைன்னா பிடிச்சு வந்து சேரணும்? லேட்டாகாமல் என்ன செய்யும்?” என்று ஏதாவது குறை கூறிக்கொண்டே வந்து சேருவார் ‘அரசியல்’ அண்ணாசாமி.

அவர் வந்ததுமே கான்ஃபரன்ஸ் களை கட்டிவிடும்.

அண்ணாசாமி வரும்போதே சற்றுக் கடுகடுப்பாகத்தான் வருவார். உலகப் பிரச்னைகளையெல்லாம் எப்படித் தீர்த்துவைப்பது என்ற கவலை அவர் முகத்தில் பிரதிபலிக்கும். பெஞ்சு மீது அமர்ந்து ஒரு சிட்டிகையைத் தட்டி இழுத்துவிட வேண்டியதுதான். நகரசபை நிர்வாகத்திலிருந்து ஐ.நா.சபை நடவடிக்கை வரை எல்லா விஷயங்களையும் மட்டைக்கு இரண்டு கீற்றாக வெளுத்து வாங்கிவிட்டுச் செல்வார்.

”திருச்சியிலே பார்த்தீங்களா? குழாய் தண்ணிக்குக் ‘கியூ’விலே நிக்கறாங்களாம். பக்கத்திலே காவேரி ஓடறது – என்ன பிரயோசனம்?” என்று ஆரம்பிப்பார் ஒரு மப்ளர் ஆசாமி. அவ்வளவுதான்; அண்ணாசாமிக்கு எங்கிருந்தோ ஓர் ஆவேசம் பிறந்துவிடும்.

”இது என்ன அக்கிரமம், ஸார்? வெள்ளைக்காரன் காலத்திலே இப்படிக் கேள்விப்பட்டிருப்போமா? குடிக்கிற தண்ணிக்கு ‘க்யூ’வாம்! இந்த அழகிலே காவேரி வாட்டரை மெட்ராஸ¤க்குக் கொண்டு வரப் போறானாம். பக்கத்திலே இருக்கிற திருச்சிக்கு வழியைக் காணோம்!” என்பார் அண்ணாசாமி.

”கிருஷ்ணா நதியைக் கொண்டுவரப் போறதா ஒரு ‘ஸ்கீம்’ இருந்துதே, அது என்ன ஆச்சு?” என்று மெதுவாகக் காவேரியிலிருந்து கிருஷ்ணாவுக்குத் தாண்டுவார் சந்தனப் பொட்டுக்காரர்.

”ஸ்கீமுக்கு என்னங்காணும்? ஆயிரம் ஸ்கீம் போடலாம்! சி.பி.யும், சீனிவாசய்யங்காரும் போடாத ஸ்கீமா இவன் பெரிசா போட்டுடப் போறான்? பணத்துக்கு ஒரு ஸ்கீமையும் காணோம்! கன்னா பின்னான்னு கடனை வாங்கி, தண்ணி இல்லாத இடத்திலெல்லாம் டாமைக் கட்டிண்டிருக்கான். கேட்டா, ‘இண்டர்நேஷனல் ரிலேஷன்ஷிப்’புங்கறான். ஐக்கும், குருஷேவும் எதுக்குத் திருப்பி திருப்பி இந்தியாவுக்கு வந்துண்டிருக்கான் தெரியுமா? விஷயம் இருக்குன்னேன்! இண்டர்நேஷனல் ரிலேஷன்ஷிப்பாவது, கப்பலாவது? போகப் போகத் தெரியும். பார்த்துண்டே இரும். நான் இன்னிக்குச் சொல்றேன். குருஷ்சேவ் குடுமி சும்மா ஆடாதுய்யா, அசகாய சூரன்!”

”அதிருக்கட்டும்; எவரெஸ்ட் எவருக்கு சொந்தம்னு தீர்மானமாயிடுத்தா?”

”பரமசிவனுக்குத்தான்; போய்யா! ஒருத்தன் எவரெஸ்ட் என்னதுங்கறான், இன்னொருத்தன் காஷ்மீர் என்னதுங்கறான். அப்படிச் சொல்றவனையெல்லாம் அழைச்சுண்டு வந்து நாம் விருந்து வெச்சுண்டிருக்கோம். இதெல்லாம் டிப்ளமஸியாம். இந்த லட்சணத்திலே டிபன்ஸ் வேறே! டிபன்ஸ் மினிஸ்டர் வேறே!”

”ஆடிட் ரிப்போர்ட் சந்தி சிரிக்கிறதே, பார்த்தேளா?”

