Archive

Archive for June 17, 2005

தந்தையர் தினம்

June 17, 2005 2 comments

நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாகிப் போனது. ராதாகிருஷ்ணன் ஆசிரியர்களுக்கு அர்ப்பணித்தார். இந்த வருடத்து ‘ஃபாதர்ஸ் டே’-வன்றுதான் கார்ல் மார்க்ஸுக்கு கல்யாணம் ஆகியிருக்கிறது.

அமெரிக்காவில் எல்லாவற்றையும் கொண்டாடுகிறார்கள். அப்பாக்களுக்கும் வருடத்தில் ஒரு நாளைக் கொடுத்து மகிழ்விக்கிறார்கள். ஜூன் 19 ஞாயிறு ‘தந்தையர் தினம்’.

அப்பாவுக்கு பரிசு தருவது முக்கிய நிகழ்வு. உடுக்க ஆடை, புதிய எலெக்ட்ரானிக் பொம்மை, செல்பேசி, கோல்ஃப் உபகரணங்கள் என்று விதவிதமாக கொடுக்கிறார்கள். தொலைபேசி குசலம் விசாரிக்கிறார்கள். ‘பிராணனை வாங்காமல் உன் பாட்டை பார்த்துக் கொண்டாலே போதும்’ என்று எனக்குத் தெரிந்த அப்பாக்கள் சொல்லியிருப்பார்கள்.

பெற்றோராக ஆகும்வரை அப்பாவின் அருமை தெரிவதில்லை. தந்தையாக ஆனாலும், தாயின் அருமை விளங்கும் என்று சொல்வதற்கில்லை.

குழந்தையைப் பர்த்துக் கொள்வது என்பது அறுபத்தி ஆறாவது கலை. (மனைவியை சமாளிப்பது #அறுபத்தி ஐந்து.)

வேளா வேளைக்கு குழந்தைக்கு உணவு தர வேண்டும். ஆனால், சாப்பிட படுத்தும். ஒழுங்காக சாப்பிடா விட்டால் அதற்கு தூக்கம் வராது. சரியாகத் தூங்கா விட்டால், கொஞ்ச நஞ்சம் சாப்பிடதையும் வாந்தி எடுக்கும். ஆடை மாற்ற வேண்டும். வழுக்காமல், கண்ணில் ஜான்ஸன்ஸ் சோப் நுழையாமல் குளிப்பாட்ட வேண்டும். நான் சாப்பிடும்போதுதான் அதற்கு ரெண்டுக்கு வரும். மிளகு ரசத்தின் வாசனையை டயாப்பர் தூக்கியடிக்க, சுத்தம் செய்ய வேண்டும். கெக்க பிக்க என்று ஆடை போட்டு ஆடும் எம்டிவியை நிறுத்தி, கெக்கபிக்க என்று தொப்பையை ஆட்டும் டெலிடபீஸ் முதல் பார்னி வரை பார்க்க வேண்டும். மீண்டும் மீண்டும் மாற்றமில்லாமல் ஓட்டிய ரீலையே சுற்றும் டிவி சீரியல் போல் கைக்குழந்தைகளுக்கு விருப்பமான நிகழ்ச்சிகள் பழைய கஞ்சியையேக் கொடுக்கும்.

குழந்தையை ஒரு நாள் மேய்த்து முடிப்பது பெரிய விஷயம். வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை விட அலுவலகத்துக்கு சென்றிருப்பதே சொர்க்கம் என்று சொல்லும்.

அதை விட பெரிய விஷயம், மாலையில் வீட்டிற்குள் நுழையும் மனைவியை மேய்ப்பது. ‘என்னடா… வீட்டை ரணகளமாக்கி இருக்கிறாயே’ என்று கலிங்கப் போரில் மனம் வெறுத்த அசோகனாய் நம்மை லுக் விடுவார்கள். அவற்றைத் தவிர்க்க பொம்மைகளை ஒழுங்குபடுத்தி, சாப்பிட மறுத்த மீதிகளை குப்பையில் தள்ளி, பாத்திரங்களை டிஷ் வாஷரில் அடுக்கி, குழந்தைக்குப் புத்தாடை மாற்றி, கொஞ்சமாய் சமையலை துவக்கி, நறுமண மெழுகுவர்த்தியை ஏற்றி, கார் வரும் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்து முத்தம் கொடுத்து வரவேற்றால் விழியோரப் புன்னகை கிடைக்கும்.

தந்தையர் தினத்துக்குப் பரிசுகளை விட மதியத் தூக்கம் வரப்பிரசாதம். இரவு முழுக்க நிம்மதியான உறக்கம் கிடைத்தாலும் ஒகேதான்.

