Archive

Archive for August 2, 2005

tamilcinema.com

August 2, 2005 Leave a comment

Priya Sakhi - Maadhavan and Sadha Thx IndiaGrlitz.comவிநியோகஸ்தர்கள் சங்கம் போட்ட புதிய லிஸ்ட் :: பூஜை போடும்போதே தனியார் தொலைக்காட்சிக்கும் ஒரு ரேட் பேசிவிடுகிற தயாரிப்பாளர்களுக்கு இனி சிரமம்தான். மூன்று வருடங்களுக்கு சில நடிகர்களின் படங்களை தொலைக்காட்சிக்கு விற்க கூடாது என்று லிஸ்ட் போட்டுவிட்டது விநியோகஸ்தர்கள் சங்கம். இந்த லிஸ்ட்படி ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, படங்களை மூன்று வருடங்கள் கழித்துதான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப முடியும்.

ஒரு வருடம் கழித்து வேண்டுமானால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொள்ளலாம் என்று விநியோகஸ்தர்கள் சங்கம் அனுமதித்திருக்கிற இன்னொரு லிஸ்டில் மாதவன், சிம்பு, சத்யராஜ் மூவரும் இருக்கிறார்கள். மற்ற நடிகர்களின் படங்களை விநியோகஸ்தர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் ஒளிபரப்பி கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.


மனதைத் திறந்தால் தவறா? :: கடந்த சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றில் மாதவனை பற்றி பேசிய ப்ரியசகி பட தயாரிப்பாளர் தேனப்பன், இந்த படத்திற்காக நான் பேசிய 75 லட்சம் சம்பளத்தில் இரண்டு லட்சம் தவிர மற்றதெல்லாம் கொடுத்துவிட்டேன். ஆனால் டப்பிங் சமயத்தில் அந்த இரண்டு லட்சத்தை கொடுத்தால்தான் வருவேன் என்று சொல்லிவிட்டார் என்று மாதவன் மேல் ஒரு குற்றச்சாட்டை வெளிப்படையாக வைத்திருந்தார்.

மாதவன் ::

“அட போங்க சார்… ஒரு நல்ல தயாரிப்பாளர் யார் சொல்லுங்கள் பார்ப்போம். இங்கே பல தயாரிப்பாளர்களிடம் நேர்மை கிடையாது. நான் ஐம்பதாயிரத்திற்கும் மேல் அட்வான்சே வாங்கியது கிடையாது. எனது சம்பளத்தை யாரும் விமர்சிக்க முடியாதபடி குறைவான நேர்மையான சம்பளமே வாங்குகிறேன்”

என்றார்!

மாதவனுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறது. அவரை புதுப்படங்கள் எதற்கும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்திருக்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஏ.எல்.அழகப்பன் ::

“நான் மாதவனை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர் நான் பேட்டியில் தயாரிப்பாளர்களை பற்றி தவறான கருத்து எதுவும் குறிப்பிடவில்லை என்றதுடன், இது குறித்து வருத்தம் தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் கொடுப்பதாக சொன்னார். ஆனால் நேற்றுவரை அவரது கடிதம் கிடைக்கவில்லை. அவர் வருத்தம் தெரிவிக்கும் வரை எந்த தயாரிப்பாளரும் அவரை ஒப்பந்தம் செய்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அவர் தற்போது நடித்து வரும் தம்பி என்ற படத்திற்கு மட்டும் தடையில்லை”

என்றார்.

| |

Categories: Uncategorized

தமிழ் தாதா

August 2, 2005 1 comment

கல்கி ::

தமிழ்த் தாத்தா ஸ்ரீ உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் சமூகத்துக்குப் பேரன் பரிவுடன் எழுதிக் கொள்வது.

பெரியவாள் என்ன யோசிக்கிறீர்கள்? இது என்ன புதிய பட்டமாயிருக்கிறது, இவன் யார் கொடுப்பது என்றா? அப்படியெல்லாம் தாங்கள் நிராகரிக்க மாட்டீர்களென்று நம்புகிறேன். சகலமும் அறிந்த பெரியாராகிய தாங்கள், நான் அளித்திருக்கும் பட்டத்தின் பொருத்தத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. முதலாவது ஔவையாருக்கு எப்படி ‘தமிழ்ப்பாட்டி‘ என்னும் பட்டம் பொருந்துமோ அது போலவே, தங்களுடைய பிராயத்தினாலும், தமிழுக்குத் தாங்கள் செய்திருக்கும் தொண்டினாலும் ‘தமிழ்த் தாத்தா’ என்னும் பட்டம் தங்களுக்குப் பொருந்தும்.