”வெட்கக்கேடு: வெளியே சொல்லாதேயும்! அட்மினிஸ்ரேஷன்லெ ஒரே ஊழல். இதுக்குள்ள நாலு பைனான்ஸ் மினிஸ்டர் மாறியாச்சு. நேரு ஒண்டி ஆள். ஸின்ஸியர் மேன்தான். அவர் என்ன பண்ணுவார், பாவம்? சுத்தி இருக்கறவா சரியாயில்லையே! ஸெண்டர்லே ஒரு பாலிஸின்னா, ஸ்டேட்லே ஒரு பாலிஸி. ஒரு ஸ்டேட்லே ப்ரொகிபிஷன்ங்கறான். இன்னொரு ஸ்டேட்லே குடிக்கலாங்கறான். நம் ஊர் போலீஸ் குடிக்கிறவனையெல்லாம் விட்டுவிட்டு வெளியூர்லேருந்து வர பிரெடிரிக் மார்ச்சை அரெஸ்ட் பண்ணிண்டு இருக்கு. பிரெடிரிக் மார்ச் குடிச்சா என்னா? குடிக்காவிட்டா என்னா? அவனுக்காகவா புரொகிபிஷன் கொண்டு வந்தோம்? பர்ப்பஸையே மறந்துடறோம். இதைப்பத்தி நேருவே நன்னா டோஸ் கொடுத்திருக்கார் பார்த்தேளா? ‘காமன்ஸென்ஸ்’ இல்லைன்னு!”

”அது சரி; அசெம்பளிலே லாண்ட் ஸீலிங் அஞ்சு நாளா அமர்க்களப்படறதே!”

”நான் சொல்றேன், இதெல்லாம் டெமாக்ரஸியிலே ஒண்ணுமே நடக்காது, ஸார். இந்த கவர்மெண்டிலே எதையாவது உருப்படியாச் செய்ய முடியறதா பார்த்தேளா? எலெக்ஷனை எவன் நடத்தறான்; பணக்காரன்தானே நடத்தறான்!”

”ரிடயரிங் வயசை அம்பத்தஞ்சிலேருந்து அம்பத்தெட்டா பண்ண முடியலே. பென்ஷன் வரியை எடுக்க மாட்டேங்கறான். என்ன கவர்மெண்ட் வேண்டியிருக்கு? என்ன லாண்ட் ஸீலிங் வேண்டியிருக்கு? இதையெல்லாம் பார்த்தா கம்யூனிஸ்ட் கவர்ன்மெண்டே தேவலைன்னு தோண்றது.

”அதான் வந்துட்டிருக்கானே, சைனாக்காரன். மெதுவா பார்டர்கிட்டே வந்துட்டான். சூ என் லாய் வரான் பார்த்தயளா? வர சமயத்தைக் கவனிச்சயளா? அதுலேதான் இருக்கு ஸீக்ரெட்! நாசர் வந்துட்டுப் போறதுக்கும் இவன் வரதுக்கும் சம்பந்தம் இருக்கய்யா. பஞ்சசீலம் பஞ்சசீலம்னு இருக்கிறதையெல்லாம் கோட்டைவிடப் போறோம்!”

”என்ன அண்ணாசாமி ஸார், ஏன், இப்படி எதுக்கெடுத்தாலும் கவர்ன்மெண்டை அட்டாக் பண்றேள்? சர்க்கார் என்னய்யா பண்ணும்?”

”என்ன பண்ணுமா! தட்டிக் கேக்கறதுக்கு ஓர் ஆள் இருந்தா இப்படி நடக்குமா? சோஷலிஸ்டிக் பாட்டனாம் பேரனாம்? என்னய்யா சோஷலிஸம் வேண்டியிருக்கு? சோத்துக்கு லாட்டரி அடிக்கிறோம்.

சோஷலிசம் பண்றாளாம்” என்பார் அண்ணாசாமி.

”அதான் பெரியவர் ஆரம்பிச்சிருக்காரய்யா புது பார்ட்டி!”

”ஆமாம்; புது பார்ட்டி ஆரம்பிச்சு ஓயாமல் கவர்ன்மெண்டை கிரிடிஸைஸ் பண்ணிட்டா ஆயிடுத்தா? அப்கோர்ஸ், பெரியவர் இண்டலிஜெண்ட்தான். ஸ்ட்ராங்காதான் பேசறார். யார் இல்லேங்கறா? நேருவும் ரெஸ்பெக்ட் வெச்சுதான் மீட் பண்ணியிருக்கார். பாலிஸி கிளியரா இல்லியே!”

”ஸார், இந்த ஸெளத் ஆப்பிரிக்கன் ப்ரீமியர்!”

”அட, சரித்தான், ஸெளத் ஆப்பிரிக்காவுமாச்சு, புடலங்காயுமாச்சு. அடேடே! மார்க்கெட்டுலே பிஞ்சு புடலங்கா சீப்பா வந்திருக்காம். விலை ஏர்றதுக்கு முன்னே அதை வாங்கிண்டு போய்ச் சேருவோம், வாரும்.”

Categories: Uncategorized