புதிய அப்பாக்களுக்கும் தினசரி வேலைக்குப் போய் தப்பித்துக் கொள்ளும் தந்தையர்களுக்கும் அவ்வப்பொழுது தாயுமானவர்களுக்கும் 7ஜி ரெயின்போ அட்வைஸ் அப்பாவை நினைப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

-பாஸ்டன் பாலாஜி

அப்பா கதைகள் | சென்ற வருடப் பதிவு

Categories: Uncategorized

வாசிகா

June 17, 2005 Leave a comment

விகடன் புக் கிளப் :

எம் தமிழர் செய்த படம் – சு.தியடோர் பாஸ்கரன் :: ‘மக்களின் கேளிக்கைச் சாதனமாக, ஒரு பொழுதுபோக்காக இருக்க வேண்டிய சினிமா, சமூகத்தை ஆக்கிரமிக்கும் அசுர சக்தியாக மாறி, நம் அன்றாட வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் ஆக்கிரமித்துள்ளது’ என்று தமிழ்த் திரைப்பட வரலாற்றின் அரசியலை நாடிபிடிக்கிற நூல். தமிழ் சினிமாவின் தோற்றம், அதன் தொழில்நுட்ப வளர்ச்சி, பாட்டு, இடைவேளை, சினிமா மொழி, சென்சார் பிரச்னைகள், விவரணப் படங்கள் என்று சினிமாவின் சகல அம்சங்களையும் அக்கறையோடு அணுகுகிறார் தியடோர் பாஸ்கரன்.

தென்னிந்தியாவின் மௌனப் படங்கள் பற்றிய முதல் கட்டுரையிலேயே நூலாசிரியரின் உழைப்பு நன்கு தெரிகிறது. தமிழ் சினிமா வின் பலம், பல வீனம் பற்றி அறிந்துகொள்ள உதவும் முயற்சி.

(உயிர்மை. ரூ.100/-)


பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம் – சுப.வீரபாண்டியன் :: ‘அவரவர் நாட்டில் அவரவர் வாழ்க’ என்னும் புரட்சிக் கவிஞரின் வரிகள்தான், பெரியாரின் கொள்கை. அந்த அடிப்படையில் திராவிடநாடு திராவிடருக்கே என்று முதலிலும், தமிழ்நாடு தமிழருக்கே என்று பிறகும் அவர் குரல் கொடுத்தார்’ என்று தந்தை பெரியாரைத் தமிழ்த் தேசியத் தந்தையாக அடையாளப் படுத்தும் நூல்.

தமிழ்த் தேசியத்தின் எதிரியாகப் பெரியாரைக் காட்டும் கருத்துக்களுக்குப் பதில் சொல்லும் முயற்சியில், ஆதாரங்களை அடுக்குகிறார் நூலாசிரியர் சுப.வீரபாண்டியன். திராவிடர் கழகம் தொடங்கி, மக்களின் சுயமரியாதைக்காகப் போராடிய பெரியாரைத் தமிழ்த் தேசிய வட்டத்துக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

(தமிழ் முழக்கம். ரூ.100/-)


தலித்திய அரசியல் – ராஜ்கவுதமன் :: ‘இங்கே ஒரு சாதிக்கு உள்ளேதான் சகலமும் என்றாகிவிட்டது. புண்ணியம், ஒழுக்கம், பாராட்டு எல்லாமே ஒரு சாதிக்குள்ளே தான் சாத்தியம். மற்றபடி ஒரு சாதி மற்ற சாதியுடன் பகைதான் பாராட்டுகிறது’ என்று நமது சமூகத்தின் யதார்த்ததைக் கண்முன் நிறுத்துகிற ஆய்வு நூல்.

இந்தியாவில் சாதி யின் பூர்விகம், அசுர பலம், தீண்டாமைத் தீவிரம், அதிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிய இழிவிலிருந்து வெளிவர எடுத்த முயற்சிகள், அதற்காக உழைத்த தலைவர்கள் என வரலாற்றுத் தகவல்களும், ஆதாரங்களுக்கான மேற்கோள்களும் ராஜ் கௌதமனின் உழைப்பைக் காட்டுகின்றன.

(பரிசல். ரூ.25/-)

Categories: Uncategorized

Anniyan Watch

June 17, 2005 18 comments

1. தமிழ் விமர்சனம்: தேக்கட

2. சிஃபி

3. இந்தியா க்ளிட்ஸ்

Categories: Uncategorized