இரண்டாவதாக, மேற்படி பட்டத்திலுள்ள இரண்டு ‘த்’களையும் நீக்கி விட்டால், தாங்கள் “தமிழ் தாதா” ஆகிறீர்கள். நமது நாட்டின் பரம்பரை வழக்கத்தை அனுசரித்து, அகப்பட்ட நூல்களையெல்லாம் ஒளித்து வைக்காமல் அச்சிட்டு வெளியாக்கிப் பதினாயிரக் கணக்கானவர்களுக்குப் பயன்படும்படி செய்த தங்களை ‘தமிழ் தாதா’ என்று சொல்லாமல் வேறு யாரைச் சொல்வது?

மூன்றாவது, ‘உருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவும்’ என்பது போல, தமிழன்பர்கள் இன்னமும் தங்களை நோக்கித் ‘தமிழ் தா! தா!’ ‘தமிழ் நூல்களைத் தா! தா!’ என்று கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். (மேற்படி சிலேடை என் சொந்தமல்ல, இரவல் தான் என்பதையும் பெரியவாளிடத்தில் தெரிவித்துக் கொண்டு விடுகிறேன்.)

தங்களுடைய புத்தகங்களின் உதவியினால் அநேகர் பல் உடைந்து, காது கிடுகிடாய்க்கும்படியான தமிழ்நடையெல்லாம் எழுதும்போது, தாங்கள் மட்டும் எனக்கெல்லாம்கூட விளங்கும்படியான வெள்ளைச் சொற்களையே உபயோகிக்கிறீர்களே, அது ஏன்? நானும் தங்களுடைய கட்டுரைகளை எல்லாம் படித்தேன்; தாங்கள் எழுதிய ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரத்தையும் படித்தேன். எனக்கு விளங்காத வார்த்தை ஒன்றுகூட இல்லை. இது தங்களுடைய கௌரவத்துக்குக் குறைவு என்று தாங்கள் நினைக்கவில்லையா?

போகட்டும்; தங்களுக்குச் சமீபத்தில் எண்பது வயது நிரம்பப் போகிறது என்று சொல்கிறார்களே, அது உண்மைதானா? எனக்கு என்னமோ நம்பிக்கையில்லை. பார்த்தால் பாலியமாய்த் தோன்றுகிறதே? தாங்கள் செய்யும் வேலையைப் பார்த்தாலும், அவ்வளவு வயதானதாக நினைக்கக்கூடவில்லையே?

கடைசியாக ஒன்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதாவது மார்ச்சு மாதம் 6ந் தேதி வைபவங்கள் முடிந்து 7ந் தேதி பிறந்ததோ இல்லையோ, உடனே இந்த வயது விவகாரங்களையெல்லாம் மறந்துவிடுங்கள். நீங்கள் பாட்டுக்குத் தமிழ்த் தாயின் சேவையில் ஈடுபட்டிருங்கள். தப்பித்தவறி வயதைப் பற்றி ஞாபகம் வந்தால், 81 என்பதைத் திருப்பி வைத்து 18 என்று எண்ணிக் கொள்ளுங்கள். என்றும் பதினாறு வயதாயிருந்த மார்க்கண்டனைப்போல, தாங்களும் 18 வயதுக்குமேல் போகாமலே இருந்து விடுங்கள்.

ஏனெனில், தாங்கள் செய்ய வேண்டிய தொண்டுகள் இன்னும் எவ்வளவோ பாக்கியிருக்கின்றன. தமிழ்த்தாய் இன்னமும் கையில் ஏராளமான பழைய நகைகளை வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள். அவைகளையும் தாங்கள் மெருகிட்டுத் தர வேண்டுமாம். எப்படியும் ஸ்திரீயல்லவா? அசாத்திய நகை ஆசை!

வானதி பதிப்பகம் :: ‘வாழ்க சுதந்திரம் வாழ்க நிரந்தரம்!’

| | |

Categories: Uncategorized